கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

எப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ!

எப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ!
பிரீமியம் ஸ்டோரி
News
எப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ!

ஃபர்ஸ்ட் ரைடு - மஹிந்திரா மோஜோ UT300தொகுப்பு: ராகுல் சிவகுரு

‘மோஜோ UT300’ - மோஜோ யுனிவர்சல்  டூரர் 300. மஹிந்திரா விற்பனை செய்யும் மோஜோவின் பட்ஜெட் மாடலாக அறிமுகமாகி இருக்கிறது. இதனால், ஏற்கெனவே விற்பனையில் இருந்த மோஜோவை, XT 300 (எக்ஸ்ட்ரீம் டூரர்) எனப் பெயர் மாற்றம் செய்திருக்கிறது மஹிந்திரா. ஆக, எக்ஸ்ட்ரீம் மாடலில் இருந்து யுனிவர்சல் மாடல் எவ்வளவு வேறுபடுகிறது? பட்ஜெட் மாடலின் ஓட்டுதல் அனுபவம் எப்படி?

எப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ!
எப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ!

டிசைன்

மோஜோ UT300 பைக்கை முதன்முறையாகப் புகைப்படமாகப் பார்த்தபோது, அவ்வளவாக மாற்றங்கள் தெரியவில்லை. ஆனால், பைக்கை நேரில் பார்க்கும்போது, வித்தியாசங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஆம், மோஜோ XT300 பைக்குடன் ஒப்பிடும்போது,  சிங்கிள் டோன் கலர் -  காணாமல் போயிருக்கும் புருவம் போன்ற LED DRL - தங்க நிற USD ஃபோர்க்குக்குப் பதிலாகக் கறுப்பு நிற டெலிஸ்கோபிக் ஃபோர்க் - ஒற்றை அலுமினியம் எக்ஸாஸ்ட் ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். மற்றபடி பைக்கின் டிசைன் அப்படியே இருக்கிறது.

ஆனால், முன்னே சொன்ன விஷயங்களால், மோஜோ UT300 பைக்கின் எடை 4.5 கிலோ குறைந்திருப்பதுடன், அளவுகளிலும் வேறுபாடு இருக்கிறது. அதாவது முன்பக்க சஸ்பென்ஷன் மாறியிருப்பதால், 5 மிமீ வீல்பேஸ் குறைந்திருக்கிறது; கிரவுண்ட் கிளியரன்ஸும் 8.5 மிமீ குறைந்திருக்கிறது; அதேபோல, நீளமான பின்பக்க இருக்கை மற்றும் ஃபெண்டர் காரணமாக, பைக்கின் நீளம் 15 மிமீ அதிகரித்திருக்கிறது.

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

 மோஜோ UT300 பைக்கில் இருப்பது, அதே 4 வால்வ் - 294.7சிசி - லிக்விட் கூல்டு - சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான். ஆனால், ஃப்யூல் இன்ஜெக்‌ஷனுக்குப் பதிலாகக் கார்புரேட்டர் இடம்பெற்றிருப்பதால், பவர் மற்றும் டார்க்கில் பைக் சரிவைச் சந்திருக்கிறது. ஆம், மோஜோ XT300 பைக் 27bhp பவர் மற்றும் 3kgm டார்க்கை வெளிப்படுத்தியது என்றால், மோஜோ UT300 பைக் வெளியிடுவதோ 23.1bhp பவர் மற்றும் 2.52kgm டார்க்தான்!

எப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ!

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இன்ஜின் - கியர்பாக்ஸ் ஸ்மூத்தாகவே இயங்கினாலும், அதிக ஆர்பிஎம்களில் பெட்ரோல் டேங்க் மற்றும் ஃபுட் பெக்ஸில் அதிர்வுகள் எட்டிப்பார்க்கின்றன. மேலும், முன்பைப் போல பர்ஃபாமென்ஸில் அசத்தவில்லை மோஜோ UT300. இது, 0 - 100 கி.மீ வேகத்தை 10.79 விநாடிகளில்தான் எட்டிப்பிடிக்கிறது. மோஜோ XT300 பைக்குடன் ஒப்பிடும்போது இது 1.24 விநாடிகள் குறைவு. தவிர, பவர் குறைபாட்டை, நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது உணர முடிகிறது. ஆனால், மைலேஜில் முன்னேற்றம் கண்டிருக்கிறது மோஜோ UT300. ஆம், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நகரத்தில் 29.1 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 38.7 கி.மீ-யும் மைலேஜ் அளிக்கிறது. இது மோஜோ XT300 பைக்கைவிட முறையே 1.1 கி.மீ மற்றும் 4.3 கி.மீ அதிகம்! ஒற்றை எக்ஸாஸ்ட் வெளியிடும் சத்தம், ரசிக்கும்படி இருக்கிறது.

ஓட்டுதல் அனுபவம்

ஒரு டூரர் பைக்குக்கு ஏற்ற ரிலாக்ஸ்டான சீட்டிங் பொசிஷனைக் கொண்டிருக்கிறது மோஜோ UT300. அதேபோல, நீண்ட நேரப் பயணங்களுக்கு ஏற்றபடியாக, சீட்டிங் குஷனிங் இறுக்கமாக மாறியிருக்கிறது. புதிய முன்பக்க சஸ்பென்ஷன், கொஞ்சம் இறுக்கமாகச் செட் செய்யப்பட்டிருந்தாலும், தனது பணியைச் சிறப்பாகவே செய்கிறது. ஆனால், மோஜோ UT300 உடன் ஒப்பிடும்போது, USD ஃபோர்க் கொண்ட மோஜோ XT300 பைக்தான், மோசமான சாலைகள் தரும் அதிர்வுகளைத் திறம்பட சமாளிக்கிறது.

மோஜோ XT300 பைக்கில் பைரலி Diablo Rosso II டயர்கள் இருந்த நிலையில், மோஜோ UT300 பைக்கில் இருப்பதோ வழக்கமான MRF Zapper டயர்கள்தான்; அதுவும் பின்பக்க டயர், அளவில் கொஞ்சம் சிறிதாகியிருக்கிறது. இந்த டயர்களின் ரோடு கிரிப் நன்றாக இருப்பதால், திருப்பங்களில் பைக்கைச் செலுத்துவது நல்ல அனுபவமாக இருக்கிறது. ஆனால், பைக்கின் சேஸி செட்-அப், அதற்கு ஈடு கொடுக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. பிரேக்குகளில் மாற்றம் இல்லை என்பதால், முன்பைப் போலவே இங்கும் லீவர்களில் வழக்கத்தைவிடக் கூடுதல் அழுத்தம் கொடுத்தால்தான் பைக்கின் வேகத்தை உடனடியாகக் குறைக்க முடிகிறது. ஒருவேளை அட்ஜஸ்டபின் கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் இருந்திருந்தால் நன்றாக இருக்குமோ?

எப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ!

1.58 லட்ச ரூபாய் சென்னை எக்ஸ் ஷோரூம் விலையைக் கொண்டிருக்கும் மோஜோ UT300, மோஜோ XT300 பைக்கைவிட 30,000 ரூபாய் விலை குறைவாக இருக்கிறது (1.88 லட்ச ரூபாய் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை). இதனால் பஜாஜ் டொமினார் D400, ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350 ஆகிய பைக்குகளுடன் போட்டி போடுகிறது மோஜோ UT300. இந்த பைக்கின் வழக்கத்துக்கு மாறான தோற்றம், சொகுசான ஓட்டுதல் அனுபவம், Big Bike Feel ஆகியவற்றை குறைவான விலையில் வேண்டுபவர்களுக்கு, மோஜோ UT300 சரியான சாய்ஸாக இருக்கும். ஆனால், பைக் ஆர்வலர்களுக்கு மோஜோ XT300 பைக்தான் பிடிக்கும் எனத் தோன்றுகிறது.