Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

நான் மாதம் சராசரியாக 2,100 கி.மீ தூரம் காரில் பயணிப்பேன். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார் வாங்கும் ஐடியா இருக்கிறது. ஹோண்டா சிட்டி AT அல்லது ஹூண்டாய் வெர்னா AT - எது பெஸ்ட்?

- பாலசுப்ரமணியம், கோயம்புத்தூர்.


வெர்னா - சிட்டி ஆகிய இரண்டு கார்களும் ஒரே செக்மென்ட் என்பதால்... தோற்றம், சிறப்பம்சங்கள், கேபின் இடவசதி, பெர்ஃபாமென்ஸ் ஆகியவற்றில் இரண்டும் கடுமையாகப் போட்டி போடுகின்றன. ஆட்டோமேட்டிக் கார்களான இந்த இரண்டுமே நெரிசல் மிக்க நகரச் சாலைகளில் ஓட்டுவது சுலபம். ஆனால், இன்ஜின் - கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்தில் வேறுபாடுகள் இருப்பதால், ஓட்டுதல் அனுபவத்தில் மட்டுமே வித்தியாசத்தை உணர முடியும். சிட்டியில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், CVT கியர்பாக்ஸ் கொண்டது. ஸ்டீயரிங்கிலேயே பேடில் ஷிஃப்ட்டர் இருப்பதால், ஸ்போர்ட்ஸ் கார் போல கியர்களை மாற்ற முடிகிறது. ஹூண்டாய் வெர்னாவில் இருக்கும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் பவர்ஃபுல்லாக இருந்தாலும், 4 கியர் ரேஷியோக்கள் மட்டுமே இருப்பதால், பெர்ஃபாமென்ஸ் அதிரடியாக இல்லை. இரண்டு கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்து, உங்களுக்கு வசதியாக இருப்பதைத் தேர்ந்தெடுங்கள்.

என் பட்ஜெட் 11 லட்சம். பெட்ரோல்தான் வேண்டும். வெர்னாவின் டிஸைன் மற்றும் பெர்ஃபாமென்ஸ் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், அதில் சஸ்பென்ஷன் பிரச்னை இருப்பதாகக் கேள்விப்பட்டேன். 4 மீட்டர் நீளத்துக்குள் காம்பேக்ட்டாக இருக்கும் பெலினோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகியவை ஈர்த்தாலும், இவற்றின் வெயிட்டிங் பிரீயட் பயமுறுத்துகிறது. மேலும், விட்டாராவில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை என்பதால், எதை வாங்கலாம் என்பதில் குழப்பம்.

- இம்ரான், சென்னை

ஹூண்டாய் வெர்னாவின் சஸ்பென்ஷன், கரடுமுரடான நம் ஊர்ச் சாலைகளைச் சமாளிக்கும் விதத்தில் மென்மையாக செட் செய்யப்பட்டுள்ளது. எனவே, நகரத்தில் பயணிக்கும்போது இவை நன்றாகச் செயல்பட்டாலும், நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும்போது, சஸ்பென்ஷன் செட்-அப் காரணமாக கார் ஆட்டம் போடுகிறது. மற்றபடி டிஸைன், கேபின் தரம், சிறப்பம்சங்கள், இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் ஆகியவற்றில் மனநிறைவைத் தரும் கார், வெர்னா. ஆப்ஷனலாக, ஹோண்டா சிட்டியைப் பரிசீலிக்கலாம். விட்டாரா பிரெஸ்ஸாவில் பெட்ரோல் இன்ஜின் (Booster Jet) எப்போது வரும் என்பது தெரியவில்லை. எனவே, மற்றொரு காம்பேக்ட் எஸ்யுவியான ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டை நீங்கள் பார்க்கலாம். இதில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் மற்றும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் (EcoBoost) என இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதில், 3 சிலிண்டர் இன்ஜின் சிறிதாகத் தெரிந்தாலும், டர்போ சார்ஜர் மற்றும் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பங்களைக் கொண்டிருப்பதால், ஆச்சரியப்படும் வகையில் 4 சிலிண்டர் இன்ஜினைவிட பவர்ஃபுல்லாக இருக்கிறது.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

நான் ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கும் முடிவில் இருக்கிறேன். புல்லட் 350 ஸ்டாண்டர்டு, எலெக்ட்ரா 350, கிளாஸிக் 350 ஆகிய மூன்றில் எதை வாங்கலாம்? ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் ப்ளஸ், மைனஸ் என்ன?

- குருபிரசாத், இமெயில்

புல்லட் 350 ஸ்டாண்டர்டு பைக்கின் டிஸைன், பழைய புல்லட்டை நினைவுபடுத்துகிறது. ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலைகொண்ட இந்த பைக்கில், அத்தியாவசிய அம்சங்களான எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் முன்பக்க டிஸ்க் பிரேக் இல்லை. இது மிகப் பெரிய மைனஸ். மேலே சொன்ன வசதிகளுடன், பல்வேறு கலர் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் எலெக்ட்ரா 350, பைக்கின் விலையை நியாயப்படுத்தும் விதத்தில் ஸ்பெஷலாக இல்லை. கிளாஸிக் அதிகளவில் விற்பனையாவதற்குக் காரணம், அதன் ரெட்ரோ டிஸைன்தான். புல்லட் 350 மற்றும் எலெக்ட்ரா 350 பைக்குடன் ஒப்பிடும்போது, கிளாஸிக் 350 பைக்கின் கலர் காம்பினேஷன் மற்றும் ஸ்பிளிட் சீட் மிகப் பெரிய ப்ளஸ். இங்கு குறிப்பிட்டிருக்கும் பைக்குகளில் விலை அதிகம் என்றாலும், கிளாஸிக் 350 பைக்தான் சரியான சாய்ஸ். ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் பலம் என சொகுசு, வின்டேஜ் டிஸைன், டார்க் ஆகியவற்றைச் சொல்லலாம். அதிர்வுகள், வெயிட்டிங் பீரியட், பராமரிப்புச் செலவுகள்  - பலவீனம்!

நான்கு பேர் வசதியாகப் பயணிக்கும் வகையில், புதிய கார் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். நெடுஞ்சாலைப் பயணங்கள் அடக்கம் என்பதால், பாதுகாப்புச் சாதனங்களான ஏபிஎஸ் மற்றும் காற்றுப் பைகள் அவசியம். 5 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் எந்த காரை வாங்கலாம்? முதன்முறையாக கார் வாங்கப் போகிறேன்.

- பாரதி நந்தா, இமெயில்.

உங்கள் பட்ஜெட்டில் அடங்கும் இயான், ஆல்ட்டோ 800, க்விட், ரெடி-கோ ஆகியவை முதன்முறையாக கார் வாங்குபவர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டவை. அதனால், நகரப் பயன்பாட்டுக்கு ஏற்ப சின்ன பெட்ரோல் இன்ஜினைக்கொண்டிருக்கின்றன. எனவே, நல்ல மைலேஜ் கிடைத்தாலும், நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்வதற்கான பவர் இவற்றில் இல்லை. தவிர, ஓட்டுநர் காற்றுப்பை தாண்டி, வேறு பாதுகாப்புச் சாதனங்கள் எதுவும் இந்த கார்களில் இல்லை, எனவே, உங்கள் பட்ஜெட்டை சற்று அதிகரித்தால், மாருதி சுஸூகி செலெரியோ, டாடா டியாகோ ஆகியவற்றில் ஒன்றை வாங்கலாம். மாருதி கார்களுக்கே உரித்தான பலங்களுடன், குறை சொல்ல முடியாத டிஸைன், தேவையான சிறப்பம்சங்கள், போதுமான இடவசதி, நிறைவான பெர்ஃபாமென்ஸ் என செலெரியோ ஈர்க்கிறது. டியாகோவின் டிஸைன் ஃப்ரெஷ்ஷாக இருப்பதுடன், டிரைவிங் மோடுகள் கொண்ட இந்த காரின் பெர்ஃபாமென்ஸ் மன நிறைவைத் தருகிறது. இதன் கேபின் வடிவமைப்பு, இடவசதி, சிறப்பம்சங்கள், ஓட்டுதல் அனுபவம் ஆகியவை, விலை அதிகம் கொண்ட கார்களுடன் போட்டியிடும் வகையில் இருக்கின்றன.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன். ஆண்டுக்கு இருமுறை ஊருக்கு வந்து செல்வேன். அந்தச் சமயத்தில் பயன்படுத்த புதிய பைக் வாங்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். பஜாஜ் டிஸ்கவர் 125 வாங்கலாம் என முடிவெடுத்திருந்த நிலையில், என் நண்பர்கள் ஹோண்டா பைக்கை சிபாரிசு செய்கிறார்கள். ஹார்னெட் 160R எனக்குப் பிடித்திருக்கிறது. நல்ல பிக்-அப் மற்றும் பிரேக்ஸ் எனது சாய்ஸ். ஹார்னெட், சரியான தேர்வா?

 - முஹமது, இமெயில்.

110சிசி பைக்குகளின் விலையில் சற்று பவர்ஃபுல்லான பைக் வேண்டும் என்றால், டிஸ்கவர் 125 பைக்கைத் தாராளமாக வாங்கலாம். ஆனால், இதன் பழைய தோற்றம் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஹோண்டா ஹார்னெட் 160R பைக்கைப் பொறுத்தவரை, ஷார்ப்பான டிஸைன், போட்டியாளர்களைவிடப் பெரிய இன்ஜின், நிறைவான ஓட்டுதல் தரம், கையாளுமை, CBS பிரேக்ஸ், அகலமான பின்பக்க டயர் எனக் கவர்கிறது. ஆனால், ஆரம்ப கட்ட வேகம், சுமாரான ஸ்விட்ச்கள், டயர் கிரிப், சற்று அதிக விலை என இதில் குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு