கார்ஸ்
Published:Updated:

இனி பல்ஸர்களின் காலம்!

பஜாஜ் பல்ஸர் SS400சார்லஸ்

பஜாஜ் என்றால், ஸ்கூட்டர் தயாரிப்பாளர் என்கிற இமேஜை உடைத்து, ஸ்டைலான மோட்டார் பைக் தயாரிப்பாளர் எனும் புதிய அடையாளத்தைக் கொடுத்த பைக், பல்ஸர். அந்த இமேஜைத் தக்கவைத்துக் கொள்ள, ஸ்கூட்டர் தயாரிப்பையே நிறுத்துவிட்டது பஜாஜ். இப்போது பல்ஸர் பைக்குகளை உண்மையிலேயே பவர்ஃபுல் பைக்குகளாக மாற்றும் முயற்சியில் இருக்கும் பஜாஜ், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில்  பல்ஸர் சிஎஸ்-400 மற்றும் எஸ்எஸ்-400 என இரண்டு பைக்குகளை அறிமுகப்படுத்தியது. இதற்கிடையே பல்ஸர் என்எஸ்-200 பைக்குக்கு அடுத்தபடியாக பல்ஸர் எஸ்எஸ்-200 பைக்கையும் அறிமுகப்படுத்த இருக்கிறது பஜாஜ்.

இனி பல்ஸர்களின் காலம்!

முன் பக்கம் ஸ்டைலான ஃபேரிங் கொண்ட எஸ்எஸ்-200 மற்றும் எஸ்எஸ்-400 இரண்டுமே பல்ஸரின் அடுத்த தலைமுறை பைக்குகளாக இருக்கின்றன. இதற்கிடையே, சிஎஸ்-400 என நேக்கட் பைக்காக அறிமுகமாகியிருக்கும் பவர்ஃபுல் டூரிங் பைக்கும் பல்ஸரின் பிரம்மாண்டத்தைக் கூட்டியிருக்கிறது.

எஸ்எஸ்-200 மற்றும் 400 பைக்குகளில் இரட்டை ஹெட்லைட்ஸ் பளபளக்க, சிஎஸ்-400 பைக்கில் நேக்கட் பைக்குகளுக்கே உரிய வகையில் ஒற்றை ஹெட்லைட் பளிச்சிடுகிறது. ஃபேரிங் பைக்குகள் இரண்டிலுமே கிளிப் ஆன் ஹேண்டில்பார் பொருத்தப்பட்டிருக்க, நேக்கட் பைக்கில் ஃப்ளாட்டான ஹேண்டில்பார். ஆனால், மூன்று பைக்குகளிலுமே எடையைக் குறைப்பதற்காக, ஏராளமான அலாய் பாகங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் என்பதால், எஸ்எஸ்-400 பைக்கில் ஸ்பிளிட் சீட்டுகள் பொருத்தப்பட்டிருக்க, சிஎஸ்-400 பைக்கில் ஸ்பிளிட் சீட் இல்லாமல், பின் பக்க சீட்டை மட்டும் கொஞ்சம் தூக்கலாக வடிவமைத்திருக்கிறார்கள். பல்ஸர் எஸ்எஸ் மற்றும் சிஎஸ்-400 பைக்குகளில் கேடிஎம் 390 பைக்கில் இருக்கும் அதே 375 சிசி இன்ஜின்தான் இருக்கிறது. அதனால், இரண்டு பைக்குகளுமே 45bhp சக்தியை வெளிப்படுத்தும் பைக்குகளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 4-வால்வு, லிக்விட் கூல்டு, 6-ஸ்பீடு கியர்பாக்ஸைக்கொண்ட இந்த பைக்கில், சைலன்ஸர்கள் செம ஸ்டைலாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. கேடிஎம் இன்ஜின்தான் என்பதால், இந்த புதிய பல்ஸர்களின் வேகம் மணிக்கு 150 கி.மீ வேகத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கலாம்.

இனி பல்ஸர்களின் காலம்!

மூன்று புதிய பல்ஸர் பைக்குகளுமே பின் பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷனைக் கொண்டிருக்கின்றன. இரண்டு வீல்களுக்குமே டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும் புதிய பல்ஸர்களில், ஏபிஎஸ் பிரேக்குகளைக் கூடுதல் வசதியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது பஜாஜ்.

விரைவில் எஸ்எஸ்-200 பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கும் பஜாஜ், எஸ்எஸ்-400 பைக்கை இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது. சிஎஸ்-400 பைக் 2015-ம் ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்!

(கடந்த இதழில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போ பகுதியில் 49-ம் பக்கத்தில் இடம் பெற்றிருந்த பல்ஸர் சிஎஸ்-400 மற்றும் பல்ஸர் எஸ்எஸ்-400 பைக்குகளின் புகைப்படக் குறிப்பில், 'பஜாஜ் பல்ஸர்’ என்பதற்குப் பதிலாக, நிறுவனத்தின் பெயர் தவறாக இடம்பெற்றுவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம் - ஆசிரியர்)