ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

அன்பு வணக்கம்!

ஆசிரியர் பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசிரியர் பக்கம்

ஆசிரியர் பக்கம்

கார்களும் பைக்குகளும் எப்படிப்பட்ட ஓர் அறிவியல் அற்புதங்கள் என்பதை நாம் நடத்திய கார் டிசைன் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் மூலமாகத்தான் மீண்டும் தெரிந்து கொண்டோம். கட்டற்ற கற்பனைக்குச் சொந்தக்காரர்கள் என்பதால், எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவர்கள் வரைந்த கார்கள், பயிற்சியாளரான சத்தியசீலனுக்கே மெய்சிலிர்க்கும் அனுபவத்தை கொடுத்தன.

தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் கணிசமான கல்லூரிகளில் ஆட்டோமொபைல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பயிற்றுவிக்கப்படுகிறது. இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கே கிடைக்காத ஒரு வாய்ப்பை, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்க மோட்டார் விகடன் முன்வந்திருக்கிறது.

ஆம், இதுவரை நடைபெற்ற கார் டிசைன் பயிலரங்கங்களில் எல்லாம் கார் டிசைனிங் பற்றிய நுட்பங்களும், இலக்கணங்களும், ஒப்பற்ற வடிவமைப்பு கொண்ட கார்களும் மட்டுமே விவாதிக்கப்பட்டு வந்தன. இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக மாணவர்கள் தாங்கள் கற்றுத் தெரிந்துகொண்ட டிசைன் சூத்திரங்களைப் பயன்படுத்தி காகிதங்களில் கார்களை டிசைன் செய்து பழகினார்கள். மாணவர்களின் ஆர்வத்துக்கு ஈடுகொடுக்கும் பொருட்டு இப்போது `க்ளே மாடலிங்’ என்ற ஓர் அம்சத்தையும் இந்தப் பயிலரங்கத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

தொழில்முறையாக கார் டிசைன் செய்யும்போது OEM’s என்று சொல்லக்கூடிய கார் கம்பெனிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் காகிதத்திலும், அதையடுத்து கணினியிலும் உருவாக்கிய காரை இரும்பும் பிளாஸ்டிக்குமாக ஒரு ப்ரோட்டோடைப்பாக, அதாவது ஒரு மாதிரி காராக உருவாக்குவதற்கு முன்னர் களிமண்ணால் ஒரு காரை உருவாக்குவார்கள். Clay Modeling என்கிற இந்த முறையில் காரை வடிவமைக்கும்போதுதான், கார்களின் வடிவமைப்பு பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

இதற்கு குழந்தைகள் விளையாடும் களிமண்ணைப் பயன்படுத்த முடியாது. இதற்காக ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறப்பு வகை களிமண்ணைத்தான் தொழில்முறை டிசைனர்கள் பயன்படுத்துவார்கள். தொழில்முறை ஆராய்ச்சிக் கூடங்களில் எப்படி Clay Modeling செய்யப்படுகிறதோ... அதே களிமண் மற்றும் உபகரணங்களை மாணவர்களுக்கு அளித்து Clay Modeling செய்யப் பயிற்சி கொடுக்க இருக்கிறோம். Composition Techniques, Speed Forms, Stunning marker skills. - இதோடு தொடர்பான பல யுக்திகளும் இந்தப் பயிலரங்கத்தில் பயிற்றுவிக்கப்பட இருக்கிறது.

மாணவர்கள் இளம் பருவத்தில் இருக்கும்போதே, அவர்களின் ஆர்வத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால், தங்களின் எதிர்காலத்தை அவர்கள் பள்ளிப் பருவத்திலேயே முடிவு செய்துவிட முடியும். அதற்கான முயற்சியாக ஜூலை 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள விகடன் அலுவலகத்தில் நடக்க இருக்கும் இந்தப் பயிலரங்கம் அமையும்.

ஆசிரியர்