மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே..
நிஸான்... ஐந்து ஆண்டுகள் முன்புவரை, இந்தியாவில் இந்தப் பெயர் ஆட்டோமொபைல் ஆர்வலர்களைத் தாண்டி யாருக்கும் தெரியாது. ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான், பிரான்ஸ் நாட்டின் ரெனோ நிறுவனத்துடன் இணைந்து, உலகம் முழுவதும் கார்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. 2005-ம் ஆண்டு முதல், இந்தியாவில் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்துவந்தாலும், 2009-ம் ஆண்டுதான் சென்னை ஒரகடத்தில் புதிதாகத் தொழிற்சாலை அமைத்து, இந்திய மார்க்கெட்டுக்குள் முழுமையாக இறங்கியது நிஸான்.
அடுத்த ஆண்டே மைக்ரா கார் சென்னை தொழிற்சாலையில் உற்பத்தியாகி, நாடு முழுக்க விற்பனைக்கு வந்தது. மைக்ரா, சன்னி, எவாலியா, டெரானோ, டீனா என நிஸான் விற்பனைக்குக் கொண்டுவந்த கார்கள் எதுவுமே இந்தியாவில் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. காரணம், ஆல்ட்டோ, இயான், சான்ட்ரோ என இந்தியாவில் 50 சதவிகிதத்துக்கும் மேல் விற்பனையாகும் ஏ-செக்மென்ட் கார்கள் எதுவும் நிஸானிடம் இல்லை. 4,500 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையைத் துவங்கிவிட்டு, கார்கள் எதுவுமே எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகாதது நிஸானின் நிர்வாகத்தைக் கொஞ்சம் மாற்றி யோசிக்கவைத்தது. அந்த மாற்று யோசனையின் பலன்தான், டட்ஸன் பிராண்ட்.
'க்ளோபல் கார்கள்’ அதாவது, உலகம் முழுவதும் ஒரே தரத்துடன் கார்களைத் தயாரிப்பது என்பதுதான் அதன் கொள்கை. அதனால், நிஸான் பெயரில் இந்தியாவில் விலை குறைந்த கார்களைக் கொண்டுவராமல், தனது பழைய பிராண்டான டட்ஸனில் 4-5 லட்சம் ரூபாய்க்குள் பட்ஜெட் கார்களைக் கொண்டுவருவது என முடிவெடுத்தது நிஸான்.
கடந்த மூன்று ஆண்டுகளாகத் தயாரிப்புப் பணியில் இருந்த டட்ஸனின் முதல் கார், 'கோ’ என்ற பெயரில் இப்போது விற்பனைக்கு வந்துவிட்டது. டட்ஸன் கோ காரைத் தனியாக டெஸ்ட் டிரைவ் செய்ததுடன், ஹூண்டாய் இயான் மற்றும் மாருதி வேகன்-ஆர் கார்களுடன் ஒப்பிட்டும் டெஸ்ட் செய்து, அதன் சாதக பாதகங்களைச் சொல்லி இருக்கிறோம். 4 லட்ச ரூபாய்க்குள் கார் வாங்க வேண்டும் எனக் காத்திருப்பவர்களுக்கு, இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த இதழை பைக் சிறப்பிதழ் என்றே சொல்லலாம். சுஸ¨கி இனஸ¨மா, டிரையம்ப் தண்டர்பேர்டு, பஜாஜ் பல்ஸர் எஸ்எஸ்-200, பல்ஸர் எஸ்எஸ்-400, பல்ஸர் சிஎஸ்-400, ஹோண்டா ஆக்டிவா 125 என அரை டஜன் பைக்குகளின் டெஸ்ட் டிரைவ் மற்றும் முதல் தகவல்களைக் கொடுத்திருக்கிறோம்.
மார்ச் மாதம் துவங்கிவிட்டாலே ரேஸ் சீஸனும் துவங்கிவிடும். ஃபார்முலா-1, மோட்டோ ஜீபி ஆகிய ரேஸ் செய்திகளையும் இந்த இதழில் துவங்கிவிட்டோம். அத்துடன் இந்தியாவில் முதன்முறையாக நடைபெற்றிருக்கும் டாடா ட்ரக் ரேஸை நேரடியாகச் சென்று பார்த்து, இந்த இதழில் எழுதியிருக்கிறோம்.
கோடை காலம் துவங்கிவிட்டது. குடும்பத்துடன் எங்கே செல்லலாம்; சுற்றிப் பார்க்கச் சிறந்த இடங்கள் எவை; எப்படிப் போகலாம்; எங்கே தங்கலாம் என அத்தனை தகவல்களையும் 32 பக்க 'டூர் ஸ்பெஷல்’ உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்!
என்றும் உங்களுக்காக...
ஆசிரியர்