கார்ஸ்
Published:Updated:

இது புது ரேஸ்!

டாடா T1 ப்ரைமா ட்ரக் ரேஸ் செய்தி மற்றும் படங்கள்: சுரேன்

இதுவரை யாரும் பார்க்காத, வித்தியாசமான, புதிதான... போன்ற வார்த்தைகள்தான் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும். அது போன்ற வார்த்தைகளை மோட்டார் பந்தயங்களுக்குக் கொண்டுவருவது கொஞ்சம் சிரமம். ஏனென்றால், ரேஸ் என்றால் நம்மைப் பொறுத்தவரை பைக் அல்லது கார்தான். அதிக மக்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்; ரேஸ் ஆர்வலர்களையும் பார்க்க வைக்க வேண்டும்; ரேஸையே பார்க்காதவர்களையும் கவர வேண்டும் எனப் பலகட்ட சவால்களுடன்... டெல்லி புத் ரேஸ் டிராக்கில் 'ட்ரக்’ ரேஸை நடத்தி முடித்திருக்கிறது டாடா.

இது புது ரேஸ்!

ரேஸில் கலந்துகொண்ட நீளமான ட்ரக்குகளில், ரேஸுக்கென பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பிரிட்டிஷ் ட்ரக் ரேஸிங் விதிப்படி டீசல் டேங்க், ரோல் கேஜ் மற்றும் ஸ்டீயரிங்கில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இங்கு ரேஸில் கலந்துகொண்ட டாடா ப்ரைமா ட்ரக்குகள், 9 ஸ்பீடு கியர்பாக்ஸ், 370 bhp சக்தியைக்கொண்டவை. மொத்தம் 12 ட்ரக்குகள் களத்தில் இறங்கின. மேட் சம்மர்ஃபீல்டு, ஸ்டூவர்ட் ஆலிவர், பிரையன் பர்ட் என ட்ரக் ரேஸின் ஜாம்பவான்களையும் ரேஸில் களமிறக்கியது டாடா.

இது புது ரேஸ்!

கார், பைக்குகள் மோதும் ரேஸ் ட்ராக்கில், பெரிய பெரிய ட்ரக்குகள் மோதுவது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. 12 ட்ரக்குகளுமே ஒன்றோடு ஒன்று போட்டிப் போட்டுக்கொண்டு பறக்க, பார்வையாளர்களின் விசில் சத்தம் ரேஸ் மைதானத்தை நிறைத்தது. ட்ரக் ரேஸ் ஒன்றும் அவ்வளவு சுலபமானது இல்லை. வேகமாகப் பறக்க வேண்டும் என்றால், தொடர்ந்து 8 அல்லது 9-வது கியரில்தான் செல்ல வேண்டும். ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை முழுவதுமாக எடுக்க முடியாது. காரணம், டர்போ பூஸ்ட் பவர் குறைந்துவிடும். இதற்கிடையே லைன் மாறாமலும், மற்ற ட்ரக்குகளுடன் மோதாமலும் ட்ரக்கை ஓட்ட வேண்டும் என்பதால், மிகவும் சவாலான ரேஸாக இருந்தது.

இது புது ரேஸ்!

இறுதி ரேஸில், ஸ்டூவர்ட் ஆலிவரின் ட்ரக்குக்கும், மேட் சம்மர்ஃபீல்டின் ட்ரக்குக்கும்தான் பெரிய சண்டையே நடந்தது. இறுதியில் ஸ்டூவர்ட் ஆலிவர் வெற்றி பெற்றார்.

மிகவும் வித்தியாசமான அனுபவத்தை இந்த ரேஸின் மூலம் கொடுத்துவிட்டது டாடா. இனிமேல் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த ரேஸ், அடுத்த முறை டாடா ட்ரக்குகளுக்கு இடையே மட்டும் அல்லாமல் டாடா, அசோக் லேலாண்ட், பாரத் பென்ஸ் ட்ரக்குகளுக்கு இடையே நடந்தால், இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.