Published:Updated:

சிம்பு மாதிரி தொலைதூரப் பயணம் போகப்போறீங்களா? அப்ப இந்த பைக்குகள்தான் சரி!

சிம்பு மாதிரி தொலைதூரப் பயணம் போகப்போறீங்களா? அப்ப இந்த பைக்குகள்தான் சரி!
சிம்பு மாதிரி தொலைதூரப் பயணம் போகப்போறீங்களா? அப்ப இந்த பைக்குகள்தான் சரி!

சிம்பு மாதிரி தொலைதூரப் பயணம் போகப்போறீங்களா? அப்ப இந்த பைக்குகள்தான் சரி!

ஆதி மனிதனின் உன்னதமான படைப்பு சக்கரம். பயணம் என்று வரும்போது தூர நகரங்களை கால்களில் கடக்க முடியாமல் கடுப்பாகித்தான் சக்கரத்தைக் கண்டுபிடித்திருப்பான்போல. எந்த ஊராக இருந்தால் என்ன, உணவு இருக்கும், தண்ணீர் இருக்கும் என்றால் கிளம்பிப் போய் அந்த ஊரில் சில நாள்களோ சில மணி நேரமோ அனுபவித்துவிட்டு வருவதெல்லாம் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே ட்ரெண்டுதான். காரில் போகும்போது ஓர் அனுபவம் என்றால், பைக்கில் செல்பவர்களுக்கு அதைவிட வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். பயண அனுபவம் பரவசமாக இருக்க அதற்கேற்ற பைக்கைத் தேர்வுசெய்ய வேண்டும். விலை உயர்ந்த டூரர் பைக்தான் வாங்க வேண்டும் என்பது அல்ல. 200சிசி பைக் வாங்கினாலே போதுமானது. ஆனால், லாங் ரைட் போவதற்குத் தேவையான இன்ஜின் திறன், வடிவமைப்பு, ஓட்டுதல் தரம் உள்ளதா எனப் பார்க்கவேண்டும். 2.5 லட்சம் ரூபாய்க்குக் குறைவாகக் கிடைக்கும் பைக்கில், லாங் ரைடு போவதற்கு சிறந்த ஐந்து பைக்குகளைப் பார்ப்போம். 

பஜாஜ் டொமினார்:

பவர் க்ரூஸர், ஹைப்பர் ரைடிங் என்றெல்லாம் புது வார்த்தைகள் மூலம் இளைஞர்களை ஈர்த்தாலும், டொமினாருக்கு இதெல்லாம் தேவையில்லை. இளசுகளைக் குறிவைத்து உருவான ஸ்போர்ட்ஸ் டூரிங் பைக்தான் டாமினார். 35bhp பவர் தரும் இன்ஜின் ஹைவேவுக்காக உருவாக்கப்பட்டது என்றால், அதே இன்ஜின் 35Nm டார்க்கையும் கொடுத்து பொத்தல் ரோடுகளையும், மண் தரைகளையும் அசால்ட்டாகக் கடந்துபோகும் வல்லமைகொண்டது. 148 கி.மீ வரை டாப் ஸ்பீடு போகும் டாமினார், 182 கிலோ எடைகொண்ட பைக். ஆனால், பெட்ரோல் டேங்க் 13 லிட்டர்தான். மைலேஜ் எல்லாம் எதிர்பார்க்காதீர்கள். அவ்வப்போது பெட்ரோல் உள்ளதா எனப் பார்ப்பது நல்லது.

பைக்கில் ஸ்லிப்பர் க்ளெட்ச் உள்ளதால் வேகமாகப் போகும்போதுகூட கியரை சட்டெனக் குறைத்து பிரேக் அடிக்கலாம். இன்ஜினுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. MRF டயர்களின் கிரிப் சூப்பர். `எந்தவிதமான ரோடாக இருந்தாலும் பரவாயில்லை, மழையோ வெயிலோ நாங்க ரெடி!' என்கின்றன டயர்கள். பிரேக் செம ஷார்ப். ஹைவேவுக்கு இந்த பிரேக்குகள் போதுமானவை. அட்வெஞ்சர் என்று வந்தால், நிதானமாக இருப்பது சிறந்தது. டாமினாரின் FI இன்ஜின் டியூக் 390-ல் இருக்கும் அதே இன்ஜின்தான். ஆனால், சிலபல வசதிகளை அதில் சேர்த்துள்ளது பஜாஜ். இன்ஜின் ஸ்மூத்தாக இருப்பது மட்டுமல்ல, அதிக பவரும் தருகிறது. சஸ்பென்ஷன் கொஞ்சம் ஸ்டிஃப் சைடுதான் உள்ளது. ஆனாலும் வளைவுகளைக் கடப்பது சுலபமாகவே உள்ளது. முதுகை வளைத்து ஹேண்டில்பாரைப் பிடிக்கத் தேவையில்லை. சீட்டிங் பொசிஷன் லாங் ரைடுக்கு ஏற்றது. சீட்டும் நல்ல கிரிப்பாக உள்ளது. 6500 rpm-ல் மொத்த டார்க்கையும் தந்துவிடுவதால் லாங் கியர் ரேஷியோ சிட்டி மட்டுமல்ல; ஹைவேயிலும் அசத்துகிறது.

பைக்கில் ஒரு குறை இருக்கிறது என்றால், அது விண்டு பிளாஸ்ட். பைக்கில் வேகமாகச் செல்லும்போது காற்று உடலில் அறைவதால் சீக்கிரம் சோர்வடைந்துவிடுவோம். இந்த விண்டு பிளாஸ்ட்டைக் குறைக்க கஸ்டம்வைஸர் பயன்படுத்தலாம். பஜாஜ் டொமினாரின் விலை 300 சிசி பைக் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். இதன் ஏபிஎஸ் மாடலின் சென்னை ஆன்-ரோடு விலை 1,74,827 ரூபாய்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்:

அட்வெஞ்சர் விருப்பம் உள்ளவர்களுக்கு ஹிமாலயனைப் பிடித்துவிடும். அட்வெஞ்சர் பைக்குக்குத் தேவையான  அட்ஜெஸ்டபிள் வைஸர், RPM மீட்டர், ஃப்யூல் மீட்டர், திசைகாட்டி, ரைடர்களுக்குத் தேவையான குடிநீர், எரிபொருள் மற்ற சில பொருள்களை எடுத்துச் செல்ல டேங்க்குக்கு அருகில் தனி இடம், பின்பக்கம் பொருள்களைக் கட்டிக்கொண்டு போக வசதியான கிராப் ரெயில் என்று பல செட்டப்புடன் எப்போதுமே தொலைதூரப் பயணத்துக்கு ரெடியாக உள்ளது ஹிமாலயன். 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் போதுமானதாக இல்லை. ஆனால், தனியாக பெட்ரோல் எடுத்துக்கொண்டு போக அதற்கான மவுண்டுகள் உள்ளன. ராயல் என்ஃபீல்டுக்கே உரித்தான பொறுமையான பவர் டெலிவரி பைக்கை நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்கு கொஞ்சம் நெருடலை ஏற்படுத்துகிறது. 411 சிசி இன்ஜின் இருந்தாலும் 24.5bhp பவர் போதுமானதாக இல்லை. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் சிட்டிக்கு ஓகே. லாங் கியர் ரேஷியோ ஹைவேக்கு ஓகே. ஆஃப் ரோடுக்கு டபுள் ஓகே. டயர் ஆஃப் ரோடுக்கு செட் ஆகவில்லை, பிரேக் சாஃப்ட் ரோடுக்கு செட் ஆகவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஹிமாலயனை லாங் ரைடுக்கு தாராளமாகப் பயன்படுத்தலாம்.  ரோட்டில் போகும்போது ரோடு முடிந்துவிட்டால் கவலைப்படாமல் முன்னேறிப் போகலாம். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஹிமாலயன். ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனின் ஆன்-ரோடு விலை 1,84,654 ரூபாய்.

மஹிந்திரா மோஜோ

நேக்கட் டிசைனில் உள்ள டூரர் பைக் மோஜோ. ஹிமாலயன்போல வசதிகள் இல்லையென்றாலும், இதன் ரைடிங் பொசிஷன் டூரர் பைக்குளைப் போன்று இருக்கும். சாஃப்டான சீட் ரைடருக்கு ஓகே. ஆனால், பின் சீட்டில் ஏறுபவராக இருந்தால் இறங்கிவிடுங்கள் (ஃப்ரீ அட்வைஸ்).  மோஜோவில் 27bhp பவர் தரும் 295 சிசி இன்ஜின் உள்ளது. 30Nm டார்க் அட்டகாசம். மோஜோ, ஹைவேயில் ஓட்டுவதற்கு ஓகே. ஆனால், USD ஃபோர்க் ஆஃப் ரோடுக்கு செட்டாகவில்லை. FI பொருத்தப்பட்ட இன்ஜினும், 21 லிட்டர் பெட்ரோல் டேங்க்கும் லாங் ரைடுக்காகவே பொருத்தப்பட்டவை. 185 கிலோ எடைகொண்ட பைக். ஆனால், 155 கி.மீ வேகம் வரை போகும் வைப்ரேஷன் இல்லாத இன்ஜினும், அருமையான எக்ஸாஸ்ட் சத்தமும் `பைக்கை இன்னும் கொஞ்ச தூரம் ஓட்டலாம்!' எனப் புத்துணர்ச்சி தரும். லிக்விட் கூலிங் இருந்தாலும் இன்ஜின் சீக்கிரம் ஹீட் ஆகிவிடும். அவ்வப்போது பைக்கை நிறுத்தி இடத்தை ரசிக்கவோ அல்லது ஒரு போட்டோ ஷூட்டோ போட்டே ஆகவேண்டும். பைரலி டயர்கள் லாங் ரைடுக்கே உருவாக்கப்பட்டவைபோல வளைவுகளிலும், நேர் பாதைகளிலும் செம கிரிப். FI இன்ஜினின் பர்ஃபார்மென்ஸுக்கு உதவி செய்திருக்கிறது. மோஜோவின் விலை சென்னையில் 2,00,160 ரூபாய்.

கேடிஎம் டியூக் 390

நம் லிஸ்டிலேயே மிரட்டலான பைக். டிசைன், வசதிகள், டெக்னாலஜி, பவர் என்றும் எதிலுமே பஞ்சம் வைக்காமல் தாராளமாக வழங்கும் பைக் டியூக் 390. இந்த பைக்கின் சிறப்பம்சம் இதை ரேஸ் ட்ராக், சிட்டி, ஆஃப் ரோடு, ஹைவே, மோடா க்ராஸ், டர்ட் ட்ராக் என்று எல்லா இடங்களிலும் ஓட்டலாம். அதற்கு ஏற்ப பேலன்ஸான டயர், சஸ்பென்ஷன் மற்றும் இன்ஜின் உள்ளன. லாங் ரைடுக்கு ஒரு சிறந்த பைக் டியூக் 390. மோஜோவுக்குக் கொடுத்த ஃப்ரீ அட்வைஸ் இங்கேயும் பொருந்தும். டியூக்கில் இருக்கும் 373 சிசி இன்ஜின், 43.5bhp பவரையும் 37Nm டார்க்கையும் தருகிறது. `எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ' என்பதுபோல உள்ளது த்ராட்டில் ரெஸ்பான்ஸ். அவ்வளவு வேகமான பவர் மற்றும் டார்க் டெலிவரி.

ஹைவேயில் திடீர் பள்ளம் வந்தால் கவலைப்படாமல், கியரைக் குறைக்கலாம். கியர்பாக்ஸை ஸ்லிப்பர் க்ளட் பார்த்துக்கொள்ளும். இந்த பைக்கில் இருக்கும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் வரும் போன்கால்களைப் பார்க்க முடியும்; பாடல்களை மாற்ற முடியும். இந்த பைக்கில் இரண்டு ரைடு மோடுகளும் உள்ளன. இந்த ரைடு மோடுகள் இன்ஜின் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கை ரோடுகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கின்றன. பைக்கில் இருக்கும் ஒரே பிரச்னை, இன்ஜின் அதிகமாக ஹீட் ஆவது. நெடுந்தூரப் பயணத்தில் அவ்வப்போது ரெஸ்ட் எடுத்துதான் செல்ல முடியும். ஒரு சூப்பர் பைக்கில் இருக்கும் பல அம்சங்கள் கேடிஎம் டியூக்கில் இருந்தாலும், இதன் ஆன்-ரோடு விலை சென்னையில்  2,68,509 ரூபாய்.

யமஹா ஃபேஸர் 25

ஃபேஸர் 25 பைக்கில் இருப்பது 250சிசி இன்ஜின்தான். ஆனால், இதன் இன்ஜின் தரம் மற்றும் ஸ்மூத்னஸ் லாங் ரைடுக்கு ஏற்றது. 21bhp பவரும், 20 Nm டார்க்கும் தரும் இதன் இன்ஜின் செம ஸ்மூத். பைக்கின் மிட் ரேஞ்சு அருமையாக உள்ளது. 130 கி.மீ டாப்ஸ்பீடுகொண்ட இந்த பைக்கை ஹைவேயில் சிரமப்படாமல் ஓட்டிச்செல்லலாம். மேலும் இந்த பைக்கில் டூயல் ஹாரன், Anti-Slip சீட் கவர், டைமண்ட் டைப் ஃப்ரேம், LED ஹெட்லைட், LED DRL போன்றவை லாங் ரைடுக்கு ஏற்ற சில அம்சங்கள் இருக்கும். ஃபேஸர் 25 சஸ்பென்ஷனும் சாஃப்ட் என்பதால் ஹைவேயில் வரும் பள்ளம் மேடுகள் முதுகை பதம் பார்ப்பதில்லை. ஹைவேயில் போகும்போது அதிக பவர் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும், சாஃப்டான சீட் அதை சரிகட்டிவிடுகிறது. ஃபேஸரின் டிசைன் சிலருக்குப் பிடிக்கலாம்; சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஃபேஸரின் டிசைன் பிடிக்கவில்லை என்றால், FZ 25 பைக்கை வாங்குவது சிறப்பு. ஆனால், விண்டு பிளாஸ்ட் அதிகம் இருக்கும் என்பதால், சீக்கிரமே சோர்வடைந்துவிடுவீர்கள். அனைத்து பைக்களிலுமே ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளன. ஆனால், ஃபேஸர் 250-ல் ஐந்து ஸ்பீடுதான். யமஹா ஃபேஸர் 25-யின் சென்னை ஆன்ரோடு விலை 1,49,475 ரூபாய்.

இவர்களும் செட்டாவார்கள்

பல்ஸர் 200 NS, பல்ஸர் 220, அப்பாச்சி RTR 200, ரெனிகாடே, டியூக் 250 போன்ற பைக்களும் லாங் ரைடுக்கு ஓகேதான். அப்பாச்சி RR 310 லிஸ்ட்டில் இல்லாததுக்குக் காரணம், பைக் தற்போதுதான் வந்துள்ளது, இன்னும் டெஸ்ட் செய்யவில்லை என்பதுதான். ஒவ்வொரு பைக்கிலும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது.  சிறந்த பைக்குகள் என்பதால், இந்த பைக்குகளில் மட்டும்தான் லாங் ரைடு போக முடியும் என்றில்லை. டிவிஎஸ் ஜெஸ்ட், ஹோண்டா ஸ்டன்னர் என நினைத்துக்கூடப் பார்க்காத சில பைக்குகளில் இந்தியாவைச் சுற்றிய வரலாறுகளும் உள்ளன. லாங் ரைடு போவதற்கு உள்ள முக்கிய விதி பைக் வேகமாகப் போகிறது என்று பைக்கை ரெட் லைனில் ஓட்டக் கூடாது. முழு பவரை 8000 rpm-ல் அடைந்துவிடும் என்றால், அந்த இன்ஜின் வேகத்திலோ அல்லது அதற்குக் குறைவாகவோ ஓட்டினால் பைக்கை அதிக தூரம் ஓட்டலாம். லாங் ரைடு செல்லும்போது இன்ஜின் ஹீட் ஒரு பெரிய சவால். பைக்கை அவ்வப்போது பார்க் செய்துவிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவோ, சில இடங்களைப் பார்த்து ரசிக்கவோ செய்யலாம் அல்லது போட்டோ ஷூட் எடுத்து ஆன்லைனை அதகளப்படுத்தலாம். 

அடுத்த கட்டுரைக்கு