கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

டூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்!

டூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்!
பிரீமியம் ஸ்டோரி
News
டூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ட்ரையம்ப் டைகர் 800 XRXதொகுப்பு: ராகுல் சிவகுரு

கார்களுக்கு இணையாக 10-15 லட்சம் ரூபாய் கொடுத்து பைக் வாங்குவது அதிகரித்து வருகிறது. அதனால்தான் இந்த விலையில் பல்வேறு பைக்குகள் போட்டி போடுகின்றன. க்ரூஸர், நேக்கட் ஸ்ட்ரீட், ஸ்போர்ட்ஸ், அட்வென்ச்சர் டூரர் என விதவிமான பைக்குகள் இந்த விலையில் கிடைக்கின்றன, இதில் ஒவ்வொரு பைக்கை ஓட்டும் போதும் புது புது அனுபவமும் சுகமும் கிடைப்பது நிச்சயம். இதில் ட்ரையம்ப்பின் டைகர் சீரிஸ் பைக்ஸ் - அட்வென்ச்சர் டூரர்  டைப்பை சேர்ந்தவை.  சொகுசான பயண அனுபவம் மற்றும் எந்த நிலப்பரப்பிலும் செல்லக்கூடிய திறன் கொண்ட இந்த பைக்கை   ஓட்டுவது என்பது தனித்துவமான அனுபவத்தை கொடுக்கக்கூடியது. இந்த டைகர் சீரிஸின் முக்கிய மாடலான  டைகர் 800 XRX பைக்கில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. எப்படி இருக்கிறது இந்த அப்டேட்டட் வெர்ஷன்?

டூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்!

டிசைன் மற்றும் வசதிகள்

முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய டைகர் 800 XRX பைக்கில் 200-க்கும் அதிகமான மாற்றங்களைச் செய்திருப்பதாக ட்ரையம்ப் சொல்கிறது. ஆனால் புதிய பைக்கை முதன்முறை பார்த்தபோது Dejavu, அதாவது ‘இதை முன்னாடியே பார்த்திருக்கோம்ல’ என்கிற உணர்வே ஏற்படுகிறது. ஆனால் பைக்கை உற்று நோக்கும்போது, வித்தியாசங்கள் தென்படுகின்றன. LED டே டைம் ரன்னிங் விளக்குகள், புதிய பாடி பேனல்கள், ஏரோ டிஃப்ளெக்ட்ர்ஸ், TFT டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவற்றை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். 19 லிட்டர் பெட்ரோல் டேங்க்கைத் தவிர, ஏறக்குறைய அனைத்து பேனல்களையும், காம்பேக்டாக மாற்றியிருக்கிறார்கள். பழைய பைக்கில் இருந்த செமி-டிஜிட்டல் மீட்டருடன் ஒப்பிட்டால், புதிய டிஜிட்டல் மீட்டரில் அதிக தகவல்கள் தெரிவதுடன், அதை 5 விதங்களில் ஜாய் ஸ்டிக் மூலம் அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் கொடுத்திருக்கிறார்கள். மேலும் டுகாட்டி மல்ட்டிஸ்ட்ராடா 950 பைக்கைப் போலவே, இங்கும் பைக்கை ஓட்டும்போதே விண்ட்ஸ்க்ரீனை மேனுவலாக அட்ஜஸ்ட் செய்யமுடியும்! டைகர் 800 XRX பைக்கின் சீட் உயரம் 830மிமீயாக இருந்தாலும், தேவைப்பட்டால் 20மிமீ குறைத்துக் கொள்ள முடியும்.

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

பழைய வெர்ஷனில் இருந்த அதே 95bhp பவர் மற்றும் 7.9kgm டார்க்கை வெளிப்படுத்தும் அதே 800சிசி, 3 சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின்தான். ஆனால் முன்பைவிட இது ஸ்மூத்தாகத் தனது பணியைச் செய்வதுடன், நன்கு ரெவ் ஆகிறது. இதற்குப் புதிய க்ராங்க் ஷாஃப்ட் மற்றும் காம்பேக்ட்டான அதே சமயம் எடை குறைவான புதிய எக்ஸாஸ்ட் ஆகியவை காரணமாக இருக்கலாம்.  ஆனால் நீங்கள் இங்கே படங்களில் பார்க்கும் பைக்கில் இருப்பது, 42,167 ரூபாய் (வரிகள் சேர்க்காமல்) மதிப்புள்ள Arrow எக்ஸாஸ்ட் பைப். இது வெளிப்படுத்தும் சத்தம் ரசிக்கும்படி இருக்கிறது. தவிர, முதல் கியருக்கும் இரண்டாவது கியருக்குமான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வேகம் பிடித்தவுடன் அடுத்தடுத்த கியர்களுக்கு சட்டென மாற முடிகிறது.

டூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்!

சாதாரண பைக்குகளில் இருப்பதுபோல இங்கே கேபிள்கள் கிடையாது. எல்லாமே சென்சார்களைக் கொண்டு இயங்குபவை. இங்கே ஆக்ஸிலரேட்டர் கேபிளுக்கு பதிலாக ‘ரைடு பை வொயர்’ அமைப்பு இடம் பெற்றிருக்கிறது. இதனால் டைகர் 800 XRX பைக்கின் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் துல்லியமாக இருக்கிறது. நெரிசல்மிக்க டிராஃபிக் உடன் கூடிய நகரச்சாலையில், இன்ஜின் சுணங்காமல் ரிஃபைண்டாக இயங்குகிறது. ஆனால் ஸ்லிப் & அசிஸ்ட் கிளட்ச் இருந்திருந்தால், இன்னும் பர்ஃபாமென்ஸ் துல்லியமாக இருந்திருக்கும். நெடுஞ்சாலைகளில் சொகுசாகக் க்ரூஸ் செய்வது  நல்ல அனுபவமாக இருக்கிறது. ஓவர்டேக் செய்யவேண்டும் என்றால், கியரைக் குறைக்காமல் ஆக்ஸிலரேட்டரை அதிகரிப்பதே போதுமானது. சீரான பவர் டெலிவரி மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ் காரணமாக, புதிய ரைடர்களுக்கும் ஏற்ற பைக்காகத் திகழ்கிறது டைகர் 800 XRX.

 ஓட்டுதல் அனுபவம்

நிமிர்ந்து உட்காரக்கூடிய சீட்டிங் பொசிஷன் மற்றும் அகலமான சீட் சேரும்போது, ரைடருக்கான பக்கா சீட்டிங் கிடைத்துவிடுகிறது. ரோடு, ஸ்போர்ட், ஆஃப் ரோடு, ரெய்ன் என 4 ரைடிங் மோடுகள் உள்ளன.  ஈரம் படர்ந்த சாலைகளில், ரெய்ன் மோடைப் பயன்படுத்துவது நல்லது. இதில் முழு பவரும் கிடைக்கிறது என்றாலும், அது மென்மையாகவே வெளிப்படுகிறது. இந்தநேரத்தில் டிராக்‌ஷன் கன்ட்ரோல் தனது அதிகபட்ச செட்டிங்கில் இருக்கும். பலமான எதிர்க்காற்று, அதிக மழை என எப்படிப்பட்ட தட்ப வெப்பநிலையிலும் அசராமல் பயணிக்கிறது டைகர் 800 XRX. க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஹீட்டட் கிரிப் (கொஞ்சம் சூடான கைப்பிடிகள்) இருப்பது வரவேற்கத்தக்க அம்சம்.

தார்ச்சாலைகளில் இருந்து, கரடுமுரடான பாதைகளில் பயணித்தோம். அப்போது பைக்கில் நின்றுகொண்டு, தேவைக்கு ஏற்ப ஆக்ஸிலரேட்டரைத் திருகினாலே, பைக் எந்தவிதமான திணறலும் இல்லாமல் அசால்ட்டாக முன்னோக்கிச் செல்கிறது. இதற்கு Showa நிறுவனத்தின் USD ஃபோர்க் (180மிமீ டிராவல்) மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் (170மிமீ டிராவல்) செட்-அப் கைகொடுக்கிறது. முன்பக்கத்தில் 19 இன்ச் மற்றும் பின்பக்கத்தில் 17 இன்ச் Metzeler Tourance டியூப்லெஸ் டயர்களைக் கொண்டிருப்பதால், திருப்பங்களில் டைகர் XCX பைக்கைவிடச் சிறப்பாகச் செயல்படுகிறது டைகர் 800 XRX.

ஆனால் இது ஆஃப் ரோடிங் மற்றும் டூரிங்கை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்ட பைக் என்பதை, அதன் முன்பக்க ஃபோர்க் மற்றும் ஃபுட் பெக்ஸ் பொசிஷன் செய்யப்பட்ட விதம் உணர்த்திவிடுகின்றன. இதனால் மிக அதிக வேகத்தில் திருப்பங்களில் பைக்கைச் செலுத்த நேரிட்டால், முன்பக்கம் தரும் ரெஸ்பான்ஸ் குறைவுதான். மேலும் ஃபுட்பெக்ஸும் சாலையை உரசுகின்றன. முன் பக்க இரட்டை டிஸ்க் பிரேக்கின் ஃபீட்பேக் போதுமானதாக இருந்தாலும், திடீரென பிரேக் பிடிக்கும்போது முன்பக்கம் குலுங்குகிறது.

டூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்!

மிதமான ஆஃப் ரோடிங் மற்றும் சொகுசான டூரிங் ஆகியவை கலந்த கலவையாக இருக்கிறது டைகர் 800 XRX. முன்பிருந்த மாடலைவிடப் புதிய மாடலின் விலை 1 லட்ச ரூபாய் அதிகம். இதற்கு CKD மோட்டார் சைக்கிள்கள் மீதான வரி உயர்த்தப்பட்டதே காரணம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் தெரிவதுடன், அட்வென்ச்சர் பைக் செக்மென்ட்டில் டைகர் 800 XRX பைக்கில் டூர் அடிப்பது சொகுசான அனுபவமாக இருக்கிறது. ஆஃப் ரோடிங்கில் பெயர் பெற்ற டைகர் XCX, ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மற்றும் ஸ்போர்ட்டியான டுகாட்டி மல்ட்டி ஸ்ட்ராடா 950 பைக் ஆகியவற்றுக்கு இடையே, டைகர் 800 XRX பைக்கைக் கச்சிதமாக பொசிஷன் செய்திருக்கிறது ட்ரையம்ப். பயன்பாடு, பர்ஃபாமென்ஸ், ஆஃப் ரோடிங் ஆகியவற்றைத் தேவையான விகிதத்தில் கொண்டிருக்கும் இது, அட்வென்ச்சர் செக்மென்ட்டில் தவிர்க்க முடியாத ஒரு தயாரிப்பு!