Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

நான் இரண்டு ஆண்டுகளாக பைக் ஓட்டி வந்தேன். நாள்தோறும் 100 கி.மீ-க்கு மேல் பயணிக்க வேண்டிய வேலையில் இருந்ததால், முதுகுவலி வந்தது. ‘பைக் ஓட்டக் கூடாது’ என்று டாக்டர் சொல்லிவிட்டார். அதனால் என் பெற்றோர், என்னை கார் வாங்க வலியுறுத்துகின்றனர். அதிகபட்சம் 1.5 லட்ச ரூபாயில் எனக்கு ஏற்ற கார் எது?

பாலசுப்ரமணியம், கோவை.

உங்கள் பட்ஜெட்டை நீங்கள் சற்று அதிகப்படுத்தினால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் மாருதி சுஸூகி வேகன்-ஆர் வாங்க முடியும். ஏனெனில், முதல் கார் ஓட்டுநர்களுக்கான முக்கியத் தேவையான, வளைத்துத் திருப்பி ஓட்ட ஈஸியான ஸ்டீயரிங் கன்ட்ரோல், உயரமான இருக்கைகள், காம்பேக்ட்டான வடிவம் என சிட்டிக்குள் சுற்றிவர சரியான கார் இது. எனினும் 2010-க்குப் பிறகு விற்பனைக்கு வந்த மாடல்களை வாங்குவது நல்லது. இதில் உள்ள 3 சிலிண்டர் 1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், லிட்டருக்கு 15 கி.மீ வரை மைலேஜ் தரும். வேகன்-ஆர் பராமரிப்பு, சர்வீஸ் செலவுகளும் குறைவாகவே இருக்கும்.

8 - 9 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், புதிய டீசல் கார் வாங்கும் முடிவில் இருக்கிறேன். எனது நண்பர்கள் ஹோண்டா அமேஸ் தான் சிறந்த கார் என்கிறார்கள். அதன் ப்ளஸ் - மைனஸ், போட்டியாளர்கள் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

சிவக்குமார், ஈரோடு.

ஹேண்டா அமேஸ் தற்போது புத்துணர்ச்சி பெற்று புதிய வடிவத்தில் களம் இறங்கியிருக்கிறது. இந்த காரின் போட்டியாளர்கள் மாருதி சுஸூகி டிஸையர், ஹுண்டாய் எக்ஸென்ட், டாடா ஜெஸ்ட், ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர். சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் பராமரிப்புச் செலவில் சிறந்து விளங்கும் டிஸையர், இடவசதியில் பின்தங்கிவிடுகிறது. பவர் மற்றும் பாதுகாப்பில் ஜொலிக்கும் ஃபிகோ ஆஸ்பயரின் கேபின் தரம் மிகப் பெரிய மைனஸ். சிறப்பம்சங்கள் மற்றும் தரத்தில் ஈர்க்கும் எக்ஸென்ட்டின் ஓட்டுதல் தரம் - கையாளுமை சுமார் ரகம். இடவசதி மற்றும் ஓட்டுதல் தரம் - கையாளுமையில் அசத்தும் ஜெஸ்ட்டின் கேபினில் ஸ்டோரெஜ் ஸ்பேஸ் குறைவு. ஆனால் டிஸைன், இடவசதி, ஓட்டுதல் தரம், கையாளுமை, பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என ஆல்ரவுண்டராக அசத்தும் அமேஸ், கச்சிதமான ஃபேமிலி காராகத் திகழ்கிறது.

எனது பட்ஜெட் 4.5 லட்சம். நான் ஒரு சின்ன ஹேட்ச்பேக் வாங்கத் தீர்மானித்துள்ளேன். ஆல்ட்டோ 800, க்விட், இயான் ஆகியவற்றில் சிறந்த கார் எது?

சண்முகசுந்தரம், இமெயில்

ஸ்டைலான, பிரீமியம் குட்டி காராக இருக்கிறது இயான். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற கார்களைவிட விலை அதிகமான காராக இருந்தாலும், கொடுக்கும் விலைக்கு ஏற்ற தரமும், வசதிகளும் இருக்கின்றன. ஆனால், பெர்பாமென்ஸும் ஓட்டுதல் தரமும் இந்த காரின் மிகப் பெரிய குறை.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

இடவசதி, சொகுசு, சிறப்பம்சங்கள், ஸ்டைல் என ஒரு காரை வாங்கத் தூண்டும் விஷயங்களில் பின்தங்கியிருந்தாலும், சூப்பரான மெக்கானிக்கல் பேக்கேஜையும், (இன்ஜின், சஸ்பென்ஷன், ஸ்டீயரிங்) குறைவான பராமரிப்புச் செலவுகளையும்  கொண்டிருக்கிறது ஆல்ட்டோ 800. இந்த காருக்குக் கடுமையான போட்டியைத் தரும் க்விட்டின் ஸ்டைல், இடவசதி, மைலேஜ், ஓட்டுதல் தரம் ஆகியவை சிறப்பாக இருக்கிறது. கச்சிதமான விலை என்பது க்விட்டின் மிகப் பெரிய பலம். ஆனால், இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் கையாளுமை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.  ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது க்விட் பெஸ்ட் என்றாலும், அந்த காரின் வெயிட்டிங் பீரியடை நினைவில் கொள்ள வேண்டும்.

முதுகுவலியால் அவதிப்படும் எனது அம்மாவை, வாரம் ஒருமுறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், எனது சொந்தப் பயன்பாட்டுக்காகவும் ஒரு புதிய கார் தேவைப்படுகிறது. மாதம் 2,000 கி.மீ-க்கும் குறைவாகவே உபயோகப்படுத்துவேன். மாருதி சுஸுகி எர்டிகா, டாடா சஃபாரி ஸ்டார்ம், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, டொயோட்டா இனோவா, மஹிந்திரா XUV 5OO ஆகியவற்றில் எது சிறந்த கார்? எனது பட்ஜெட் அதிகபட்சம் 18 லட்சம்.

பழனி பாரதி, இமெயில்

நீங்கள் கூறியதிலே விலை குறைவான மற்றும் அளவிலே சின்ன கார் எர்டிகா. எனவே, இடவசதி மேற்கூறிய கார்களைவிடக் குறைவாகவே இருக்கும். மேலும், இதில் இருக்கும் ஃபியட்டின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின், டர்போ லேக்குக்குப் பெயர்பெற்றது. இது நல்ல மைலேஜைக் கொடுத்தாலும், மூன்று வரிசையிலும் ஆட்கள் உட்கார்ந்துவிட்டால், நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்வதற்கான பவர் இல்லை. காரைக் கையாள்வது சுலபமாக இருந்தாலும், ஓட்டுதல் தரம் சிறப்பாக இல்லை.

XL சைஸ், இடவசதி, சொகுசு, ஓட்டுதல் தரம் ஆகியவற்றில் அசத்தும் சஃபாரியின் பெர்ஃபாமென்ஸ் நன்றாகவே இருக்கிறது. ஆனால், காரின் அதிக விலை, நீண்ட காலமாக மாற்றங்கள் இல்லாத தோற்றம், குறைவான சிறப்பம்சங்கள் ஆகியவை இதன் மிகப் பெரிய மைனஸ்.

பொலெரோவுக்கு அடுத்தபடியாக, மஹிந்திராவின் பெயர் சொல்லும் பிள்ளையான ஸ்கார்ப்பியோ, கொடுக்கும் காசுக்கு மதிப்பான காராகத் திகழ்கிறது. சிறப்பம்சங்கள், டிஸைன், பெர்ஃபாமென்ஸ் ஆகியவற்றில் நிறைவாக இருக்கும் ஸ்கார்ப்பியோ இடவசதி, ஓட்டுதல் தரம், கையாளுமையில் சுமார்தான்.

மஹிந்திராவின் மாடர்ன் எஸ்யுவியான XUV 5OO காரின் விலை அதிகம் போலத் தோன்றினாலும் சிறப்பம்சங்கள், பெர்ஃபாமென்ஸ், டிஸைன், இடவசதி ஆகியவற்றில் வேறு லெவலில் இருக்கும் ஆனால், XUV 5OO - டிரைவிங் அனுபவத்தில் தவறிவிடுகிறது.

நம்பகத்தன்மை மற்றும் ரீசேல் வேல்யூவுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் இனோவாவின் விலை போட்டியாளர்களைவிட அதிகமாக இருந்தாலும், அதன் விற்பனையை விலை துளிகூட பாதிக்கவில்லை. ஆனால், முற்றிலும் புதிய இனோவா க்ரிஸ்டா விரைவில் வரவிருப்பதால், பழைய மாடலை வாங்குவதில் பிரச்னை ஏதும் இல்லையென்றால், நீங்கள் இனோவாவையே வாங்கலாம்.

நான் 10 ஆண்டுகளாக ஹோண்டா யூனிகார்ன் பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது புதிய பைக் வாங்க உத்தேசிக்கிறேன். எனக்கு சுஸூகி ஜிக்ஸர், யமஹா FZ போன்றவற்றில் விருப்பம் இல்லை. இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யூனிகார்ன் 150 பைக்கை வாங்கலாமா? 

எஸ். சிவக்குமார், கொச்சி.

பொதுவாகவே ஹோண்டாவின் தயாரிப்புகளுடன் நன்கு பழகிவிட்டவர்கள், மீண்டும் அந்த நிறுவனத்தின் பைக்கையே வாங்குவார்கள். ஸ்மூத் இன்ஜின், போதுமான பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், நிறைவான ஓட்டுதல் தரம், கையாளுமை என பிராக்டிக்கலான கம்யூட்டர் பைக் யூனிகார்ன். இதன் டல்லான டிஸைன் உங்களுக்குப் பிரச்னை இல்லை என்றால், நீங்கள் இதையே மீண்டும் வாங்கலாம். இது தவிர, சுஸூகி GS150R அல்லது பஜாஜ் பல்ஸர் 150 ஆகியவை உங்களுக்கான மற்ற ஆப்ஷன்கள்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-2.
மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு