மஞ்சள் விளக்கு! கா.பாலமுருகன், படங்கள்: தி.விஜய்

பயணத்தின் நான்காவது நாள் மாலை, மத்தியப் பிரதேச மாநிலத்தின் எல்லையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில், சடங்குகளை முடித்துக் கொண்டு மாநிலத்துக்குள் நுழைந்தோம். புழுதிப் படலமாகக் காட்சியளித்த நிலப்பரப்பைப் புரிந்துகொள்ள நீண்ட நேரம் ஆனது. மண்ணே புழுதி வண்ணத்தில்தான் இருக்கிறது. அதனால், எதைப் பார்த்தாலும் அழுக்கு போலவே நம் கண்களுக்குத் தெரிகிறது. வடமாநிலங்களில் பயணம் செய்தால்தான் நம் மண்ணின் அருமை தெரியும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை 'நிலம் எனும் நல்லாள்’ பல்வேறுவிதமான நில அமைப்பையும் மண் வளத்தையும் வாரி வழங்கியிருக்கிறாள் என்பதும் புரியும்.
சாலையின் இரு பக்கமும் ஆங்காங்கே தென்பட்ட வீடுகளாகட்டும்; எதிர்ப்பட்ட சின்னச் சின்ன ஊர்களாகட்டும்; கட்டடங்களில் நேர்த்தியில்லாமல் செங்கல் தெரிய, அழுக்குக்கு அழுக்கு சேர்ப்பது போலவே இருந்தன. சட்டெனக் கவனிப்பவர்கள், அவற்றை வறுமையின் நிறமாக எண்ணக்கூடும். நானும் அப்படித்தான் நினைத்து சேட்டுவிடம், ''ரொம்ப வறுமையான ஏரியாவா இருக்கே!'' என்றேன். ''எதை வெச்சு அப்படிச் சொல்றீங்க?'' என்றார். கட்டி முடித்து பூசப்படாத வீடுகளையும் இன்ன பிற கட்டடங்களையும் காண்பித்தேன். சிரித்தார் சேட்டு. ''இந்த மாநிலத்தில புதுசா வீடு கட்டினா, அதுக்கு வரி கட்டணும். வரியோட தொகை ரொம்ப அதிகமாம். ஆனா, கட்டி முடிச்சு, ஏதாவது ஒரு ஏரியாவை முடிக்காம வெச்சிருந்தா, வரி கட்ட வேண்டியது இல்லை. அதனாலதான் நாம பார்க்கிற புதுக் கட்டடங்கள் எல்லாம் இப்படி இருக்கு!'' என்றதும் அதிர்ச்சியானேன். சட்டங்களும் திட்டங்களும் எப்படி எல்லாம் வளைந்து நெளிந்து கேட்பாரற்றுக்கிடக்கின்றன என்பதற்கு மத்தியப் பிரதேச மாநிலத்தின் கட்டடங்கள் சாட்சி.
மான்பூர் என்ற மலைப் பகுதியைக் கடக்க வேண்டும். இது மிகக் கவனமாகக் கடக்க வேண்டிய பகுதி. மேடான சாலையில் ஏறி இறங்குவது என்றாலே, சரக்கு வாகனங்களுக்குச் சவாலான விஷயம்தான். ஏனெனில், மேடேறும்போது இன்ஜின் முன்னோக்கி இழுத்தாலும் பாரம் பின்னோக்கி இழுக்கும். கீழிறங்கும்போது பிரேக் செய்து வாகனத்தை நிறுத்த நினைத்தாலும், பாரம் முன்னோக்கித் தள்ளும். இது இரண்டையும் புரிந்துகொண்டு அதற்கேற்றது போல சமநிலை குலையாமல் வாகாக ஏறி இறங்குவதில் அனுபவம் கைகொடுக்க வேண்டும். இதில், கொஞ்சம் கவனம் பிசகினால்கூட வாகனம் கவிழ்ந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மான்பூர் மலையில் லாரிகள் கவிழ்ந்துகிடப்பது, சர்வசாதாரணமான ஒன்று.
மான்பூர் மலை ஏறி இறங்கியதும், எதிர்பக்கம் வந்த லாரியின் சங்கேத ஹாரனுக்கு பதில் ஹாரன் கொடுத்துவிட்டு, லாரியை ஓரங்கட்டினார் சேட்டு. எதிரே வந்த லாரி இவர்களுடைய கம்பெனியைச் சேர்ந்தது. சாலையைத் தாண்டி அவர்களிடம் சிறிது நேரம் லோடு சார்ந்த தகவல்களைப் பேசிக் கொண்டிருந்தார் சேட்டு. மீண்டும் புறப்பட்டபோது, சரவணன் டிரைவர் சீட்டில் அமர்ந்தார்.

சூரியன் மறைய ஆரம்பித்திருந்தது. நிதானமாக ஊர்ந்துகொண்டிருந்தபோது ரத்தலம் என்ற பகுதி வந்தது. சாலையோரம் வரிசையாக கடைகள். 60 வாட்ஸ் குண்டு பல்புகள் விட்டில் பூச்சிகளைப்போல ஏராளமாகத் தொங்கிக்கொண்டிருந்தன. ''டீ குடிக்கலாமா?'' என்று சரவணனிடம் கேட்டேன். ''இங்கே வேண்டாம்; கொஞ்சம் தாண்டிப் போய்விடுவோம்'' என்றார். ஏன் என்றபோது, ''கொஞ்சம் சரியில்லாத ஏரியா. அதனால், லாரியை இங்கே நிறுத்த வேண்டாம்'' என்றார். ''நிறைய லாரிங்க நிற்குதே?'' என்றேன் விடாமல். லேசாகச் சிரித்தவர், ''விட மாட்டீங்களே... சார், இங்க கடைங்கிறது பேருக்குத்தான். கடை முன்னாடி உட்காந்திருக்கிறவங்களைப் பார்த்தீங்களா?'' அப்போதுதான் கவனித்தேன். லைன் வீடுகளைப் போல வரிசையாக இருந்த திண்ணை வைத்த வீடுகளில், முன் பக்கம் கடை என்ற பெயருக்காக சில குளிர்பான பாட்டில்கள், பிஸ்கட்டுகள், டீ போடும் சாதனங்கள் போன்றவை பெயரளவில் மட்டுமே இருந்தன. அந்தக் கடைகளின் முன்னால் போடப்பட்டிருந்த டேபிள் சேர்களில், அந்தப் பகுதிக்குச் சம்பந்தமில்லாத ஜீன்ஸ், டி-ஷர்ட், சுடிதார் என விதவிதமான உடைகளில் பெண்கள் அமர்ந்திருந்ததைக் கவனித்தேன். ''என்ன இது லேடீஸா இருக்காங்க... டூர் வந்தவங்களா இருக்குமோ?'' என்றேன். சத்தமாகச் சிரித்த சரவணன், ''டூர் வந்தவங்க கிடையாது. அவங்க எப்பவுமே இங்கதான் இருப்பாங்க'' என்றதும்தான் உண்மை புரிந்தது.
அங்கே அமர்ந்திருந்த சிறுவயது, இளவயதுப் பெண்கள் பாலியல் தொழில் செய்பவர்கள் என்பதை நம்ப முடியாமல் அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டு இருந்தேன். மிக மெதுவாக லாரியை இயக்கிய சரவணன், ''மத்தியப் பிரதேசத்துல ரத்தலம், மன்சூர், நிமோஜி - இந்த மூணு இடங்களும் இது அதிகம். அடுத்து மன்சூர்லயும் பார்க்கலாம். ஆனா, அங்க போகும்போது நடுராத்திரி ஆயிடும்'' என்றவர், ஆக்ஸிலரேட்டரை அழுத்தி மிதித்தார். மன்சூரை நெருங்கும்போது இரவு 10 மணியைத் தாண்டியிருந்தது. மீண்டும் ஆங்காங்கே ஒளிர்ந்த குண்டு பல்புகள் அந்த இடத்தைத் தனியாக அடையாளம் காட்டின. ஆனால், கடைகள் மூடப்பட்டு தூங்கியதற்கான அறிகுறிகளுடன் இருந்தது அந்தப் பகுதி. மெதுவாக லாரியை ஓட்டியவாறு ஒரு ஹாரன் கொடுத்தார் சரவணன். அடுத்த கணமே, வீடுகளின் திண்ணைகளில் இருந்து பல டார்ச் லைட்டுகள் உயிர்பெற்று, லாரியை நோக்கி ஒளிர்ந்து காட்டி அழைத்தன.
மையிருட்டுப் பூசிய அந்தி வேளையில், கருஞ்சாலையை ஊடறுத்து ஒளிவீசும் மஞ்சள் வண்ண குண்டு பல்புகள் அந்தப் பகுதியின் அவலத்தைச் சொல்லாமல் சொல்லின.
- நெடுஞ்சாலை நீளும்