Published:Updated:

“அலுப்பே தெரியவில்லை!”

ரீடர்ஸ் ரெவ்யூ: பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220நா.மரகதமணி, படங்கள்: சு.ஷரண் சந்தர்

பிரீமியம் ஸ்டோரி

த்தனை ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்குகள் மார்க்கெட்டில் வரிசை கட்டிக்கொண்டிருந்தாலும், க்ரூஸர் மாடல் பைக்குகளுக்கு என தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவின் க்ரூஸர் பைக்குகளில், பஜாஜ் அவென்ஜர் முக்கியமான ஒன்று. பஜாஜின் ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கான பல்ஸர் ஆண்டுதோறும் வெவ்வேறு வெர்ஷன்களில் அப்டேட் ஆகிக்கொண்டிருக்க, கடைசியாக 2010-ல் அப்கிரேட் ஆனது அவென்ஜர். இப்போது ஸ்ட்ரீட் 220, 150, க்ரூஸ் 220 என மூன்று புதிய மாடல்களை அறிமுகம் செய்திருக்கிறது பஜாஜ். மதுரையைச் சேர்ந்த ரவீந்திரன், நம்மிடம் புதிய அவென்ஜர் 220 அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்

ஏன் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220?

நான் இதற்கு முன் புல்லட் எலெக்ட்ரா 350 வைத்திருந்தேன். எலெக்ட்ரா வாங்கும்போதே அவென்ஜர் போன்ற க்ரூஸர் மாடல் பைக்களின் மீது ஆர்வம் இருந்தது. எனினும், புல்லட் ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் ஐந்து ஆண்டுகள் எலெக்ட்ரா வைத்திருந்தேன். 2015-ல் அவென்ஜரின் அடுத்த மாடல் வந்ததும், அடுத்து இந்த பைக்கைத்தான் வாங்க வேண்டும் என முடிவெடுத்தேன்.


அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 வாங்கி நான்கு மாதங்கள் ஆன நிலையில், எலெக்ட்ராவைவிட இந்த பைக் எனக்குப் பிடித்திருக்கிறது. ஓட்டும்போது கிடைக்கிற சொகுசில் அவென்ஜர் - எலெக்ட்ராவை மிஞ்சிவிட்டது.

   “அலுப்பே தெரியவில்லை!”
   “அலுப்பே தெரியவில்லை!”

ஷோரூம் அனுபவம்

மதுரையிலுள்ள பாலமுருகன் பஜாஜில், டெஸ்ட் டிரைவுக்கு பைக் கேட்டேன். டெஸ்ட் டிரைவிலேயே மிகவும் பிடித்துப்போனது. பைக்கை எடுத்துக்கொண்டு 2 கி.மீ வரை ஓட்டிப் பார்த்தேன். ஆர்டர் செய்த இரண்டாவது நாளே பைக் வாங்கிவிட்டேன். ஷோரூம் அனுபவம் எனக்கு சூப்பர். எனது காத்திருப்பு இரண்டே நாட்களில் முடிந்தது ஆஸம்.   

எப்படி இருக்கிறது அவென்ஜர்?

ஓடோ மீட்டர் 2,000 கி.மீ தொடவிருக்கும் நிலையில், மதுரையில் இருந்து திருச்சி வரை லாங் டிரைவ் சென்றுவந்துள்ளேன். நெடுஞ்சாலையில் ஓட்டிச்செல்லும்போது, கொஞ்சம்கூட உடல் அலுக்கவில்லை. பைக்கின் உயரம் சிறிதாக இருப்பதாலும், ஃபுட் ரெஸ்ட் - ரைடர் சீட்டுக்குக் கீழ் இல்லாமல் முன் பக்கமாக இருப்பதாலும் பைக்கை பேலன்ஸ் செய்ய சுலபமாக இருக்கிறது. பில்லியன் ரைடருக்கு ஃபுட்ரெஸ்ட் முன்னால் இருப்பதால், பின்னால் உட்காருபவர் காலை நீட்டி அமர்வதுபோல சொகுசாக இருக்கிறது. மைலேஜ், என் ஓட்டுதல் முறைக்கு லிட்டருக்கு 40 முதல் 42 கி.மீ வரை தருகிறது. முன்பு வைத்திருந்த எலெக்ட்ராவின் மைலேஜும் 40 கி.மீதான் என்பதால், எனக்கு இது ஒரு குறையாகத் தெரியவில்லை. பிரேக்கிங் சிஸ்டத்திலும் பக்காவாக இருக்கிறது அவென்ஜர்!

   “அலுப்பே தெரியவில்லை!”

ப்ளஸ்

பைக்கின் உயரம் சிறிதாக இருப்பினும், சஸ்பென்ஷன் பிரமாதம். க்ரூஸர் வகை பைக் என்பதால், இதன் டிஸைனும் பைக்கின் மேட் பிளாக் கலரும் கவர்ச்சியாக உள்ளது. ரியர் வீல்பேஸ் அகலமாக இருப்பதால், ஆன் ரோடு ரைடிங் க்ரிப்பாக உள்ளது. அகலமான ரைடர் சீட்டும், ஹேண்டில்பாரும் சொகுசான பயணத்துக்கு உத்தரவாதம். ஆயில் கூல்டு இன்ஜினும் அதன் ரேடியேட்டரும் கூடுதல் சிறப்பம்சம் என்பதால், நீண்ட தூரப் பயணங்களின்போது ஃபுட் ரெஸ்ட் அருகே அனலடிக்கவில்லை. இன்ஜின் பிக்-அப் சிறப்பாக உள்ளது.

மைனஸ்

முந்தைய அவென்ஜர் மாடல்களில் பில்லியன் ரைடர் சாய்ந்துகொள்ள ஏதுவாக இருந்த சாய்மானத்தை இதில் காணவில்லை. ஃப்ரன்ட் வீல் மிகவும் முன்னால் இருப்பதும்  பைக்கின் நீளமும் சிட்டி டிராஃபிக்கில் அதிக கவனத்துடன் ஓட்ட வேண்டியிருக்கிறது. மேட் ப்ளாக் என்று ஒரு கலர் மட்டுமே இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு கலர் சாய்ஸ் இல்லை. ஃபுட் ரெஸ்ட்டைவிட பிரேக் மற்றும் கியர் பெடல் உயரத்தில் இருப்பது சில நேரங்களில் அசௌகரியமாக இருக்கிறது. பின்பக்க வீலில் டிஸ்க் பிரேக் இல்லாதது குறைதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு