கார்ஸ்
Published:Updated:

ஹாமில்ட்டனைத் துரத்தும் துரதிர்ஷ்டம்!

சார்லஸ்

ஸ்திரேலியாவில் துவங்கிவிட்டது, கார் ரேஸின் உச்சபட்ச திருவிழா. 2014-ம் ஆண்டுக்கான ஃபார்முலா-1 போட்டிகள், கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் துவங்கியது. 2014 போட்டி அட்டவணையில் இருந்து இந்தியாவைக் கழற்றிவிட்டுவிட்ட ஃபார்முலா-1 நிர்வாகம், ரஷ்யாவைப் பட்டியலில் சேர்த்திருக்கிறது. உலகம் முழுக்க 19 நாடுகளில் நடைபெறும் ஃபார்முலா-1 போட்டிகள், நவம்பர் மாதம் அபுதாபியில் நிறைவடைகிறது.

ஹாமில்ட்டனைத் துரத்தும் துரதிர்ஷ்டம்!

ஆஸ்திரேலியா

''இந்த ஆண்டு டெஸ்ட்டிங்கின்படி பார்க்கும்போது, மெர்சிடீஸ் கார்தான் வேகமாக இருக்கிறது. அதனால், லூயிஸ் ஹாமில்ட்டன்தான் சாம்பியன் பட்டம் வெல்வார்'' என்கிற நிபுணர்களின் ஆருடங்களுக்கு இடையே, ஃபார்முலா-1 போட்டிக்குத் தயாரானார்கள் ரசிகர்கள். முதல் சுற்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ரேஸ் டிராக்கில் கடந்த மார்ச் 16-ம் தேதி நடைபெற்றது. கடந்த ஆண்டு தகுதிச் சுற்றுகளில் முதல் இடம் பிடித்து ரேஸில் கோட்டைவிட்ட லூயிஸ் ஹாமில்ட்டனுக்கு, இந்தமுறையும் அந்த துரதிர்ஷ்டம் தொடர்கிறது.

ஹாமில்ட்டனைத் துரத்தும் துரதிர்ஷ்டம்!

தகுதிச் சுற்றில் வெற்றிபெற்று ரேஸை முதல் இடத்தில் இருந்து துவங்கினார் லூயிஸ் ஹாமில்ட்டன். ரெட்புல் ரெனோ அணியின் டேனியல் ரிக்கியார்டோ இரண்டாம் இடத்தில் இருந்தும், மெர்சிடீஸ் அணியின் மற்றொரு வீரர் நிக்கோ ராஸ்பர்க் மூன்றாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். மெக்லாரன் அணியின் புதுமுக வீரர் கெவின் மேக்னுசென் நான்காவது இடத்தில் இருந்தும், ஃபெராரியின் ஃபெர்னாண்டோ அலான்சோ ஐந்தாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். நடப்பு சாம்பியன் செபாஸ்ட்டியன் வெட்டல், 12-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார்.

ரேஸ் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஃபெராரியின் ஃபிலிப் மாஸாவின் காரும், கேட்டர்ஹாம் அணியின் கோபயாஷியின் காரும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள, இரண்டு வீரர்களுமே போட்டியில் இருந்து வெளியேறினர். அடுத்த சில நிமிடங்களில் முதல் இடத்தில் பறந்துகொண்டிருந்த லூயிஸ் ஹாமில்ட்டனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது லேப்பின்போது இன்ஜின் கோளாறால் பரிதாபமாக ரேஸைவிட்டு வெளியேறினார் ஹாமில்ட்டன். அடுத்த லேப்பில், நடப்பு சாம்பியன் செபாஸ்ட்டியன் வெட்டல், பவர் யூனிட் கோளாறு காரணமாக ரேஸைவிட்டு வெளியேறினார்.

ஹாமில்ட்டனைத் துரத்தும் துரதிர்ஷ்டம்!

லூயிஸ் ஹாமில்ட்டன் ரேஸில் இல்லை என்றதும், பதற்றப்படாமல் பறந்த நிக்கோ ராஸ்பெர்க், முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார். 57 லேப்புகள் கொண்ட இந்தப் போட்டியில் பந்தய தூரத்தை 1 மணி நேரம் 32 நிமிடங்கள் 58 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்றார் ராஸ்பெர்க். ரெட்புல் ரெனோ அணியின் புதுமுக வீரர் டேனியல் ரிக்கியார்டோ, இரண்டாம் இடம் பிடித்தார். இவர் நிக்கோ ராஸ்பெர்க்கை விட 24 விநாடிகள் பின்தங்கி இருந்தார். மெக்லாரன் அணியின் மற்றொரு புதுமுக வீரர் கெவின் மேக்னுசென் மூன்றாவது இடம் பிடித்தார்.

ஆனால், ரேஸ் முடிந்ததும் ரெட்புல் ரெனோ அணியின் டேனியல் ரிக்கியார்டோவின் காரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பெட்ரோல் ஃப்ளோ அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், ரேஸில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இதனால், மூன்றாவது இடம் பிடித்த மேக்னுசென் இரண்டாம் இடம் பிடித்ததாகவும், நான்காவது இடம் பிடித்த ஜென்சன் பட்டன் மூன்றாவது இடம் பிடித்ததாகவும் அறிவிக்கப்பட்டது!