Published:Updated:

125 சிசி பைக் வாங்க காத்திருக்கும் இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் என்டார்க்! #tvsntorq125

125 சிசி பைக் வாங்க காத்திருக்கும் இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் என்டார்க்! #tvsntorq125

125 சிசி பைக் வாங்க காத்திருக்கும் இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் என்டார்க்! #tvsntorq125

125 சிசி பைக் வாங்க காத்திருக்கும் இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் என்டார்க்! #tvsntorq125

125 சிசி பைக் வாங்க காத்திருக்கும் இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் என்டார்க்! #tvsntorq125

Published:Updated:
125 சிசி பைக் வாங்க காத்திருக்கும் இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் என்டார்க்! #tvsntorq125

முதலில் டி.வி.எஸ் நிறுவனத்துக்குப் பெரிய பொக்கே தந்து ஆரம்பிப்போம். இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்று ஒரு பட்டியல் போட்டால் ஆக்டிவா,  ஜூபிட்டர், ஆக்ஸஸ், மேஸ்ட்ரோ, ஃபேஸினோ ஸ்கூட்டர்கள்தாம் பட்டியலில் நம்மை முன்னின்று வரவேற்கும். இவை எல்லாமே வழக்கமான டிசைன்கள்தாம்; குடும்பத்தில் உள்ள அனைவரையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர்கள். இளைஞர்களை மனதில் வைத்து உருவாக்கிய ஸ்கூட்டர்கள் எல்லாம் அதிகமாக விற்பனையாவதில்லை. ஆடியன்ஸ் குறைவு எனத் தெரிந்தும் டி.வி.எஸ் நிறுவனம் `என்டார்க்' (NTORQ) என்ற இளம் தலைமுறை ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. இந்தத் தைரியத்துக்குத்தான் பொக்கே! 18 முதல் 28 வயதுள்ள இளம் தலைமுறையினரை கவரும் ஸ்கூட்டராக இருக்கிறதா என்டார்க்? டி.வி.எஸ்-ஸின் முயற்சி எப்படி இருக்கிறது எனப் பார்ப்போம்.

ஸ்டைல்

அதிவேகப் போர் விமானத்தைப் (Stealth Aircraft) பார்த்தே என்டார்க்கை டிசைன் செய்துள்ளதாகச் சொல்கிறது டி.வி.எஸ். ஸ்கூட்டரின் பின்பக்கம் தவிர வேறு எங்குமே இந்த இன்ஸ்பிரேஷன் தெரியவில்லை. ஸ்போர்ட்டி ஸ்கூட்டர்களுக்கே உரிய ஷார்ப்பான வளைவுகள்கொண்ட முன்பக்க பேனல் இந்த ஸ்கூட்டரிலும் உள்ளது. இதுவரை வந்த டி.வி.எஸ்-ஸின் ஸ்கூட்டர்களில் இண்டிகேட்டர் பாடி பேனலோடு இணைந்தும், ஹெட்லைட் ஹேண்டல்பாரோடும் வரும். ஆனால், என்டார்க்கில் எதிர்மாறாக வந்துள்ளது. இந்த ஸ்டைலை இனிவரும் ஸ்கூட்டர்களில் டி.வி.எஸ் தொடரும் என்றால் இன்னும் ஜோராக இருக்கும்.

பாடி பேனலோடு இணைந்துள்ள V வடிவ ஹெட்லைட் சாதாரண ஹாலோஜன் பல்புதான். ஆனால், LED DRL உண்டு. ஸ்கூட்டரின் பின்பக்கம் T வடிவ LED டெயில் லைட் அருமையோ அருமை! லைட்டுக்குக் கீழே உள்ள ஃபின்ஸுக்குப் பயன்பாடு இல்லையென்றாலும், பார்க்க அம்சமாக உள்ளது. அதற்குக் கீழே ஆங்கிரிபேர்டு புருவத்தை நினைவுபடுத்தும் இண்டிகேட்டர்கள், டெயில் லைட்டோடு இல்லாமல் பைக் போல தனியாக வருகிறது. கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் ஃபெண்டர் மற்றும் டெயில் கவர் ஸ்கூட்டரின் மேட் பெயின்ட்டோடு பொருந்திப்போகிறது. கிராப் ரயில், எளிதாகக் கைக்கொள்ள முடிவது மட்டுமல்லாமல், ஸ்கூட்டருக்கு ஸ்டைலாகவும் உள்ளது. கூலிங் ஃபேன் சிவப்பு நிறத்தில் தனியாகத் தெரிவது செம ஸ்டைல்.

12 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல் பளபளப்பாகவும் ஸ்போர்ட்டியாகவும் இருக்கிறது. அறுகோண வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர். ஃபுல் டிஜிட்டல் மட்டுமல்ல, ஸ்கூட்டரைப் பற்றி தேவையான அனைத்துத் தகவல்களையும் காட்டும். அதற்கும் மேலாக, ப்ளூடூத், மேப், லேப் டைமர், டாப் ஸ்பீடு ரிக்கார்டர் எனப் பல அம்சங்களும் இருக்கின்றன. இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் மற்றும் சுவிட்சுகளின் தரம் அருமை. இன்ஜின் கில் ஸ்விட்ச்கொண்ட முதல் இந்திய ஸ்கூட்டர் என்டார்க்தான். வெள்ளை, பச்சை, சிவப்பு, மஞ்சள் என நான்கு நிறங்களில் மேட் ஃபினிஷோடு வருகிறது என்டார்க். எல்லாமே கவர்ச்சியான நிறங்கள்தாம்.

வசதிகள்

என்டார்க்கின் சீட்டுக்குக் கீழே 22 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உள்ளது. இதைத் தவிர ஸ்கூட்டரில் வேறு எங்கும் ஸ்டோரேஜ் இல்லை. 125சிசி செக்மண்டில் தற்போது அதிக அண்டர் சீட் ஸ்டோரேஜ் இதில்தான் உள்ளது. ஆனாலும், ஒரு ஃபுல் ஃபேஸ் ஹெல்மட்டை வைத்துப் பூட்ட முடியவில்லை. இதே ஸ்டோரேஜில் தனியாக வாட்டர்பாட்டில் வைக்கவும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சிரமப்படாமல் இருக்க சீட்டுக்குக் கீழே LED லைட் உள்ளது. மொபைல்போனை சார்ஜ் செய்வதற்கு USB சார்ஜ் போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

என்டார்க்கின் மிக முக்கியமான அம்சம், அதன் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல்தான். ஸ்மார்ட் கனெக்ட் உடன் கூடிய 5 இன்ச் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோலில் மொத்தம் 55 அம்சங்கள் உள்ளன. இந்த கன்சோலில் இரண்டு மோடுகளை செட் செய்துகொள்ளலாம். இந்த மோடுகளால் ஓட்டுதல் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது. டிஸ்ப்ளேவில் மட்டுமே சில மாற்றங்கள் இருக்கும். ஸ்ட்ரீட் மோடில் ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் கடிகாரம், ஓடோ மீட்டர், பியூவல் இண்டிகேட்டர் போன்றவை தெரியும். ஸ்போர்ட் மோடில் கூடுதலாக லேப் டைமர், 0-60 டைமர் தெரியும். இந்த கன்சோலில் இரண்டு ட்ரிப் மீட்டர்கள் உள்ளன. ஒன்று, தூரத்தைக் காட்டும். மற்றொன்று, ஸ்கூட்டர் ரிசர்வுக்கு வந்த பிறகு எவ்வளவு தூரம் போகும் என்பதைக் காட்டும். கூடுதலாக இன்ஜின் வெப்பம், சராசரி வேகம் மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர் போன்றவையும் இந்த டிஸ்ப்ளே காட்டுகிறது. ஸ்கூட்டரை ப்ளூடூத் உதவியால் மொபைல்போனுடன் இணைக்கலாம். அதற்கு முன்னர் நமது ஸ்மார்ட்போனில் என்டார்க் செயலியை டவுண்லோடு செய்ய வேண்டும். இதன் மூலம் மொபைல் பேட்டரி ஸ்டேட்டஸ், சிக்னல் ஸ்டேட்டஸ், இன்கம்மிங் கால், மிஸ்டு கால், மெசேஜ் போன்றவற்றைப் பார்க்கலாம். ஆனால், பதிலளிக்க முடியாது. Map my India நிறுவனத்துடன் இணைந்து மேப் சேவையையும் அளிக்கிறது டி.வி.எஸ். இடத்தை மொபைலில் பதிவுசெய்தால் ரூட்டை ஸ்கூட்டரே காண்பிக்கும். மேலும், இந்தச் செயிலியில் உள்ள அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிரவும் முடியும்.

பர்ஃபாமன்ஸ்

என்டார்க்கில் இருப்பது டி.வி.எஸ்-ஸின் முற்றிலும் புதிய சிங்கள் சிலிண்டர், 124.79 சிசி, மூன்று வால்வ் இன்ஜின்.  9.5bhp பவரும், 1.07kgm டார்க்கும் கிடைக்கின்றன. பெயருக்கு ஏற்றதுபோல அதிக டார்க் தரக்கூடிய இன்ஜின். ஒசூரில் அமைந்திருக்கும் டி.வி.எஸ் டெஸ்ட் டிராக்கில் என்டார்க்கை டெஸ்ட் செய்தோம். ஸ்கூட்டரை ஓட்டும்போது வைப்ரேஷனே தெரியவில்லை. அதிகபட்சம் மணிக்கு 95 கி.மீ வேகம் வரை போக முடியும் என டி.வி.எஸ் சொன்னாலும் எங்களுக்குக் கிடைத்த டெஸ்ட் ஸ்கூட்டரில் 97 கி.மீ வேகத்தைத் தொட முடிந்தது.

டிராக்கில் இருக்கும் இரண்டு 600 மீட்டர் ஸ்ட்ரெச்சுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். 97 கி.மீ வேகத்தில் 5 லேப்புகளுக்குமேல் போன பிறகும் ஸ்கூட்டரில் அதிர்வுகளே தெரியவில்லை. 70 முதல் 80 கி.மீ வேகத்தில் சில லேப்புகள் ஸ்கூட்டரை டிராக்கில் ஓட்டினோம். இன்ஜின் படு ஸ்மூத். 90 கி.மீ-க்குமேல் லைட்டாக வைப்ரேஷன் வருவதுபோல இருந்தாலும் அது ஓட்டுதல் தரத்தை பாதிக்கும்விதமாகவோ தொல்லைதரும்விதமாகவோ இல்லை. 50-ல் ஆரம்பித்து 62 கி.மீ வேகம் வரை டிராக்கின் இரண்டு வளைவுகளிலும் கடந்தாயிற்று. டி.வி.எஸ் இதுவரை பயன்படுத்தி வந்த உருளை வடிவ சேஸியை மாற்றி, இந்த ஸ்கூட்டரில் செவ்வக வடிவ underbone சேஸியைப் பயன்படுத்தியுள்ளதால் என்டார்க் அதிக வேகத்தில் ஸ்டிஃப்பானதாகவும், வளைவுகளில் ஓட்டும்போது சுறுசுறுப்பானதாகவும் உள்ளது. வளைவுகளில் ரெமோரா டயர்கள் சூப்பர். நல்ல கிரிப்பும் ஃபீட்பேக்கும் இருந்தன. பின்பக்கம் உள்ள 110 செக்‌ஷன் டயர்கள் நம்பிக்கையானதாகவே இருந்தன. முன்பக்க 100 செக்‌ஷன் டயர்கள் 60 கி.மீ வேகத்தில் வளைவுகளைக் கடந்த பிறகும், முன்பக்கம் தடுமாறாமல் சரியான கிரிப்பை மெயின்டெயின் செய்தது.

ஆக்ஸிலரேஷனைப் பொறுத்தவரை என்டார்க் சுமார்தான். ஏப்ரிலியாவை போன்ற அக்ரஸிவான ஆக்ஸிலரேஷன் இல்லை. ஆக்ஸிலரேட்டரை முழுவதுமாகத் திருப்பிய பிறகும் என்டார்க் பொறுமையாகத்தான் வேகமெடுக்கும். ஆனால், மிட் ரேஞ்சில் என்டார்க்கின் பர்ஃபாமன்ஸ் அதிரடியாக உள்ளது. ஸ்கூட்டரை 40 முதல் 70 கி.மீ வேகம் வரை சாதாரணமாக எந்தச் சிரமமும் இல்லாமல் ஓட்டிச்செல்லலாம். வளைவுகளைக் கடந்த பிறகு, டாப் ஸ்பீடை நோக்கிப் போகலாம் என சுறுசுறுப்பாக ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால் ஏமாற்றம்தான். டாப் ஸ்பீடிலும் சுமாரான பர்ஃபாமன்ஸ்தான். ஸ்கூட்டர்களில் எது பெஸ்ட் சவுண்ட் தரும் ஸ்கூட்டர் எனக் கேட்டால், என்டார்க்கைத்தான் தேர்வுசெய்வார்கள். என்டார்க்கை புதிதாகப் பார்ப்பவர்கள், `ஸ்கூட்டர்ரோடு வந்த சைலன்ஸரா இது!' என்று கேட்க வாய்ப்புண்டு.

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங்

என்டார்க்கில் முன்பக்கம் 220 மி.மீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 130 மி.மீ டிரம் பிரேக்கும் உள்ளது. இந்நேரத்தில் டிஸ்க் பிரேக்கை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதிக சென்சிட்டிவ்வாக இல்லை. தேவையான அளவு கச்சிதமாக இருக்கிறது. சில பைக்குகளைவிட இந்த ஸ்கூட்டரில் இருக்கும் டிஸ்க் பிரேக்கின் ஃபீட்பேக் அருமை. பின்பக்கம் உள்ள டிரம் பிரேக் ஓகே ரகம்தான். என்டார்க்கில் முன்பக்கம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும் பின்பக்கம் கேஸ் ஷாக் அப்சார்பரும் உள்ளன. சஸ்பென்ஷன் அதிக ஸ்டிஃப்பாகவும் இல்லை, சாஃப்டாகவும் இல்லை. டிராக்கில் ஓட்டும்போது வளைவுகளைக் கடந்துபோக நம்பிக்கை தரும்விதமாகவே இருந்தது.

டிராக்கில் ஸ்கூட்டரை ஓட்டியபோது ரோடு அதிர்வுகள் அதிகம் தெரியவில்லை. டி.வி.எஸ் வளாகத்தில் இருந்த கரடுமுரடான பாதையில் ஓட்டிப்பார்த்தோம். பின்பக்க சஸ்பென்ஷன் அதிர்வுகளை நன்றாகவே சமாளித்தது. ஆனால், முன்பக்க சஸ்பென்ஷன் நம் கைக்குக் கொஞ்சம் அதிர்வுகளைக் கடத்தியது. டயர்களை நினைத்து வருத்தப்படத் தேவையில்லை. என்டார்க்கின் 12 இன்ச் ரெமோரா டயர்கள் அருமையான கிரிப் தருகிறது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் குறிப்பிடும்படியான பிரச்னைகள் இதன் அதிக எடை மற்றும் சிறிய பெட்ரோல் டேங்க். என்டார்க் 116 கிலோ எடைகொண்டது. கிராஸியாவைவிட 9 கிலோவும், ஆக்ஸஸைவிட 14 கிலோவும் எடை அதிகம். தடிமனான முன்பக்க ஃபோர்க்குகள், பெரிய டயர், புதிய சேஸி போன்ற சில பகுதிகளால் இந்த எடை கூடியிருக்கலாம். மைலேஜ் பற்றி இதுவரை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வரவில்லை என்றாலும்,  `இது பர்ஃபாமன்ஸ் ஸ்கூட்டர். மைலேஜ் எதிர்பார்க்காதீங்க' என்று அறிமுக விழாவிலேயே அறிவித்திருந்தது டி.வி.எஸ். இந்நிலையில், 5 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுத்திருப்பது ரொம்பவே குறைவு.

தீர்ப்பு

``என்டார்க் ஸ்போர்ட்ஸ், ஸ்கூட்டர் இல்லை; கொஞ்சம் ஸ்போர்ட்டியான ஸ்ட்ரீட் ஸ்கூட்டர்'' என்று டி.வி.எஸ் பொறியியல் குழு கூறியது உண்மைதான். டிராக்கைவிட சாலையில் ஸ்கூட்டரை டெஸ்ட் செய்வதுதான் சிறப்பானது. ஆனால், சாலையில் இந்த ஸ்கூட்டர் எப்படி இருக்கும் என்பதை இப்போதே யூகிக்க முடிகிறது. ஸ்மூத்தான இன்ஜின், இதுவரை ஸ்கூட்டர்களில் இல்லாத கவர்ச்சிகரமான வசதிகள், சட்டென நிற்கும் பிரேக், வளைவுகளில் வேகமாகப் போகும் அளவு நம்பிக்கை தரும் சஸ்பென்ஷன் மற்றும் டயர்கள், அதிக பவர்-டார்க், பளிச்சென்ற நிறத்தில் மேட் ஃபினிஷ் என்று என்டார்க் பிராக்டிக்கலான ஸ்கூட்டர் மட்டுமல்ல, ஃபன்னான ஸ்கூட்டரும்கூட. ஒருசில குறைகள் இதில் இருந்தாலும், 125சிசி பைக் வாங்க காத்திருக்கும் இளைஞர்களை என்டார்க் தன் பக்கம் இழுத்துவிடும் என்பது உறுதி!