மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 17

எது புத்திசாலித் தனம்? கா.பாலமுருகன், படங்கள்: தி.விஜய்

டெல்லி நகருக்குள் லாரிகள் நுழைய அனுமதிக்கப்படும் நேரம், இரவு 11 முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே! அந்த நேரம் தாண்டிவிட்டதால், பதற்றம் நமக்கும் தொற்றிக்கொண்டது. டெல்லி மாநகரம் மூன்றடுக்கு, நான்கடுக்கு பாதுகாப்பு ஏரியாவாயிற்றே... என்ன செய்வது எனக் கவலைகொண்டோம். அடுத்த நாள் இரவு வரை காத்திருந்தாலும் செலவு, தாமதம் என பணம், நேரம் விரயம் தவிர்க்க முடியாதது.

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 17

ஹரியானா மாநில எல்லையில் இருந்தே நகர்மயமாகக் காட்சியளித்தது. புறநகர் வருவதுபோலத் தெரியவில்லை. ஒருவேளை லாரிகளுக்கான பார்க்கிங் ஏரியா இருக்கும் என நினைத்து, ''பார்க்கிங்கில் நிறுத்தப் போகிறீர்களா?'' என சேட்டுவிடம் கேட்டேன். இல்லை என்றவர், ''மாலேகான், குர்கான் பகுதி எல்லாமே இண்டஸ்ட்ரியல் ஏரியா. இங்கே லாரியை நிறுத்த முடியாது. இப்படியே உள்ளே நுழைந்துவிட வேண்டியதுதான். அதிர்ஷ்டம் இருந்தால் ஃபைன் கட்டுவதில் இருந்து தப்பிக்கலாம்'' என்றார் சேட்டு.  

டெல்லிக்குள் நுழைந்ததும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நிற்பார்களே... அவர்களை எப்படித் தவிர்ப்பது என்ற பதற்றம் டிரைவர்கள் இருவரிடமும் இருந்தது. அவர்களிடம் சிக்கினால், இரண்டாயிரம் அபராதம் என்பதுதான் அதற்குக் காரணம். நமக்கு முன்னே சென்ற லாரியின் வலதுபுற பக்கவாட்டில், விநோதமான முறையில் பின் தொடர்ந்தார் சேட்டு. குர்கான் தாண்டி, டெல்லி நகருக்குள் நுழைந்தது லாரி. யாரும் நிறுத்தவில்லை. விமான நிலையம் தாண்டி ஜங்ஷன் போன்ற இடத்தில், முன்னால் சென்ற லாரி லேசாகத் தயங்கியது. சட்டென அந்த லாரியின் வலதுபுறம் மறைந்தவாறு லாரியை ஓட்டிச் சென்றவர், திடீரென அந்த லாரியை ஓவர்டேக் செய்து விரைந்தார். பக்கவாட்டுக் கண்ணாடியில் பார்த்தபோது, நமக்கு முன்னே சென்ற லாரியை அதிகாரிகள் மடக்கி நிறுத்தியிருப்பது தெரிந்தது.

அதிகாலை 4.30 மணிக்கு டெல்லி சாலையில் போக்குவரத்து இல்லை. டெல்லிக்குள் நுழையும் வாகனங்களைச் சோதனை செய்ய காவல் துறையினர் யாரும் இல்லை. நகருக்குள் இடமும் வலமுமாகத் திரும்பிப் பறந்துகொண்டிருந்தது நமது லாரி. டெல்லியைக் குறுக்காகக் கடந்த அந்த அரைமணி நேரப் பயணத்துக்குப் பிறகு, புறநகர் ஒன்றின் சந்துக்குள் நுழைந்து, ரயில்வே டிராக் ஓரமாக இருந்த பழைய கட்டட வாசலில் லாரியை நிறுத்தினார் சேட்டு. ''அவ்வளவுதான். வந்து சேர்ந்து விட்டோம்'' என்று புன்னகைத்தார்.

நமக்கு நம்ப முடியவில்லை. தலைநகர் டெல்லிக்குள் ஒரு லாரி எந்தச் சோதனையும் இல்லாமல் சென்றுவிட முடிவது அதிர்ச்சியாக இருந்தது. திருச்சியில் இருந்து வரும் லாரியில் வனஸ்பதிதான் இருக்கும் என்று நாங்கள் நம்பலாம். ஆனால், தீவிரவாதத் தாக்குதல் பிரச்னை உள்ள தலைநகரின் காவல்துறை நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லையே! நாங்கள் இருவரும் காவல்துறையின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க ஒத்திகை பார்த்தது எல்லாம் வீண்! அப்போது சேட்டு ஏளனமாகச் சிரித்தது நினைவுக்கு வந்தது. நாங்கள் வந்த லாரி மட்டுமல்ல, எந்த லாரியையும் யாரும் சோதனை செய்வதில்லை என்பது தெரிந்தது. ஏதாவது உளவுத்துறை தகவல் வந்தால் மட்டும் சோதிப்பார்கள் போல. மேலும், நள்ளிரவில் டெல்லிக்குள் நுழையும் அத்தனை லாரிகளையும் சோதனை செய்வது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று என்பதும் புரிந்தது.

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 17

இருள் விலகாத அதிகாலை 5 மணிக்கு புறநகரில் இருந்து நாங்கள் எங்கே செல்வது என்ற குழப்பம். ''கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள். வெளிச்சம் வந்ததும் ஆட்டோ பிடித்துத் தருகிறேன்'' என்றார் சேட்டு. டெல்லி புறநகரின் அந்த ரயில் பாதையின் ஓரம் இருந்த கால்வாயில் சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது. அதன் மணம், சென்னையின் கூவம் நதிக்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல. ராட்சஸக் கொசுக்களின் ரீங்காரத்துடன் அடுத்த ஒரு மணி நேரத்தைக் கழித்தோம்.

இந்த ஐந்து நாட்கள் எங்களுக்குள் ஏற்பட்ட உறவு, ரயில் சிநேகம் போன்றது அல்ல. ''சேலம் வந்தா அவசியம் வீட்டுக்கு வாங்க சார்; எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க; உங்களால எங்களுக்கெல்லாம் நல்ல காலம் வந்தா சரி!'' என நம்பிக்கையும் அன்பும் கலந்த உரையாடல்கள் எங்களை நெகிழ்த்த, பளீரென விடிந்திருந்தது.

20 ஆண்டுகளுக்கு மேலாக டிரைவராகவே இருக்கிறார் சேட்டு. இதுவரை அவருக்கு என எதுவும் சொத்து இல்லை. கடந்த 9 ஆண்டுகளாக டிரைவராகவும், அதற்கு முன்பு ஐந்து ஆண்டுகள் கிளீனராகவும், மொத்தம் 14 ஆண்டுகள் லாரியில் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கும் சரவணனுக்கு, இன்னும் திருமணம் ஆகவில்லை. சம்பளம், படிக்காசு மட்டுமே இவர்கள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறது. ''உங்களுக்கு என லாரி வாங்கும் எண்ணம் இருக்கிறதா?'' எனக் கேட்டபோது, ''கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்படி ஒரு எண்ணம் இல்லை'' என்றனர். காரணம், ''இப்போது உள்ள டீசல் விலை, வாடகை, டோல்கேட் செலவு, வாகனப் பராமரிப்புச் செலவு போன்றவை, கட்டுபடியாகக்கூடிய அளவில் இல்லை. டிரைவர்களாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடித்து, வீட்டில் உள்ள நகையை விற்று, முன்பணம் செலுத்தி லாரி வாங்கினால், அது தவணை கட்ட முடியாமல் லாரியையே இழக்க வேண்டியதுதான் வரும். எனவே, டிரைவராக இருந்து சம்பளம் வாங்குவதுதான் இப்போது புத்திசாலித்தனம்! டிரைவராக இருந்து லாரி வாங்கி ஓனர் ஆன காலம் மலையேறிவிட்டது!'' என்கின்றனர்.  

சூடாக டீ வாங்கிக் கொடுத்துவிட்டு, ஆட்டோ பிடித்துவந்தார் சேட்டு. நாங்கள் ஐந்து நாட்கள் வாழ்ந்த லாரியைப் பார்த்தேன். அமைதியாக நின்றிருந்தது. மனசுக்குப் பிடித்தமான இடத்தைவிட்டு விலகும்போது ஏற்படும் துக்கம் எங்கள் இருவருக்குமே இருந்தது. சரவணனுக்கும் சேட்டுக்கும் நன்றி சொல்லி விடைபெற்றுக்கொண்டு நகரம் நோக்கி ஆட்டோவில் புறப்பட்டோம்.

இதற்கு முன்பு கிழக்குக் கடற்கரைச் சாலை வழியே கொல்கத்தா வரை சென்றுவந்தோம். இப்போது, நம் நாட்டின் அனேக மாநிலங்களைத் தொட்டுச் செல்லும் திருச்சி - டெல்லி சாலையில் பயணித்துவிட்டோம். இனி என்ன மீதம் இருக்கிறது? ''அட வாங்க சார்... இந்தியாவோட சென்டர் பாயின்ட்டான நாக்பூர் வரைக்கும் போயிட்டு வாங்க. ஹைதராபாத் ரூட் சூப்பரா இருக்கும்'' என அழைப்பு வர... அடுத்து நாக்பூர்!

(நெடுஞ்சாலை நீளும்)