Published:Updated:

ராசியுள்ள ராஸி !

பைக் ரேஸ் MOTO GPசார்லஸ்

ராசியுள்ள ராஸி !

பைக் ரேஸ் MOTO GPசார்லஸ்

Published:Updated:

லகின் உண்மையான ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் கதாநாயகன், வாலன்டினோ ராஸிதான். பரபரப்பாகத் துவங்கியிருக்கும் 2015 மோட்டோ ஜீபி சீஸனின் முதல் மூன்று ரேஸ்களில், இரண்டில் வெற்றிபெற்று மீண்டும் சாம்பியன்ஷிப் கோதாவில் குதித்திருக்கிறார் ராஸி.

 ஆறு முறை மோட்டோ ஜீபி சாம்பியன் பட்டம் வென்றவர், 36 வயதான வாலன்டினோ ராஸி. ஆனால் 2010-ல் இருந்து மீண்டும் சாம்பியனாகப் போராடிக்கொண்டிருக்கிறார். யமஹாவின் செல்லப்பிள்ளையாக இருந்த இவர், இடையில் டுகாட்டி அணிக்குத் தாவினார். இரண்டு ஆண்டுகள் டுகாட்டி அணியில் இருந்த இவரால், சாம்பியன்ஷிப் பட்டியலில் 6-வது, 7-வது இடங்களையே பிடிக்க முடிந்தது. யமஹாவுடன் சமாதானமாகி மீண்டும் அணிக்குள் வந்த ராஸி, கடந்த ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்லும் வெறியுடன் இருக்கும் ராஸி, மீண்டும் சாம்பியனாவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன.

 மிக இளம் வயதில் மோட்டோ ஜீபி சாம்பியனாகி சாதனை படைத்தவர் மார்க் மார்க்யூஸ். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் இந்த 22 வயது நடப்பு சாம்பியனுக்கும், ராஸிக்கும்தான் ஆக்ரோஷமான போட்டி நடைபெற்று வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசியுள்ள ராஸி !

  ஏப்ரல் 19-ம் தேதி அர்ஜென்டினாவில் நடைபெற்ற ரேஸ் போட்டியின் போது ராஸிக்கும், மார்க்யூஸுக்கும் வெடித்த பைக் சண்டையில், மார்க்யூஸ் விபத்தில் சிக்கினார். அர்ஜென்டினா ரேஸில் முதல் இடத்தில் சென்று கொண்டிருந்தார் மார்க்யூஸ். ரேஸ் முடிய மூன்று லேப்புகளே இருந்த நிலையில், இரண்டாம் இடத்தில் இருந்த ராஸி, மார்க்யூஸை முந்த முயன்று கொண்டிருந்தார். ரேஸ் முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில் ராஸியும், மார்க்யூஸும் மாறி மாறி முதல் இடத்துக்கு முன்னேறிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் ஒரு சில மைக்ரோ மீட்டர்கள் தான் இடைவெளி இருந்தது. இரண்டு பைக்குகளும் எப்போது வேண்டுமானாலும் ஒன்றோடு ஒன்று மோதலாம் என்கிற நிலை... சட்டென குறுக்கிட்ட ராஸியின் பைக், மார்க்யூஸ் பைக்கோடு மோத... ரேஸ் டிராக்கில் இருந்து வழுக்கிக்கொண்டு வெளியே போய் விழுந்தார் மார்க்யூஸ். ரேஸில் இருந்து மார்க்யூஸ் வெளியேற, பெரிய போட்டி எதுவும் இல்லாமல் வெற்றி பெற்றார் ராஸி.

 ‘திட்டமிட்டு மார்க்யூஸை இடித்து ரேஸைவிட்டு வெளியே தள்ளினார் ராஸி’ என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. ‘‘ராஸி என்னுடைய ஹீரோ. அவரைப் பார்த்துத்தான் நான் பைக் ரேஸராக வேண்டும் என்றே ஆசைப்பட்டேன். அர்ஜென்டினாவில் ராஸி ரேஸ் ஓட்டிய முறை எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும், ராஸி மீது எனக்குக் கோபம் இல்லை. ராஸியால் தோற்கடிக்கப்படுவதும், ராஸியை வெல்வதும்தான் எனக்குப் பெருமை. அடுத்தடுத்த ரேஸ்களில் ராஸியைத் தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தைத் தக்கவைப்பேன்’’ என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார் மார்க்யூஸ்.

ராசியுள்ள ராஸி !

 கத்தார், அமெரிக்கா, அர்ஜென்டினா என அடுத்தடுத்த வாரங்களில் மூன்று ரேஸ்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், சாம்பியன்ஷிப் பட்டியலில் ராஸி 66 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். டுகாட்டி வீரர் ஆன்ட்ரி டோவிஸியோஸோ 60 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டுகாட்டியின் மற்றொரு வீரர் ஆண்ட்ரியா ஐயொனின் 40 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். நடப்பு சாம்பியன் மார்க்யூஸ், 36 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism