கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

எந்த ரோட்டிலும் போகலாம்!

எந்த ரோட்டிலும் போகலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
எந்த ரோட்டிலும் போகலாம்!

ஃபர்ஸ்ட் ரைடு - சுஸூகி V-ஸ்டார்ம் 650XT

பைக் அல்லது டூ-வீலர்... எல்லாமே வெறும் தார்ச்சாலைகளில் பயணிப்பதற்கு மட்டுமே தயாரிக்கப்படுவதில்லை. ஜெர்கின் - ஹெல்மெட் - க்ளோவ்ஸ் - Knee Pad - ஜிபிஎஸ் துணையுடன் பைக்கில் டூரிங் செல்வது என்பது ஒரு வகை; சாலைகள் நிரம்பிய பாதை முதல் சாலைகளே இல்லாத பிரதேசங்களில் பயணிப்பது மற்றொரு வகை. அதற்கு ஏதுவாக விளங்குபவைதான் அட்வென்ச்சர் பைக்ஸ். தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் இந்த செக்மென்ட்டில் லேட்டஸ்ட்டாக அறிமுகமாகி இருப்பது சுஸூகி V-ஸ்டார்ம் 650XT.

எந்த ரோட்டிலும் போகலாம்!

கவாஸாகி KLR 650 மற்றும் ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்குகளைப்போல வரலாற்றுச் சிறப்புமிக்க பைக்காக இது இல்லை; என்றாலும், பிராக்டிக்காலிட்டி மற்றும் நம்பகத்தன்மை விஷயத்தில் இது நற்பெயரைப் பெற்றிருக்கிறது. எனவே, இந்தியாவில் சரியான சமயத்தில் களமிறங்கியிருக்கும் இந்த அட்வென்ச்சர் பைக், கவாஸாகி வெர்சிஸ் 650 உடன் போட்டி போடுகிறது.

எந்த ரோட்டிலும் போகலாம்!

டிசைன்

645சிசி வி-ட்வின் இன்ஜினுடன், பார்ப்பதற்குப் பெரிய பைக் போலவே காட்சியளிக்கிறது V-ஸ்டார்ம் 650XT.
Knuckle Guard, இன்ஜின் கார்டு, க்ராஷ் பார், பறவையின் கூம்பு போன்ற முன்பக்கம் என ஒரு அட்வென்ச்சர் பைக்குக்குத் தேவையான அம்சங்கள் இங்கும் இருக்கின்றன. சிங்கிள் பீஸ் சீட் சொகுசாக இருப்பதுடன், ஹேண்டில் பாரும் கைக்கு எட்டும் தூரத்தில் வாட்டமாக உள்ளது. ஃபுட் பெக்ஸும் அதற்கேற்ப பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. எதிர்க்காற்று முகத்தில் அறைவதைக் கட்டுப்படுத்தும் விண்ட் ஸ்க்ரீன், டூயல் ஹாலோஜன் ஹெட்லைட்டுக்கு மேலே வைக்கப்பட்டிருக்கிறது. இதை 9 மிமீ அளவு வரை அட்ஜஸ்ட் செய்ய முடிகிறது. அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் அனைத்துத் தகவல்களும் தெளிவாகத் தெரிகின்றன என்றாலும், அதன் டிசைன் மிகவும் பழையதாக இருக்கிறது. அதேபோல ஸ்விட்ச்களில் தேவையான கன்ட்ரோல்கள் அனைத்தும் இருப்பதுடன், அதன் தரமும் அருமை. LED டெயில்லைட்டுக்கு மேலே இருக்கும் லக்கேஜ் ராக்கில், பெரிய பாக்ஸ் வைக்க இடமிருக்கிறது.  

எந்த ரோட்டிலும் போகலாம்!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

V-ஸ்டார்ம் 650XT பைக்கில் இருக்கும் 645சிசி, V-ட்வின் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 70.7 bhp பவர் மற்றும் 6.2kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. சுஸூகி இன்ஜின்களுக்கே உரிய ஸ்மூத்னெஸ் இங்கும் தொடர்வதுடன், இன்ஜினின் மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் அதிரடியாக இருக்கிறது. இதனால் என்ன கியரில் இருந்தாலும், ஆக்ஸிலரேட்டரை முறுக்கினாலே எளிதாக ஓவர்டேக் செய்ய முடிகிறது. மேலும் டாப் கியரில் 100 கி.மீ வேகத்தில் செல்லும்போது, இன்ஜின் 4,500 ஆர்பிஎம்மில் இயங்குகிறது; இதுவே 100 கி.மீ வேகம் என்றால், இன்ஜின் 5,500 ஆர்பிஎம்மில் சுழன்று கொண்டிருக்கிறது. எனவே, நெடுஞ்சாலைகளில் ரிலாக்ஸ்டாக க்ரூஸ் செய்வது, நல்ல அனுபவமாக இருக்கும். Low RPM அசிஸ்ட் வசதி இருப்பதால், ஜெய்ப்பூர் நகர டிராஃபிக்கில் குறைவான வேகங்களில், இவ்வளவு பெரிய பைக்கை ஓட்டுவது சுலபமாகவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால், பெரிய அட்வென்ச்சர் பைக்குகளுக்கு இணையான ஃபீல் இங்கே கிடைக்கிறது. அதிக ஆர்பிஎம்களில், எக்ஸாஸ்ட் சத்தம் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. 

எந்த ரோட்டிலும் போகலாம்!

ஓட்டுதல் அனுபவம்

170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கும் V-ஸ்டார்ம் 650XT பைக்கில், வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்-அப் இருக்கிறது. வெர்சிஸ் பைக்கைவிட இதன் வீல்பேஸ் 100மிமீ அதிகமாக இருக்கிறது. மேலும் வெர்சிஸ் 650 பைக்குக்குச் சமமாக, 216 கிலோ எடையில் V-ஸ்டார்ம் 650XT இருக்கிறது. எனவே டெக்னிக்கல் விபரங்களைப் பார்க்கும்போது, பைக்கின் கையாளுமை டல்லாக இருக்கும் என நினைத்தால், கதை வேறுமாதிரி இருந்தது. ஆம், ஸ்போக் வீல்கள் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் Bridgestone Battlax Adventure A40 டியூப்லெஸ் டயர்கள், V-ஸ்டார்ம் 650XT-க்குத் தேவையான ரோடு கிரிப்பை அளிக்கின்றன. பைக்கின் அதிக எடை, ரைடருக்குச் சுமையாகத் தெரியாத விதத்தில், இதன் அலுமினிய Twin Spar சேஸி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அட்வென்ச்சர் பைக்குக்கு ஏற்ப, V-ஸ்டார்ம் 650XT-ன் சஸ்பென்ஷன் அமைந்திருக்கிறது. ரைடிங் பொசிஷன் கச்சிதமாக அமைந்திருப்பதால், சாலை மற்றும் கரடுமுரடான பாதை என எதுவாக இருப்பினும், பைக்கைச் சரியாகச் செலுத்தமுடிகிறது.  Low RPM அசிஸ்ட் வசதி, சீரான த்ராட்டில் ரெஸ்பான்ஸுக்குத் துணை நிற்கிறது. ரைடரின் பாதுகாப்புக்காக, 2 ஸ்டேஜ் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகியவை V-ஸ்டார்ம் 650XT பைக்கில் இடம்பெற்றுள்ளன. இதில் ட்ராக்‌ஷன் கன்ட்ரோலை ஆஃப் செய்ய முடியும், ஏபிஎஸ் அமைப்பை ஆஃப் செய்ய முடியாது. முன்பக்க இரட்டை 310மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க ஒற்றை 260மிமீ டிஸ்க் பிரேக்கின் ஃபீட்பேக் செம ஷார்ப்பெல்லாம் இல்லை.ஆனால், ரைடருக்குத் தேவையான நம்பிக்கை கிடைக்கிறது.

தொகுப்பு: ராகுல் சிவகுரு

எந்த ரோட்டிலும் போகலாம்!

சுஸூகி V-ஸ்டார்ம் 650XT பைக்கைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், சொகுசு என்பதே சரியாக இருக்கும். ஆஃப்ரிக்கா ட்வின் பைக்குக்கு அடுத்தபடியாக, பெர்ஃபெக்ட்டான அட்வென்ச்சர் பைக்காக இது இருக்கும் எனத் தோன்றுகிறது. டிசைனில் அதிரடியாக இல்லாவிட்டாலும், எந்தவிதமான நிலப்பரப்பிலும் அசால்ட்டாகச் செல்வது இதன் மிகப்பெரிய ப்ளஸ். எக்ஸ் ஷோரூம் விலையான 7.46 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கும் சுஸூகி V-ஸ்டார்ம் 650XT பைக், கவாஸாகியின் வெர்சிஸ் 650 பைக்கைவிட 77 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கிறது. ஆனால் பைக்கில் டூரிங் மற்றும் மிதமான ஆஃப் ரோடிங் செய்பவர்களுக்கு ஏற்ற சாய்ஸாக இது இருப்பதால், இந்தக் கூடுதல் விலையைத் தாராளமாகக் கொடுக்கலாம்.