கார்ஸ்
Published:Updated:

4 லட்ச ரூபாய் பட்ஜெட் - என்ன கார் வாங்கலாம்?

4 லட்ச ரூபாய் பட்ஜெட் - என்ன கார் வாங்கலாம்?

4 லட்ச ரூபாய் பட்ஜெட் - என்ன கார் வாங்கலாம்?

மாருதி வாங்கினால், மெயின்டனன்ஸ் செலவு குறைவு; ஹூண்டாய் என்றால், ஸ்பேர் பார்ட்ஸ் சீப். ஆனால், டட்ஸன் கோ.... இதன் பலம் என்ன? போட்டியாளர்களை வெல்லும் காரா டட்ஸன் கோ?

டிஸைன்

ஹூண்டாய் இயானுடன் ஒப்பிடும்போது, டட்ஸன் கோ காரின் டிஸைன் எடுபடவில்லை. ஆனால், டட்ஸன் கோ முழுமையான ஹேட்ச்பேக் காராக டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது. வேகன்-ஆர் போல டால் பாய் டிஸைனாக இல்லாமல், முழுமையான காராக இருக்கிறது கோ. ஆனால், பெரிய காரான டட்ஸன் கோ-வில் சின்ன வீல்கள் இருப்பதுதான் பொருத்தமாக இல்லை.

டிஸைனைப் பொறுத்தவரை, ஹூண்டாய் இயான் இந்த செக்மென்ட்டில் உள்ள மற்ற கார்களைவிட, பல மடங்கு ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் கார்.

வேகன்-ஆர் காரை டிஸைனுக்காக வாங்குபவர்கள் யாரும் இல்லை. காரணம், இந்த காரின் டிஸைன் மிகவும் பழசாகி விட்டது. மழைக் காலத்தில் ரியர் வைப்பர் என்பது மிக அவசியமான ஒன்று. ஆனால், மூன்று கார்களிலுமே பின்பக்க கண்ணாடியில் வைப்பர் இல்லை.

மூன்று கார்களில் வேகன்-ஆர்தான் அதிக எடைகொண்ட கார். வேகன்-ஆர் 885 கிலோ எடை கொண்டிருக்க, இயான் காரின் எடை 772 கிலோ. டட்ஸன், இயானைவிட சற்றே அதிகமாக 788 கிலோ இருக்கிறது. டட்ஸன் எடை குறைவு என்பது, காரின் கதவுகளை மூடும்போதே தெரிகிறது. ஆனால், காரின் பில்டு குவாலிட்டியை மோசம் என்று சொல்லி விட முடியாது.

4 லட்ச ரூபாய் பட்ஜெட் - என்ன கார் வாங்கலாம்?

உள்ளே

காரில் உட்கார்ந்து நோட்டம் விட்டால், முழுமையான காராக இருப்பது இயான்தான். உள்ளே இருக்கும் எந்த விஷயத்தையும் 'சீப்’ என்று சொல்ல முடியாதபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது இது. 'V’ வடிவ சென்டர் கன்ஸோல், சில்வர் டேஷ்போர்டு பட்டைகள், பெரிய ஏ.சி வென்ட் என ஹூண்டாயின் விலை உயர்ந்த கார்களில் இருக்கும் பல அம்சங்களை, அப்படியே இந்த விலை குறைந்த காரிலும் கொடுத்திருக்கிறார்கள். தண்ணீர் பாட்டில், பொருட்கள் வைத்துக் கொள்ள கதவுகள் மற்றும் டேஷ் போர்டில் நிறைய இடம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், காருக்குள் இட வசதி மிகவும் குறுகிவிட்டது. முதல் இரண்டு கியர்களை மாற்றும்போது, பக்கத்து சீட்டில் இருப்பவரின் தொடையை உரசித்தான் மாற்ற வேண்டியிருக்கிறது.

இயான் சிறப்பம்சங்களில் ஸ்கோர் செய்ய, வேகன்-ஆர் பயன்பாட்டு விஷயங்களில் முன் நிற்கிறது. கதவுகள் அகலமாகத் திறப்பதால், வயதானவர்களும் காருக்குள் வசதியாக ஏற முடிகிறது. மேலும், இருக்கைகளும் உயரமாக இருப்பதால், காருக்குள் உட்காருவது ஈஸி. டேஷ்போர்டு செங்குத்தாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இரட்டை வண்ண டேஷ்போர்டு, ஆங்காங்கே தென்படும் சில்வர் பட்டை ஆகியவை, டேஷ்போர்டை பளிச்செனக் காட்டுவதோடு, எல்லா மாருதி கார்களைப் போலவும் கன்ட்ரோல்கள் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கின்றன. ஆனால், இருக்கைகள் மிகவும் ஃப்ளாட்டாக இருப்பதால், நீண்ட தூரம் பயணிக்கும்போது, அசௌகர்யத்தை ஏற்படுத்துகிறது வேகன்-ஆர்.

4 லட்ச ரூபாய் பட்ஜெட் - என்ன கார் வாங்கலாம்?

இயான், டட்ஸன் ஆகிய கார்களில் இல்லாத அம்சமாக, அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட் வேகன்-ஆரில் உண்டு. மேலும், டேஷ்போர்டில் பொருட்கள் வைத்துக்கொள்ள இரட்டை க்ளோவ்பாக்ஸ் இருப்பதோடு, சீட்டுக்கு அடியில் சில பொருட்கள் வைத்துக் கொள்ள எக்ஸ்ட்ரா ட்ரே ஒன்றும் வைத்திருக்கிறார்கள். ஆனால், டோர் பாக்கெட்ஸ் மிகவும் சிறிதாக இருப்பது இதன் மைனஸ்.

பழுப்பு வண்ணத்தில் இருக்கும் இருக்கும் டட்ஸனின் டேஷ்போர்டு பார்ப்பதற்கு டல்லாக இருந்தாலும், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கதவுகளில் பொருட்கள் வைத்துக் கொள்ள நிறைய இடம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், முழுமையான க்ளோவ்பாக்ஸ் இல்லை. பிளாஸ்டிக் பாகங்களின் தரம் நன்றாக இருக்கிறது. கியர் லீவர், ஹேண்ட் ப்ரேக் இரண்டுமே டேஷ்போர்டிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. முன்பக்க இருக்கைகள் இரண்டையுமே தனித்தனியாக அட்ஜஸ்ட் செய்யும் வசதி இருந்தாலும், பார்ப்பதற்கு பெரிய பெஞ்ச் போலவே இணைந்திருக்கிறது. இரண்டு இருக்கைகளுக்கு இடையே இருக்கும் இடத்தில் பைகள் மற்றும் பொருட்களை வைத்துக்கொள்ளலாம் என்கிறது நிஸான்.

கோ காரின் பின்பக்க இருக்கைகளில் தாராள இட வசதி. கால்களை, நீட்டி மடக்கி வசதியாக உட்கார்ந்து பயணிக்கலாம். இட நெருக்கடி என்பது கோ-வில் இல்லை. ஆனால், இருக்கைகள் தாழ்வாக இருப்பதால், தொடைக்கான சப்போர்ட் போதுமானதாக இல்லை. மேலும், ஆட்டோ ரிட்ராக்டபிள் சீட் பெல்ட், அதாவது சீட் பெல்ட்டை இழுத்துவிட்டால், மீண்டும் தானாக உள்ளே இழுத்துக்கொள்ளும் வசதி டட்ஸன் கோ காரில் இல்லை. இது கிட்டத்தட்ட எல்லா கார்களிலுமே இருக்கும் அடிப்படை வசதி.

இருக்கைகள் உயரமாக இருப்பதால், வேகன்-ஆர் காரின் பின்பக்க இருக்கைகளில் உட்கார்ந்து பயணிப்பது வசதியாக இருக்கிறது.

4 லட்ச ரூபாய் பட்ஜெட் - என்ன கார் வாங்கலாம்?
4 லட்ச ரூபாய் பட்ஜெட் - என்ன கார் வாங்கலாம்?

ஹூண்டாய் இயானின் பின்பக்க இருக்கைகள்தான் மிகவும் இட நெருக்கடி மிகுந்தது. மேலும், பின்பக்க கண்ணாடிகளும் மிகச் சிறிதாக இருப்பதால், வெளிச்சாலையை முழுவதுமாகப் பார்க்க முடியவில்லை. கால்களை நீட்டி மடக்கி உட்கார இடம் இருக்கிறது என்றாலும், மற்ற கார்களுடன் போட்டி போடும் அளவுக்கு இயானில் இட வசதி இல்லை.

சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை இயான்தான் நம்பர் ஒன். பவர் ஸ்டீயரிங், முன்பக்க பவர் விண்டோ, ஏ.சி, சிடி ப்ளேயர், பென் டிரைவ், ஆக்ஸ்-இன் போர்ட் வசதி, ஒற்றை காற்றுப் பை என அனைத்து வசதிகளும் உண்டு. வேகன்-ஆர் காரில் ஏபிஎஸ் வசதி உண்டு. ஆனால், இதன் விலை 5 லட்சம் ரூபாயைத் தாண்டிவிடுகிறது. டட்ஸன் கோ காரில் சாவியைக் கொண்டு டிக்கியைத் திறக்கும் வசதி கிடையாது. உள்ளே இருந்துதான் டிக்கியைத் திறக்க முடியும். ஆனால், ஃபாலோ மீ ஹெட்லைட்ஸ், ரெயின் சென்ஸ் வைப்பர், காரின் மைலேஜ், டிஸ்டன்ஸ் டு எம்ப்டி மீட்டர் ஆகியவை இதில் உண்டு.

டிக்கியில் பொருட்கள் வைத்துக்கொள்ள அதிக இட வசதிகொண்ட காரும் டட்ஸன் கோ-தான். 265 லிட்டர் கொள்ளளவுகொண்ட டட்ஸன் கோ-வில் அதிகப் பொருட்களைக் கொண்டுசெல்ல முடியும். இயான் 215 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கியைக் கொண்டிருக்க, வேகன்-ஆர் காரில் வெறும் 180 லிட்டர்தான் டிக்கியின் கொள்ளளவு.

இன்ஜின்

மூன்று கார்களிலுமே 3 சிலிண்டர் இன்ஜின், 5-ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் பொருத்தப்பட்டுள்ளது. கோ கார்தான் குறைவான எடைகொண்ட இன்ஜின். அதேசமயம், அதிக சிசி திறன்கொண்ட கார். அதனால், மூன்றில் கோ கார்தான் வேகமானது. வேகம் மட்டும் அல்ல, இன்ஜின் செயல்பாடு மிகவும் ஸ்மூத்தாக இருக்கிறது. எந்த இடத்தில் பவர் குறைபாடோ அல்லது அதிகப்படியான பவரோ இல்லாமல், பெர்ஃபாமென்ஸ் ஒரே சீராக இருக்கிறது. நெடுஞ்சாலையில் ஓட்டும் போது ஓவர்டேக் செய்வது சுலபம். 0 - 100 கி.மீ வேகத்தை 14.5 விநாடிகளில் கடக்கிறது டட்ஸன் கோ.

வேகன்-ஆர் காரின் 1 லிட்டர் கே10 இன்ஜின், குறைந்த வேகத்தில் மோசமாக இல்லை என்றாலும், டட்ஸன் கோ அளவுக்கு சீராக இல்லை. குறைந்த சிசி திறன்கொண்ட கார் என்பதால், வேகமாகப் பறக்க ஆக்ஸிலரேட்டரைத் தொடர்ந்து மிதித்துக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. மேலும், அதிக வேகத்தில் செல்லும்போது, இன்ஜின் சத்தம் மிக அதிகமாகக் கேட்கிறது.

இயானின் மிகப் பெரிய பலவீனம், இதன் இன்ஜின். வெறும் 814 சிசி திறன்கொண்ட இயானின் இன்ஜின், அதிகமாக அதிர்கிறது. 55 தீலீஜீ சக்தி கொண்ட இயானில் அதிக வேகம் பறக்க முடியாது. ஓவர்டேக் செய்வதற்கு ஆக்ஸிலரேட்டரை மிதித்து, கியர்களை மாற்றி... நீண்ட நேரம் பிளான் போட வேண்டும்.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

எல்லா ஹூண்டாய் கார்களுமே சொகுசான பயணத்துக்கு ஏற்றபடி சஸ்பென்ஷன் செட்-அப் செய்யப்பட்டிருக்கும். அது ஹூண்டாய் இயானிலும் தொடர்கிறது. அதனால், பெரிய மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, அலுங்கல் குலுங்கல்கள் காருக்குள் அதிகமாக இருக்கிறது.

வேகன்-ஆர் சின்ன மேடு பள்ளங்களைச் சமாளித்தாலும், பெரிய மேடு பள்ளங்களில் அதிகமாகக் குலுங்குகிறது. அதேபோல், நெடுஞ்சாலையில் எதிர்க்காற்று அதிகமாக வீசும்போது, வேகன்-ஆர் ஸ்டெபிளிட்டியை இழக்கிறது.

மூன்று கார்களில் ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் சிறந்த கார், டட்ஸன் கோ. ஸ்டெபிளிட்டி மிகவும் சிறப்பாக இருப்பதோடு, மேடு பள்ளங்களில் அதிக அலுங்கல் குலுங்கல்கள் இல்லை. ஆனால், வெளிச்சத்தம் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது. ஒட்டு மொத்தமாக, வளைத்து நெளித்து, ஜாலியாக ஓட்டுவதற்கேற்ற பவர்ஃபுல் காராக இருக்கிறது டட்ஸன் கோ.

4 லட்ச ரூபாய் பட்ஜெட் - என்ன கார் வாங்கலாம்?

மைலேஜ்

அதிக சிசி திறன்கொண்ட டட்ஸன் கோ, நகருக்குள் அதிகபட்சமாக லிட்டருக்கு 12.8 கி.மீ மைலேஜ் தருகிறது. நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 17.9 மைலேஜ் தருகிறது. ஹூண்டாய் இயான் நகருக்குள் 13.7 கி.மீ, நெடுஞ்சாலையில் 17.2 கி.மீ தருகிறது. வேகன்-ஆர் நகருக்குள் 12.4 கி.மீ, நெடுஞ்சாலையில் 17 கிமீ மைலேஜ் தருகிறது.

4 லட்ச ரூபாய் பட்ஜெட் - என்ன கார் வாங்கலாம்?

மூன்று கார்களுடன் ஒப்பிடும்போது, மிகவும் சின்ன காராக இருக்கிறது ஹூண்டாய் இயான். அனைத்து வசதிகளும்கொண்ட ஸ்போர்ட்ஸ் மாடலின் சென்னை ஆன் ரோடு விலை 4.50 லட்சம். இந்த விலைக்கு பெர்ஃபாமென்ஸில் சிறந்த காராக இல்லை இயான். மேலும், பின்பக்க இருக்கைகளில் இட வசதியும் குறைவு.

வேகன்-ஆர் காரைப் பொறுத்தவரை, இது மற்ற இரண்டு கார்களைவிடவும் விலை அதிகமான கார். பார்க்கத் தூண்டும் வகையில் இதன் டிஸைனும் இல்லை. ஆனால், பயன்படுத்துவதற்குச் சிறந்த காராக இருக்கிறது. மாருதி என்பதால், திரும்பிய பக்கம் எல்லாம் சர்வீஸ் சென்டர்கள் இருப்பது இதன் மிகப் பெரிய பலம்.

4 லட்ச ரூபாய் பட்ஜெட் - என்ன கார் வாங்கலாம்?

டட்ஸன் கோ, மார்க்கெட்டில் புதுமையான காராக இருக்கிறது. அதிக இட வசதி உண்டு என்பதோடு, 1.2 லிட்டர் திறன்கொண்ட பவர்ஃபுல் காராகவும் இருக்கிறது. விலையும் குறைவு என்பதோடு, நம்பகத்தன்மை வாய்ந்த இன்ஜினைக் கொண்டிருக்கிறது டட்ஸன் கோ. நிஸானின் பலவீனமே இதன் ஷோரும் மற்றும் சர்வீஸ் சென்டர்கள்தான். இப்போது ஹோவர் நிறுவனத்தை விவாகரத்து செய்துவிட்டு, தானே சேல்ஸ் மற்றும் சர்வீஸ் பணிகளை எடுத்துக் கொண்டாலும், நிஸான் - டட்ஸன் ஷோரூம்கள் எல்லா ஊர்களிலும் இல்லை.

ஆனால், குறைந்த விலைக்கு பெர்ஃபாமென்ஸிலும், இட வசதியிலும் சிறந்த, முழுமையான காராக இருக்கும் டட்ஸன் கோ-தான் மூன்றில் சிறந்த கார்!

4 லட்ச ரூபாய் பட்ஜெட் - என்ன கார் வாங்கலாம்?