சார்லஸ்; படங்கள்: கே.ராஜசேகரன்
நிஸானுக்கு நல்ல காலம் பொறந்துடுச்சு... மாருதி, ஹூண்டாய், டாடா, ஃபோர்டு, ஹோண்டா என பலம் வாய்ந்த போட்டியாளர்களுடன் போட்டி போடவும், நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கக்கூடிய கார் எதுவுமே நிஸானிடம் இல்லை என்ற குறையும், இனி இருக்காது. 4 லட்ச ரூபாய் காராக வந்துவிட்டது டட்ஸன் கோ. டட்ஸனின் முதல் வரவான 'கோ’ காரை, ஹைதராபாத் நகரில் டெஸ்ட் டிரைவ் செய்தேன்.
இந்தியாவில் டட்ஸன் கோ உருவான விதம்!
ஜப்பானைச் சேர்ந்த நிஸான் நிறுவனம், இந்த முறை இந்திய வாடிக்கையாளர்களின் மனதைப் படிக்க, ரொம்பவே மெனக்கெட்டது. சென்னை மறைமலைநகரில் உள்ள நிஸானின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் முக்கிய வேலை, கோ காரை மிகச் சிறந்த காராக உருவாக்குவதுதான். இந்தியாவில் இதன் போட்டியாளர்கள் யார்? அதன் பலம், பலவீனம் என்ன? கோ வெற்றிபெற இதில் முக்கிய அம்சங்கள் என்னவெல்லாம் தேவை என்பதை முழுமையாக ஆராய்ந்து, முதலில் ஜப்பானில் டெஸ்ட் செய்து, பின்பு இந்தியாவில் முழுமையாக டெஸ்ட் செய்த பிறகுதான், கோ காரின் விற்பனையைத் துவக்கலாம் என கிரீன் சிக்னல் தரப்பட்டது.

டட்ஸன், உண்மையிலேயே தரமான காரா? விலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பெர்ஃபாமென்ஸ், இன்ஜின் தரம், பாதுகாப்பில் கை வைத்துவிட்டார்களா?
டிஸைன்
கோ காரைப் பார்த்ததுமே, இது ஒரு முழுமையான ஹேட்ச்பேக் கார் என்பது புரிந்துவிடுகிறது. ஆனால், புதுமையான டிஸைன்கொண்ட காராக இது இல்லை என்பதற்கு, ஹைதராபாத் மக்களே சாட்சி. நகரின் மக்கள் நெருக்கடி மிகுந்த சாலைகளில்தான் இந்த காரைப் பெரும்பாலும் டெஸ்ட் செய்தோம்.

எப்போதுமே, விற்பனைக்கு வராத புது காரை டெஸ்ட் செய்யும்போது, மக்களின் பார்வை கார் மீது திரும்பும். ஆர்வமாக வந்து 'இது என்ன கார், என்ன விலை?’ என்றெல்லாம் விசாரிப்பார்கள். ஆனால், டட்ஸனுக்கு இதுபோன்ற ஆர்வமான கேள்விகள் எதுவும் வரவில்லை.
சாதாரண ஹேட்ச்பேக் கார் டிஸைன்தான். ஆனால், குறை சொல்லும்படியாக இல்லை. ஆல்ட்டோ, இயான், வேகன்-ஆர் உள்ளிட்ட சின்ன கார்களைவிடவும் பார்ப்பதற்கு பிரம்மாண்டமான காராக இருக்கிறது டட்ஸன். நிஸான் மைக்ராவைவிட 5 மிமீ நீளம் அதிகமான இந்த காரின் வீல்பேஸ், மைக்ராவைப் போலவே 2,450 மிமீ.
பானெட்டின் இருமுனைகளில் இருந்து பின் செல்லும் ஹெட்லைட் டிஸைன், தனித்துவத்துடன் இருக்கிறது. முதன்முறையாக சின்ன கார்களில் 'ஃபாலோ மீ ஹெட்லைட்ஸ்’ வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, காரை ஆஃப் செய்து பூட்டிய பிறகும், இருட்டில் செல்வதற்கு வசதியாக ஹெட்லைட் விளக்குகள் குறைந்தது 30 விநாடிகள் வரை ஒளிர்ந்து கொண்டிருக்கும்.
ஹெட்லைட் ஃப்ளாஷரை நான்கு முறை தட்டிவிட்டு காரை ஆஃப் செய்தால், ஹெட்லைட் இரண்டு நிமிடங்கள் வரை ஒளிர்ந்து அணைந்துவிடும். பட்ஜெட் கார் என்பதால், பனி விளக்குகள் இல்லை. அதேபோல், விலை உயர்ந்த வேரியன்ட்டிலும் பக்கவாட்டுக் கண்ணாடிகளுக்கு பாடி கலர் இல்லை. மேலும், ரிமோட் லாக் வசதியும் இதில் இல்லை.
உள்ளே!
இட வசதியைப் பொறுத்தவரை, தாராளமாக ஐந்து பேர் பயணிக்கலாம். முன்பக்க சீட் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முன் பக்கம் நடு சீட்டில் சிறுவர்களை உட்காரவைக்க முடியும் என்றாலும், அது பாதுகாப்பு இல்லை. ஹேண்ட் பிரேக் ஸ்டீயரிங்குக்குக் கீழே பழைய கார்களில் இருப்பது போன்று இழுத்துத் திருகுவது போன்று வைக்கப்பட்டுள்ளது. டிரைவர் சீட்டில் உட்காரும்போது, இந்த ஹேண்ட் பிரேக் முட்டியில் இடிக்கிறது. அதனால், கூடுமானவரை சீட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உட்கார வேண்டியிருக்கிறது. பின் பக்க இருக்கைகளில் மூன்று பேர் தாராளமாக உட்கார முடியும்.
டட்ஸன் கோ காரின் விலை உயர்ந்த வேரியன்ட்டிலும் ஆடியோ சிஸ்டமோ, சிடி ப்ளேயரோ இல்லை. ஆனால், முன் பக்கக் கதவுகளில் இரண்டு ஸ்பீக்கர்களும் உண்டு. ஸ்பீக்கர்கள் மட்டும் எதற்கு? 'மொபைல் டாக்கிங் ஸ்டேஷன்’ எனும் புதுமையான வசதியை கோ காரில் அறிமுகப்படுத்தியிருக்கிறது நிஸான். இந்த மொபைல் டாக் சிஸ்டத்தில் போனையோ அல்லது ஐ-பாடையோ வைத்துவிட்டு, அதை ஆக்ஸ்-இன் கேபிள் மூலம் இணைத்துவிட்டால், பாடல்கள் கேட்க முடியும்.
கோ- காரில் பென் டிரைவ் இணைக்கும் வசதி உண்டு. ஆனால், இதன் மூலம் போனை சார்ஜ் மட்டுமே செய்ய முடியும். பாடல்களைக் கேட்க முடியாது.
இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் பெர்ஃபாமென்ஸ்
நிஸான் மைக்ராவில் இருக்கும் அதே 1.2 லிட்டர் இன்ஜின்தான் டட்ஸன் கோ காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. 3 சிலிண்டர்கள் கொண்ட இந்த இன்ஜின், அதிகபட்சமாக 67 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. இது நிஸான் மைக்ராவின் சக்தியைவிட 10bhp குறைவு. ஆனால் டட்ஸன் கோ, நிஸான் மைக்ராவைவிட 162 கிலோ எடை குறைவான கார். இதனால், சக்தி குறைவாக இருந்தாலும் பெர்ஃபாமென்ஸில் குறைவில்லை. அதேபோல், டர்போ லேக் இல்லை என்பதால், அதிக கியரில் குறைந்த வேகத்திலும் செல்ல முடிகிறது. இதனால், நகருக்குள் ஓட்டுவது செம ஈஸி. அடிக்கடி கியர்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மைக்ராவில் இருக்கும் அதே இன்ஜின்தான் கோ காரில் இருந்தாலும், மைக்ராவின் கியர்பாக்ஸ் இதில் இல்லை. நிஸான் மைக்ராவின் கியர்பாக்ஸ் மிகவும் காஸ்ட்லி என்பதால், கோ காரில் தனது பழைய கியர்பாக்ஸைப் பொருத்திவிட்டது நிஸான். இதனால் கியர் ஷிஃப்ட் அவ்வளவு சுலபமாக இல்லை. அதேசமயம், ஆல்ட்டோ அளவுக்கு மோசமாகவும் இல்லை.
நெடுஞ்சாலையில் இன்னும் வேகமாகப் பறக்கலாம் எனத் தூண்டுகிறது டட்ஸனின் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ். ஹைதராபாத் புறநகர் சாலைகளில் நான் அதிகபட்சமாக 140 கி.மீ வேகம் வரை சென்றேன். அந்த வேகத்திலும் அதிர்வுகளோ, ஆட்டமோ இல்லை. ஆனால், 4,000 ஆர்பிஎம்-க்கு மேல் செல்லும்போது, சத்தம் அதிகமாகக் கேட்கிறது. இது 0 - 100 கி.மீ வேகத்தை 14.5 விநாடிகளில் கடக்கிறது. இது, அதிக சக்திகொண்ட நிஸான் மைக்ராவின் 0 - 100 வேகத்தைவிட வெறும். 0.3 விநாடிகளே அதிகம்.
ஓட்டுதல் மற்றும் கையாளுமை!
நகருக்குள் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு மிகவும் ஈஸியான காராக இருக்கிறது கோ. டர்னிங் ரேடியஸ் குறைவு என்பதால், சின்ன இடங்களில் கூட வளைத்துத் திருப்பலாம். ஆனால், வீல்கள் மிகச் சிறியது என்பதால், மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, சஸ்பென்ஷன் சத்தம் அதிகமாகக் கேட்கிறது. இன்ஸுலேஷன் சரியாக செய்யப்படவில்லை என்பதால், காற்றின் சத்தமும், டயர் சத்தமும் காருக்குள் அதிகமாகக் கேட்கின்றன.
சத்தத்தைத் தவிர, நெடுஞ்சாலையில் கோ காரை ஓட்டுவதால், எந்தப் பிரச்னையும் இல்லை. அதிக வேகத்தில் செல்லும்போதும் ஸ்டெபிளிட்டி சிறப்பாக இருப்பதோடு, ஸ்டீயரிங்கும் ஸ்டேபிளாக இருக்கிறது. ஆனால், 'ஸ்ட்ராடா’ என்னும் ஊர் பெயர் தெரியாத டயர்களை கோ காரில் பொருத்தியிருக்கிறது நிஸான். இந்தோனேஷியாவின் 'மாஸா’ எனும் நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த ஸ்ட்ராடா டயர். டயர் கிரிப் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதோடு, சடர்ன் பிரேக் அடித்தால், சத்தமும் வித்தியாசமாகக் கேட்கிறது.
மைலேஜ்
மைலேஜைப் பொறுத்தவரை, டட்ஸன் கோ நகருக்குள் லிட்டருக்கு 12.8 கி.மீ, நெடுஞ்சாலையில் 17.9 கி.மீ மைலேஜ் தருகிறது.