கார்ஸ்
Published:Updated:

ஷோ-ரூம் ரெய்டு

ஹூண்டாய் வால்வோஅராத்து படங்கள்: ஆ.முத்துக்குமார்

தொடர்ந்து ஷோரூம் ரெய்டு சென்று வந்ததில், குத்துமதிப்பாக ஷோரூம் ஆட்கள் எப்படி 'பிஹேவ்’ செய்வார்கள்; அவர்களின் தரம் என்ன என்று பிடிபட்டுவிட்டது. தமிழகத்தில் இருக்கும் பல பிராண்ட் ஷோரூம்களுக்குள் பெரிய வித்தியாசம் இல்லை. கிட்டத்தட்ட 80 சதவிகிதம் ஒரே தரத்திலும், அணுகுமுறையிலும் இருக்கின்றன. காரின் விலையைப் பொறுத்து, தரம் கொஞ்சூண்டு அதிகரிக்கிறது. இதுவரை பார்த்ததிலேயே மூன்று ஷோரூம்களை சிறந்தவைகள் என்பேன். சென்னை பிஎம்டபிள்யூ, அரும்பாக்கத்தில் உள்ள சென்னை ஃபோர்டு மற்றும் பாண்டிச்சேரி ஃபோக்ஸ்வாகன் ஆகியவை. இந்த மூன்று ஷோரூம்களிலும் விற்பனையாளர் சிறப்பானவராக இருந்தார்; ஷோரூமும் சிறப்பாக இருந்தது.

இந்த மாதம் எந்த ஷோரூம் போகலாம்? 'எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே’ என அலுப்பாக இருந்த நேரத்தில், மோட்டார் விகடன் ஆசிரியர் ஓர் ஆலோசனை கொடுத்தார். ''வழக்கமாகச் செல்லும் ஷோரூம் செல்லாமல், ஏதேனும் மால்களுக்குச் செல்லுங்கள்!'' என்றார். 'அங்கே காரை டிஸ்ப்ளேவில் நிறுத்தியிருப்பார்கள். அவர்கள் எப்படி வாடிக்கையாளரை எதிர்கொண்டு சர்வீஸ் கொடுக்கிறார்கள் எனப் பார்க்கலாம்’ என்பது பிளான்.

ஷோ-ரூம் ரெய்டு

'ஆஹா, அருமையான ஐடியாவாக இருக்கிறதே...’ என உற்சாகமானேன். விகடன் அலுவலகத்துக்குச் சென்று மோட்டார் விகடன் டீமில் இருந்து ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு எக்ஸ்பிரஸ் அவென்யூவை நோக்கி விரைந்தேன். என் உற்சாகத்துக்குக் காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். கார் ஷோரூம்களில் இதுவரை விற்பனையாளர்களில் ஒரு பெண்ணைக்கூடப் பார்க்கவில்லை. ரிசப்ஷனோடு பெண்களை ஓரங்கட்டி விடுகிறார்கள். ஆண்கள் என்ன பெரிதாக காரைப் பற்றி விளக்கிவிடுகிறார்கள் என்று, இந்தத் துறையில் பெண்களை ஓரங்கட்டி வைத்துள்ளார்கள் எனத் தெரியவில்லை. இதே மாலில் கார் டிஸ்ப்ளே என்றால், சியர் கேர்ள்ஸ் இருப்பார்கள் என்ற நினைப்பே என் உற்சாகத்துக்குக் காரணம்.

மாலை நான்கு மணி அளவில் மாலுக்குள் என்ட்ரி கொடுத்தோம். தரைத்தளத்தில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்படியான ஒரு ப்ரைம் ஸ்பேஸில், ஹுண்டாய் நிறுவனம் தனது கடையை விரித்திருந்தது. ஒரு பெரிய திரையில், ப்ரொஜெக்டர் மூலம் பின்னணியில் கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டிருந்தது. எனக்குத்தான் அதிர்ச்சியில் தூக்கி வாரிப் போட்டது. பாலைவனப் புயலில் இருந்து மீண்டு வந்ததுபோல, நான்கு ஆண்கள் சாம்பல் போன்ற நிறத்தில் பேன்ட்டும், சாயம் போன கலரில் டல்லாக ஒரு பழைய மாடல் டீ-ஷர்ட்டும் அணிந்துகொண்டு நின்றுகொண்டிருந்தார்கள். ஒரு ஆஃபீசர் கோட்டு சூட்டு போட்டு, அவருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல தனியாக அமர்ந்திருந்தார். மருந்துக்குக்கூட ஒரு பெண் இல்லை.

நான் ஸ்கர்ட், டீ-ஷர்ட் அணிந்து சுறுசுறுப்பாகத் திரியும் நான்கு பெண்களைக் கற்பனை செய்துவைத்திருந்தேன். இது ஒன்றும் ஓவரான கற்பனை இல்லை. இதோ பக்கத்தில் இருக்கும் பெங்களூரு மால்களில் பார்த்திருக்கிறேன். அட்டகாசமான பாடல் பின்னணியில் ஒலிக்க, அல்ட்ரா மாடர்ன் பெண்கள், காரைப் பற்றி நுனி நாக்கு ஆங்கிலத்தில் விளக்கிக்கொண்டு இருப்பார்கள். இங்கே நிலைமை தலைகீழ். தலைவிதியை நொந்துகொண்டு, கார் நின்றுகொண்டிருக்கும் டிஸ்ப்ளே ஏரியாவுக்குள் நுழைந்தோம்.  

ஹூண்டாயின் புது வரவான எக்ஸென்ட் காரை நிற்க வைத்திருந்தார்கள். காரைப் பார்க்க ஆரம்பித்ததும், ஒரு இளைஞர் உடனே எங்களை அட்டெண்ட் செய்தார். இந்தச் சுறுசுறுப்பு ஷோரூமில் கிடைக்காது. இந்த இளைஞர்கள், படித்துக்கொண்டே பார்ட்-டைமாக இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஓரளவுக்கு நல்ல பயிற்சி கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காரைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைச் சரளமாகச் சொன்னார் அவர்.

உள்ளே அமர்ந்து பார்க்கச் சொன்னார். காரின் வேரியன்ட் மற்றும் சிறப்பம்சங்களை விளக்கினார். டிரைவர் சீட்டில் உட்கார்ந்துவிட்டால், எனக்கு காரின் முன்பக்க பானெட் சுத்தமாகத் தெரியவில்லை.

''பானெட் சுத்தமா தெரியலைங்க!''

''இப்ப வர்ற கார் எல்லாம் இப்படித்தாங்க!''

'அடப்பாவிகளா’ என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ''சிட்டிக்குள் ஓட்டும்போது பயமா இருக்குங்க!''

''அதெல்லாம் ஒண்ணும் பயம் வேணாம் சார், ஒரு அடி தள்ளி ஓட்டினீங்கன்னா சரியாயிடும்!''

என்னுடன் வந்திருந்த மோட்டார் விகடன் நண்பர், சில டெக்னிக்கல் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததும், கொஞ்சம் ஜெர்க் ஆனார் அந்த இளைஞர். இந்த காருக்கும் ஹோண்டா அமேஸுக்கும் என்ன விலை வித்தியாசம் எனக் கேட்டதும், ''அமேஸைவிட இருவது முப்பதாயிரம் ரூபா கம்மி சார். எதுக்கும் மேனேஜரைக் கூப்பிடுகிறேன்'' என ஹுண்டாய் கம்பெனி அலுவலரை அழைத்தார். இந்த அளவுக்கு அந்த இளைஞர் கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளித்ததைப் பாராட்டவே வேண்டும். ஏனென்றால், அவர் ரெகுலர் கார் ஷோரூம் ஊழியர் கிடையாது. குறுகிய காலப் பயிற்சி பெற்று, விளக்கம் அளித்துக்கொண்டு இருக்கிறார்.

ஷோ-ரூம் ரெய்டு

மேனேஜர் வந்தார். அவர் தெளிவாக அமேஸுக்கும் இந்த காருக்கும் விலை வித்தியாசம் மற்றும் வேறுபாடுகள் என அனைத்தையும் நன்கு விளக்கினார். அவர் யூனிஃபார்ம் அணிந்திருந்தார். அவர் சேல்ஸ் பர்ஸன் இல்லை; ஆனாலும், நான் ஹூண்டாய் ஷோரூமில் பார்த்த சேல்ஸ் பர்ஸனைவிட நன்றாக விளக்கினார். கஸ்டமரிடம் மிக மரியாதையாகப் பழகினார். டெக்னிக்கல் பர்ஸன்களிடமே சேல்ஸையும் கொடுத்தால், நன்றாகச் செய்வார்கள் எனத் தோன்றியது.

அங்கே என்னுடைய டீட்டெயில்ஸைக் கொடுத்துவிட்டு, அப்படியே பொறுமையாக நடந்துசென்றால், அடுத்த கோடியில் இரண்டு வால்வோ கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த இடம் ஹூண்டாய் கார் இருந்த அளவுக்குக் கவர்ச்சியாக இல்லை. வெளிச்சமும் குறைவு; மக்கள் நடமாட்டமும் இங்கே மிகக் குறைவு. ஒரு வீட்டின் தோட்டம் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது அந்த இடம். மாலின் தோட்டத்துப் பக்கம் என்று சொல்லலாம்.

இரண்டு கார்களுக்கு இடையே ஒரு நபர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, மொபைலை சீரியஸாக நோண்டிக் கொண்டு இருந்தார். இங்கே சியர் கேர்ள்ஸும் இல்லை; டார்ச்சர் பாய்ஸும் இல்லை; ஹூண்டாய் கார் அருகே இருந்த கலகலப்பும் இல்லை. இங்கே இருந்த சூழ்நிலைக்கு சிலர், கார்களை யாரோ பார்க் செய்து வைத்திருக்கிறார்கள் என்று எண்ணக்கூடும். அந்த அளவுக்கு அழுது வடிந்துகொண்டு இருந்தது சூழல்.

காரின் அருகில் சென்றதும், மொபைல் ஆசாமி யாரோ ஒருவருக்கு கண்காட்டிவிட்டு, சட்டென மீண்டும் மொபைலில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். ஒரு இளைஞர் எங்கிருந்தோ மின்னலெனப் பாய்ந்து வந்தார். இந்த இளைஞர் எங்களிடம் வால்வோ கார்களின் அடிப்படைத் தகவல்களைத் தெரிவித்துவிட்டு, எங்களின் தேவை என்ன என்று கேட்டுத் தெரிந்துகொண்டார்.

''என்ன மாதிரி கார் பார்க்கறீங்க, வேறு ஏதாவது கார் பார்த்து இருக்கீங்களா?'' எனப் புத்திசாலித்தனமாகக் கேட்டார்.

நான், ''ஆடி - பிஎம்டபிள்யூ பார்த்திருக்கிறேன்'' என்று சொன்னதும், ''அந்த கார்களின் ஸ்பேர் பார்ட்ஸ் விலை மிக அதிகம். வால்வோ காரின் விலை அதிகமாக இருந்தாலும், ஸ்பேர் பார்ட்ஸ் விலை ரொம்ப கம்மி. நான் வேண்டுமானால், உங்கள் மெயில் ஐடிக்கு ஸ்பேர் பார்ட்ஸ் விலை அனுப்புகிறேன். அதை மற்ற கார்களின் ஸ்பேர் பார்ட்ஸ் விலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்'' என்று சேலஞ்ச் செய்தார்.

வோல்வோ கார் என்றாலே சேஃப்டி எனக் கூறி, சேஃப்டியைப் பற்றி விரிவாகவே விளக்கினார். ஓட்டுநரின் சீட்டைப் பற்றி ஒரு சிறப்பம்சத்தை விளக்கி, இது எந்த காரிலும் இல்லாதது என்று நிறுவினார்.

என்னுடன் வந்த மோட்டார் விகடன் நண்பர், டெக்னிக்கலாக பல கேள்விகளை எய்தார். அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்து ஆச்சரியப்படுத்தினார் அந்த இளைஞர். சில கேள்விகளுக்குத் தடுமாறினாலும் பெரும்பாலான கேள்விகளுக்கு விடையளித்தார்.

ஒரு கட்டத்தில் விழித்துக்கொண்டு, ''நீங்களும் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீயா, ஆட்டோமொபைல் எக்ஸ்பர்டா?'' என்று கேட்டுவிட்டார். ஏனென்றால், நம் மோட்டார் விகடன் நண்பர் கேட்ட கேள்விகள் அப்படி! அந்த இளைஞருக்கே வால்வோவைப் பற்றித் தெரியாத விஷயங்களை எடுத்துவிட்டதால், மிரண்டபடி காணப்பட்டார்.

''இல்லீங்க, நாங்க கார் வாங்கறதுன்னு முடிவு பண்ணதும், எல்லா காரைப் பற்றியும் டீட்டெயிலா ஸ்டெடி பண்ணினோம்!'' என்று கூறி ஆசுவாசப்படுத்தினேன்.

''எப்ப டெஸ்ட் டிரைவ் பண்ணணும்னாலும் சொல்லுங்க, நான் உங்க இடத்துக்கு எடுத்துட்டு வர்றேன்'' என்று பொறுப்பாகச் சொன்னார். அடுத்து, பக்கத்தில் நின்றுகொண்டிருந்த எஸ்யூவியையும் காட்டினார்.

''சென்ற ஆண்டு மாடலுக்கு எவ்வளவு டிஸ்கவுன்ட் கொடுப்பீர்கள்?'' என்று கேட்டதற்கு, ''ஐந்து லட்சம் வரையில் கொடுக்கலாம். எதற்கும் எங்கள் ஜி.எம் இருக்கிறார், அவரிடம் கேளுங்கள்'' என்றார்.

அந்த மொபைலில் கருமமே கண்ணாயிரமாக நோண்டிக்கொண்டிருந்தவர்தான் ஜிஎம் என்று விளங்கியது. இவ்வளவு நடந்துகொண்டிருந்தும் தன் நிலையில் சற்றும் மாற்றம் இல்லாமல், ஜென் நிலையில் தன் மொபைலை உற்றுப் பார்த்து நோண்டிக்கொண்டிருந்தார் ஜிஎம்.

சேல்ஸ்மேன் பேசி முடிக்கும்போது, அருகில் இருந்த உயரதிகாரியும் வாடிக்கையாளரிடம் நம்பிக்கை வருவதுபோலப் பேசினால்தான், டீல் முடிக்க முடியும் என்பதை அவருக்குச் சொல்லித் தரவில்லை போலும்.

நாங்கள் கை குலுக்கி விடை பெற்றோம்.