
பழைய வென்யூவில் ஆல் பிளாக் தீமில் இருக்கும். புதுசில் டூயல் டோனில் சாந்தமாக இருக்கிறது.
இந்தியாவில் சாதுர்யமான மார்க்கெட் என்றால், அது சப் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்தான். ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால்தான் இந்த மார்க்கெட்டில் முன்னேற முடியும். ஒரு சின்னப் புள்ளி விவரம் – 2005–ல் இந்தியாவில் வெறும் இரண்டே இரண்டு காம்பேக்ட் எஸ்யூவிகள்தான் இருந்தன. இப்போது 2022–ல் சுமார் 13–க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இதற்குக் காரணம், இந்திய வாடிக்கையாளர்களின் மைண்ட் செட். தங்களின் முதல் காரையே எஸ்யூவியாகத் தேர்ந்தெடுப்பவர்கள்தான் இந்த மார்க்கெட்டின் முக்கியப் புள்ளிகள். அப்படியென்றால், வசதிகளிலும் பாதுகாப்பிலும் அவர்களைக் கவர வேண்டும். அப்படி மார்க்கெட்டில் பிரெஸ்ஸா, கைகர், எக்ஸ்யூவி300, நெக்ஸான், மேக்னைட், (மிஸ் யூ.. ஃபோர்டு எக்கோஸ்போர்ட்; சொல்லப்போனால் இந்தியாவின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி இதுதான்!) என்று எல்லோமே புத்திசாலித்தனமான கார்கள். இந்த வரிசையில் அதிபுத்திசாலித்தனமான கார், வென்யூ.
2019–ல் அறிமுகமான வென்யூவை, 2022–ல் ஜூலை மாதம் தோற்றத்தில் ஏகப்பட்ட மாற்றங்களுடன், கியர்பாக்ஸில் சின்ன வித்தியாசத்துடனும், கூடுதல் எக்யூப்மென்ட் வசதிகளுடனும், எக்ஸ்ட்ரா பாதுகாப்பு அம்சங்களுடனும் வென்யூவைக் கொண்டு வந்திருக்கிறது ஹூண்டாய். வென்யூவை ஓட்ட ஹைதராபாத் சென்றோம். ‘பாகுபலி’ போன்ற படங்களின் படப்பிடிப்பு நடந்த ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில், வென்யூவை உற்சாகத்துடன் ஷூட் செய்தார், நமது புகைப்பட நிபுணர். வென்யூவில் என்ன சிறப்பு?
டிசைனில் என்ன மாற்றம்?
கார்களின் ஃபேஸ்லிஃப்ட்டைக் கண்டுபிடிக்க கிரில்லைப் பார்த்தாலே போதும். முற்றிலுமாக மாறி விட்டது என்று சொல்லிவிடலாம். வென்யூவும் அப்படித்தான். கிரில்லை முற்றிலுமாக மாற்றி விட்டது ஹூண்டாய். இந்த கிரில்லை ‘பாராமெட்ரிக் ஜுவல் கிரில்’ என்கிறார்கள். அதாவது, நகைகளை அடுக்கி வைத்ததுபோல் வித்தியாசமான ஒரு அடுக்கு கிரில். அதுவும், டாப்பில் பெரிய செவ்வக வடிவில் ஆரம்பித்து கீழே சின்ன செவ்வகத்தில் முடியும் அந்த கிரில், நிஜமாகவே ஆபரணம் போலத்தான் இருக்கிறது. க்ரோம் என்றால், பளிச்சிடும்தானே! இதில் டார்க் க்ரோம் கொடுத்திருக்கிறார்கள். கறுப்பும் கிரேவும் கலந்து இருள் மின்னல் தருகிறது. கீழே ஏர் டேம் மற்றும் Faux ரீ–டிசைன்டு செய்யப்பட்ட சில்வர் கலர் ஸ்கஃப் பிளேட் கொடுத்திருக்கிறார்கள்.
முக்கியமான மாற்றம், அந்த ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லைட்ஸ்தான். இதையும் 3 ஆக ஸ்ப்ளிட் செய்திருக்கிறார்கள். இதில் ஓரத்தில் இருப்பது கார்னரிங் லைட்ஸ். பழசில் ஹாலோஜன் லைட்ஸ்தான் கொடுத்திருப்பார்கள்; புது வென்யூவில் எல்இடி ஹெட்லைட்ஸ். டிஆர்எல்களும் எல்இடி மயம். மேலும் முக்கியமானதொரு விஷயம் – இதன் 16 இன்ச் அலாய் வீல்கள். டைமண்ட் கட்டில் 10 ஸ்போக் வீல்கள் செம ஸ்டைலிஷ்ஷாக இருக்கின்றன. இதுவே லோயர் வேரியன்ட்டில் 15 இன்ச்தான். ஸ்டெஃப்னிக்கும் 15 இன்ச். இதன் ORVM மிரர்களில் Puddling Lights என்றொரு வசதி கொடுத்திருக்கிறார்கள். இரவில் பார்ப்பதற்கு செம கூலாக இருக்கிறது. மற்றபடி பக்கவாட்டுக்கு வந்தால், பழசுக்கும் புதுசுக்கும் பெரிய வித்தியாசம் தெரியாது.
இந்த வென்யூவில் எனக்கு பின் பக்க டிசைன்தான் மிகவும் பிடித்திருக்கிறது. இதன் கனெக்டிங் எல்இடி டெயில் லைட்ஸ்… இந்த காருக்கு அழகையே கூட்டிவிடுகிறது. இப்போதெல்லாம் கனெக்டிங் லைட்ஸ் கொடுத்தாலே ஒரு லுக் கிடைத்து விடுகிறது. எங்கள் சப்போர்ட்டிங் கார் க்ரெட்டாவுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமே கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் டிசைன், ஹூண்டாயின் காஸ்ட்லியான ஐயனிக் 5 எனும் இன்டர்நேஷனல் மாடலில் இருந்து இன்ஸ்பயர் செய்திருக்கிறது ஹூண்டாய். மற்றபடி இதன் நீள/அகல/அளவுகளில் பெரிதாகக் கை வைக்கவில்லை ஹூண்டாய். ஓவர்ஆலாக, ப்ரீமியம் லுக்கில் எங்களைக் கவர்ந்திருக்கிறது இந்தக் குட்டி எஸ்யூவி.
உள்ளே என்ன மாறியிருக்கு?
விற்பனையில் இருக்கும் வென்யூவில் உள்ளே நுழைந்தால்… கண்ணங்கரேலென டேஷ்போர்டு ஆல் பிளாக் தீமில் ஸ்போர்ட்டியாக இருக்கும். இதில் பீஜ் மற்றும் கிரே கலந்து கொஞ்சம் ப்ளஸன்ட்டாக இருக்கிறது வென்யூவின் இன்டீரியர். இந்த தீமை Griege தீம் என்கிறது ஹூண்டாய். ஆனால், இந்த சீட்கள் அழுக்குப் படிந்து விடுமோ என்கிற சந்தேகமும் வந்தது.
அப்புறம் சட்டென ஒரு மாற்றம் – அதுவும் பெரிய மாற்றம். பழசில் இருந்த அனலாக் டயல்கள் இதில் இல்லை. சென்டர் கன்சோலில் ஃபுல்லி டிஜிட்டல் மீட்டர். இதை நான் காரன்ஸில் பார்த்திருக்கிறேன். ஆம், காரன்ஸில் இருக்கும் அதே மீட்டர்தான். பல விஷயங்கள் இதில் தெரிந்தன. ஃப்யூல் மீட்டர், ஓடோ, ட்ரிப், டிஸ்ட்டன்ஸ் டு எம்ப்ட்டி, அட - டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) என ஏகப்பட்ட விஷயங்கள் தெரிகின்றன.
அதுவும் DCT கியர்பாக்ஸ் என்றால், அந்த டிரைவிங் மோடுகளுக்கு ஏற்ப இதன் ஆம்பியன்ட் மாறுவது அற்புதம். சிட்டி மோடு என்றால் நீலம், எக்கோ மோடு என்றால் பச்சை… ஸ்போர்ட்ஸ் மோடு என்றால் சிவப்பு என்று ரசனையாகச் செய்திருக்கிறார்கள். மேலும், டேஷ்போர்டு உள்ளே கூல் புளூ எனும் ஆம்பியன்ட் லைட்டிங் செட்அப் இரவு நேரத்தில் மன அமைதியைத் தரும்போல!
ஆங்! இதன் டிரைவர் சீட்டில் ஒரு ப்ரீமியத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது ஹூண்டாய். இது செக்மென்ட் ஃபர்ஸ்ட் வசதியும்கூட! டிரைவர் சீட்டுக்கு 4 வே அட்ஜஸ்ட்டபிள் பவர்டு சீட் கொடுத்திருக்கிறார்கள். குனிந்து லீவரையெல்லாம் பிடித்து இழுக்கத் தேவையில்லை. ஆனால் பக்கத்து சீட்டுக்கு லீவர்தான். நடுவே சென்டர் ஆர்ம் ரெஸ்ட் அற்புதம். உள்ளே க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி தாண்டி, ஏர் ப்யூரிஃபையரும் கொடுத்திருக்கிறார்கள். காரே கமகமவென மணந்தது. குட்டி எலெக்ட்ரானிக் சன்ரூஃப் வேறு, காரை வெளிச்சமாக்கியது. டே–நைட் IRVM கொடுத்திருந்தார்கள். அதிலேயே SOS, RSA (Road Side Assistance) என்று பல விஷயங்கள் வேறு!
இந்த ஸ்டீயரிங், க்ரெட்டாவில் இருக்கும் அதே D-Cut ஸ்டீயரிங் வீல்தான். இதற்கும் கியர் லீவருக்கும் லெதரெட் சுற்றப்பட்டிருந்தது. அட, வயர்லெஸ் சார்ஜிங் இல்லாமல் ஹூண்டாய் காரா! அதுவும் இருந்தது! சி டைப் சார்ஜிங், யுஎஸ்பி சார்ஜிங், 12V ஸாக்கெட் சார்ஜிங் என எல்லா போர்ட்களும் இருந்தன. வாட்டர் பாட்டில்கள் வைக்க அங்கங்கே ஹோல்டர்கள், க்ளோவ் பாக்ஸ், சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டிலும் இடவசதி, டோர் பாக்கெட்கள் என இடவசதியில் அருமை.
இந்த வென்யூவில் நான்… இல்லை… நீங்கள் மிஸ் செய்யப்போகும் ஒரே விஷயம் – சோனெட்டில் இருக்கும் வென்டிலேட்டட் சீட்ஸ் மட்டும்தான்.
எக்யூப்மென்ட் லிஸ்ட் மற்றும் பாதுகாப்பு வசதிகள்
வசதிகளில் முதல் படியாக, அந்த டிரைவர் பவர்டு சீட், எல்இடி ஹெட்லைட்ஸ்/டெயில் லைட்ஸ், டிஜிட்டல் மீட்டருக்குப் பிறகு, அந்த டச் ஸ்க்ரீன்தான் வியக்க வைக்கிறது. 8 இன்ச் டச் ஸ்க்ரீன் பயன்படுத்த அற்புதமாக இருக்கிறது. இதிலேயே இன்பில்ட் நேவிகேஷன் கொடுத்திருக்கிறார்கள். இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ /ஆப்பிள் கார் ப்ளே தவிர்த்து, புதுப் புது வசதிகளும் கொடுத்திருக்கிறார்கள். இதில் 60 வகையான வசதிகள் உண்டு. மேலும் சில ‘வாய்ஸ் எம்பட்’ வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் உண்டு. I want to see the Sky… Pls on the Rear Defroster போன்ற சில கமாண்ட்கள்… தானாகவே வேலை நடக்கும்.
வென்யூ மனதைத் தொட்டது இதில். MLUI (Multi Language User Interface) –ல் நமது தமிழ்மொழியும் இருக்கிறது. நமது தமிழிலேயே எல்லாம் செய்து கொள்ளலாம். இன்டர்நேஷனலாக இரண்டு உலக மொழிகளும் கொடுத்திருக்கிறார்கள்.

கூடவே, அமேஸான் அலெக்ஸா, கூகுள் டிவைஸ்கள் நமது வீட்டில் இருந்தால்… வீட்டில் இருந்தபடியே காரின் ஏசியை ஆன் செய்வது, எரிபொருள் அளவைச் சோதனையிடுவது என்று செய்து கொள்ளலாம். பக்காவான கனெக்டட் காராக இருக்கிறது வென்யூ.
இதில் கூல் வசதிகள் என்று ஆம்பியன்ட் லைட்டிங்கோடு, ஆம்பியன் சவுண்ட் எஃபெக்ட்டையும் சொல்லலாம். காடு, மழை, மலை என்று 6 வகையான இயற்கைச் சத்தங்களை இந்த ஸ்பீக்கர் மூலம் ஒளிர விட்டுக் கொள்ளலாம். பயணமே ரம்மியமாக இருக்கும். பின் பக்க ஏசி வென்ட்டின் மேலே ஏர் ப்யூரிஃபயர் கொடுத்திருக்கிறார்கள்.
மற்றபடி டயர் ப்ரஷர் மானிட்டர், ஒயர்லெஸ் சார்ஜிங், சின்ன சன்ரூஃப், பேடில் ஷிஃப்டர்கள், ஆறு காற்றுப்பைகள், ESP, VSM, Hill Assist Control என எல்லாமே உண்டு. ரியரில் டிஸ்க் மட்டும்தான் இல்லை; மற்றபடி பாதுகாப்பில் பக்கா!
பின் பக்க இடவசதி
முன் பக்கம் நன்றாக லெக்ரூம், ஹெட்ரூம் என்று டிரைவிங் பொசிஷன் பக்காவாக இருக்கிறது வென்யூ. பின் பக்கத்துக்கு வந்து பார்த்தேன். பழைய வென்யூவின் அதே 2,500 மிமீ வீல்பேஸ்தான். அதனால், இடவசதியில் பெரிதாக மாற்றம் இல்லை. லெக்ரூமில் மட்டும் கொஞ்சம் சிக்கலாக இருப்பதுபோல் தெரிகிறது.
அகலத்திலும் அதேதான் என்பதால், 3 பேர் என்றால் கொஞ்சம் நெருக்கடியாகத்தான் இருக்கும். அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் கொடுத்திருந்தார்கள். ரியர் ஏசி வென்ட்டும் இருந்தது. அங்கேயும் சி டைப் சார்ஜிங் போர்ட்.
இங்கேயும் ஃபர்ஸ்ட் இன் செக்மென்ட்டாக ஒரு விஷயம் செய்திருக்கிறது ஹூண்டாய். பின் சீட்களுக்கு 2 ஸ்டெப் ரெக்ளெய்ண்டு சீட் வசதி கொடுத்திருக்கிறார்கள். பின் சீட்களைக் கொஞ்சம் ரெக்ளெய்ன் செய்து கொள்ளலாம். சொகுசாக இருக்கிறது. மேலும் பின் சீட்களை 60:40 ஆக ஸ்ப்ளிட் செய்து கொண்டால்… பூட்டில் நல்ல இடவசதி கிடைக்கிறது. நார்மலாக இதன் பூட் ஸ்பேஸ் அதே 350 லிட்டர் இருந்தது. 2 சூட்கேஸ்களை வைத்துக் கொள்ளலாம். பொருட்களை ஏற்றி இறக்கவும் எளிதாக இருக்கிறது.
இன்ஜின் மாறலை… ஆனால் கியர்பாக்ஸ்?
வென்யூவில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். முதல் ஆரம்ப மாடல், 83bhp பவரும் 113.8Nm டார்க்கும் தரும் நார்மலான 1.2 லிட்டர் – கப்பா NA (Naturally Aspirated) இன்ஜின். பெரிய பவர் டெலிவரி என்று சொல்ல முடியாது; செம பெப்பி என்றும் சொல்ல முடியாது; ஆனால் சிட்டிக்குள் ஓட்ட அற்புதமாக இருக்கிறது இந்த என்ஏ இன்ஜின். ஹைவேஸில் ஓட்டிப் பார்த்தேன். 140 கிமீ வரை போனது. மிட் ரேஞ்ச் கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தது. ஓவர்டேக்கிங் கொஞ்சம் கஷ்டம்தான்.
நிஜமாகவே வண்டியை ஸ்டார்ட் செய்தால், எந்த அதிர்வுகளும் தெரியவில்லை. கார் ஸ்டார்ட் ஆனது மாதிரியே இல்லை. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான் கொடுத்திருக்கிறார்கள். இதன் மைலேஜுக்காக இதை நாடுகிறார்கள் மக்கள். சொன்னால் நம்புங்கள்; வென்யூவின் பாதி விற்பனை இந்த என்ஏ இன்ஜினால்தான் நடக்கிறது.
10.லி கப்பா GDi டர்போ இன்ஜினை எடுத்தேன். இதன் ரிஃபைன்மென்ட்டும் வேற லெவலில் இருந்தது. சத்தமே கேட்கவில்லை. இத்தனைக்கும் 3 சிலிண்டர்தான். எடுத்தவுடன் IMT கொடுத்தார்கள். பழசில் இருந்த மேனுவலைக் காலி செய்துவிட்டு, அதற்குப் பதிலாக இந்த கியர்பாக்ஸ். IMT (Intelligence Manual Transmission) கியர்பாக்ஸ் பற்றித் தெரிந்திருக்கும். க்ளட்ச் இருக்காது; ஆனால் கியர் இருக்கும். சிட்டிக்குள் ஓட்டுவதற்கு செம ஜாலியாக இருந்தது. இதன் பவர் 120bhp மற்றும் டார்க் 172 Nm. சூப்பர் பிக் அப் கிடைத்தது. சிட்டிக்குள் பாதி ஆட்டோமேட்டிக்; பாதி மேனுவல் ஓட்டினேன். ஒரு தடவை சிக்னலில் நிற்கும்போது, கியர் மாற்ற மறந்து விட்டேன். அட, கார் ஆஃப் ஆகவில்லை. லேசான வார்னிங் கொடுத்தது; சட்டென கியரைக் குறைத்துக் கிளம்பி விட்டேன். இந்த 6 ஸ்பீடு கியர்பாக்ஸில், 2–வது கியரில் இருந்தே கிளம்பலாம் என்பது இன்னொரு ஜாலி!
6,000rpm-ல் இதன் 120 bhp பவர் என்றது ஹூண்டாய். கிட்டத்தட்ட 4,000rpm வரை ரெவ் செய்தேன். ரெட் லைனையும் தொட்டது சில நேரங்களில். ஹைவேஸில் இதன் பெர்ஃபாமன்ஸ்… ஓகே! கிட்டத்தட்ட 140 கிமீ வரை பறந்தேன். அந்த 1.2 லி மேனுவல் போல இல்லை; கொஞ்சம் அடுத்த படியில் இருந்தது. ஆனால், இதன் கியர்பாக்ஸ் க்விக் ஷிஃப்ட்டிங் இல்லை. இதன் கியர் ரேஷியோ அப்படி. ஆட்டோமேட்டட் க்ளட்ச் ஆக்சுவேட்ட ருக்குக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. என்னைப் பொருத்தவரை இந்த IMT கியர்பாக்ஸ், புதிதாக கார் ஓட்டப் பழகுபவர்களுக்குப் பிரமாதம் என்பேன். ஆனால், கியர்பாக்ஸ் பக்கத்தில் இருப்பவர்கூடப் போட முடியும் என்பது மைனஸ்.
அடுத்தது, இதன் DCT கியர்பாக்ஸ். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ என்பதுபோல் இருந்தது இதன் டிரைவிங் மேனர்ஸ். காரை ஸ்டார்ட் செய்தது முதல், கடைசி வரை விறுவிறுவென இயங்குகிறது இதன் செகண்ட் ஜென் DCT கியர்பாக்ஸ். இது டார்க்கை ட்ரான்ஸ்ஃபர் செய்வதில் கில்லி என்கிறது ஹூண்டாய். ஸ்மூத்தாக கியர் மாறுவது தெரிந்தது. இதன் பவர் மற்றும் டார்க் விஷயங்கள் எதுவுமே மாறவில்லை. ஐஎம்டி–யில் இருக்கும் அதே! ஆனால், ஓட்டுதலில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. சுமார் 150 கிமீ வரை பறக்க முடிந்தது. இதன் 0–100 கிமீயை சும்மா சோதனை போட்டேன். சுமார் 10 விநாடிகளுக்குள் தொட்டு விட்டது.
இதன் உற்சாகத்துக்கு இரண்டு காரணங்கள் – முதல் விஷயம் – டிரைவிங் மோடுகள். Normal, Eco, Sport என 3 மோடுகள் கொடுத்திருக்கிறார்கள். அதற்கான நாப் கியர் லீவருக்குக் கீழே ரோட்டரி ஸ்டைலில் இருந்தது. சிட்டிக்குள் ஓட்ட எக்கோ மோடு ஓகே! மைலேஜும் டீசன்ட்டாகக் கிடைக்கும். நார்மல் மோடு எல்லா நேரங்களிலும் உகந்ததாக இருக்கிறது. வழக்கம்போல் ஸ்போர்ட்ஸ் மோடு போட்டால்… நம்மைப் பின்னே தள்ளி கார் முன்னே செல்கிறது. ஓட்டுதல் விரும்பிகளுக்கு அற்புதமாக இருக்கும். ரெட்லைன் 6,000 rpm வரை ரெவ் செய்தேன். இதில் ஒரே ஒரு விஷயம் – ஹை ரெவ்களில் கேபினுக்குள் அதிகமாகச் சத்தம் போடுகிறது இன்ஜின்.
உற்சாகத்தின் இன்னொரு காரணம் – இதன் பேடில் ஷிஃப்டர்கள். கியர் கூட்டிக் குறைத்து மாற்றி மாற்றி ஓட்ட ஜாலியாக இருக்கிறது. ஆனால், இதில் டவுன் ஷிஃப்ட் தானாக நடக்கவில்லை; நாமாகத்தான் மாற்ற வேண்டியிருக்கிறது.
அடுத்து, இதன் 1.5 U2 CRDi டீசல் இன்ஜின். இதன் பவர் 100 bhp மற்றும் 240Nm டார்க். இந்தக் குட்டி காருக்கு இந்த பவர் அதிகமும் இல்லை; சுமாரும் இல்லை. மைலேஜ் விரும்பிகளுக்கு இந்த டீசல் செமையாக இருக்கும். ஆனால், நமக்கு இந்த டீசலை ஓட்ட வாய்ப்புக் கிடைக்கவில்லை. பழைய வென்யூ ஓட்டியிருக்கிறேன். நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு இந்த வென்யூ டீசல் பக்காவாக இருக்கும். இது சுமார் 18 கிமீ மைலேஜ் தருவதாகச் சொல்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.
ஓட்டுதல் மற்றும் கையாளுமை
இதன் ஓட்டுதல் மற்றும் கையாளுமை பற்றிப் பெரிதாகச் சொல்ல வேண்டியதில்லை. பழைய வென்யூதான். போதுமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கிடைக்கிறது. பழைய ஹூண்டாய் கார்கள்போல், இதன் ஸ்டீயரிங் ஃபீட்பேக் சுமார் என்று சொல்லிவிட முடியாது. சூப்பராகத்தான் இருக்கிறது. சிட்டிக்குள் லகுவாகவும், ஹைவேக்களில் இறுக்கமாகவும் மாறி நமக்கு நம்பிக்கை தருகிறது. 140 கிமீ–ல் போகும்போது ஸ்டீயரிங்கைப் பிடிக்கும்போதே இதை உணர்ந்தேன். இதன் பாடி ரோலும் நன்றாகவே கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 70 கிமீ வேகத்தில் திரும்பியபோதும், பெரிதாக பாடி ரோல் தெரியவில்லை.
இதன் 215 மிமீ செக்ஷன் மற்றும் 16 இன்ச் டயர்கள் நல்ல கிரிப். ஓட்டை ஒடிசலான சாலைகளை நன்றாகவே சமாளிக்கிறது இதன் சஸ்பென்ஷன் செட்அப். சில ஷார்ப்பான பம்ப்களில் மட்டும் லேசாகத் தாக்கம் தெரிந்தது. ரியரில் க்ரெட்டா மாதிரி டிஸ்க் பிரேக் மட்டும் கொடுத்திருந்தால்… முழுமையடைந்திருக்கும்.
வென்யூ வாங்கலாமா?
ஹூண்டாய், வாடிக்கையாளர்களை ஒரு விஷயத்தில் திணறடிக்கும். அதிக வேரியன்ட்கள், அதிக இன்ஜின்/கியர் ஆப்ஷன்கள் என்று. வென்யூவிலும் அப்படித்தான். ஆனால், இதிலும் ஒரு சிக்கல் உண்டு. பெர்ஃபாமன்ஸ் சுமாராக இருந்தால் போதும் என்பவர்களுக்கு, வசதிகள் கிடைக்காது. ஆம், NA இன்ஜின் பேஸ் வேரியன்ட்களில்தான் கிடைக்கும். வசதிகள் இருந்தால் போதும் என்பவர்களுக்கு, பெர்ஃபாமன்ஸும் சேர்ந்து கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. வென்யூவிலும் அந்தச் சிக்கல் உண்டு.
இங்கே மைலேஜ் விரும்பிகளுக்கு டீசல் வென்யூ நல்ல ஆப்ஷனாக இருந்தாலும், இதன் விலை சோனெட்டைவிட சுமார் 1 லட்சம் அதிகமாக இருக்கிறது. மற்றபடி ஓட்டப் பழகுபவர்களுக்கு இருக்கவே இருக்கு IMT… ஓட்டுதல் விரும்பிகளுக்கு ஜிவ்வுனு பறக்க இருக்கு DCT.
எனக்குத் தெரிந்து வென்டிலேட்டட் சீட்ஸ், ரியர் டிஸ்க் பிரேக்ஸைத் தவிர ஏகப்பட்ட… கிட்டத்தட்ட எல்லா வசதிகளையும் இந்தக் குட்டிக் காரில் கொட்டிக் கொடுத்திருக்கிறது. என்னைக் கேட்டால்… கொடுக்கும் காசுக்கு ஏற்ற… காம்பேக்ட் எஸ்யூவி வென்யூ என்று சொல்லலாம்.
பழைய வென்யூவில் ஆல் பிளாக் தீமில் இருக்கும். புதுசில் டூயல் டோனில் சாந்தமாக இருக்கிறது. 4 Way பவர்டு அட்ஜஸ்டபிள் சீட், வயர்லெஸ் போன் சார்ஜிங், சன் ரூஃப், டிஜிட்டல் மீட்டர் என எல்லா வசதிகளும் உண்டு.6 ஸ்பீடு IMT கியர்பாக்ஸ், ஓட்ட ஜாலி!16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்....350 லிட்டர் பூட் ஸ்பேஸ்... ஓகே!Parametric Jewel தீம் கொண்ட கிரில்... புதுசு!
பெட்ரோல்ரூ.7.53 – 12.57 லட்சம்டீசல்ரூ. 9.99 – 12.53 லட்சம்