கா.பாலமுருகன், படங்கள்: தி.விஜய்
பொதுவாக, நாடெங்கிலும் பாலியல் தொழில் நடக்கும் இடங்கள் லாரி டிரைவர்களுக்குத் தெரியும். நம் நாட்டில் ஹெச்.ஐ.வி கிருமியின் தொற்று பரவியபோது, தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது நாம் அறிந்ததே! தவறே செய்யாதவர்கள்கூட இதனால் பல துயரங்களை அனுபவித்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு காலத்தில், எந்தவிதத் தயக்கமும் இன்றி டிரைவர்களுக்குப் பெண் கொடுத்த இந்தச் சமூகம், திடீரென்று டிரைவர் என்றாலே முகத்தைத் திருப்பிக்கொண்டது. காரணம் - இந்த ஹெச்.ஐ.வி.

அந்தப் பாதிப்பு, இன்றைக்கு பாலியல் தொழில் நடக்கும் ஏரியாவில் லாரியை நிறுத்தக்கூட மறுக்கும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ''நிறுத்தினால் என்ன ஆகும்?'' சரவணனிடம் கேட்டேன். ''ஆயிரக்கணக்கான லாரிகள் ஓடும் சாலையில், ஒரு லாரியின் அடையாளம், அதன் முகப்பில் எழுதப்பட்டிருக்கும் பெயர்தான். நம் லாரி எங்கே நின்றாலும், சாலையில் செல்லும் சக தமிழக லாரி டிரைவர்கள், இது எந்த ஊர் லாரி என்பதை பெயரை வைத்தே தெரிந்துகொள்வார்கள்.
டிரைவர்கள் ஒன்றுகூடுகிற தாபாவிலோ அல்லது லாரி புரோக்கர் அலுவலகத்திலோ பேசிக்கொள்ளும்போது, இது போன்ற தகவல்கள் பரிமாறப்படும். இந்தப் பெயர்கொண்ட இந்த ஊர் லாரி, இந்த இடத்தில் நின்றிருந்தது என்ற தகவல் டிரைவர்கள் மூலம், லாரி உரிமையாளரின் காதுக்கு எட்டிவிடும். லாரி உரிமையாளர் உடனே, அந்த லாரியில் சென்ற இரண்டு டிரைவர்களில் யார் குற்றவாளி என்பதை தொலைபேசியிலேயே விசாரிப்பார். அடுத்த நிமிடமே அந்த டிரைவரின் வேலை போய்விடும். அந்த டிரைவர் வேறு ஏதாவது வாகனம் பிடித்துத்தான் ஊர் வந்துசேர வேண்டும். ஓனருக்குத் தெரியவில்லை என்றால்கூட, சக டிரைவர்களின் மூலம் டிரைவரின் வீட்டுக்குக்கூட இந்த விஷயம் கசிந்துவிடும். அதுபோலவே, டிரைவருக்குப் பெண் கொடுக்க நினைப்பவர், அந்த லைனில் ஓடும் மற்ற டிரைவர்களிடம் பையன் எப்படி என்று நிச்சயம் விசாரிப்பார். அப்போது மாட்டிக்கொள்வார்கள். இதுபோல, பல சிக்கல்கள் இருப்பதால், அந்தப் பக்கம் இப்போது யாரும் ஒதுங்குவது இல்லை.

மேலும், பல இடர்பாடுகள் நிறைந்த டிரைவர் வேலைக்கு, நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. லாரி, கொண்டு செல்லும் சரக்கு, செலவுக்கான பணம், ரிப்பேர், எதிர்பாராத விபத்து என பாதுகாப்பாகப் போய்வருவதிலேயே முழுக் கவனமும் இருக்க வேண்டும். ஸ்டெப்னி டயர் ஒன்றைப் பறி கொடுத்தாலே, 20,000 ரூபாய் நஷ்டம். சரக்கு ஏதாவது திருடு போனால், அந்தத் தொகையைச் செலுத்தித்தான் அதிலிருந்து மீள வேண்டும். ஏதாவது விபத்தில் சிக்கி, வட மாநில நீதி மன்றங்களுக்கு வழக்குக்காக அலைந்தே பாதி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஏராளம்.
விபத்து வழக்குக்காக, சேலம் மாவட்டத்தின் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஒருவர், மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஏதாவது மாவட்ட அல்லது தாலுகா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியது இருக்கும். பல சமயம் சம்மன் கிடைக்காமலோ, வழக்கு விசாரணைக்கு வந்தது தெரியாமலோ இருந்துவிடுவார். பிடிவாரன்ட் வரும்போதுதான் அடித்துப் பிடித்து ஓடி ஆஜராக வேண்டும். விசாரணைக்கு ஆஜராகாத இதுபோன்ற சமயங்களில், ஜெயிலுக்கு அனுப்பிவிடுவதும் நடக்கும். தெரியாத ஊரில், புரியாத மொழியில், பணம் இல்லாமல் திண்டாடி, சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் பல நாட்கள் இருக்க நேர்வது, கொடுமையான விஷயம். கேஸ் எதுவும் இல்லாமல் இருந்தால்தான் நிம்மதியாக லாரியை ஓட்ட முடியும். ஏனென்றால், எப்போது சம்மன் வரும்; எப்படிப் போய்வருவது; வக்கீலை எங்கே பிடிப்பது என பெரும் மன உளைச்சலாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில் லைனில் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது. அதனால், வருமானமும் இருக்காது!'' என்று துயரங்களை அடுக்கினார் சரவணன்.
நமது பயணத்தில் அடுத்து நுழையவிருக்கும் இடம், ராஜஸ்தான் மாநிலம். ''இரவு 1 மணிக்கு ராஜஸ்தானில் நுழைந்துவிடலாம்'' என்றார் சரவணன். நள்ளிரவின் அடர்த்தியில் தூக்கம் கண்களைச் சுழற்ற, தூங்கிப்போனேன்.
லாரி கேபின் கதவைப் பலமாகத் தட்டும் சப்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருந்தது. தூரத்தில் கேட்ட ஒலி, படிப்படியாக நெருங்கிக்கொண்டு இருந்தது. கதவுத் தட்டலுடன் ஒரு குரலும் ஏதோ கேட்பதை உணர்ந்தேன். தட்டலும் குரலும் நெருங்க நெருங்க... டக்கென எழுந்து அமர்ந்தேன். இன்ஜின் அணைக்கப்பட்டு லாரி நின்றுகொண்டிருந்தது.

''என்னாச்சு?''
''டிராஃபிக்...'' என்றார் சரவணன். ''எவ்வளவு நேரமா?'' என்றதும், ''அது ஒரு நாலு மணி நேரமா!'' என்றார். 'அவ்வளவு நேரமாகவா லாரி நிற்கிறது’ என அதிர்ச்சியுடன் வெளியே பார்த்தேன். இருளை விலக்க முயற்சித்த வெளிச்சப் புள்ளிகள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்தன. அப்போது மீண்டும் அந்தத் தட்டல் ஓசையைக் கவனித்தேன். ''என்ன சத்தம் அது?'' என்று கேட்கவும் ''வரும் பாருங்கள்'' என்றார் சரவணன்.
நாம் அமர்ந்திருந்த லாரியின் கதவு தட்டப்பட்டதும், திறந்தார் சரவணன். கீழே ஒரு சிறுவயதுப் பெண். இந்த நள்ளிரவிலும் பிச்சை கேட்கிறாளோ என யோசித்த வேளையில், அந்தப் பெண் இந்தியில் கேட்கிறார். சரவணன் மறுக்கவும் கொஞ்சமும் ஏமாற்றமடையாமல் அடுத்த லாரியை நோக்கி நகர்ந்தாள். அவளது உடையும் அலங்காரமும் எதற்காக வந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. தட்டப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் வரும் மறுப்பை எதிர்பார்த்தவள்போல, அடுத்த லாரியிலும் அதே தட்டல், அதே கேள்வி எனத் தொடர்கிறது அவளது பயணம்.
அந்த அகால வேளையில், தயக்கமோ, கூச்சமோ இல்லாத தொனியில் விடுக்கும் அந்த அழைப்பு, நம்மைப் பதறவைக்கிறது. இளமையில் வறுமை பெரும் கொடுமை. இளமையே வறுமைக்கு உணவாகும்போது, அதைவிட துயரம் இந்த உலகத்தில் வேறு என்னவாக இருக்க முடியும்? இந்தியாவின் மகள்கள், வயிற்றுப் பசிக்காக தனது உடலை விற்க, நெடுஞ்சாலை லாரிகளின் கதவுகளைத் தட்டும் சத்தம் நெஞ்சில் அறைகிறது.
லாரி நின்றிருந்த இடம், மத்தியப் பிரதேச மாநில எல்லையான நிமோஜி. கிட்டத்தட்ட விடிந்த பிறகுதான் அந்த இடத்தில் இருந்தே நகர முடிந்தது. எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் சடங்குகளை முடித்துக்கொண்டு, ராஜஸ்தான் மாநிலத்துக்குள் நுழைந்தபோது வெயில் ஏறியிருந்தது.
(நெடுஞ்சாலை நீளும்)