Published:Updated:

அமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி! - கோவை To மசினகுடி

அமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி! - கோவை To மசினகுடி
பிரீமியம் ஸ்டோரி
அமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி! - கோவை To மசினகுடி

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய்தமிழ் - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

அமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி! - கோவை To மசினகுடி

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய்தமிழ் - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:
அமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி! - கோவை To மசினகுடி
பிரீமியம் ஸ்டோரி
அமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி! - கோவை To மசினகுடி

ரு சேஞ்சுக்கு என் ஹார்லி டேவிட்சனில் ஒருமுறை கிரேட் எஸ்கேப் போலாமே... ப்ளீஸ்!” என்று வாட்ஸ்-அப் செய்தார் கோவையைச் சேர்ந்த முரளி. ஆடி, எக்ஸ்யூவி, டிசையர் என்று கார்கள் இருந்தாலும், ஹார்லிதான் முரளியின் செல்லமாம். ‘‘முதல்ல ஏண்டா இதை வாங்கினோம்னு ஆகிடுச்சு... ஆனா இப்போ இந்த பைக்காலதான் எனக்கு ஸ்டேட்டஸ் ஏறியிருக்கு. முன்னாடி ஹெர்பல் முரளினு கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்போ எங்க ஏரியாவுல ஹார்லி முரளினு சொன்னாதான் தெரியும்’’ என்று இந்தப் பயணம் முழுதும் ஹார்லி புராணம் பாடிக்கொண்டே இருந்தார் முரளி.

அமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி! - கோவை To மசினகுடி

ஹார்லி டேவிட்சனில் பயணம் என்றால், ஸ்பாட்டும் கெத்தாக இருக்க வேண்டும். வயநாடுதான் முதல் பிளானாக இருந்தது. நிஃபா வைரஸ் தந்த பயத்தால், வெரைட்டியான ஸ்பாட்கள் அனுப்பியிருந்தார் முரளி. கொக்கே கறுத்துப் போகிற அளவுக்கு அடித்த அக்னி நட்சத்திர வெயில் முடிந்த மறுதினம், பயணத் திட்டம் தீட்டப்பட்டது. ஊட்டி தாண்டி முதுமலையில் இருக்கிற மசினகுடிக்கு ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தார் முரளி.

மசினகுடி, பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் இல்லை. ஆனால், இரண்டு நாட்கள் தங்கியிருந்து அனுபவிக்க அருமையான இடம். ட்ரெக்கிங்கும், ஜீப் சவாரியும்தான் இங்கே பிரதானம். யானைகளும் சிறுத்தைகளும் கரடிகளும் மான்களும்தான் இங்கே சமஸ்தானம் அமைத்திருக்கின்றன. அதனால், மசினகுடிக்குப் பல விதிகள் உண்டு. இரவு 8 மணிக்கு மேல், காலை 5 மணிக்குள் தனியார் வாகனங்கள் காட்டுப்பகுதியில் திரியக்கூடாது; 40 கி.மீ-க்கு மேல் பறக்கக் கூடாது; வாகனங்களை விட்டு அன் டைமில் கீழே இறங்கக் கூடாது; எளிதில் தீப்பற்றக்கூடிய சாமான்களை இறைக்கக் கூடாது; குரங்குகளுக்குத் தீனி போடக் கூடாது; கண்டபடி ஹார்ன் அடிக்கக் கூடாது.

‘‘விலங்குகள் மேல எனக்குத் தனிக்காதல் உண்டு. கிளம்பலாம்!’’ என்று ஊட்டியே அதிரும்படி முறுக்கிக்கொண்டு கிளம்பின ஹார்லியும் புல்லட்டும்.

அமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி! - கோவை To மசினகுடி

* கோவையில் இருந்து மசினகுடிக்குச் சரியாக 135 கி.மீ. சத்தியமங்கலம் தாண்டி நஞ்சங்கூடு வழியாகப் போவதும் த்ரில்லிங் அனுபவம் தரலாம். ஆனால், அது சுற்று. நாங்கள் மேட்டுப்பாளையம், ஊட்டி வழியைத் தேர்ந்தெடுத்திருந்தோம். விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கிவிட்டதால், மேட்டுப்பாளையத்தில் பிளாக் தண்டர் தீம் பார்க் லேசாக அசடு வழிந்துதான் இருந்தது.

* மேட்டுப்பாளையம் தாண்டி கோத்தகிரி மலைச் சாலை ஏறியதும் ஜெர்க்கின், க்ளோவ்ஸுக்கு வேலை வந்துவிட்டது. கல்லட்டி செக்போஸ்ட் தொடங்கியதும் விறைக்க ஆரம்பிக்கிறது. பைக்கில் மலைப்பயணம் மேற்கொள்பவர்கள் க்ளோவ்ஸை மட்டும் மறந்து விடாதீர்கள். கல்லட்டி செக்போஸ்ட்டுக்கு 6 மணிதான் கடைசி நேரம்.

* க்ளோவ்ஸை மறந்துவிட்ட சிலர், குளிர் தாங்காமல் பைக்கின் சைலன்ஸரில் கை வைத்து கதகதப்பை ஃபீல் செய்து கொண்டிருந்தார்கள். இது ரொம்பத் தப்பான விஷயம். ‘‘இது அரிப்பு மாதிரிதாங்க. சொரியும்போது நல்லா இருக்கும். சொரிஞ்ச பிறகு புண்ணாகி அவஸ்தையாகிடும். அதேமாதிரிதான்... இப்போ கதகதனு இருக்கும். பின்னால கை புண்ணாகி வீங்கிடும். எனக்கு அப்படித்தான் ஆகியிருக்கு’’ என்று அட்வைஸ் செய்துகொண்டிருந்தார் முரளி.

* ஊட்டி வழியெங்கும் குட்டிக் குட்டி அருவிகள் அற்புதமாக இருந்தன. ஆனால், கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்தான் அருவிகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. கல்லட்டி அருவிதான் இங்கே பிரபலம். லேசாக மலை இறக்கத்தில் 1 கி.மீ இறங்கினால், இயற்கையோடு கொஞ்சியபடி விழும் அருவியை ரசிக்கலாம். இங்கே பறவைகளையும் பார்க்கலாம். ஆனால், இதற்கு அக்டோபர், நவம்பர்தான் சரியான சீஸன்.

* போகிற வழியெங்கும் ஹார்லியைத் தொட்டுப் பார்த்து, தடவிப் பார்த்து, செல்ஃபி எடுத்து பயணத்தைப் பரவசமாக்கினார்கள் வழிப்போக்கர்கள். காவல்துறை அதிகாரிகள் சிலரிடமிருந்து, ‘‘பேட்ரோல் போறதுக்கு கவர்ன்மென்ட், நமக்கு ஹார்லி கொடுத்த செமையா இருக்கும்ல’’ என்கிற கமென்ட்களையெல்லாம் கேட்க முடிந்தது.

அமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி! - கோவை To மசினகுடி

* கல்லட்டி மலைப்பாதையில் இருந்து மசினகுடிக்கு 36 கொண்டை ஊசி வளைவுகள். எல்லாமே செம ஆபத்தானவை. இதில் இறங்கும்போது, இரண்டாவது கியரிலேயே இயக்குவதுதான் பெஸ்ட். ஹார்லி டேவிட்சனில் கியர் பிரச்னை இல்லவே இல்லை. 4-வது கியரில்கூட 20 கி.மீ வேகத்தில் நல்ல கன்ட்ரோல் கிடைத்தது. ஆனால், நம் ஊர் வாகனங்களுக்கு எக்ஸ்பெர்ட்டான ரைடர்கள் தேவை. திடீர் திடீரெனத் திருப்பங்களையும் கவனிக்க வேண்டும்.

* பொதுவாக சுற்றுலாத் தலங்களில் இடங்களின் பெருமை சொல்லும் போர்டுகள்தான் இருக்கும். ஆனால், ஓர் இறக்கத்தில், இந்த மலைப் பாதையின் மோசமான வரலாற்றைச் சொல்லும் போர்டு வைத்திருந்தார்கள். எத்தனை விபத்துகள், எத்தனை உயிர்ப்பலிகள், எத்தனை காயங்கள் என்கிற புள்ளி விவரத்துடன் இருந்தது அறிவிப்புப் பலகை. இப்போதுதான் கூடுதல் பயமாக இருந்தது.

* இந்த மலைப் பகுதியில் யானைகள் நடமாட்டம் நிச்சயம் இருக்கும். யானைகள் இருந்தால் ஹார்ன் அடிக்காமல், அது கடந்து போகும் வரை காத்திருந்து செல்வதுதான் காட்டுக்கு மரியாதை.

* சோலூர் எனும் போர்டு காட்டும் பாதையில் இடதுபுறம் திரும்பினால், பொக்காபுரம். பொக்காபுரத்தில் எக்கச்சக்க ரெஸார்ட்கள் உண்டு. நாள் ஒன்றுக்கு 2,500 முதல் 5,000 வரை காட்டேஜ்கள், ஹோம் ஸ்டேக்கள் உண்டு. மர வீடுகள் வேற லெவல். ஆனால், கொஞ்சம் காஸ்ட்லி. காட்டுக்கு நடுவில் கேம்ப்ஃபயர் போட்டுத் தங்கினால்... அந்த அற்புதத்தை எழுத வார்த்தைகள் இல்லை.

* மசினகுடியில் ஜீப் சவாரிதான் பிரசித்தம். ஒரு சவாரிக்கு 800 முதல் 1,200 வரை வசூலிக்கிறார்கள். நம் ஊரில் வீட்டுக்கு வீடு பைக் இருப்பதுபோல், இங்கே ஜீப் வைத்திருக்கிறார்கள்.

* நமக்கு எக்ஸ்பெர்ட்டான கைடு ஒருவர் சிக்கினார். ‘காலையில 5.30 மணிக்குக் கிளம்பணும். அப்போதான் அனிமல்ஸ் பார்க்கலாம்’ என்று அலார்ம் வைத்து எழுப்பிக் கூட்டிக்கொண்டு போனார். நம் ஊர் தெரு விலங்குகள் போல் இங்கே மான்கள் வதவதவெனத் திரிந்தன. ஒரு கட்டத்தில் ‘இந்த மான் தொல்லை தாங்க முடியலைப்பா’ எனும் அளவுக்கு கேமரா மெமரி கார்டை ஃபில் பண்ணிவிட்டிருந்தன மான்கள்.

அமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி! - கோவை To மசினகுடி

* சிங்காரா பாதைதான் மசினகுடியின் செம த்ரில்லிங் ஸ்பாட். நிச்சயம் இங்கே விலங்குகள் பார்க்காமல் வந்தால், நீங்கள் ஏதோ பாவம் பண்ணியிருக்கலாம். ‘அங்க பாருங்க’ என்று முரளி கை காட்ட... அங்கே... 20-க்கும் மேற்பட்ட படா படா காட்டெருமைகளை, புள்ள குட்டிகளுடன் பார்த்தது ஜிலீர் அனுபவம்.

* காட்டுக்குள் 100-க்கு 2 பேர்தான் புலி பார்க்கிறார்களாம். ‘அந்த 2 பேர்ல நான் ஏன் ஒருத்தனா இருக்கக் கூடாது’ என்றார் முரளி. ஆனால், கடைசிவரை புலியைப் பார்க்கவே முடியவில்லை. ஒருவேளை புலி எங்களைப் பார்த்திருக்கலாம்.

* மசினகுடி ஜங்ஷனில் இருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் மாயாறு அணைதான் மசினகுடியின் மோஸ்ட் அட்ராக்ஷன் ஸ்பாட். ஜில்லென்ற மாயாறு அணைப் பாதையும் செம த்ரில்லிங்காக இருந்தது. சாலையெங்கும் யானைச் சாணங்கள், அப்போதுதான் யானைகள் ஃப்ரெஷ்ஷாகக் கடந்ததற்கான அறிகுறி. இந்த அணை நீர்தான் தெங்குமரஹடா வழியாகப் பாய்கிறது.

* பொக்காபுரத்தின் இன்னொரு வியூ பாயின்ட் - விபூதிமலைக் கோவில். ஜீப் மட்டுமே செல்லக்கூடிய பாதையில், செங்குத்தாக ஏறும் மலையில் பயணிப்பது, இமயமலைப் பயணம் செய்வதுபோலவே இருந்தது. மலை மீது அமர்ந்துள்ள முருகன் கோவில் அத்தனை அழகு. சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர், பந்திப்பூர் வரை மொத்த தமிழ்நாட்டையும் கர்நாடகாவையும் விபூதி மலை வியூ பாயின்ட்டில் இருந்து பார்க்கும்போது முதுகு சில்லிடுகிறது. ‘‘இதில் புல்லட்டில் நான் வந்திருக்கேன்’’ என்று நினைவுகளைப் பகிர்ந்தார் முரளி.

* அமைதியாக இருக்கிறது; அதனால் பயமாய் இருக்கிறது. ஆனால், ரம்மியமாய் இருக்கிறது. அதனால் போய்வந்த ஒவ்வொருவரின் மனதிலும் குடிபெயர்கிறது. அதுதான் மசினகுடி.

நோட் பண்ணுங்க!

மசினகுடியில் அறைகள் எடுக்கும்போது, மறுநாள் மதியம் 12 மணிக்குள் அறையைக் காலி செய்துவிட வேண்டும் என்பதை நினைவில் கொள்க. 12 மணி வரைதான் இங்கு ஒருநாள் வாடகைக் கணக்கு. 700 ரூபாய்க்கு லாட்ஜே போதும் என்பவர்கள், மசினகுடி ஜங்ஷனுக்கு வண்டியை விடலாம். ரெஸார்ட், ஹோம் ஸ்டே என்றால், பொக்காபுரத்துக்குள் நுழைந்து விடுங்கள். இங்கே மரவீடுகளில் தங்கினால் வித்தியாசமான அனுபவம் உறுதி. ஜீப் சவாரி டிரைவர்கள், ‘காட்டுக்குள் போலாம்; தனி ரேட்’ என்று சொன்னால், மிகப் பெரிய சிக்கலில் மாட்டப் போகிறீர்கள் என்று அர்த்தம். காட்டுச் சாலையில் சவாரி போகலாம்; வனப்பகுதிக்குள் சவாரி சட்டப்படி குற்றம். காட்டுக்கென்று ஓர் நிம்மதி இருக்கிறது. அதைக் கெடுக்கும் பாவம் வேண்டாமே ப்ளீஸ்!

அமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி! - கோவை To மசினகுடி

ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் எப்படி?

‘‘முதல்ல டுகாட்டி டயாவெல், நின்ஜா 1000 பைக்ஸ்தான் பார்த்தேன். இரண்டுக்கும் சர்வீஸ் பண்றது பெரும்பிரச்னையாயிடும். அதான் ஹார்லி எடுத்தேன்’’ என்றார் முரளி. ஆம்! ஹார்லி வாங்கியவர்கள் இதுவரை சர்வீஸுக்காக அலைந்ததாகச் சரித்திரம் இல்லை எனலாம். இந்தியாவில் எந்த இடத்தில் பிரேக்டவுன் ஆனாலும், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஸ்பேர் பைக்கோ, சர்வீஸுக்கு ஆளோ உங்களைத் தேடி வருவார்கள். டூயல் எக்ஸாஸ்ட், ஏபிஎஸ் பிரேக்ஸ், பெரிய அகலமான டயர்கள்தான் இதன் பிரம்மாண்டமே! எப்படிப்பட்ட வேகத்தில் சென்றாலும் அலைபாய்வெதல்லாம் சாத்தியமே இல்லை. இதன் எடை 330 கிலோ. சைடு ஸ்டாண்ட் இல்லையென்றால்... நினைத்தே பார்க்க முடியவில்லை. ஃபேட் பாயை பார்க்கிங் செய்வதற்கு, கொஞ்சம் ஃபேட் பாய்களால் மட்டும்தான் முடியும்.

‘‘நான் வருத்தப்படுறதெல்லாம் இது மட்டும்தான். கால் சூடு தாங்க முடியலை. பில்லியன்ல உட்கார்ந்து வந்தா, ஷூவே பொசுங்கிடுது. இவ்வளவு பெரிய பைக்கில் ட்ராக்ஷன் கன்ட்ரோல் இல்லை. ஸ்பீடோ மீட்டர் அனலாக்தான். கிரவுண்ட் கிளியரன்ஸ் படுமோசம். வெறும் 125 மிமீதான். ஸ்பீடு பிரேக்கரில் கிட்டத்தட்ட ஐடிலிங்கில் கொண்டு வந்துதான் ஏற முடியுது. மத்தபடி இந்த ஸ்போர்ட்ஸ் டூரர், எனக்குப் பெரிய மரியாதையைத்தான் வாங்கித் தந்திருக்கு’’ என்கிறார் முரளி. பைக் ரைடிங்கின் மீது வெறி உள்ளவர்களுக்கான பைக் - ஹார்லி ஃபேட் பாய். மற்றபடி சாதாரண கம்யூட்டர்களின் கமென்ட் இப்படித்தான் இருக்கும்: ‘‘18 லட்ச ரூபாய் கொடுத்து இந்த ஹார்லி வாங்குறதுக்கு ஒரு பெரிய எஸ்யூவி வாங்கிடலாம்!’’

என்ன பார்க்கலாம் மசினகுடியில் இருந்து?

சிங்காரா (11 கி.மீ)

இந்தக் காட்டுச் சாலையில் ரைடிங் போவது செம த்ரில்லிங். மாலை நேரங்களில் சிங்காரா நதியில் யானைகள் குளிப்பதை, தண்ணீர் குடிப்பதைப் பார்க்கலாம்.

மாயாறு அணை (10 கி.மீ)

இதுவும் த்ரில்லிங்கான காட்டுப் பாதைதான். எக்கச்சக்க விலங்குகள் பார்க்க இந்தப் பாதை கியாரன்ட்டி. மாயாறு அணை பார்க்க மட்டும்தான். கால் நனைப்பதெல்லாம் கூடாது.

முதுமலை
(18 கி.மீ)


புலிகள் காப்பகம். இங்கே நடுவழியில் வாகனத்தில் இறங்குவது சட்டப்படி குற்றம். விலங்குகள் நிச்சயம் பார்க்கலாம்.

பந்திப்பூர் (13 கி.மீ)

கர்நாடகா மாநிலத்தின் புலிகள் சரணாலயம். இதுவும் த்ரில்லிங் ஸ்பாட்தான். பந்திப்பூரிலும் ஃபாரஸ்ட் சவாரி போவது அற்புதமான அனுபவமாக இருக்கும்.

தெப்பக்காடு யானைகள் முகாம் (10 கி.மீ)

இந்த முகாமில் கும்கி யானைகள் வளர்வது, சாப்பிடுவது, குளிப்பது எல்லாவற்றையும் அருகில் இருந்து ரசிக்கலாம்.

பைக்காரா அருவி (38 கி.மீ)

கொஞ்ச தூரம் நடந்து சென்று அருவியை ரசிக்கலாம். சுத்தமான அருவிகளில் ஒன்று. போட்டிங் வசதியும் உண்டு.

விபூதிமலைக் கோவில் (7 கி.மீ)

ஜீப்பில் மட்டும்தான் இந்தக் கோவிலுக்குச் செல்ல முடியும். அருமையான வியூ பாயின்ட். மலை மேலுள்ள முருகன் கோவில், ஆன்மிக அன்பர்களுக்குப் பிடிக்கும்.

அமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி! - கோவை To மசினகுடி

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள்  குரலில் பதிவு செய்யுங்கள்!