
சிட்ரன் என்றால், தெறித்து ஓடுவார்கள்; விலைதான் காரணம். ஆனால், இந்த சிட்ரன் C3, 90% ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்பு. காம்பேக்ட் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் பட்டையைக் கிளப்ப வந்திருக்கிறது. ஆம்! 9 லட்சத்துக்குள் விலை குறைவாக இதை எதிர்பார்க்கிறோம்.
ஃப்ரெஞ்ச் நிறுவனமான சிட்ரன், தனது இரண்டாவது காரை ஒருவழியாக லாஞ்ச் செய்துவிட்டது. ‘சார், சிட்ரன் C3–னு நினைக்கிறேன்; ஸ்பை ஷாட் எடுத்திருக்கேன்’ என்று ஏகப்பட்ட வாசகர்கள், அடிக்கடி ஸ்பை புகைப்படங்கள் அனுப்பிய பெருமைக்குரிய கார். நிஜம்தான்; உண்மையிலேயே கிட்டத்தட்ட பல லட்சம் கிமீ–கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது சிட்ரன் C3.
சிட்ரன் என்றால், தெறித்து ஓடுவார்கள்; விலைதான் காரணம். ஆனால், இந்த சிட்ரன் C3, 90% ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்பு. காம்பேக்ட் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் பட்டையைக் கிளப்ப வந்திருக்கிறது. ஆம்! 9 லட்சத்துக்குள் விலை குறைவாக இதை எதிர்பார்க்கிறோம். C3–யை கோவாவில், கடற்கரை ஓரமாக ஒரு மாலை மழை நேரத்தில் லாஞ்ச் செய்திருந்தது சிட்ரன். பார்க்கவே அழகாக இருந்த C3–யை ஓட்டுவதற்கு கோவா வரை பறந்தேன். சிட்ரன் C3 எப்படி இருக்கு?
அவுட்லுக்… க்ராஸ்ஓவரா… எஸ்யூவியா… ஹேட்ச்பேக்கா?
இதை ஹேட்ச்பேக் என்று சொன்னால் சிட்ரனுக்குப் பிடிக்காது. எஸ்யூவி ட்விஸ்ட் கொண்ட ஹேட்ச்பேக் என்று இதைச் சொல்கிறது சிட்ரன். நிஜம்தான்; எஸ்யூவிக்கான சமாச்சாரங்கள் அங்கங்கே… இல்லை.. கார் முழுக்க விரவிக் கிடக்கின்றன. சிட்ரனின் C5 ஏர்க்ராஸைத் தழுவித்தான், ஒரு சி க்யூப்டு ப்ரோக்ராமில் இதை ரெடி செய்திருக்கிறார்கள்.
கார் முழுவதும் நீளும் அந்த ஸ்லிம்மான க்ரோம் கிரில்லில், சிட்ரனின் முக்கோண வடிவ லோகோ அருமை! அப்படியே அதிலேயே ஸ்லிம்மாக ஹெட்லைட்டை இன்டக்ரேட் செய்திருக்கிறார்கள். இது ஹாலோஜன் லேம்ப்ஸ்தான். ஹெட்லைட்டுக்கு மேலே ஸ்ப்ளிட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல் இருந்தது. இது லோ வேரியன்ட்டில் கிடையாது. கிரில்லுக்குக் கீழேயும் ஒரு மாதிரி நீள்சதுர வடிவில் கிரில் பேட்டர்ன் இருந்தது. கீழே ஏர் டேம். கார் முழுதும் அங்கங்கே ஆரஞ்ச் நிற ஆக்ஸென்ட்கள் இருந்தன. பனி விளக்குகளுக்கு அப்படித்தான்; ஒரு ஆரஞ்ச் நிற ஹவுஸிங் இருந்தது. அதேபோல், காரின் பக்கவாட்டில் போலியான ஏர் வென்ட்டுக்கும் ஆரஞ்ச் ஹவுஸிங். பின் பக்கமும் கீழே லைட்கள்; விங் மிரர்கள், காரின் ரூஃப் என ஆரஞ்ச் தாக்கம் நன்றாகவே இருந்தது. டோர்களுக்கு ஃப்ளிப் டைப் மாடல் கொடுத்திருந்தார்கள். புல் டைப்தான் பலரது சாய்ஸாக இருக்கும்.
எஸ்யூவி என்பதைப் பறைசாற்றுவதற்குப் பல விஷயங்கள். பம்பருக்குக் கீழே டிஃப்யூஸர், காரைச் சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் வைத்திருந்தார்கள். இதன் பானெட்டைக் கொஞ்சம் உயர்த்தி வைத்திருப்பதால், டிரைவருக்கு வெளிச்சாலையும் சரி – பானெட்டும் சரி – நன்றாகத் தெரிவதால், தன்னம்பிக்கையாக ஓட்டலாம். அதாவது, எஸ்யூவி ஓட்டுவதுபோல்! இதன் கிரவுண்ட் கிளியரன்ஸும் 180 மிமீ. சின்ன ஆஃப்ரோடே செய்துவிட்டேன்.
ஒரு சப் காம்பேக்ட் எஸ்யூவியான சிட்ரன், டாடா பஞ்ச்சைவிட நீளம். இது 3.98 மீட்டர் நீளம் கொண்டிருக்கிறது. உயர அகல அளவுகளில் கொஞ்சம்போல்தான் குறைவு. இதன் வீல் அளவுகள் 15 இன்ச் இருந்தன. அலாய் வீல்கள் டிசைன்தான்; ஆனால் அலாய் வீல்கள் இல்லை. அவுட்லுக்கில் C5 ஏர்க்ராஸின் கூடப் பொறந்த தம்பிபோல்தான் இருக்கிறது C3.
இன்டீரியர் எப்படி?
காரின் உள்ளே நுழைந்தாலும், C5–ன் தாக்கம் தெரிந்தது. அந்த ஸ்ப்ளிட் ஏசி வென்ட்கள், பாதி சதுரம் – பாதி வட்டமாக இருந்த லேசான ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல்கள், டேஷ்போர்டு முழுதும் பயணிக்கும் அந்த ஆரஞ்ச் நிற ஸ்பாட்டட் டெக்ஷர் வேலைப்பாடுகள் ப்ரீமியமாகவே இருக்கின்றன. (லோ வேரியன்ட் என்றால், கிரே மட்டும்தான்.) மிகவும் கவர்வது அந்த 10 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம். இதை இன்ஃபோ10மென்ட் சிஸ்டம் என்கிறது சிட்ரன். 10 வகையான வசதிகள் இதில் உண்டு. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே கனெக்ட் செய்து கொள்ளலாம். ஆனால், கனெக்டட் கார் கிடையாது C3. ஏசி டயல்கள் ரோட்டரி நாப் ஸ்டைலில் இருந்தன. டிஜிட்டல் டிஸ்ப்ளே குட்டியாக, அழகாக இருந்தது. டிஸ்ட்டன்ஸ் டு எம்ப்டி ரீடிங்கெல்லாம் இருந்தது. ஆனால் டேக்கோ மீட்டர் இல்லை.

டர்போவுக்கும் NA இன்ஜினுக்கும் இன்டீரியரில் கியர் லீவரைத் தவிர வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. 5 ஸ்பீடு இருந்தால் NA, 6 ஸ்பீடு இருந்தால் டர்போ!. விங் மிரர்களை உள்ளே இருந்து அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடிந்தது. ஆனால், முழுதும் உள்ளே அட்ஜஸ்ட் ஆகவில்லை. உயரம் குறைவானவர்கள், சீட்டை நன்றாக முன்னே தள்ளி உட்கார்வார்கள். அவர்களுக்கு விசிபிலிட்டி குறைவாகவே இருக்கும். பிளாஸ்டிக் தரம் நன்றாகவே இருந்தது.
சிட்ரனை ஒரு பிராக்டிக்கல் காராக வடிவமைத்திருக்கிறார்கள். ஏகப்பட்ட ஸ்டோரேஜ் ஸ்பேஸ் மற்றும் வாட்டர் பாட்டில் வைக்க ஒவ்வொரு டோர் பாக்கெட்டிலும் இடம் என நன்றாகவே இருந்தது. போன் வைக்கவென தனியாக ஒரு ட்ரேவே இருந்தது. நான் முதலில் அதை வயர்லெஸ் சார்ஜிங் என்று நினைத்து விட்டேன். முன் பக்க சீட்டிங் பொசிஷன் பக்கா! இதன் குஷனிங் நன்றாகவே இருக்கிறது. லாங் டிரைவுக்கு சூப்பராக இருக்கும்!
பின்னால்…
‘ஹேப்பி ஸ்பேஸ்’ என்று சிட்ரனின் பின் பக்க இடவசதியைச் செல்லமாக அழைக்கிறார்கள் சிட்ரன் அதிகாரிகள். அது நிஜம்தான்; இந்த செக்மென்ட்டின் அதிக வீல்பேஸ் 2,540 மிமீ கொண்ட கார் இதுதான். மற்றெந்த ஹேட்ச்பேக்குகளை விடவும் இது சுமார் 40 மிமீ–ஆவது அதிகம். லெக்ரூம் தாராளம் இல்லை; ஏராளம். ஹெட்ரூமும் பக்கா! பின் பக்கம் ஏசி வென்ட்களைத் தேடினேன். இல்லை. அந்த டனலில் சார்ஜிங் போர்ட் இருந்தன. பவர் விண்டோக்களுக்கான பட்டனும் அதில்தான் இருந்தது. (குனிந்து குனிந்து கதவைத் திறக்க வேண்டுமே!)
பின் சீட்டில் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் இல்லை; அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் இல்லை. 3 பேர் உட்கார்ந்தால்… கொஞ்சம் நெருக்கடியாக இருக்கலாம். ஆனால், 2 பேர் தாராளமாகப் பயணிக்கலாம்.
இதன் பூட் வசதி – 315 லிட்டர். இது இக்னிஸைவிட மட்டும்தான் அதிகம். மற்ற எல்லா போட்டியாளர்களைவிடவும் கணிசமாகக் குறைவு.) பஞ்ச், மேக்னைட் – 366 லிட்டர்; கைகர் – 405 லிட்டர்). சிட்ரனின் C3 சீட்களை ஒரு ஸ்ட்ராப் மூலம் மடித்துக் கொண்டால், முடிந்தவரை ஃப்ளாட் ஃப்ளோராகிறது. இதன் மூலம் இடவசதியை அதிகரித்துக் கொள்ளலாம்.

C3 இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்… டர்போவா... மேனுவலா?
C3-ல் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுத்திருக்கிறார்கள். டர்போ, Natrually Aspirated (NA) என இரண்டு இன்ஜின்கள். இரண்டுக்குமே 1.2லிட்டர், 3 சிலிண்டர்தான். லேசாகத்தான் அதிர்வு தெரிந்தது. NA C3–யை முதலில் ஓட்டினேன். இதன் பவர் 82 bhp. டார்க் 115kgm. இந்த செக்மென்ட்டுக்கு இது ஓகேதான். பஞ்ச்சைவிட 4bhp தான் குறைவு. சிட்டிக்குள் ஓட்ட நன்றாகவே இருக்கிறது. ஆனால் மலைச்சாலைகளில் டர்போ லேக் தெரியலாம் என்று நினைக்கிறேன். இதன் மிட் ரேஞ்ச் மட்டும் இன்னும் பவர் டெலிவரி வேண்டும் என்று தோன்றியது. டாப் எண்ட், பக்கா! ரெவ் பண்ண, ‘ஹலோ நான் 3 சிலிண்டர்தான்; பார்த்து மிதிங்க’ என்பதுபோல் சத்தம் போட்டது. இந்த 1,374 கிலோ எடை கொண்ட காருக்கு இது சூப்பர்தான். ஓவர்டேக்கிங்கில்தான் கியரைக் குறைத்து… ரெவ் செய்து என்று கொஞ்சம் மெனக்கெட வேண்டும். சிட்டி டிரைவிங்குக்காகவே இதைச் செய்திருப்பார்கள். கிளட்ச்சும் லைட் வெயிட்டாகவே இருந்தது. இந்த NA இன்ஜின் கியர்லீவரை சில்க்கி ஸ்மூத் என்று சொல்ல முடியாது; கொஞ்சம் Notchy ஆகவே இருந்தது. நியூட்ரலுக்கு வரக் கொஞ்சம் சிரமப்பட்டேன். இது ஹைேஸுக்கு எடுபடுமா தெரியவில்லை; ஆனால் சிட்டிக்குள் அற்புதமாக இருக்கும். இருந்தாலும் ஹைவேஸில் சுமார் 135 கிமீ வரை பறந்தேன்.
டர்போவில் ஏறினேன். இது ஆஹா ரகம்! ஏன் என்று கடைசியில் உங்களுக்குப் புரியும். இதன் பவர் 115bhp மற்றும் டார்க் 190Nm. இந்த செக்மென்ட்டில் நல்ல பவரும் டார்க்கும் C3–ல் இருக்கின்றன. 1,035 கிலோ எடை கொண்ட இந்த டர்போ C3–க்கு ஏற்ற பவரும் டார்க்கும். கிளம்பிய போதிலிருந்தே உற்சாகம் தொற்றிக் கொண்டேதான் ஓட்டினேன். டர்போ என்றதும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை எதிர்பார்த்தேன். ஆனால், ‘6 ஸ்பீடு வெச்சுக்கோங்க’ என்று சிட்ரன் சொல்லியிருந்தது. இதன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ரெகுலர் இன்ஜின் கியர்பாக்ஸ் மாதிரி இல்லை; அற்புதமாக சொல்பேச்சுக் கேட்கிறது. பாட்டம் மற்றும் மிட் ரேஞ்சில் நன்றாக மெனக்கெட்டிருக்கிறார்கள். இரண்டு இன்ஜின்களின் ரிஃபைன் மென்ட்டும் அற்புதம்!
இதன் 110bhp பவரும் 5,500rpm–ல் கிடைக்கும் என்றார்கள். இந்த நேரத்தில் நான் மிஸ் செய்தது – இதன் டேக்கோ மீட்டரை. எந்த ஆர்பிஎம்–ல் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் நன்றாகவே இன்ஜின் புல் ஆனது தெரிந்தது. 3 சிலிண்டர் அதிர்வு தெரிந்தாலும், பெரிதாகப் படுத்தவில்லை. இதிலும் டர்போ லேக் தெரியும் போலிருக்கிறது. இதில் கொஞ்சம் ஓவர்டேக்கிங் ரெகுலரை விட நன்றாகவே இருக்கிறது. அதாவது, என்டர்டெயின் செய்து ஓட்ட முடிகிறது. இதன் 0–100 கிமீ – 10 விநாடிகள் என்று க்ளெய்ம் செய்கிறது சிட்ரன். நமக்குச் சாலை கிடைக்கவில்லை. க்ளட்ச்சும் இதில் லைட் வெயிட். நன்றுதான். ஃபன் டு டிரைவை எதிர்பார்ப்பவர்கள், தயவுசெய்து டர்போவுக்குப் போய் விடுங்கள்.
ரைடு அண்ட் ஹேண்ட்லிங்
இதில் இருப்பது வழக்கமான மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட்டும் மல்ட்டி லிங்க் சஸ்பென்ஷன் செட்அப்பும்தான். ஆனால், நம் ஊர்ச் சாலைகளுக்கு ஏற்ப பக்காவாக ட்வீக் செய்திருக்கிறார்கள். இது நன்றாகவே தெரிந்தது. குறைந்த வேகங்களில் இது மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் விதம் செம! வேண்டுமென்றே 5 பேருடன் பயணித்தேன். அட, மேடு பள்ளங்களில் இடிக்கவே இல்லை. இதன் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸுக்கும் ஒரு தேங்க்ஸ். பிரேக்கிங்கும் பக்காவாக இருந்தது.
பஞ்ச்சை விட நீளமான காராக இருந்தாலும், இதன் டர்னிங் ரேடியஸ் 10 மீட்டருக்குக் குறைவாகவே இருந்ததால்… வளைவுகளில் யு–டர்ன் அடிப்பது சூப்பராக இருந்தது. இதன் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் வாவ் என்றுதான் சொல்ல வேண்டும். ஹைவேஸில் இறுக்கமாகவும், சிட்டிக்குள் லகுவாகவும் மாறி வியக்க வைக்கிறது. இதன் டயர்கள் 15 இன்ச்தான்; ஆனால் இதன் செக்ஷன் ஹோண்டா சிட்டியை விட அகலம். அதனால், கிரிப் செம!
C5 ஏர் க்ராஸை ரைடு அண்ட் ஹேண்ட்லிங்கில் Flying Carpet Ride என்று சொல்வார்கள். இதையும் கிட்டத்தட்ட அப்படிச் சொல்லலாம் போல! பெரிய சொகுசு என்று சொல்ல முடியாது; ஆனால் இதன் ரைடு அண்டு குவாலிட்டி ஏமாற்றவில்லை. ஸ்மூத் மற்றும் Bump Free Ride கிடைக்கிறது.

C3 வாங்கலாமா… முதல் தீர்ப்பு என்ன?
C3-ல் வசதிகள்தான் மிகக் குறைவாக இருக்கின்றன. காஸ்ட் கட்டிங் வேலைகள் பல இடங்களில் தெரிகின்றன. முக்கியமாக ரிவர்ஸ் கேமரா, டேக்கோமீட்டர், பவர்டு விங் மிரர், ரியர் ஏசி வென்ட், இரவு–பகல் உள்பக்க மிரர், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் இல்லாதது என ஏகப்பட்ட இல்லாததுகள். இரண்டே வேரியன்ட்டில் வந்தாலும், உண்மையான டாப் வேரியன்ட் இல்லையோ என்று தோன்றுகிறது.
மற்றபடி ஒரு காம்பேக்ட் ஹேட்ச்பேக்...ஸாரி எஸ்யூவிக்குத் தேவையான எல்லா அம்சங்களும் உண்டு. இதன் இன்ஜின் ரிஃபைன்மென்ட்டும், பெர்ஃபாமன்ஸும் சூப்பர். நீங்கள் ஓட்டுதல் விரும்பி என்றால், டர்போ இருக்கவே இருக்கு. டர்போவுக்குப் போனால், மைலேஜ் அடி வாங்குமோ என்றும் பயப்படத் தேவையில்லை. இதன் அராய் மைலேஜ், NA இன்ஜினைவிட 0.4 கிமீதான் குறைவு. இரண்டும் முறையே 19.8 கிமீ மற்றும் 19.4 கிமீ க்ளெய்ம் செய்கிறது சிட்ரன். ரியல் டைம் மைலேஜ் நாம் சோதனை போடவில்லை. 16 கிடைத்தால், ஒரு பக்கா மிட் பட்ஜெட் ஹேட்ச்பேக் ரெடி! இதன் விலைக்குத்தான் ஆவலாக இருக்கிறோம்!
அதேபோல் இதன் சர்வீஸிலும் பல சுவாரஸ்யங்கள் சொல்கிறது சிட்ரன். ரோடு சைடு அசிஸ்டன்ஸ், ஹோம் டெலிவரி சர்வீஸ், நல்ல வாரன்ட்டி என்று ஏகப்பட்ட விஷயங்கள் சொல்கிறது சிட்ரன். இதன் ரைடு அண்டு குவாலிட்டி வேற லெவல்! ஒரு பட்ஜெட் விலையில் C3–யை எடுத்துக் கொண்டு எந்தவிதமான சாலைகளிலும் பயணிக்கலாம் போங்கள்!