
ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட் - ஜாவா & ஜாவா 42
நவம்பர் மாதத்தில் அறிமுகமான ஜாவா சீரிஸ் பைக்குகளின் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஓட்டுதல் அனுபவம் தவிர, மற்ற அனைத்து தகவல்களையும் கடந்த இதழில் பார்த்துவிட்டோம். விழா மேடையில் இருந்து பைக்குகளை இறக்கி சாலையில் டெஸ்ட் செய்தோம்.

இன்ஜின்
ஜாவா சீரிஸ் பைக்குகளில் இருக்கும் 293சிசி, சிங்கிள் சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்டு, Fi இன்ஜின், மஹிந்திரா மோஜோ XT300 பைக்கின் 295சிசி இன்ஜினை அடிப்படையாகக் கொண்டது. 27bhp பவர் - 2.8kgm டார்க், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், இரட்டை எக்ஸாஸ்ட் சிஸ்டம் ஆகியவை, ஏறக்குறைய மோஜோவுக்குச் சமம். என்றாலும் நேக்கட் டூரிங் பைக்கில் இருந்த பைக்கின் இன்ஜினை ரெட்ரோ க்ரூஸர் பைக்குக்கு ஏற்ப மாற்றியமைக்க, இத்தாலியைச் சேர்ந்த
Ampelio Macchi-ன் உதவியை நாடியிருக்கிறது க்ளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம். இவர் Cagiva, Aprilia, Husqvarna ஆகிய நிறுவனங்களுக்கு ரேஸிங் இன்ஜின்களைத் தயாரித்து வழங்கியவர். மேலும் SWM நிறுவனம் (Superdual 650T) மீண்டு வந்ததிலும் இவரின் பங்கு அதிகம்.
இவர் தயாரித்த இன்ஜின் பொருத்தப்பட்ட பைக்குகள், 51 உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றிருக்கின்றன. 2 ஸ்ட்ரோக் ஜாவா பைக்குகளில் இருந்ததுபோலவே இங்கும் Air Cooling Fins மற்றும் இரட்டை எக்ஸாஸ்ட் பைப் வேண்டும் என்பதில் க்ளாசிக் லெஜெண்ட்ஸ் உறுதியாக இருந்தது. பெர்ஃபாமென்ஸுக்கு ஏற்ப கியரிங்கும் மாற்றப்பட்டது.
பெர்ஃபாமென்ஸ் எப்படி?
ஜாவாவின் இன்ஜின் 7,500 rpm நெருக்கத்தில் தனது ரெட்லைனைக் கொண்டிருக்கிறது. ஆனால் மோஜோ XT300 பைக்கோ, 8,000 rpm-ல்தான் தனது அதிகபட்ச பவரையே வெளிப்படுத்தும். எனவே, மோஜோவுடன் ஒப்பிடும்போது ஜாவாவின் பவர் & டார்க் சீராக வெளிப்படுகிறது. எதிர்பார்த்தபடியே ஆரம்பகட்ட மற்றும் மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் பன்ச்சாக இருப்பதால், டாப் எண்ட்டில் இன்ஜின் சுணங்கிவிடுகிறது. அதேநேரம், விரட்டி ஓட்டும்போது ஃபுட்பெக்ஸ் மற்றும் ஹேண்டில்பாரில் அதிர்வுகளை உணர முடிகிறது. ஆனால், ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் பைக்குடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவுதான்.

சில நேரங்களில் குறைவான ஆர்பிஎம்-மிலிருந்து திடீரென பைக்கின் வேகத்தை அதிகரிக்க நேரும்போது, பவர் டெலிவரியில் திணறல் தெரிகிறது. ஆனால், நான் ஓட்டியது Prototype பைக் என்பதுடன், மக்களுக்கு விற்பனை செய்யப்படும் பைக்கில் இந்தப் பிரச்னை இருக்காது என க்ளாசிக் லெஜெண்ட்ஸ் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 135 கிமீ வேகம் வரை செல்கிறது ஜாவா பைக்.
எக்ஸாஸ்ட் சத்தத்தில் என்ன ஸ்பெஷல்?
பழைய ஜாவா பைக்கின் 2 ஸ்ட்ரோக் பைக்கின் பீட்தான், பைக் ஆர்வலர்களுக்கு சங்கீதம். அதே மேஜிக்கை 4 ஸ்ட்ரோக் இன்ஜினில் கொண்டுவருவது சாத்தியமில்லை என்றாலும், தன்னால் முடிந்த வரை அதை ரசிக்கக்கூடிய விதத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் Ampelio Macchi. மோஜோ போலவே ஜாவாவின் எக்ஸாஸ்ட் பைப்பிலும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய Decibel Killer அமைப்பு இடம்பெற்றுள்ளது. இதை முன்னும் பின்னும் சத்தத்தின் அளவுக்கேற்ப நகர்த்திக்கொள்ளலாம் என்பதுடன், தேவைப்பட்டால் அதை முழுவதுமாகக் கழற்றிக் கொள்ளவும் செய்யலாம்.
ஓட்டுதல் அனுபவம்
இன்ஜின் விஷயத்தில் மோஜோவை நாடியிருந்தாலும், ஃப்ரேம் மற்றும் சஸ்பென்ஷன் விஷயத்தில் ஜாவா தனியாகவே செயல்பட்டிருக்கிறது. டபுள் க்ரேடில் ஃப்ரேம் - டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் கேஸ் ஷாக் அப்ஸார்பர் என வழக்கமான செட்-அப்தான். இந்த 170 கிலோ பைக்கை ஓட்டுவது ஈஸியாகவும் ஜாலியாகவும் இருக்கிறது. சஸ்பென்ஷன் செட்-அப் கொஞ்சம் இறுக்கமாக இருப்பதுபோலத் தெரிந்தாலும், ஓட்டுதல் அனுபவம் சொகுசுதான்.

கிரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகமாக இருப்பதால், கரடுமுரடான சாலைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. சீட் குஷனிங் கொஞ்சம் தட்டையாக இருப்பதுதான் ஒரே மைனஸ். எனவே நீண்ட நேர/தூரப் பயணங்களுக்கு வடிவமைக்கப்பட்ட ஜாவா பைக்கின் சீட், அதற்கு ஒத்துழைக்காதோ எனத் தோன்றுகிறது. திருப்பங்களில் பைக்கைச் செலுத்துவதும் வாவ் ரகம்! கார்னரிங்கின்போதும், வளைத்து ஓட்டும்போதும், ஃபுட் பெக்ஸ் அல்லது எக்ஸாஸ்ட் பைப் சாலையில் உரசாமல் இருப்பது ப்ளஸ். MRF Nylogrip டியூப்-டயர்கள் நல்ல கிரிப். லேசான ஆஃப்ரோடிங்கும் பண்ணலாம். ஜாவா மற்றும் ஜாவா 42 இரண்டிலும் ஒரே மெக்கானிக்கல் பாகங்கள் தான் என்பதால், ஓட்டுதல் அனுபவத்தில் இரண்டு பைக்குகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன.
ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஸ்ட்ரீட் பைக் போலவே ஜாவா 42 பைக்கின் ஹேண்டில்பார் அகலமாக பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடனான 280மிமீ Bybre டிஸ்க் பிரேக் மற்றும் 153மிமீ பின்பக்க டிரம் பிரேக்கின் ஃபீட்பேக் நச். தற்போது 9,000 ரூபாய் கூடுதலாகக் கொடுத்தால், ஏபிஎஸ் உடனான பின்பக்க டிஸ்க் பிரேக் கிடைக்கிறது.

முதல் தீர்ப்பு
பழைய பைக்கின் ஃபீலை புதிய மாடலில் கொண்டுவந்த க்ளாசிக் லெஜெண்ட்ஸுக்கு லைக் போட்டே ஆகவேண்டும். டிசைனைப் பொறுத்தவரை, ஜாவா சீரிஸ் மாடர்ன் ரெட்ரோ பைக்ஸ் நல்ல முயற்சி. ஓட்டுதல், கையாளுமை, பிரேக்கிங் என எல்லாமே ஓகேதான்.
அனலாக் ஸ்பீடோமீட்டரில் கடிகாரம், கியர் இண்டிகேட்டர் இருந்திருக்கலாம். அதேபோல சைடு ஸ்டாண்டு இண்டிகேட்டரும் மிஸ்ஸிங். இந்தியா முழுக்க ராயல் என்ஃபீல்டுக்கு 800 டீலர்கள் இருக்கிறார்கள். ஜாவாவுக்கு வெறும் 105 டீலர்கள்தான். விலை விஷயத்திலும், டீலர் நெட்வொர்க்கிலும் ஜாவா இன்னும் ரசிகர்களைக் கவர்ந்தால்தான், 'வா வா' என ஜாவாவை அழைப்பார்கள் பைக்கர்கள்.
தொகுப்பு: ராகுல் சிவகுரு