Published:Updated:

பவர்ஃபுல் பைக்... பாதுகாப்பான பைக் !

KTM RC200 - READERS REVIEWஞ.சுதாகர், படம்: விஜய்

பைக்குகள் என்றாலே எனக்குத் தனி கிரேஸ். அப்பா யுவராஜ், மோட்டார் விகடனின் தீவிர வாசகர். அவரிடம் அவ்வப்போது பேசி மோட்டார் நியூஸ் அனைத்தையும் அப்டேட் செய்துகொள்வேன். கல்லூரி சேரும்போது, முதன்முதலில் பல்ஸர் 150 வாங்கினேன். அதுதான் எனது முதல் பைக்.

ஏன் KTM RC200?

பல்ஸரில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விபத்தில் சிக்கிக்கொண்டேன். மிகப் பலமான காயம். நீண்ட சிகிச்சையும் ஓய்வும் தேவைப்பட்டது. சில மாதங்கள் பைக் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. வீட்டில் பைக் வேண்டாம் என்பதில் கண்டிப்புடன் இருந்தனர். எனவே, பாதுகாப்பாகச் சென்றுவர கார் வாங்கிவிடலாம் என முடிவு செய்துவிட்டனர். ஆனால், பைக்தான் வாங்க வேண்டும் என்பதில் தீர்மானமாகவும் பிடிவாதமாகவும் இருந்தேன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, வீட்டில் என்னைப் புரிந்துகொண்டு பைக்குக்குப் பச்சைக் கொடி காட்டினர். அடுத்து என்ன பைக் வாங்குவது என்ற தேடலில் இறங்கினேன். பல்ஸர் 200NS எடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், மீண்டும் பல்ஸர் வாங்குவதற்குப் பதில், கேடிஎம் போன்ற சூப்பர் பைக்கை வாங்கலாமா என யோசித்தபோதுதான், மோட்டார் விகடனைத் தொடர்புகொண்டேன். கேடிஎம் பிராண்டில் புதிய பைக் எதுவும் வருகிறதா என விசாரித்து, RC200 பைக் பற்றி அறிந்துகொண்டேன். இதைத்தான் வாங்க வேண்டும் என்பதற்காக, பைக் விற்பனைக்கு வரும்வரை காத்திருந்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பவர்ஃபுல் பைக்... பாதுகாப்பான பைக் !

 ஷோரூம் அனுபவம்?

RC200 பற்றி கோவை கேடிஎம் ஷோரூமில் விசாரிக்கச் சென்றபோது, எந்தவொரு சலனமும் இல்லாமல் ‘வரப்போகிறது’ என்று மட்டும்தான் கூறினார்கள். இதற்கிடையில், இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் இந்த பைக்கின் விமர்சனங்களைப் படித்தேன். பைக்கை புக் செய்தபிறகுகூட, ‘டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கிறீர்களா?’ என ஷோரூமில் கேட்கவில்லை. டிசம்பர் மாத மத்தியில் புக் செய்துவிட்டு வந்தேன். ஜனவரியில் டெலிவரி எடுத்தேன். அதைக்கூட அவர்களாகச் சொல்லவில்லை. நானாக பைக் வந்துவிட்டதா என விசாரித்துவிட்டுச் சென்றேன். டெலிவரி எடுக்கும்போதுதான் பைக்கின் சிறப்பம்சங்கள், தனித்துவங்கள் குறித்துச் சொன்னார்கள்.

எப்படி இருக்கிறது?

RC200 பைக்கின் சிறப்பு என்றால், முதலில் பவரைத்தான் சொல்ல வேண்டும். ஸ்பீடோ மீட்டரைப் பார்க்கவில்லை என்றால், எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்று தெரியாது. 60 கி.மீ வேகத்தில் செல்கிறோம் என நினைப்போம். ஆனால், ஸ்பீடோ மீட்டரைப் பார்த்தால், 100-க்கு மேல் இருக்கும்.  இன்ஜின் ஸ்மூத்னெஸ்தான் இதற்குக் காரணம். பைக்கில் ஒரு ட்ரிப் முடித்துவிட்டு வந்தால், நாம் எவ்வளவு நேரம் பயணம் செய்திருக்கிறோம்? அதன் சராசரி வேகம் என்ன என்பது வரை அத்தனை விவரங்களையும் டிஜிட்டல் மீட்டர் காட்டுகிறது. நாம் எவ்வளவு வேகத்தில் செல்கிறோமோ, அதற்கு ஏற்ப நமது மைலேஜ் என்ன என்பதையும் காட்டுகிறது.

பவர்ஃபுல் பைக்... பாதுகாப்பான பைக் !

அடுத்ததாக, இதன் டிஸைன். பார்க்கிங்கில் மற்ற பைக்குகளோடு நிறுத்திவிட்டு, தள்ளி நின்று பார்த்தால் RC200 தனியாகத் தெரியும். பில்லியன் சீட் பார்க்க உயரமாக இருப்பதுபோல இருக்கும். ஆனால், உட்கார்ந்தால்  உயரம் தெரியவில்லை.

முதலில் இதில் சற்று சிரமமாக இருப்பது, சீட் அமைப்புதான். கழுத்தைத் தூக்கி சாலையைப் பார்க்க வேண்டும். பழகிவிட்டால் இது பிரச்னையாக இருக்காது. எனது உயரம் 6 அடி என்பதால், எனக்கு இது கனகச்சிதமாகப் பொருந்துகிறது.

ப்ளஸ்  
                         
நிறம் மற்றும் வடிவமைப்பு நல்ல காஸ்ட்லியான பைக் என்ற லுக்கைத் தருகிறது. பவர் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கிறது. பைக்கின் பிக்-அப் ஒரே சீராக இருக்கிறது.
டிஸ்ப்ளே யூனிட் தெளிவாக இருக்கிறது. மைலேஜ் கால்குலேட்டர், சராசரி வேகம் காட்டும் வசதி, மைலேஜ் இண்டிகேட்டர் என எல்லமே பயனுள்ளவையாக இருக்கின்றன.
சைடு ஸ்டாண்ட் எடுக்காமல் ஸ்டார்ட் செய்தால், பைக் தானாக ஆஃப் ஆகிவிடும். இதெல்லாம் சேர்த்துதான் RC200, ஒரு பாதுகாப்பான பைக் என்ற எண்ணத்தைத் தருகிறது.

மைனஸ்

பவர் அதிகம் கொண்ட 2 லட்சம் ரூபாய் விலைகொண்ட பைக்கில்,  ஏபிஎஸ் பிரேக் இல்லை என்பது மட்டுமே மைனஸ்!

என் தீர்ப்பு:

கொடுக்கும் விலைக்கு பவர்ஃபுல்லான, ஸ்டைலான சூப்பர் பைக் போல வேண்டும் என்பவர்கள், RC200 பைக்கைத் தேர்வு செய்யலாம்.