கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

இந்தியாவின் முதல் ஸ்டார்ட் - ஸ்டாப் ஸ்கூட்டர்!

இந்தியாவின் முதல் ஸ்டார்ட் - ஸ்டாப் ஸ்கூட்டர்!
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியாவின் முதல் ஸ்டார்ட் - ஸ்டாப் ஸ்கூட்டர்!

ஃபர்ஸ்ட் ரைடு - ஹீரோ டெஸ்ட்டினி 125

இந்த ஆண்டு, 125சிசி ஸ்கூட்டர்களுக்கான ஆண்டாக அமைந்திருக்கிறது. டிவிஎஸ் என்டார்க் 125 - ஏப்ரிலியா SR 125 - சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் எனும் அந்தப் பட்டியலில் தற்போது லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பது, ஹீரோவின் டெஸ்ட்டினி 125. உலகின் மிகப் பெரிய டூ-வீலர் தயாரிப்பு நிறுவனம், சரியான நேரத்தில் 125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டில் முதன்முறையாக என்ட்ரி கொடுத்திருக்கிறது. முன்னே சொன்ன ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, ஃபேமிலி ஸ்கூட்டராகவே `டெஸ்ட்டினி 125’ பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவின் முதல் ஸ்டார்ட் - ஸ்டாப் ஸ்கூட்டர்!

எப்படி இருக்கிறது ஹீரோவின் முதல் 125சிசி ஸ்கூட்டர்?

டிசைன் மற்றும் வசதிகள்

ஃபேமிலி ஸ்கூட்டர் என்பதைப் பறைசாற்றும்விதமாக, வழக்கமான டிசைன் கோட்பாடுகளைப் பின்பற்றியே டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரை வடிவமைத்திருக்கிறது ஹீரோ. எனவே, அசப்பில் பார்க்க டூயட் 110 ஸ்கூட்டரை நினைவுபடுத்தினாலும், ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருக்கிறது (க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய Apron மற்றும் சிறிய வைஸர்). லேட்டஸ்ட் ஸ்கூட்டர்களைப்போல, இங்கே LED ஹெட்லைட் மற்றும் LED டெயில்லைட் இல்லை. டூயல் டோன் Textured சீட் நீளமாக இருப்பதுடன், இருவருக்கு சொகுசாகவும் இருக்கிறது. டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரின் பின்பக்கம் அப்படியே டூயட் 110 ஸ்கூட்டரின் ஜெராக்ஸ் ஆக இருந்தாலும், கறுப்பு நிற 10 இன்ச் அலாய் வீல்கள் புதிது. பெரிய எக்ஸாஸ்ட்தான், ஸ்கூட்டரின் ‘நீட்’ ஆன டிசைனுடன் பொருந்தாமல் தனியாக நிற்கிறது. 

இந்தியாவின் முதல் ஸ்டார்ட் - ஸ்டாப் ஸ்கூட்டர்!

ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்டிருக்கும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் ஃப்யூல் மீட்டர் - ட்ரிப் மீட்டர் - ஸ்பீடோமீட்டர் - சைடு ஸ்டாண்ட் மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர் போன்ற வழக்கமான விஷயங்களுடன், i3S இண்டிகேட்டரும் இருக்கிறது. கூடுதலாக டிஜிட்டல் கடிகாரம் இருந்திருக்கலாம். Multi Function கீ-ஸ்லாட்டில் பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் சீட்டைத் திறக்கும் வசதி இருப்பது பெரிய ப்ளஸ். சீட்டுக்கு அடியே 19 லிட்டர் இடம் இருந்தாலும், அது ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் வைப்பதற்குப் போதுமானதாக இல்லை. வழக்கமான ஸ்விட்சுகளுடன், பாஸ் லைட் மற்றும் i3S ஸ்விட்ச் வழங்கப்பட்டிருக்கிறது. தரம் ஓகே. மெட்டல் பாடி பேனல்கள் - 3D லோகோ - ஆங்காங்கே க்ரோம் வேலைப்பாடுகள் எனக் கவரும் இந்த ஸ்கூட்டரின் கட்டுமானத் தரம் மற்றும் பெயின்ட் ஃப்னிஷ் செம. ரியர் வியூ மிரர்கள், யூஸ்ஃபுல். LX வேரியன்ட்டில் டூயல் டோன் Textured சீட், அலாய் வீல்கள், முன்பக்க க்ரோம் ஃபினிஷ், USB போர்டு மற்றும் பூட் லைட், பாடி கலர் மிரர்கள் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் இருக்கும் 124.6 சிசி, சிங்கிள் சிலிண்டர் `Energy Boost Engine’, 8.7 bhp பவர் மற்றும் 1.02kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது 110சிசி டூயட் உடன் ஒப்பிடும்போது, 9 சதவிகித கூடுதல் பவர் மற்றும் 17 சதவிகித கூடுதல் டார்க். மேலும் இருக்கின்ற பவர் மற்றும் டார்க்கும், குறைவான ஆர்பிஎம்-மிலேயே வெளிப்பட்டுவிடுகின்றன. ஆனால், ஆக்டிவா 125 மற்றும் ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டருக்குச் சமமான டெக்னிக்கல் ஸ்பெக்ஸ்படி இருப்பதால், எதிர்பார்த்தபடியே பெர்ஃபாமென்ஸில் எந்த ஆச்சர்யமும் இல்லை. பவர் டெலிவரி மற்றும் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் வழக்கம்போல இருந்தாலும், இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குகிறது. இது 70 கிமீ வேகம் வரை நீடிக்கிறது. ஆனால், அதற்கும் அதிகமான வேகத்தில் (90 கிமீ டாப் ஸ்பீடு) செல்லும்போதுதான், இன்ஜின் சத்தம் கொஞ்சம் ரஃப்பாக மாறிவிடுகிறது. ஐடிலிங்கில் இது லேசாகத் தெரிந்தாலும், அதிர்வுகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் இருக்கும் ஸ்கூட்டர்களிலேயே முதன்முறையாக, ஸ்டார்ட் - ஸ்டாப் தொழில்நுட்பம் இருப்பது, டெஸ்ட்டினி 125-ல்தான். ஹீரோவின் பைக்குகளில் இதே வசதி இருந்தாலும், இங்கே அதன் இயக்கம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. இந்த சிஸ்டம் ஆன் ஆகி இருக்கும்போது, வாகனம் நிறுத்தப்பட்ட 5-வது விநாடிக்குப் பிறகு, இன்ஜின் தானாக ஆஃப் ஆகிவிடும். பைக்கைப் பொறுத்தவரை கிளட்ச் லீவரைப் பிடித்தால் இன்ஜின் மீண்டும் ஸ்டார்ட் ஆகிவிடும்தானே! டெஸ்ட்டினியில் பிரேக் லீவரைப் பிடித்துக்கொண்டு, ஆக்ஸிலரேட்டரைத் திருகினால் இன்ஜின் மீண்டும் உயிர்பெறுகிறது. இது எல்லாமே இயல்பாக நடைபெறுவதுதான் இந்தத் தொழில்நுட்பத்தில் ஹைலைட். இந்த வசதியை, தேவைப்பட்டால் ஆஃப் செய்து கொள்ளும் ஆப்ஷனும் உண்டு. இந்த ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டத்தால், 10 சதவிகிதம் வரை மைலேஜை அதிகரிக்கலாம் என்கிறது ஹீரோ. டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரின் WMTC (World Motorcycle Testing Cycle) மைலேஜ் 51.5 கி.மீ எனத் தகவல்கள் வந்திருக்கின்றன. என்னால் உடனடியாக ஆன்ரோடு மைலேஜை சோதனையிட முடியவில்லை.

ஓட்டுதல் அனுபவம்

டெஸ்ட்டினி ஸ்கூட்டரின் எடை 111.5 கிலோ. இது போட்டியாளர்களைவிட அதிகம் என்றாலும், டூயட் 110 சிசி ஸ்கூட்டரைவிட 4.5 கிலோ குறைவு! வாகனத்தில் எடை சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதால், அது ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை. இருபுறமும் அளவில் சிறிய 10 இன்ச் டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டிருப்பதால், நெரிசல் மிக்க டெல்லி நகர டிராஃபிக்கில் ஸ்கூட்டரை வளைத்து நெளித்து ஓட்டுவது சுலபமாக இருந்தது. டெஸ்ட்டினி 125-ன் சஸ்பென்ஷன், இறுக்கமாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் மிதமான செட்-அப்பைக் கொண்டிருக்கிறது. எனவே, பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் ஓட்டுதல் தரம் நன்றாகவே இருந்தாலும், ஸ்கூட்டரில் இருவர் கரடுமுரடான சாலைகளில் பயணிக்கும்போது, பின்பக்கம் கொஞ்சம் அலைபாய்வதுபோலத் தோன்றுகிறது. சிங்கிள்ஸில் நோ ப்ராப்ளம்.

இந்தியாவின் முதல் ஸ்டார்ட் - ஸ்டாப் ஸ்கூட்டர்!


இரு பக்கமும் டிரம் பிரேக் இருப்பதுடன், கூடுதலாக IBS (Integrated Braking System) தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆக்ஸஸ் 125 மற்றும் ஆக்டிவா 125 உடன் ஒப்பிடும்போது, முன்பக்க டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாகக்கூட இல்லாதது மைனஸ். ஃபேமிலி ஸ்கூட்டர்களில் டிஸ்க் பிரேக்கை விரும்புபவர்கள் குறைவு என்பதுடன், அதன் விலையும் அதிகம் என்பதை அதற்கான விளக்கமாக ஹீரோ சொல்லியிருக்கிறது. நான் டெஸ்ட் ரைடு செய்த ஸ்கூட்டரில் MRF டயர்கள் இருந்தன. என்றாலும், மற்ற டெஸ்ட்டினிகளில் CEAT மற்றும் TVS நிறுவன டயர்கள் இருந்ததைக் காண முடிந்தது. ஒட்டுமொத்த ரோடு கிரிப் மற்றும் பிரேக்கின் திறன், மனநிறைவைத் தரும்படி அமைந்திருக்கின்றன. கால் வைப்பதற்கு, போதுமான இடம் உண்டு.

ராகுல் சிவகுரு

இந்தியாவின் முதல் ஸ்டார்ட் - ஸ்டாப் ஸ்கூட்டர்!

லகின் பெரிய டூ-வீலர் நிறுவனத்தின் இந்த டெஸ்ட்டினிதான், இந்தியாவில் விலை குறைவான 125 ஸ்கூட்டர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகள், முறையே 54,650 ரூபாய் (LX) மற்றும் 57,500 ரூபாய் (VX) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆக்ஸஸின் ஆரம்ப மாடலைவிட 1,000 ரூபாயும், ஆக்டிவா 125-ன் ஆரம்ப மாடலைவிட 5,500 ரூபாயும் குறைவு! விலை அதிகமாக இருந்தாலும், VX வேரியன்ட்டே நல்ல சாய்ஸாக இருக்கும். நீட்டான டிசைன், போதுமான சிறப்பம்சங்கள், சிறப்பான தரம், மனநிறைவைத் தரும் ஓட்டுதல் அனுபவம், ஹீரோவின் பரந்து விரிந்த டீலர் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் என முழுமையான ஒரு ஃபேமிலி ஸ்கூட்டருக்கான குணாதிசயங்களுடன் தனித்து நிற்கிறது டெஸ்ட்டினி 125. ஆனால், ஏற்கெனவே இந்த கோதாவில் இருக்கும் ஆக்ஸஸ் 125 மற்றும் ஆக்டிவா 125 ஸ்கூட்டர்களுடன் இது எப்படிப் போட்டி போடும் என்பதை, காலம்தான் உணர்த்தும்.