கார்ஸ்
Published:Updated:

அசத்துமா ஆல்டிஸ்?

தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

டொயோட்டா 'ரிஸ்க்’ எடுக்க அதிகம் யோசிக்கும் ஒரு கார் நிறுவனம். எதையும் 'பிளான்’ பண்ணிப் பண்ணும் இந்த நிறுவனத்தின் அனைத்து கார்களும் வெற்றிகரமாக விற்பனையாவது இதனால்தான். 'லாபம்’ என்று நன்றாகத் தெரிந்தால் மட்டுமே 'ரிஸ்க்’ எடுக்கும் டொயோட்டா நிறுவனம், உலகிலேயே அதிகம் விற்பனையாகும் காரான 'கரோலா’வில், இப்போது 'ரிஸ்க்’ எடுத்திருக்கிறது. கரோலா பிராண்டுக்கு ஃப்ரெஷ் அப்பீலைக் கொடுத்திருக்கிறது டொயோட்டா. இத்தனை ஆண்டுகளாக மெச்சூரிட்டியான அப்பீலைக் கொண்டிருந்த கரோலா, நன்றாக விற்பனையானாலும், இதை வைத்துக்கொண்டு அதிக காலம் ஓட்ட முடியாது என்பதை உணர்ந்துவிட்டது. இதுவரை டொயோட்டா கரோலா, அறிவுக்கு மட்டும் பிடித்தமான காராக இருந்தது. முதன்முறையாக மனதுக்கும் பிடித்த காராக இருக்கும் என புதிய கரோலாவை அறிமுகம் செய்திருக்கிறது டொயோட்டா. புதிய கரோலா, உண்மையில் மனதுக்குப் பிடித்திருக்கிறதா?

அசத்துமா ஆல்டிஸ்?

டிஸைன் - இன்ஜினீயரிங்

புத்தம் புதிய டொயோட்டா கரோலா ஆல்டிஸ், பார்ப்பதற்கு 'லெக்ஸஸ்’ காருக்கான பிரம்மாண்ட தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. காரில் உள்ள ஒவ்வொரு கோடும், வளைவும் தெளிவாகக் கண்களுக்குத் தெரிகின்றன. காரின் தாழ்வான பானெட்டில் இருந்து துவங்கும் ரூஃப் லைன், ஷார்ப்பாக வெட்டுப்படும் 'சி’ பில்லர் வழியாக ஸ்மார்ட்டாகப் பயணிக்கிறது. நீளமான வீல்பேஸும் தாழ்வான உருவமைப்பும் கொண்டிருப்பதால், காரைப் பார்க்க அழகாக இருக்கிறது. காரின் முன் பக்கம் இருக்கும் மிக அகலமான க்ரில், சாலையில் நல்ல பிரசன்ஸைக் கொடுக்கிறது. இந்த க்ரில்லுடன் இணைந்திருக்கும் ஹெட்லைட்ஸும், வீல் ஆர்ச்சுகளும் மிரட்டலான தோற்றத்தைத் தருகின்றன. காரின் பின் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது, அழகாகவே இருக்கிறது புது கரோலா.

காரின் டிஸைனில் மட்டும் இல்லாமல், காரின் பர்ஃபாமென்ஸும் ஸ்போர்ட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக, மெனக்கெட்டு இருக்கிறது டொயோட்டா. புது கரோலாவின் முன் பக்க சஸ்பென்ஷனை முழுவதும் மாற்றி அமைத்திருக்கிறார்கள். காரின் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்கில் இப்போது, புதிய கன்ட்ரோல் லாஜிக் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், முன்பைவிட இப்போது கரோலா ஆல்டிஸ் ஸ்டீயரிங், ஷார்ப்பாக இருக்கிறது.

டிரைவர் சீட்டைக் கொஞ்சம் தாழ்வாக அமைத்திருக்கிறார்கள். இருக்கையில் தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் இருக்கிறது. கேபின் இட வசதி நன்றாக இருக்கிறது. புதிய கரோலாவில் வீல்பேஸ் 100 மிமீ அதிகம் என்பதால், பின்னிருக்கை இட வசதி சூப்பர். தொடைகளுக்கும் நல்ல சப்போர்ட். புதிய கரோலா ஆல்டிஸின் பின்னிருக்கையில், தாராளமாக மூன்று பேர் சொகுசாகப் பயணிக்கலாம். டேஷ்போர்டின் டிஸைன் புத்தம் புதுசு. காரின் உள்பக்கத்தில் உள்ள பாகங்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், பாகங்களின் தரம் ஆக்டேவியாவிலோ, எலான்ட்ராவிலோ இருப்பதுபோல இல்லை. இந்திய வாடிக்கையாளர்கள், புதிய டொயோட்டா கரோலாவில் ரிவர்ஸ் கேமரா, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், நல்ல ஆடியோ சிஸ்டம், நேவிகேஷன் போன்ற வசதிகளை எதிர்பார்ப்பார்கள் என்பதை, டொயோட்டா கவனத்தில் கொள்ள வேண்டும்.

அசத்துமா ஆல்டிஸ்?

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

பழைய ஆல்டிஸைவிட புதிய டொயோட்டா கரோலா ஆல்டிஸ், இப்போது ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது. பழைய ஆல்டிஸில் ஸ்டீயரிங் ஃபீட்பேக் நன்றாக இருக்காது. ஆனால், இந்தப் புதிய காரின் ஸ்டீயரிங், காரின் முன் வீல்களிடம் இருந்து ஃபீட்பேக்கை நமக்கு அப்படியே அளிக்கிறது. முன்பைவிட இப்போது பாடி ரோல் குறைவே! முன்பக்க சஸ்பென்ஷன் நன்றாக இருப்பதால், வளைவுகளில் வேகமாகத் திரும்பினாலும் கார்  ஸ்டெடியாக இருக்கிறது. ஆனால், பின் பக்கம் இருக்கும் 'நான் இண்டிபெண்டன்ட் டார்ஸன் பீம் சஸ்பென்ஷன்’ செயல்படும் விதம்தான் திருப்தியாக இல்லை. மிகவும் சாஃப்ட்டாக செட் செய்யப்பட்டு இருப்பதால், வளைவுகளில் காரின் பின் பக்கம் மட்டும் அதிகமாக

அசத்துமா ஆல்டிஸ்?

அசைந்தாடுகிறது. இதனால், முன்பைவிட கையாளுமையில் நல்ல முன்னேற்றம் இருந்தும்கூட ஜெட்டா, ஆக்டேவியா போன்ற கார்கள் அளவுக்குச் சிறப்பாக இல்லை.  

ஆனால், இந்த சாஃப்ட்டான பின் பக்க சஸ்பென்ஷனால், மோசமான சாலைகளில்கூட காருக்குள் பெரிய அதிர்வுகள் இல்லை. பெரிய மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போதும்கூட, கார் ஸ்டேபிளாகப் பயணிக்கிறது. ஆனால், டயர் சத்தம் மிக அதிகமாகக் காருக்குள் கேட்கிறது. இன்னும் சிறப்பாக இன்சுலேஷன் செய்திருந்தால் நன்றாக இருக்கும்.

இன்ஜின்

இத்தனை ஆண்டுகளாக டொயோட்டா கரோலோ ஆல்டிஸ் காரில் இருந்தது, 138 bhp சக்தியை அளிக்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின். இது, இதன் போட்டியாளர்களைவிட குறைவான சக்தியைக் கொண்டிருந்தது. ஆனால், டொயோட்டா இந்த இன்ஜினை இப்போது மெருகேற்றி இருக்கிறது. 'அகௌஸ்டிக் கன்ட்ரோல்டு இண்டக்‌ஷன் சிஸ்டம்’ (ACIS) என்ற புதிய 'வேரியபிள் லென்த் இன்டேக்’ தொழில்நுட்பத்தை இந்த இன்ஜினில் சேர்த்திருக்கிறது டொயோட்டா. இதனால், இன்ஜினின் ரெஸ்பான்ஸ் கூடியிருப்பதோடு, அதிக மைலேஜையும் அளிக்குமாம். மேலும், புதிய ஆல்டிஸ் விற்பனைக்கு வரும்போது 87 bhp சக்தியை அளிக்கும் 1.4 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினையும் கொண்டு வரவிருக்கிறது.

அசத்துமா ஆல்டிஸ்?

இங்கே டெஸ்ட் செய்தது, வெளிநாடுகளில் விற்கப்படும் 122bhp சக்தி கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்ட மாடல். இந்த இன்ஜினின் இன்லெட் மற்றும் எக்ஸாஸ்ட் வால்வுகள் இரண்டுக்குமே வேரியபிள் வால்வு டைமிங் இருப்பதால், பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கிறது. இதில் இருக்கும் சிவிடி கியர்பாக்ஸ், குறைந்த ஆர்பிஎம்-ல் மிகச் சிறப்பாக இயங்குகிறது. ஆனால், இன்னும் ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், பெர்ஃபாமென்ஸ் ஏமாற்றத்தை அளிக்கிறது. அதிக ஆர்பிஎம்-ல் சிவிடி கியர்பாக்ஸும், இன்ஜினும் சிறப்பாக இல்லை. சிட்டி டிராஃபிக்குக்கு இந்த பெர்ஃபாமென்ஸ் சரிப்பட்டு வராது.

அசத்துமா ஆல்டிஸ்?

உங்களுக்குப் பழைய கரோலோ ஆல்டிஸ் பிடித்திருந்தால், இந்தப் புதிய கரோலா ஆல்டிஸ் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இதன் போட்டியாளர்களைப் போல ஒரு தனித்துவமான கார் இல்லை என்றாலும், போட்டியில் களம் இறங்கத் தகுதியான கார். சொகுசு, நம்பகத்தன்மை மற்றும் வசதிகள் ஆகியவைதான் உங்களுக்கு வேண்டும் என்றால், புதிய ஆல்டிஸ் உங்களுக்கு ஏற்ற கார்.

அசத்துமா ஆல்டிஸ்?