Published:Updated:

ரேஸ் வீரனாக ...

பாலவிஜய்

ரேஸ் வீரனாக ...

பாலவிஜய்

Published:Updated:

நான் இந்தியாவின் பைக் ரேஸ் சாம்பியன் ஆக வேண்டும்; கார் ரேஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் மையங்கள், தமிழகத்தில்தான் உள்ளன.

சென்னை இருங்காட்டுக்கோட்டையில் இருக்கும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேஸ் டிராக், ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கு நேர் எதிரே இருக்கிறது. கோவை, செட்டிப்பாளையத்தில் கரி மோட்டார் ஸ்பீட் வே ரேஸ் டிராக் அமைந்திருக்கிறது.

தேசிய கார் ரேஸ் போட்டிகளைப் பொறுத்தவரை, இந்தியாவில் இரண்டு வகையான ரேஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த இரண்டையுமே டயர் நிறுவனங்கள்தான் நடத்துகின்றன. எம்.ஆர்.எஃப் நடத்தும் ரேஸ் போட்டிதான் அதிகாரப்பூர்வமான தேசிய கார் ரேஸ் போட்டி. ஜே.கே டயர் தனியாக ரேஸ் போட்டிகளை நடத்துகிறது. எம்.ஆர்.எஃப் நடத்தும் தேசிய கார் ரேஸ் போட்டியில், ஃபார்முலா 1600 மற்றும் டூரிங் கார்களில் ரேஸ் போட்டிகள் நடைபெறும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.ஆர்.எஃப் 1600 ரேஸ் போட்டியில் கலந்துகொள்ள, ரேஸ் காரை வாடகைக்கு எடுக்க வேண்டும். இந்த ரேஸ் கார்களை கோவையில் உள்ள ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்த ஃபார்முலா ரேஸ் காரை ஒரு ரேஸுக்கு வாடகை எடுக்க 1.5 லட்சம் ரூபாய் செலவாகும். இந்த 1.5 லட்சம் ரூபாயில் காருடன் பெட்ரோல், மெக்கானிக்ஸ் மற்றும் ரேஸுக்கான அனைத்து சப்போர்ட்டுகளும் அடங்கும். ஒரு சீஸனில் 5 அல்லது 6 ரேஸ் போட்டிகள் நடக்கும். விபத்துகள் ஏற்பட்டு காருக்கு ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டால், அதற்கான கட்டணம் தனி.

ரேஸ் வீரனாக ...

எம்.ஆர்.எஃப் ரேஸுடன் நடத்தப்படும் டூரிங் கார் ரேஸ் போட்டிகளில், மூன்று பிரிவுகள் உண்டு. முதல் பிரிவு, சூப்பர் ஸ்டாக் டூரிங் கார் போட்டி. இதில், 1.8 லிட்டர் இன்ஜின்கொண்ட இந்தியாவில் தயாராகும் எந்த கார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். டர்போ இருக்கக் கூடாது. பொதுவாக, இந்த ரேஸ் போட்டியில் ஹோண்டா சிட்டி அதிகம் ஓடும். இதில், காரை வாடகைக்கு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் சொந்தமாக ஒரு பழைய ஹோண்டா சிட்டி அல்லது வேறு கார்களை வாங்கிவிட்டு, அதை ரேஸுக்கு ஏற்றதுபோல தயார் செய்துகொள்ளலாம். இந்த கார்களை ரேஸ் கார்களாக்க ரோல் கேஜ், சீட், சீட் பெல்ட், இசிஎம் மற்றும் புது சஸ்பென்ஷன் போன்றவற்றைப் பொருத்த வேண்டும். ரோல் கேஜ், சீட், சீட் பெல்ட், இசிஎம் போன்றவற்றுக்கு 1.20 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ரேஸுக்காக சஸ்பென்ஷனை மாற்றுவதற்கு, 1.5 லட்சம் ரூபாய் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இந்தச் செலவு என்பது ரேஸ் காராக மாற்றுவதற்கான ஒருமுறை செலவுதான். பெட்ரோல், மெக்கானிக்ஸ் என ஒரு சுற்று ரேஸுக்கான ரன்னிங் காஸ்ட் என்பது 50,000 ரூபாய் வரை ஆகும்.

ரேஸ் வீரனாக ...

ஜூனியர் டூரிங் கார்ஸ் எனும் பிரிவில் எஸ்டீம் கார்கள் மட்டும் கலந்துகொள்ளும். இதற்கும் காரை ரேஸ் காராக மாற்ற 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ரன்னிங் செலவுகள் ஒரு ரேஸுக்கு 40,000 முதல் 50,000 ரூபாய் வரை ஆகும். இந்த ரேஸ் போட்டிகளைப் பொறுத்தவரை ஸ்பேர் இன்ஜின் வைத்துக்கொள்வது நல்லது. ஸ்பேர் இன்ஜினுக்கு மட்டும் 40,000 முதல் 50,000 ரூபாய் வரை செலவாகும்.

டூரிங் கார் ரேஸில் மூன்றாவது பிரிவு என்பது இண்டியன் டூரிங் கார்ஸ் பிரிவு. இதிலும் 1800 சிசி கொண்ட இந்திய கார்கள்தான் அனுமதிக்கப்படும். ஆனால், இதில் இன்ஜினின் பவரைக் கூட்டுவது, கியர்பாக்ஸை மாற்றுவது என எல்லா மாடிஃபிகேஷன்களையும் செய்யலாம். இதற்கு ஒரு ரேஸுக்கான ரன்னிங் செலவுகள் மட்டும் 1.5 லட்சம் ரூபாய் வரை ஆகும். வெள்ளிக்கிழமை பயிற்சி ரேஸ்; சனிக்கிழமை தகுதிச் சுற்று; ஞாயிற்றுக்கிழமை ரேஸ் என மூன்று நாட்களும் ரேஸ் ஓட்ட மட்டும் 150 லிட்டர் பெட்ரோல் செலவாகும். இந்த ரேஸுக்குப் பயன் படுத்தப்படுவது ஹை ஆக்டேன் பெட்ரோல். இதன் விலை, ஒரு லிட்டர் 250 ரூபாய்.

ஜேகே டயர் நிறுவனம் நடத்தும் ரேஸ் போட்டிகளில் ஃபார்முலா எல்ஜிபி, ஃபோக்ஸ்வாகன் போலோ கப், வென்ட்டோ கப், ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஆசியா போன்ற போட்டிகள் நடக்கின்றன. இதில் ஃபார்முலா-1 எல்ஜிபி என்பது, மாருதி ஸ்விஃப்ட் இன்ஜினைக்கொண்டு நடத்தப்படும் ரேஸ் போட்டி. இந்த ரேஸுக்கான காரை கோவையைச் சேர்ந்த எல்ஜிபி நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்துடன் ஒரு ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, ரேஸ் காரை லீஸுக்கு எடுக்க வேண்டும். இந்த கார்களைச் சொந்தமாக வாங்க முடியாது என்பதோடு, ரேஸில் ஏதும் சேதம் ஏற்பட்டால் அதற்கான செலவுகளையும் ரேஸ் வீரர்தான் ஏற்க வேண்டும். பெட்ரோல், மெயின்டனன்ஸ், மெக்கானிக்ஸ் உள்ளிட்ட அத்தனை செலவுகளும் ரேஸ் வீரரைச் சேர்ந்தது தான். இங்குதான் அணிகளின் பங்கு முக்கியமானது. ஒரு ரேஸ் வீரர் எல்ஜிபியிடம் ரேஸ் காரை வாடகைக்கு எடுத்துவிட்டால், காரின் ஒட்டுமொத்த சர்வீஸ், மெக்கானிக் தேவைகளை அந்தந்த அணிகள் பார்த்துக்கொள்ளும். ரன்னிங் காஸ்ட், ஒரு ரேஸுக்கு 35,000 முதல் 40,000 ரூபாய் வரை செலவாகும்.

ரேஸ் வீரனாக ...

பைக் ரேஸ்களைப் பொறுத்தவரை, ஒரு சாதாரண பைக்கை - ரேஸ் பைக்காக மாற்ற 20,000- 30,000 ரூபாய் வரை செலவாகும். ஒரு ரேஸுக்கான ரன்னிங் செலவுகள் 2,500 முதல் 3000 ரூபாய் வரை ஆகும். தவிர யமஹா, சுஸூகி, ஹோண்டா நடத்தும் ஒன் மேக் ரேஸ்களும் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொள்ள, பைக்குகளை அந்தந்த நிறுவனங்களே தந்து விடுகின்றன. ரன்னிங் செலவுகள்தான் ரேஸ் வீரரருடையது.
பைக் ரேஸில் கலந்துகொள்வது ஓகே, கார் ரேஸராவதற்கான செலவுகள் தான் அதிகமாக இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? காரணம், கார் ரேஸருக்குத்தான் உலகம் முழுக்க மவுசு அதிகம். பணமும் அதிகம். நீங்கள் தொடர்ந்து வெற்றிபெற ஆரம்பித்து விட்டால், உங்களுக்கு ஸ்பான்ஸர்கள் கிடைப்பார்கள் என்பதோடு, சர்வதேச ரேஸ் போட்டி களிலும் கலந்துகொள்ள முடியும்.

கார் ரேஸின் உச்சமாக ஃபார்முலா-1 ரேஸில் பங்குகொண்ட ஒரே இந்தியர், நரேன் கார்த்திகேயேன் மட்டுமே! ஃபார்முலா-1 என்றால் என்ன? அது எப்படி உலகம் முழுவதும் பிரபல மானது, ஃபார்முலா-1 ரேஸுக்கான தகுதிகள் என்னென்ன? அடுத்தடுத்த இதழ்களில் சொல்கிறேன்!

(விர்ர்ரூம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism