கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்!”

“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்!”

ரீடர்ஸ் ரிப்போர்ட் - டிவிஎஸ் அப்பாச்சி RR310தமிழ் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

‘டிராக் பைக்தான்; ஆனால், ரோட்டில் ஓட்டுவதற்கும் பக்காவாக இருக்குமா அப்பாச்சி? நீங்களே ஓட்டிப் பார்த்துட்டுச் சொல்லுங்க’ என்று புதிய அப்பாச்சி RR310 பைக்கை,  அலுவலகத்துக்கு அனுப்பியது டிவிஎஸ். ‘‘பசங்களுக்கான பைக்தான். ஏன் பொண்ணுங்க ஓட்டி ரிப்போர்ட் பண்ணக்கூடாதுனு சட்டம் இருக்கா?’’ என்று தெளிவாகத் தமிழில் சண்டை போட்டு, பைக்கின் சாவியைப் பிடுங்கினார் ஜென்னி. பிலிப்பைன்ஸ் காரரான ஜென்னி, தமிழ்நாட்டு மாணவி. விமான பைலட்டிங் கோர்ஸ் பண்ணுவதாகச் சொன்னார்.

‘‘நான் ஒரு ரேஸர். எனக்கு ஸ்கூட்டர் ஓட்டுறது சுத்தமா பிடிக்காது. அதனால்தான் அடம் பிடிச்சு பல்ஸர் 200 பைக்கை வாங்கினேன். கிளட்ச் பிடிச்சு, கியர் மாத்தி டாப் ஸ்பீடில் பறக்கறதுதான் எனக்குப் பிடிக்கும். ஏன்னா, நான் படிக்கிறதே பறக்கிறதுக்குத்தான்!’’ என்றார் ஜென்னி.

‘‘என்னை விட்றாதப்பா... நானும் டெஸ்ட் ரிப்போர்ட்டுக்கு வர்றேன்’’ என்று உடன் சேர்ந்து கொண்டார் பிரேம். ஜென்னியின் காலேஜ்மேட். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சென்னை முழுவதும் பைக்கில் பறந்து கொடுத்த டெஸ்ட் ரிப்போர்ட் இது.

“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்!”

டிசைன்

ஜென்னி:
டிசைன் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சுறா மீனோட டிசைன்தான் இன்ஸ்பிரேஷன்னு படிச்சேன். லாங் ஷாட்ல பறக்கும்போது, சுறா மீன் தண்ணியைக் கிழிச்சுக்கிட்டு வர்றது மாதிரிதான் இருக்கு. தெரியுது. விண்ட் ஸ்க்ரீன் சூப்பர். LED புரொஜெக்டர் ஹெட்லைட் செமையா இருக்கு. பெட்ரோல் டேங்க், நல்ல பல்க். கால்களுக்கான சப்போர்ட் நல்லாவே கிடைக்குது.

பிரேம்:
இந்தியாவோட ஃபர்ஸ்ட் LED புரொஜெக்டர் ஹெட்லைட்டுக்காகவே அப்பாச்சி பிடிச்சிருக்கு. பிஎம்டபிள்யூ டச் நல்லாவே தெரியுது. டிவிஎஸ்ஸோட முதல் ஃபுல் ஃபேரிங் இதுதான்னு நினைக்கிறேன். யார் உட்கார்ந்தாலும் ரேஸர் ஃபீலிங் கிடைக்குது. நல்லவேளை - ஃபுல் டிஜிட்டல் மீட்டர் கொடுத்திருக்காங்க. வெர்டிக்கல் டிசைனும் வித்தியாசமா இருக்கு. டெயில் லைட் டிசைன் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. கறுப்பு கலர் இருக்குனு சொல்றாங்க. ஆனா, ரோட்ல ஒரு கறுப்பு பைக்கைக்கூட நான் பார்க்கவே இல்லை. சிவப்புதான் என் சாய்ஸ்.

வசதிகள்

ஜென்னி: ஏகப்பட்ட வசதிகள் இருக்கே! ட்ரிப் மீட்டர் இருக்கு. வழக்கம்போல ஸ்பீடோ மீட்டர், ஆர்பிஎம் மீட்டர் எல்லாமே டிஜிட்டலா இருக்கு. ரேஸ் பைக் என்பதால், டாப் ஸ்பீடு, 0-60 கி.மீ லேப் டைமரெல்லாம் கொடுத்திருக்காங்க. காற்று முகத்தில் அடிக்காம இருக்க, விண்ட் ஸ்க்ரீன் வெச்சிருக்காங்க. இது ஸ்டைலாகவும் இருக்கு. பெண்களுக்கு முக்கியமான வசதியான சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் இருக்கிறது பிடிச்சிருக்கு.

“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்!”

பிரேம்: கடிகாரம் இருப்பது எனக்கு ரொம்ப வசதி. LED ஹெட்லைட், நைட் நேரத்துல செம பவர்ஃபுல்லா இருக்கும்னு நினைக்கிறேன். டிஜிட்டல் கன்ஸோலில் மொத்தம் 18 தகவல்கள் காட்டும்னு சொன்னாங்க. ரொம்பப் பிடிச்சது, ரேஞ்ச் மீட்டர்! இருக்கிற பெட்ரோலில் எவ்வளவு தூரம் போகலாம்னு இது காட்டுது, என்னைப் போன்ற அவசரப் பார்ட்டிகளுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். டேங்க் பார்க்க பிரம்மாண்டமா இருந்தாலும், கொள்ளளவு 11 லிட்டர்தான்!

பர்ஃபாமென்ஸ்

ஜென்னி: ஆரம்பத்திலேயே சும்மா தெறிக்க விடுது பைக். ரேஸிங் ஜீன், ஓட்டும்போதே தெரியுது. நம்ம சிட்டிக்குள்ள டாப் ஸ்பீடு 120 வரைக்கும்தான் போக முடிஞ்சுது. அநேகமா, 150 வரைக்கும் போகலாம்னு நினைக்கிறேன். என் ஃப்ரெண்டோட கேடிஎம் பைக்கில், இன்ஜின் சூடு காலில் அடிக்கும். ஆச்சரியம் - இந்த அப்பாச்சியில் இன்ஜின் ஹீட் தெரியலை. 34 bhp பவர்னு சொன்னாங்க. அதனால், ஓட்டும்போது நல்ல ரேஸிங் அனுபவம் கிடைக்குது. பிலிப்பைன்ஸ் மொழியில சொல்லணும்னா, மகந்தா! அதாவது, செம!

பிரேம்: பைக்கோட ஐடிலிங், எனக்குக் கொஞ்சம் ரஃப்பா இருக்கிற மாதிரி தோணுது. ஆனா, ரோட்ல எல்லோரும் திரும்பிப் பார்த்தாங்க. 313 சிசியாச்சே... சொல்லவா வேணும்? பறக்குது. பொதுவா, அப்பாச்சியில், வைப்ரேஷன் தான் பெரிய மைனஸ்னு கேள்விப்பட்டிருக்கேன்.ஆனால், இதில் எவ்வளவு ஸ்பீடா போனாலும் வைப்ரேஷன் தெரியலை. பவர் டெலிவரி நல்லாவே இருக்கு. பிஎம்டபிள்யூ G310R பைக்கைவிட, 15 கி.மீ இதோட டாப் ஸ்பீடு அதிகம்னு மோ.வி.யில எழுதியிருந்தாங்க.

“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்!”

ஹேண்ட்லிங்

ஜென்னி: ஸ்ப்ளிட் ஹேண்டில் பார், பிடிச்சு ஓட்டும்போது அற்புதமா இருக்கு. ஆனா, என் பல்ஸர் பைக்கில் நான் ‘சட் சட்’னு யு-டர்ன் அடிச்சுடுவேன். இந்த அப்பாச்சியில் டர்னிங் ரேடியஸ் அதிகமா இருக்கும்போல. U-டர்ன் இல்லை; பெரிய O-டர்ன் போட வேண்டியிருக்கு. திருப்பும்போது பெட்ரோல் டேங்க்கில் கை இடிக்குது. ஆனா, பிரேக்ஸ் நச்! ஏபிஎஸ் கொடுத்திருக்காங்க. வாவ்! ஃபேரிங் இருக்கிறதால, ஹை ஸ்பீடில் செம ஸ்டெபிலிட்டி இருக்கு. மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் பார்க்க மட்டுமில்லை; பயன்பாடும் செமையா இருக்கு! இன்னும் ரொம்பப் பிடிச்ச விஷயம் - எந்த ஸ்பீடில் போனாலும் கியர் குறைக்கவே தேவையில்லை போல. டாலர் கியர் ரேஷியோ சூப்பர்.

பிரேம்:
பெரிய டயர்தான் அப்பாச்சியின் பெரிய ப்ளஸ். ரெண்டு பக்கமும் 17 இன்ச் டயர் இருக்கு. கிரிப் சூப்பர். நல்லவேளை - ட்யூப்லெஸ். பஞ்சர் ஆனா பிரச்னை இல்லை. ஜென்னி சொன்னதுமாதிரி சட்டுனு U-டர்ன் அடிக்கக் கஷ்டமா இருக்கு. பிரெல்லி டயர் ஆப்ஷனலா வருதுனு கேள்விப்பட்டேன். அது இன்னும் சூப்பரா இருக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஈஸியாவே இருக்கு. டாலர் கியர் ரேஷியோவும் ரொம்பப் பிடிச்சிருக்கு. 40 கி.மீ-ல் டாப் கியரில் போய் சோதனை செஞ்சு பார்த்தேன். பைக் திணறவே இல்லை. டியூக் 390 மாதிரி ரைடு பை வொயர் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் போன்ற வசதிகள் இருந்திருந்தா நல்லா இருக்கும்.

“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்!”

எங்கள் தீர்ப்பு

ஜென்னி:
நான் ஒரு ரேஸர்ங்கிறதால, பைக்கில் வேற எந்தக் குறையும் எனக்குப் பெரிசா தெரியலை. ரோட்டில் மட்டும்தான் டர்னிங் ரேடியஸ் சிக்கலா இருக்கு. டிராக்கில் பட்டையைக் கிளப்பும்னு நினைக்கிறேன். அதனால, அப்பாச்சி RR310 பைக்குக்கு, அப்பாகிட்ட இப்பவே ஒரு அப்ளிகேஷன் போட்டுட வேண்டியதுதான்.

பிரேம்:
பசங்களுக்கு இது ரொம்பப் பிடிக்கும். பெர்ஃபாமென்ஸ் பைக்குங்கிறதால, ரோட்டில் இதை வெச்சு சீன் போடலாம். பில்லியன் சீட், டர்னிங் ரேடியஸ்... இதெல்லாம் சின்னக் குறைகள்தான். ஆனா, விலையைக் கேட்டதும் எனக்குத் தலை சுத்திடுச்சு. இதோட மைலேஜ் எவ்வளவுனு தெரியலை. எப்படியும் 25-க்கு மேல வந்தா, நார்மல் மைலேஜ்தான். மத்தபடி, ஜென்னி மாதிரி ரேஸ் பார்ட்டிகளுக்கு மட்டும்தான் இது செட் ஆகும்.