பிஎம்டபிள்யூ எக்ஸ்1சார்லஸ், சுரேன் படங்கள்: பத்ரி
இந்தியாவில் க்ராஸ்-ஓவர் கார்கள் பிரபலமாகும் காலம் இது. சின்ன கார் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டும் அல்லாது, பிரீமியம் கார் தயாரிப்பாளர்களும் இப்போது க்ராஸ்-ஓவர் கார் மார்க்கெட்டில் போட்டி போடுகிறார்கள். அந்த பிரீமியம் கார்களுக்கு இடையே, மிகப் பிரபலமான கார்தான் பிஎம்டபிள்யூ எக்ஸ்-1.

இந்த கார்களைத் தயாரிப்பது சுலபமான விஷயம் இல்லை. எஸ்யூவி கார்கள் போன்று பார்ப்பதற்குப் பிரம்மாண்டமாகவும் இருக்க வேண்டும்; அதே சமயம் நகருக்குள் ஈஸியாக ஓட்ட காம்பாக்ட்டாகவும் இருக்க வேண்டும்; நீண்ட தூரம் பயணம் செய்ய சொகுசான இருக்கைகள், அதிக வசதிகள் இருக்க வேண்டும்; விலை குறைவாக இருக்க வேண்டும்; மைலேஜும் அதிகமாக இருக்க வேண்டும் என ஏகப்பட்ட கண்டிஷன்கள். இந்த கண்டிஷன்களை எல்லாம் பூர்த்தி செய்திருக்கிறதா பிஎம்டபிள்யூ எக்ஸ்-1?
புதிய எக்ஸ்-1

2010-ம் ஆண்டு முதல் விற்பனையில் இருக்கும் எக்ஸ்-1 காரில், பல குறைபாடுகள் இருந்தன. சஸ்பென்ஷன் மிகவும் ஸ்டிஃப்பாக இருக்கிறது என்பதோடு, பின் பக்க இருக்கைகளில் இட நெருக்கடி அதிகம் இருப்பதாக நெகட்டிவ் கமென்ட்டுகள் எகிறின. இதனால், புதிய எக்ஸ்-1 காரை விற்பனைக்குக் கொண்டுவந்தது பிஎம்டபிள்யூ.
'எக்ஸ்-1, எல்லா உணர்ச்சிகளுக்கும், எல்லா நேரங்களுக்கும், எல்லா வேலைகளுக்கும் பொருந்தும் கார்’ என்கிற தீமில் டிவி விளம்பரம் வருகிறது. கடற்கரையில், மலைப் பாதையில், நகருக்குள் என காட்சிகள் நகரும். நாமும் இந்த தீமின்படியே நமது டெஸ்ட் டிரைவ்-ஐ அமைத்தோம். சென்னை அண்ணா சாலையில் துவங்கிய நமது பயணம், நகருக்குள் எக்ஸ்-1 எப்படி இருக்கிறது என்பதை உணர்த்தியது.
'ஆரஞ்சு வண்ணம், முன் பக்க பானெட்டில் அசத்தலான பிஎம்டபிள்யூ லோகோ’ - இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே மக்களின் கவனத்தை நம் காரின் பக்கம் திருப்பியதை உணர முடிந்தது. ஆரஞ்சு வண்ணம்தான் இந்த காரை மிகவும் ராயலான காராகக் காட்டுகிறது. ஆனால், அதைத் தாண்டி இந்த காரில் பிஎம்டபிள்யூ என்று சொல்லிப் பெருமைப்பட எந்த விஷயமும் இல்லை என்பதுதான் சோகம்.
உள்ளே
சென்டர் கன்ஸோலில் இடம் பிடித்திருக்கும் ஐ-டிரைவ் சிஸ்டத்தைப் புரிந்துகொள்ள நீண்ட நேரம் பிடிக்கிறது. மேலும், இந்த சிஸ்டத்தில் எதையாவது மாற்ற வேண்டும் என்றால், அதாவது மியூஸிக்கில் இருந்து நேவிகேஷன் செல்ல வேண்டும் என்றால், காரை நிறுத்திவிட்டுத்தான் செய்ய வேண்டும். கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறது ஐ-டிரைவ்.
மைலேஜை அதிகப்படுத்தவும், பெட்ரோலை மிச்சப்படுத்தவும் இந்த காரில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி உள்ளது. அதாவது, ஆக்ஸிலரேட்டரில் கால் இல்லாமல், இன்ஜின் ஐடிலிங்கில் இருந்தால், உடனடியாக இன்ஜின் ஆஃப் ஆகிவிடும். மீண்டும் ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்தாலோ, பிரேக் பெடலை அழுத்தினாலோ அல்லது ஸ்டீயரிங்கை வளைத்தாலோ உடனடியாக இன்ஜின் ஆன் ஆகிவிடும். ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் வேண்டாம் என்றால், ஆஃப் செய்து விடும் வசதியும் உண்டு.

சன் ரூஃப் இருக்கிறது. ஆட்டோமேட்டிக்காக சீட்டை அட்ஜஸ்ட் செய்யும் பவர் சீட் வசதியும் உண்டு, மழையைக் கணிக்கும் ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் உள்ளன. ஆனால், பிஎம்டபிள்யூ என்கிற பிரமிப்பை வரவழைக்கும் வகையில் காருக்குள் எதுவுமே இல்லை. பின்பக்க இருக்கைகளில் இட வசதி மிகவும் குறைவு. ஏ.சி டனலும் ஆறு போல குறுக்கே பாய்வதால், பின் இருக்கைகளில் இருவர்தான் உட்கார முடியும்.
இன்ஜின்
பழைய எக்ஸ்-1 காரில் இருந்த அதே 2 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின்தான் புதிய எக்ஸ்

-1 காரிலும் இடம் பிடித்திருக்கிறது. ஆனால், பழைய காரில் 177bhp சக்திகொண்டிருந்த இன்ஜின், புதிய எக்ஸ்-1 காரில் 184bhp சக்தியை வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. பெர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை, நகருக்குள் ஓட்ட சிறப்பாக இருந்தாலும், அதிக வேகத்தில் செல்ல ஆக்ஸிலரேட்டரை ஆழமாக அழுத்தினால் 1,500 ஆர்பிஎம்-க்கு மேல் டர்போ பூஸ்டர் வேலை செய்ய, சட்டென ஒரு இழுப்போடு பவர் வெளிப்படுவது சில நேரங்களில் பயமுறுத்துகிறது. 184bhp சக்திகொண்ட இன்ஜின்தான் என்றாலும், பவர் அதிகம் இருப்பதுபோலத் தெரியவில்லை. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேகத்துக்கு ஏற்ப சட்டெனக் கூடவும், குறையவும் செய்தது.
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த காரில், கியர் ஷிஃப்ட்டரை மேனுவல் மோடில் வைத்து ஓட்டிப் பார்த்தோம். குறைந்த ஸ்பீடில் எட்டாவது கியரில் செல்ல முடியாதபடி ப்ரோகிராமிங் செய்து வைத்திருந்தார்கள். இது நல்ல விஷயம்தான். பெட்ரோல் மிச்சமாகும்.
ஓட்டுதல் மற்றும் கையாளுமை
கடற்கரை மணலில் டெஸ்ட் செய்யும்போது, கார் எந்த இடத்திலும் சிக்கவில்லை. கிரவுண்ட் கிளியரன்ஸும் அதிகம் என்பதால், காருக்கு அடியில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், இதை ஆஃப் ரோடிங் பயணங்களுக்குப் பயன்படுத்த முடியாது. மணல் அதிகம் நிறைந்த கடற்கரையில் வீல்கள் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
பழைய எக்ஸ்-1 காரில் இருந்த ஹைட்ராலிக் ஸ்டீயரிங்குக்குப் பதில், இதில் எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், நகருக்குள் ஓட்டுவதற்கும், பார்க்கிங் செய்வதற்கும் ஈஸியாக இருக்கிறது. ஆனால், வளைவுகளில் வேகமாகத் திருப்பும்போது, ஸ்டீயரிங் 'கிக்பேக்’ அதாவது, நாம் ஸ்டீயரிங்கைத் திருப்பும் திசைக்கு எதிர்ப் பக்கம் தள்ளுவதுபோன்ற உணர்வைத் தருகிறது.

40 லட்சம் ரூபாயை நியாயப்படுத்தும் அளவுக்கு எக்ஸ்-1 காரில் எந்த பிரம்மாண்டமும் இல்லை. பிஎம்டபிள்யூ லோகோவை மறந்துவிட்டு காருக்குள் உட்கார்ந்தால், மிகச் சாதாரண காராக இருக்கிறது எக்ஸ்-1. இது முழுமையான நகரப் பயன்பாட்டுக்கான காரும் இல்லை; முழுமையான ஆஃப் ரோடு சாகசங்களுக்கான காராகவும் இல்லை. பணம் பிரச்னை இல்லை, பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 கார்தான் வேண்டும் என்பவர்கள், இந்த காரை வாங்கலாம்!