Published:Updated:

பிஎம்டபிள்யூ, கேடிஎம்-க்கு போட்டியாகக் களமிறங்கும் FB Mondial HPS 300 பைக்!

பிஎம்டபிள்யூ, கேடிஎம்-க்கு போட்டியாகக் களமிறங்கும் FB Mondial HPS 300 பைக்!

கஃபே ரேஸர் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் டிசைனைச் சேர்த்துப் பிசைந்ததுபோல இருக்கும் இது, பார்ப்பதற்கு ஸ்டைலாகவே உள்ளது.

பிஎம்டபிள்யூ, கேடிஎம்-க்கு போட்டியாகக் களமிறங்கும் FB Mondial HPS 300 பைக்!

கஃபே ரேஸர் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் டிசைனைச் சேர்த்துப் பிசைந்ததுபோல இருக்கும் இது, பார்ப்பதற்கு ஸ்டைலாகவே உள்ளது.

Published:Updated:
பிஎம்டபிள்யூ, கேடிஎம்-க்கு போட்டியாகக் களமிறங்கும் FB Mondial HPS 300 பைக்!

ந்தியாவில் இது இத்தாலிய பைக் நிறுவனங்கள் டயர் பதிக்கும் காலம்போல! ஆம், ஏப்ரிலியா, பெனெல்லி, டுகாட்டி, லாம்ப்ரெட்டா, MV அகுஸ்டா, Moto Guzzi, பியாஜியோ, SWM என, இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தற்போது இதில் புதிதாக இணைந்திருப்பது FB Mondial. இந்த நிறுவனமும் வழக்கம்போல பல ஏற்ற-இறக்கங்களைச் சந்தித்து, தற்போது ஃப்னீக்ஸ் பறவையைப்போல உலகளவில் மீண்டு வந்திருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த கைனடிக் குழுமம் (கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டர் ஞாபகம் இருக்கிறதா?), இங்கே இந்த இத்தாலிய நிறுவனத்தின் பைக்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக, தனது MotoRoyale-க்குச் சொந்தமாக அஹமத் நகரில் இருக்கும் பைக் தொழிற்சாலையில் FB Mondial HPS 300 பைக்கை அசெம்பிள் செய்ய முடிவெடுத்திருக்கிறது கைனடிக் குழுமம்.

FB Mondial பின்னணி என்ன?

முன்னே சொன்ன இத்தாலிய பைக் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இது அவ்வளவாகப் பரிச்சயமில்லாத நிறுவனம்தான். பெனெல்லி போலவே FB Mondial மிகவும் பழைமையான ஒரு பைக் நிறுவனம். 1929-ம் ஆண்டில் `Boselli பிரதர்ஸ்' என அழைக்கப்பட்ட Luigi, Carlo, Ettore, Ada ஆகியோர் சேர்ந்து தொடங்கியதுதான் இந்த நிறுவனம். பெயரில் இருக்கும் FB-க்கு `Fratelli Boselli' என்பதே விரிவாக்கம். இத்தாலிய மொழியில் `Fratelli பிரதர்ஸ்' என அர்த்தம்.

அந்தக் காலத்தில் MV அகுஸ்டா மற்றும் டுகாட்டி ஆகிய போட்டி நிறுவனங்கள், அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில் பைக்குகளைத் தயாரித்து விற்பனை செய்துகொண்டிருந்த நேரத்தில், வருடத்துக்கு வெறும் 1,000 முதல் 2,000 பைக்குகளை மட்டுமே உற்பத்தி செய்தது FB Mondial. 1949 முதல் 1957 வரையிலான காலகட்டத்தில், தலா 5 ரைடர் மற்றும் 5 Manufacturer சாம்பியன்ஷிப்பை, இந்த நிறுவனம் பைக் ரேஸில் வென்றது. இதில் சவாலான Isle of Man TT போட்டியில் பெற்ற மூன்று கோப்பைகளும் அடக்கம்! இவர்களின் திறமையை அறிந்த ஹோண்டாவின் நிறுவனரான Soichiro Honda, 1957-ம் ஆண்டில் சில FB Mondial பைக்குகளை வாங்கிக்கொண்டு, தனது நிறுவன ரேஸ் பைக்குகளை அதைப் பின்பற்றித்தான் வடிவமைத்தார்.

ஒருகட்டத்தில் பைக் ரேஸ்களில் பங்குபெறுவதற்கான செலவு அதிகரித்துக்கொண்டே வந்ததால், Moto Guzzi, Gilera ஆகிய பெரும் நிறுவனங்களுடன் FB Mondial-ம் ரேஸிங்கிலிருந்து வெளியேறியது. இந்த நிறுவனத்தின் அடையாளத்தையே அது இழந்ததால், நாளடைவில் பைக் விற்பனை சரிவடையத் தொடங்கியது. பிறகு, பொருளாதார நெருக்கடி முற்றிய நிலையில் 1979-ம் ஆண்டில் மூடுவிழா கண்டது FB Mondial. 20 ஆண்டுக்கால மெளனத்துக்குப் பிறகு, 1999-ம் ஆண்டில் இந்த நிறுவனம் மீண்டு வந்தது. இத்தாலியைச் சேர்ந்த தொழிலதிபரான Roberto Ziletti, FB Mondial நிறுவனத்துக்கான உரிமைகளைத் தன்வசப்படுத்தினார்.

இதன் வெளிப்பாடாக வந்த Mondial Piega 1000 சூப்பர் பைக்குக்கும் ஹோண்டாவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இவர்களின் VTR-1000 SP-1 பைக்கில் இருந்த 4 சிலிண்டர், 999சிசி இன்ஜின் (140bhp & 11kgm) - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்பட்டிருந்தது. குறைவான எண்ணிக்கையில் ஸ்டைலாகத் தயாரிக்கப்பட்டதால், Marchesini வீல்கள் - Ohlins சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங் Damper - Brembo டிஸ்க் பிரேக்ஸ் - ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் கார்பன் ஃபைபர் ஸ்விங் ஆர்ம் - 17 இன்ச் Pirelli டயர்கள் என மெக்கானிக்கலாக அசத்தியது, 178 கிலோ எடையுள்ள Mondial Piega 1000. பைக்கில் 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருந்ததால், கொஞ்சம் டூரிங் திறனும் இதற்கு உண்டு.

பிறகு 2004-ம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக, மீண்டும் FB Mondial நிறுவனம் மூடுவிழா கண்டது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர், Pier Luigi Boselli மற்றும் Cesare Galli ஆகியோர் சேர்ந்து இந்த நிறுவனத்தை மீட்டனர். ஆனால், முன்பு சூப்பர் பைக்குகளைத் தயாரித்த நிலையில், தற்போது 125சிசி மற்றும் 250சிசி பைக்குகளைத் தயாரிக்க இவர்கள் முன்வந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, HPS 125 - HPS 300 மற்றும் ஸ்போர்ட் க்ளாசிக் 125 பைக்குகளைக் கடந்த ஆண்டில் FB Mondial நிறுவனம் காட்சிப்படுத்தியது. பிறகு, பல்வேறு இன்ஜின் திறன்களில் ஸ்ட்ரீட் ஃபைட்டர், கஃபே ரேஸர், சூப்பர் ஸ்போர்ட் மாடல்களை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.  

HPS 300 பைக்கில் என்ன ஸ்பெஷல்?

Hipster 300... பைக்கின் பெயர் கேட்க ஒருமாதிரி இருந்தாலும்,  2017 EICMA - மிலன் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த பைக், HPS 125 பைக்கை அடிப்படையாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டது. கஃபே ரேஸர் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் டிசைனைச் சேர்த்துப் பிசைந்ததுபோல இருக்கும் இது, பார்ப்பதற்கு ஸ்டைலாகவே உள்ளது. கடந்த ஆண்டு புனே சாலைகளில் HPS 125 பைக் டெஸ்ட் செய்யப்பட்டது என்றாலும், இந்தியாவுக்கு வரப்போவது என்னவோ கூடுதல் திறன்மிக்க HPS 300 பைக்தான்! பெயரில் 300 இருந்தாலும், பைக்கில் இருப்பது 249சிசி - சிங்கிள் சிலிண்டர் - லிக்விட் கூல்டு - ஃப்யூல் இன்ஜெக்‌டட் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி. இது 25bhp பவர் மற்றும் 2.2 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

முன்பக்கத்தில் 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - 280மிமீ ஏபிஎஸ் டிஸ்க் பிரேக் - 110/90 18'' டயர் மற்றும் பின்பக்கத்தில் ட்வின் ஷார் அப்சார்பர் - 220மிமீ ஏபிஎஸ் டிஸ்க் பிரேக் - 130/70 17'' டயர் எனும் சஸ்பென்ஷன் - ஏபிஎஸ் பிரேக் - டயர் அமைப்பைக்கொண்டுள்ளது HPS 300. குறைவான 785மிமீ சீட் உயரம் மற்றும் 135 கிலோதான் எடை என்பதால், உயரம் குறைவானவர்களுக்கும் இந்தப் பைக்கைக் கையாள்வது சுலபமாகவே இருக்கும். CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் HPS 300 பைக் அசெம்பிள் செய்யப்படும் என்பதால், தோராயமாக 3 லட்சம் ரூபாயில் இந்த பைக் வெளிவருவதற்கான சாத்தியங்கள் அதிகம்!

எனவே, பஜாஜ் டொமினார், கேடிஎம் 390 பைக்ஸ், பிஎம்டபிள்யூ 310சிசி பைக்ஸ், டிவிஎஸ் அப்பாச்சி RR 310, பெனெல்லி TNT 302S, யமஹா YZF-R3, கவாஸாகி நின்ஜா 300, மஹிந்திரா மோஜோ ஆகியவற்றுடன் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி & 500சிசி பைக்குகளுக்கும் HPS 300 போட்டியாகக் களமிறங்கும். 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட க்ளீவ்லேண்டு நிறுவனத் தயாரிப்புகள் இதற்கு கடும் சவால் அளிக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தனித்தன்மையாகக் காட்சியளிக்கும் இந்தப் பைக்குக்கு, மக்கள் அளிக்கப்போகும் ஆதரவு எப்படி இருக்கும் என்பது, போகப்போகத்தான் தெரியும்!