கா.பாலமுருகன், படங்கள்: தி.விஜய்
ராஜஸ்தான் என்றாலே, பாலைவனம் என்ற மனச்சித்திரம் நமக்குள் இருக்கிறது. ஆனால், அது உண்மை அல்ல. ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஒரு பகுதி மட்டுமே பாலைவனம். மற்றபடி, விவசாயமும் சிறப்பாகவே நடக்கிறது. மேலும், ராஜஸ்தானில் சுற்றுலாத் தலங்கள் ஏராளம். வெளிநாட்டுப் பயணிகளை ராஜஸ்தான் மாநில நகரங்களில் சர்வசாதாரணமாகக் காண முடிகிறது. காலை உணவாக உப்புமா போல வேக வைத்துத் தாளித்த அவல் பொட்டலம் ஒன்றை, ராஜஸ்தான் மாநில கிராமத்தில் 10 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தார் சேட்டு. பிரமாதமான சுவை. காலை உணவு முடிந்தது. பொதுவாக, தேசிய நெடுஞ்சாலை புறநகர்க் கடைகளில், உணவுப் பொருட்கள் மிகக் குறைவான விலையில்தான் கிடைக்கின்றன. பெரிய தாபாக்கள் இருந்தாலும், அங்கே லாரிகள் நிற்பது இல்லை. அங்கே, பெரும்பாலும் காரில் வருபவர்கள்தான் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள்.

நாங்கள் குளித்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. இயற்கை உபாதையைத் தணிக்க, நெடுஞ்சாலையில் எந்த அமைப்பும் இல்லை. லாரிகளுக்கான தாபாவில் குளிப்பதற்கு திறந்தவெளியில் தொட்டி கட்டி இருக்கிறார்களே தவிர, கழிப்பிட வசதியை நாம் பயணம் சென்ற சாலைகளில் இதுவரை பார்க்கவில்லை. சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு, திறந்த வெளியில் புதர் மறைவு தேடிச் செல்கிறார்கள் டிரைவர்கள். குறிப்பிட்ட சில பெரிய பெட்ரோல் பங்க்குகளில் மட்டுமே கழிப்பிட வசதி இருக்கிறது. அந்த பெட்ரொல் பங்க்குகளை நெடுஞ்சாலையில் விரல்விட்டு எண்ணிவிடலாம்.
இன்று இரவு டெல்லிக்குள் நுழைவதால், எங்கேயாவது குளித்தால் புத்துணர்ச்சியாக இருக்குமே என்று தோன்றியது. சேட்டுவிடம் சொன்னேன். ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பிரம்மாண்டமாக இருந்த பாரத் பெட்ரோலியம் பங்க்கில் லாரியை நுழைத்தார். உள்ளே ஏராளமான லாரிகள் நின்றிருந்தன. இங்கு திறந்தவெளிக் குளிப்பிடம் இல்லை. குளியலறைகள் வசதியாகவும் சுத்தமாகவும் இருந்தன. அலுப்பும் அழுக்கும் தீரக் குளித்து முடித்தபோது, லாரிக்கு டீசல் பிடித்துக் கொண்டிருந்தார் சேட்டு.
மஹிந்திரா நேவிஸ்டர் லிட்டருக்கு 4.2 கி.மீ மைலேஜ் அளிக்கிறதாம். லிட்டருக்கு 5 கி.மீ கிடைத்தால் ஓரளவுக்குக் கட்டுபடி ஆகும் என்பது இவர்களின் வாதம். சேலத்தில் இருந்து டெல்லி செல்வதற்கு சுமார் 640 லிட்டர் டீசல் செலவாகுமாம். டெல்லி போய்வர சுமார் 1,280 லிட்டர் டீசல் செலவாகிறது. இவர்களின் நிறுவனத்தில் மஹிந்திரா நேவிஸ்டர் லாரிகள் இரண்டு உள்ளன. அதில் ஒன்றில் மைலேஜுக்காக அலாய் வீல், ட்யூப்லெஸ் டயர் பொருத்தி இருந்ததைக் ஏற்கெனவே காண்பித்திருந்தனர். இதனால், லிட்டருக்கு 4.3 கி.மீ வரை மைலேஜ் கிடைப்பதாகச் சொன்னார் சேலம் அலுவலக மேலாளர் மணி. இதன் மூலம், ஒரு ட்ரிப்புக்கு சுமார் 40 லிட்டர் டீசலை மிச்சப்படுத்த முடியும். அதாவது 2,000 ரூபாய் மிச்சமாகும் என்பது இவர்களது கணக்கு.
முதல்நாள் இரவு மத்தியப் பிரதேச எல்லையில் ஏற்பட்ட டிராஃபிக்கில், நீண்ட பொழுது கழிந்துவிட்டதால், அன்று சமைக்கவில்லை. அதனால், ''மதியம் பெரிய தாபாவில் நிறுத்துங்கள், சாப்பிடலாம்'' என சேட்டுவிடம் கூறினேன். ''எதுக்கு சார் வெட்டிச் செலவு. 30 ரூபாய்க்கு ரொட்டி சப்ஜி கிடைக்கும். வாங்கித் தாரேன்... சாப்பிடலாம்'' என்றார் சேட்டு. ''பெரிய ஹோட்டலில் சாப்பிட்டிருக்கிறீர்களா?'' என்று கேட்டபோது, இருவருமே இல்லை என்றனர். ''அவங்க சாப்பாடு நமக்குத் திருப்தியா இருக்காது; விலையும் அதிகமா இருக்கும். நமக்குக் கட்டுபடி ஆகாதுங்கிறதால, அந்தப் பக்கம் ஒதுங்குனது இல்லை!'' என்றவர்களைச் சம்மதிக்க வைத்தேன்.

டெல்லியை நெருங்குகிறோமே, செக்கிங் கடுமையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. ராஜஸ்தான் நெடுஞ்சாலையில் பெரிதாக கெடுபிடிகள் இருக்காது என்றனர் டிரைவர்கள். ஆனால், வழியில் நின்ற காவல்துறையினருக்கு 300 ரூபாய் வீதம் மூன்று இடங்களில் கொடுத்தனர். அவ்வளவுதான்.
விவசாய நிலங்களாக இருந்த நிலப்பரப்பு திடீரென மாறியது. டெக்ஸ்டைல் மில்களில் கட்டடங்கள் வரிசை கட்டிவர, ''பில்வாரா வந்து விட்டோம்!'' என்றார் சேட்டு. பில்வாரா எனும் ராஜஸ்தானின் சின்ன ஊர், கோவையைப் போன்று டெக்ஸ்டைல் உற்பத்திக்குப் புகழ்பெற்றது. ''ஒரு காலத்தில தமிழ்நாட்டுல இருந்து நூல் ஏத்திக்கிட்டு வரிசை கட்டி வருவோம். நம்ம ஊருல பருத்தி வெளச்சல் இல்லாததால, அதுக்கு வேலையே இல்லாமப் போச்சு!'' என்றார் சேட்டு.
பில்வாரா கடந்து அஜ்மீர் பைபாஸில் புகுந்து ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நுழைந்தபோது, சாலையோரங்களில் வரிசை கட்டி ஏராளமான மோட்டல்கள். அதில், பெரிய மோட்டல் ஒன்றைப் பார்த்து அங்கே நிறுத்துமாறு கூறினேன். சாலையில் செல்லும் கார்களை கைகாட்டி அழைத்துக் கொண்டிருந்த மோட்டல் ஊழியர், லாரி நுழைவதைக் கண்டு திகைத்து, தவறாக வருவதாக எண்ணி அருகே இருந்த தாபா நோக்கிக் கைகாட்டினார். சிரித்தபடியே மோட்டலில் நிறைந்திருந்த கார்களுக்கு மத்தியில், லாரியை நிறுத்தினார் சேட்டு.
அங்கிருந்த முகங்கள் எல்லாம் எங்களை ஆச்சரியமாகக் கவனிப்பதை உணர்ந்தேன். விலக்கப்பட்ட வாகனமாக லாரியைக் கருதும் அந்த வளாகத்தில் இருந்த ரெஸ்டாரன்ட்டுக்குள், கம்பீரமாக நால்வரும் நுழைந்தோம்.
(நெடுஞ்சாலை நீளும்)