மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 16

கா.பாலமுருகன் படங்கள்: தி.விஜய்

ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் இருந்த அந்த உயர்தர மோட்டலில், லாரியை நிறுத்திச் சாப்பிடச் சென்றோம். சப்பாத்தி, தால், பிண்டி ஃப்ரை, ஃப்ரைடு ரைஸ் என வழக்கமான உணவு வகைகள்தான் அங்கும் இருந்தன. சோற்றில் சாம்பாரும் காய்கறிகளும் கலந்து உண்ணும் அனுபவத்துக்கு இவை ஈடாகாதுதான். ஆனாலும், மென்று தின்றுவிட்டு மீண்டும் லாரியில் ஏறினோம். டிரைவர் சீட்டில் அமர்ந்தார் சரவணன்.

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 16

நால்வழிச் சாலையில், மிதமான வேகத்தில் மிதந்துகொண்டிருந்தோம். வெயில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மாலைக்கான ஆயத்தங்கள் வானத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஜெய்ப்பூரை மேம்பாலங்கள் மூலமாகக் கடந்ததாலும், இணைப்புச் சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் காரணமாக, நின்றும் ஊர்ந்தும் உறுமியபடி முன்னேறினோம். ஜெய்ப்பூர் நகர் கடந்ததும் பைபாஸில் லாரியை ஓரங்கட்டினார் சரவணன். காரணம், ''இரவு 11 மணிக்கு மேல் அதிகாலை 4 மணி வரைதான் டெல்லி நகருக்குள் லாரிகள் செல்ல அனுமதி. முன்கூட்டியே சென்றால், ஏதாவது ஓர் இடத்தில் நிற்க வேண்டும். ஒதுங்க இடம் கிடைக்காமல் அல்லாட வேண்டும். அதனால், இங்கேயே கொஞ்சம் தாமதித்துவிட்டு, சரியான நேரத்தில் உள்ளே நுழைந்துவிட வேண்டும்'' என்றார் சரவணன்.

டெல்லியில் நாம் இறங்கி ரயிலில் சென்னை திரும்ப வேண்டும் என்பதால், லாரி கிளீனருக்கான உடைகளைக் களைந்து விட்டு, வேறு உடைக்கு மாறினோம். மேலும், தலைநகர் டெல்லியில் லாரி நுழைவதால், ஏகப்பட்ட பாதுகாப்புச் சோதனைகள் இருக்கும். போலீஸாரின் கேள்விகளுக்கு என்னென்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை நானும் விஜய்யும் ஒருமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டோம். அதைப் பார்த்து மர்மமாகச் சிரித்துக் கொண்டார் சேட்டு. நேரம் போக்குவதற்காக, சமையல் பாத்திரங்களை இருவரும் சேர்ந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.

லோடு இறக்கும் இடத்தில் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பது தெரியாது. லாரியில் ஏற்றப்பட்டிருந்த வனஸ்பதி பெட்டிகள் ஒரே இடத்தில் இறங்குபவையா அல்லது வெவ்வேறு இடங்களில் இறக்க வேண்டியது வருமா என்பதும் தெரியாது. சிலசமயம், லோடு இறக்குவதற்கே இரண்டு நாட்கள்கூட ஆகிவிடுவது உண்டு. அதுபோன்ற சமயத்தில் இயற்கை உபாதையைத் தீர்க்க வழியில்லாமல், அல்லாடுவது பெரும் அவலம். சரக்கு ஏற்றிய லாரியை டெல்லியில் நிறுத்தி வைத்து விட்டு ஓய்ந்திருக்க முடியாது. திருட்டு அதிகம். திருட்டுக் கொடுத்த பொருளுக்கு இணையான பணம் கட்டினால்தான், அங்கிருந்து மீள முடியும். கொண்டுவந்த சரக்குகள் சேதாரம் இல்லாமல் நல்லபடியாக இருந்து, வெவ்வேறு குடோன்களில் இறக்கி வைக்கப்பட்ட பிறகு, வாடகைப் பணம் கையில் கிடைக்கும். அதன் பின்புதான், லாரி புரோக்கர் அலுவலகத்துக்குச் சென்று பெயரைப் பதிய வேண்டும்.

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 16

திருச்சியில் இருந்து டெல்லிக்கு ஏற்றிய வனஸ்பதியை இறக்கிவிட்டு, மீண்டும் எந்த ஊருக்கு, என்ன லோடு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். ரிட்டன் லோடு நாம் விரும்பும் ஊர்களுக்குக் கிடைக்காது. அவை ஓசூர், கோவை, கேரளா என தெற்கே எங்கு கிடைத்தாலும் ஏற்றத் தயாராக இருக்க வேண்டும். வாடகை குறைவு; லோடு அதிகம் அல்லது குறைவு போன்ற காரணங்களால் வேண்டாம் என தவிர்க்கவும் முடியும். ஆனால், அடுத்து நமது முறைக்காகக் காத்திருக்க வேண்டும். ரிட்டன் லோடு கிடைக்க சில சமயம் நான்கைந்து நாட்கள்கூட ஆகிவிடுவதும் உண்டு. அப்போது செலவுகளும் அதிகமாவதைத் தவிர்க்க முடியாது.

ஏழு மணிக்கு லாரியைக் கிளப்பினார் சேட்டு. டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை விசாலமாகத்தான் இருந்தது. ஆனால், ஆங்காங்கே மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றதால், குறுகலான இடத்தில் ஊர்ந்துசெல்ல வேண்டிய நிலை. சிறிது நேரத்தில் அதுவும் முடியாமல், நகர்ந்து செல்ல ஆரம்பித்தன. நேரம் செல்லச் செல்ல லாரிகள் சாலையில் குவிந்ததைக் கண்டு திகைப்பு ஏற்பட்டது. சாலை முழுவதும் லாரி மயம். ஓரிடத்தில் சுத்தமாக நகர முடியாதபடி மொத்த வாகனங்களும் அசையாமல் நின்றுவிட்டன. திருச்சியில் இருந்து சுமார் 2,500 கிலோ மீட்டர் தூரம் வரை ஆக்ஸிலரேட்டரை அளவாக மிதித்து, நியூட்ரல் அடித்து லாவகமாக ஓட்டி, கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்த டீசல், ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞ்சாலையில் நின்ற இடத்தில் இருந்து வெறும் புகையாக விரயமானது.

''இவ்வளவு பாடுபட்டுச் சேர்த்து வெச்சு ஒரு பிரயோஜனமும் இல்லாமப் போச்சு!'' என்று டிராஃபிக் நெருக்கடியை நொந்து கொண்டார் சரவணன். சிறிது நேரத்தில் மீண்டும் லாரிகள் நகர ஆரம்பிக்க... ஒருவரை ஒருவர் முந்திவிட வேண்டும் என்ற வேகம் சாலையில் இருந்த அனைத்து லாரிகளிடத்தும் இருந்ததை உணர முடிந்தது. தன்னை முந்த முயற்சிக்கும் குஜராத் லாரியை 'ஏ.... பையா’ என்று எச்சரிப்பதும், நாம் முந்த நினைக்கும் மத்தியப் பிரதேச லாரிக்காரர் 'ஏ... அண்ணா’ என்று எச்சரிப்பதும் விநோதமான ஓர் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தியது. முறைக்கவில்லை; கடிந்து கொள்ளவில்லை; ஏக வசனத்தில் யாரும் யாரையும் திட்டவில்லை. 'பையா - அண்ணா’ எனும் வார்த்தைகள், இரும்புக் குதிரைகளின் உண்மையான மனசை வெளிப்படுத்துகிறது.

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 16

மிளகாய் மூட்டைகள் ஏற்றிய ஐஷர் வாகனங்கள் அளவில் சிறியவை. கொண்டுசேர்க்கத் தாமதமானால் மிளகாய் அழுகி விடும். அதனால், சாலையில் கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் புகுந்து புறப்பட்டு வந்துகொண்டு இருந்தனர். முந்த நினைக்கும் லாரியை மெலிதாக அழுத்திக் கொடுக்கும் ஹாரன் சத்தம், அதிருப்தியை சங்கேதமாக அந்த டிரைவருக்கு உணர்த்துகிறது. சிறு புன்னகையோடு பிந்துகிறார் அந்த டிரைவர். அனைவருக்குமே அவசரம்தான். குறிப்பிட்ட நேரத்துக்குள் டெல்லிக்குள் நுழைவதில் முனைப்புக் காட்டினர். குறிப்பிட்ட சமயத்தில் செல்ல முடியாவிட்டால், அடுத்த நாள் இரவு வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் பரபரப்புக்குக் காரணம்.  

ராஜஸ்தான் மாநிலம் கடந்து ஹரியானா மாநிலத்துக்குள் நுழைந்ததும், ரிலாக்ஸ் ஆனார் சரவணன். சேட்டு, டிரைவர் சீட்டில் அமர்ந்தார். மாலேகான், குர்கான் கடந்தால், டெல்லிதான். இன்னும் கொஞ்ச தூரம்தான். லாரியை வேகமாக விரட்டினார் சேட்டு. ஆனால், நேரம் அதிகாலை 4 மணியைத் தாண்டிவிட்டது.

(நெடுஞ்சாலை நீளும்)