கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்!

ரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ரேஸ் எடிஷன் 2.0தொகுப்பு: ராகுல் சிவகுரு

பைக்குகள் பலவகை. இதில் எல்லாவற்றையுமே யுனிக் என்று சொல்ல முடியாது. தனித்துவமான பைக்குகளை ஓட்டும் போதுதான் அதன் நினைவுகள் மனதில் நிற்கும். அப்படி மனதில் நிற்கும் பைக் அப்பாச்சி RTR 200 4V. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் இருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தின் டெஸ்ட் டிராக்கில் இந்த பைக்கை ஓட்டியபோது, ஆல்ரவுண்டராக அசத்தியது RTR 200 4V. 200சிசி செக்மென்ட்டில் மிக முக்கியமான பைக் இதுதான். இப்போது இதில் `ரேஸ் எடிஷன் 2.0’ என்ற பெயரில், ஃபேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கியுள்ளது டிவிஎஸ். இதில் என்ன ஸ்பெஷல்?

ரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்!

டிசைன்

முந்தைய மாடலில், ஹெட்லைட்டுக்கு மேலே இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன்னால் இருந்து பார்க்கும்போது ஓப்பனாக அப்படியே தெரியும். தற்போதைய மாடலில் அதற்குக் கவசம்போல, சிறிய வைஸர் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல முன்பு பைக்கில் கிராஃபிக்ஸ் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில், ஃபேஸ்லிஃப்ட்டில் ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், டெயில் பகுதி, இன்ஜின் கவுல் ஆகிய இடங்களில் புதிய கிராஃபிக்ஸ் இடம்பெற்றுள்ளது. 12 லிட்டர் பெட்ரோல் டேங்க்கில் இருக்கும் ஸ்ட்ரிப்பில், `Race Edition 2.0’ என அழகாக பிரின்ட் செய்யப்பட்டிருக்கிறது.

தவிர, டேங்க்கின் இருபுறங்களிலும் டிவிஎஸ்ஸின் லோகோ உண்டு. தங்க நிற ஃபோர்க்கின் மேலே, சிறிதாக பிளாஸ்டிக் கேப் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அப்பாச்சி 160 4V பைக்கைப்போலவே, அப்பாச்சி பிராண்டிங் ஏர்ஃபில்டர் கேஸின் மீது கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்பக்க மட்கார்டில் `டிவிஎஸ் ரேஸிங்’ ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஃபேஸ்லிஃப்ட் மாடலை ‘அட, ரேஸிங் அப்பாச்சி’ என்று ஈஸியாகக் கண்டுபிடித்து விடலாம்.

ரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்!

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

இங்கே நாம் டெஸ்ட் செய்தது, கார்புரேட்டர் - Remora டயர்கள் - டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடல். விலையைக் கட்டுக்குள் வைக்கவே, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மற்றும் பைரலி டயர்களுடன் கூடிய மாடல் சேர்க்கப்படவில்லை.  20.5bhp பவர் மற்றும் 1.81kgm டார்க்கை வெளிப்படுத்தும் 198சிசி இன்ஜினில், புதிய A-RT... ‘ஆன்ட்டி ரிவர்ஸ் டார்க்’ க்ளட்ச்சைத் தாண்டி எந்த மாற்றமும் இல்லை. ஸ்லிப்பர் கிளட்ச் என்பதைத்தான் ‘ரிவர்ஸ் டார்க் கிளட்ச்’ என்கிறது டிவிஎஸ். ஆரம்பகட்ட மற்றும் மிட் ரேஞ்ச் பர்ஃபாமென்ஸை மனதில் வைத்து ட்யூன் செய்யப்பட்டிருப்பதால், நகரத்தில் இந்த பைக்கை ஓட்டுவது செம ஃபன்னாக இருக்கிறது.

இதுவே நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, டாப் எண்ட் பர்ஃபாமென்ஸில் பின்தங்குகிறது இந்த அப்பாச்சி. 6-வது கியர் இருந்திருந்தால் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்குமோ? நான் முன்பே சொன்னதுபோல,  ஸ்லிப்பர் க்ளட்ச் வழங்கப்பட்டிருப்பதால், க்ளட்ச் லீவரில் எடை குறைந்திருக்கிறது. மேலும், அதிக வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென கியரைக் குறைத்தாலும், பின்பக்க வீலின் நிலைத்தன்மையில் மாற்றம் தெரியவில்லை.

ரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்!

ஓட்டுதல் அனுபவம்

ஈரமான சாலைகளில், டூயல் சேனல் ஏபிஎஸ் தனது இருப்பை உணர்த்துகிறது. இருபுறமும் இருக்கும் பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ் தனது பணியைச் செய்தாலும், அவற்றின் ரெஸ்பான்ஸ் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். எந்தவிதமான சாலையாக இருந்தாலும், டெலிஸ்கோபிக் ஃபோர்க் - மோனோஷாக் சஸ்பென்ஷன் கூட்டணி திறம்படச் செயல்படுகிறது. ஃப்ரேமில் எந்த மாற்றமும் இல்லை என்பதால், முன்புபோலவே இந்த அப்பாச்சியும் வளைத்து நெளித்து ஓட்டக்கூடிய பைக்காக இருக்கிறது.

நாம் டெஸ்ட் செய்த பைக்கில் இருந்த  டியூப்லெஸ் Remora டயர்கள், காய்ந்த நிலப்பரப்பில் சிறப்பான ரோடு கிரிப்பை அளிக்கின்றன. ஆனால், ஈரமான சாலைகளில் இதன் செயல்பாடு சுமார் ரகம்தான்.

ரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்!

புதிய கிராஃபிக்ஸ், ஸ்லிப்பர் க்ளட்ச், டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகியவை, அப்பாச்சி RTR 200 4V ரேஸ் எடிஷன் 2.0 (எவ்ளோ பெரிய பெயர்?) பைக்கின் பலங்களை அதிகரித்திருக்கின்றன. இங்கே நீங்கள் படங்களில் பார்க்கும் பைக்கின் சென்னை ஆன்ரோடு விலை 1.27 லட்சம் ரூபாய். ஏபிஎஸ் இல்லாத மாடலின் விலையுடன் இதை ஒப்பிடும்போது 15 ஆயிரம் ரூபாய் அதிகம்.ஆனால், பாதுகாப்புக்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற வகையில், கொடுக்கும் காசுக்கு இது மதிப்புமிக்கதுதான்! `நான் சிட்டிக்குள்தான் பைக் ஓட்டுவேன். எனக்கு ஸ்டைலான, சொகுசான பைக் வேண்டும்’ என்பவர்கள், இந்த அப்பாச்சியை வாங்கலாம்.