கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

லாங் ரோடு ஓகே... ஆஃப் ரோடு?

லாங் ரோடு ஓகே... ஆஃப் ரோடு?
பிரீமியம் ஸ்டோரி
News
லாங் ரோடு ஓகே... ஆஃப் ரோடு?

ஒப்பீடு: பெனெல்லி TRK 502 VS கவாஸாகி வெர்சிஸ் 650

ப்போதெல்லாம் கொடுக்கும் காசுக்கு மதிப்பாக இருப்பதால், பெரிய பைக்குகள் வணிக ரீதியிலும் ஹிட் அடித்துவிடுகின்றன. அதில் பெனெல்லிக்கு முக்கிய இடம் உண்டு. பெனெல்லியின் லேட்டஸ்ட் பைக்கான TRK 502 பைக்கும் அதே பாணியைப் பின்பற்றித்தான் வெளிவந்திருக்கிறது.  ட்ரையம்ப் டைகர் மற்றும் ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் பைக்குகளை வாங்க முடியாதவர்களுக்கான சாய்ஸாகத் திகழ்கிறது TRK 502.  ஆனால், இதே செக்மென்ட்டின் ஃபேவரைட் பைக்கான கவாஸாகியின் வெர்சிஸ் 650 பைக்கை இது தோற்கடிக்குமா?

லாங் ரோடு ஓகே... ஆஃப் ரோடு?

டிசைன்

பெனெல்லி லோகோவை எடுத்துவிட்டுப் பார்த்தால் அசப்பில் ட்ரையம்ப் டைகர் சீரிஸ் பைக்குகளை நினைவுபடுத்துகிறது TRK 502. எனவே, இதில் இருப்பது 500சிசி இன்ஜினாக இருப்பினும், ஒரு பெரிய பைக்கில் இருப்பதுபோன்ற உணர்வு கிடைக்கிறது. கவாஸாகிக்கு அருகே நிறுத்தும்போது, பெனெல்லி அளவில் பெரிதாக இருக்கிறது. அதாவது கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கின் அகலம் 840மிமீ என்றால், TRK 502 பைக்கின் அகலம் 915மிமீ. ஆனால், பெனெல்லியின் பெட்ரோல் டேங்க் பார்க்க பல்க்காகத் தெரிந்தாலும், அது கவாஸாகியைவிட 1 லிட்டர் குறைவு. (வெர்சிஸ் 650: 21 லிட்டர், TRK 502: 20 லிட்டர்).

பெனெல்லியை உற்றுநோக்கும்போது, அதில் அதிகப்படியான மெட்டல் இடம்பெற்றிருப்பது தெரிகிறது. பின்பக்க டிஸ்க் பிரேக் ஹோல்டர், விண்ட் ஸ்க்ரீனுக்குத் தோள்கொடுக்கும் ராடு, செமி ஃபேரிங்கை முழுவதுமாகச் சுமக்கும் ஃப்ரேம் ஆகியவை இதற்கான உதாரணங்கள். இதனால் TRK 502 பைக்கின் எடை 235 கிலோ. இது ஒரு 500சிசி பைக்குக்கு மிகவும் அதிகம்! ட்ரையம்ப் டைகர் 800 XRx பைக் இதைவிட இருமடங்குக்கும் அதிகமான பவரை வெளிப்படுத்துவதுடன், எடையும் 16 கிலோ குறைவு. இந்தக் குறைபாட்டை, 800மிமீ சீட் உயரத்தைக் கொடுத்து கொஞ்சம் சரிக்கட்டியிருக்கிறது பெனெல்லி (உபயம்: சஸ்பென்ஷன் Lowering Kit). இதனால் உயரம் குறைவானவர்கள்கூட, இந்த பைக்கை எளிதாகக் கையாள முடியும்.

பைக்கின் அளவுகளைப்போலவே, TRK 502-ன் சீட்கள் பெரிதாக உள்ளன. எனவே, நீண்ட தூர/நேரப் பயணங்களுக்கு பெனெல்லிதான் சொகுசு. இரண்டு பைக்கின் ஸ்விட்ச்களும் ஓகே ரகம்தான். ஃபிட் அண்டு ஃபினிஷ் விஷயத்தில் கவாஸாகி வெர்சிஸ் 650 முன்னிலை வகிக்கிறது என்றாலும், இதுவரை வெளிவந்த பெனெல்லி பைக்குகளிலேயே சிறப்பான ஃபிட் அண்டு ஃபினிஷ் கொண்டிருப்பது TRK 502 தான். இதில் ஸ்டாண்டர்டாகக் கிடைக்கும் 2A USB சார்ஜிங் பாயின்ட், இன்ஜினுக்கான க்ராஷ் கார்டு மற்றும் Bash Plate போன்ற விஷயங்கள் எதுவுமே கவாஸாகியில் கிடையாது. மற்றபடி பெனெல்லி பைக்கில் ஆப்ஷனலாகக் கிடைக்கும் Full Pannier Luggage சிஸ்டத்தின் விலை 70,000 ரூபாய் என்பது மிகவும் அதிகம். 

லாங் ரோடு ஓகே... ஆஃப் ரோடு?

எர்கானமிக்ஸ்

இந்த இரு அட்வென்ச்சர் பைக்குகளைப் பார்க்கும்போது, இவை சாலைப் பயன்பாட்டைப் பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்பது தெரிகிறது. இதில் இருக்கக்கூடிய 17 இன்ச் அலாய் வீல்கள் அதற்கான எடுத்துக்காட்டு. கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கை ஓட்டும்போது, ஒரு அட்வென்ச்சர் பைக் என்பதைவிட ஸ்போர்ட்ஸ் டூரரில் இருப்பது போன்ற உணர்வே அதிகமாக உள்ளது.

அதிக ஸ்டீயரிங் லாக் இருப்பதால், பெனெல்லி பைக்கில் யூ-டர்ன் எடுப்பது சுலபமாக இருக்கலாம். ஆனால், TRK 502 பைக் ஏற்கெனவே அதிக அகலத்தில் இருப்பதுடன், அதில் இருக்கக்கூடிய க்ராஷ் கார்டு கூடுதலாக 6 இன்ச் அகலத்தைத் தருகிறது. இதனால் நம் ஊர்ச் சாலைகளில் கார்களுக்கு இடையே கட் அடித்து ஓட்டுவது கஷ்டம். இதற்கு கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கே சரியான சாய்ஸ். உயரமான பொசிஷனிங் - கச்சிதமான அகலத்தில் இருக்கும் ஹேண்டில்பார் மற்றும் பைக்கின் மெலிதான சைஸ் ஆகியவை அதற்குத் துணை நிற்கின்றன. எனவே, பார்க்க திடகாத்திரமாக இருந்தாலும், தினசரிப் பயன்பாட்டுக்கும் ஏற்ற பைக் வெர்சிஸ் 650. இரண்டிலுமே பேரலல் ட்வின் இன்ஜின் இருப்பதால், நகரச் சாலைகளில் இவற்றைப் பயன்படுத்தும்போது இன்ஜின் சூட்டை ரைடரால் உணர முடியும்.

லாங் ரோடு ஓகே... ஆஃப் ரோடு?

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

235 கிலோ எடையுள்ள பைக்கில் 500 சிசி இன்ஜினே இருப்பதால், பவர் டு வெயிட் ரேஷியோவில் பின்தங்கிவிடுகிறது பெனெல்லி TRK 502. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ஆன் ரோடு பெர்ஃபாமென்ஸ் அவ்வளவு மோசமாக இல்லை. 100 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்வது சுலபமாக இருப்பதுடன், டாப் கியரில் 120 கி.மீ வேகத்தை எட்டும்போது, இன்ஜின் ரிலாக்ஸ்டாக 6,000 ஆர்பிஎம்-மில் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அதிர்வுகளை ரைடரால் உணர முடிவதுடன், 6,500 ஆர்பிஎம்-மைத் தாண்டிய பிறகு இது இன்னும் அதிகமாவது மைனஸ். கவாஸாகியின் 650சிசி இன்ஜினும் ரிஃபைண்டு ரகம் இல்லாவிட்டாலும், பெனெல்லியுடன் ஒப்பிடும்போது ஸ்மூத்.

பவர் (0 - 100கிமீ வேகம்: 6.7 விநாடி) மற்றும் ஸ்மூத்னெஸ் விஷயத்தில் கோட்டை விட்டாலும், எக்ஸாஸ்ட் சத்தத்தில் செமையாக ஸ்கோர் செய்கிறது TRK 502. இது ஒன்றே TRK 502 பைக்கின் விற்பனைக்குக் கைகொடுக்கலாம். இதனுடன் ஒப்பிடும்போது, இன்ஜின் ஃபீல் விஷயத்தில் எந்த எக்ஸைட்மென்ட்டும் வெர்சிஸ் 650 கொண்டிருக்கவில்லை. 0 - 100 கி.மீ வேகத்தை பெனெல்லியைவிட இது 2 விநாடி முன்பாகவே எட்டினாலும், பவர் டெலிவரி மற்றும் எக்ஸாஸ்ட் சத்தம் இரண்டும் அதிரடியாக இல்லாதது மைனஸ். அதேபோல த்ராட்டில் ரெஸ்பான்ஸிலும் ஸ்மூத்னெஸ் வேண்டும். ஸ்லிப்பர் க்ளட்ச் இல்லாததும் நெருடல். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கவாஸாகியின் குணாதிசயம் நம் ஊர்ச் சாலைகளுக்குப் பொருந்திப்போவது வரவேற்கத்தக்கது.

லாங் ரோடு ஓகே... ஆஃப் ரோடு?

ஓட்டுதல் அனுபவம்

வெர்சிஸ் 650-ன் இன்ஜின் செட்-அப்பில் மிஸ் செய்ததை, சஸ்பென்ஷன் செட்-அப்பில் ஈடுகட்டிவிடுகிறது கவாஸாகி. ஷோவா நிறுவனத்தின் SFF USD சஸ்பென்ஷனின் Preload & Rebound Damping ஆகியவற்றை அட்ஜஸ்ட் செய்ய முடியும். எனவே, குறைவான வேகத்தில் சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமாக இருப்பதுபோலத் தோன்றினாலும், அதிக வேகத்தில் பைக்கின் அசத்தலான நிலைத்தன்மைக்கு இது கைகொடுக்கிறது. மேடு-பள்ளங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளையும் இது சிறப்பாக உள்வாங்கிக்கொள்கிறது. பின்பக்க மோனோஷாக்குக்கு Preload அட்ஜஸ்ட் வசதி மட்டுமே வழங்கப்பட்டிருந்தாலும், கூடுதலாக ரிமோட் அட்ஜஸ்டர் தரப்பட்டிருப்பது நைஸ். இது ஃபுல் லோடில் பைக்கில் செல்லும்போது  ரைடருக்குப் பயன்படும்.

பெனெல்லியும் இந்த விஷயத்தில் சளைக்கவில்லை. வெர்சிஸில் முன்பக்க ஃபோர்க் 41 மிமீ அளவில் இருந்தால், TRK 502 பைக்கின் முன்பக்க USD ஃபோர்க் 50மிமீ. இதை அட்ஜஸ்ட் செய்ய முடியாது என்றாலும், பின்பக்க மோனோஷாக்கை தேவைக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். இவை ஒன்றுசேர்ந்து நல்லபடியான ஓட்டுதலுக்கு உத்தரவாதம் கொடுத்தாலும், கவாஸாகிதான் இந்த ஏரியாவில் அட்டகாசப்படுத்தியிருக்கிறது.

ஷார்ப் ஸ்டீயரிங் செட்-அப் இருப்பதால், 235 கிலோவாக இருந்தாலும், பெனெல்லியை திருப்பங்களில் நம்பிக்கையுடன் வளைத்து நெளித்து ஓட்ட முடிகிறது. TRK 502 பைக்கில் இருக்கக்கூடிய பைரலியின் ஏஞ்சல் ST டயர்கள், வெர்சிஸ் 650 பைக்கில் இருக்கும் டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் டயர்களைவிட ரோடு கிரிப்பில் அசத்துகின்றன.

இரண்டு பைக்கின் முன்பக்கத்திலும் இரட்டை டிஸ்க் பிரேக்ஸ் இருப்பதுடன், இவற்றின் பெர்ஃபாமென்ஸும் ஓகே. இதில் கவாஸாகியின் பீட்பேக் நச் என்பதால், குறைவான பிரேக்கிங் டிஸ்டன்ஸ் கியாரன்ட்டி. இவை இரண்டுமே அட்வென்ச்சர் பைக்குகளாக இருந்தாலும், பக்கா ஆஃப் ரோடிங்குக்கு ஈடுகொடுக்காது. ஆனால், போதுமான கிரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் சஸ்பென்ஷன் டிராவல் இருப்பதால், லைட் ஆஃப் ரோடிங் செய்யலாம். TRK 502 பைக்கில் ஏபிஎஸ் அமைப்பை ஆஃப் செய்யும் வசதி இருப்பது ஓகே என்றாலும், அது இரண்டு வீல்களிலும் ஏபிஎஸ்-ஸை ஆஃப் செய்துவிடுவது மைனஸ்.

லாங் ரோடு ஓகே... ஆஃப் ரோடு?

துவரை வெளிவந்த பெனெல்லி பைக்குகளிலேயே, TRK 502 பைக்தான் மாடர்ன். சொகுசு, கையாளுமை, பெர்ஃபாமென்ஸ் ஆகியவற்றில் மனநிறைவு கிடைத்தாலும், பைக்கின் எடை மற்றும் இன்ஜின் ரிஃபைன் மென்ட்தான் நெருடல். பைக்கின் விலையுடன் ஒப்பிடும்போது, இந்தக் குறைகளை ஏற்றுக்கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால், கவாஸாகியின் சிறிய ஆனால் விலை அதிகமான வெர்சிஸ் X-300 மற்றும் வெர்சிஸ் 650 ஆகிய அட்வென்ச்சர் பைக்குகளுக்கு இடையே, TRK 502-யைத் துல்லியமாகப் பொசிஷன் செய்திருக்கிறது பெனெல்லி. பட்ஜெட்டில் ஒரு பெரிய அட்வென்ச்சர் பைக் வேண்டுபவர்களுக்கு, இதுதான் சரியாக இருக்கும். 

பெனல்லி பைக்கைவிட 1.88 லட்சம் ரூபாய் அதிக விலையில் கிடைத்தாலும், அந்தக் காசுக்கேற்ற அம்சங்கள் வெர்சிஸ் 650 பைக்கில் இடம்பிடித்துள்ளன. எனவே, பட்ஜெட் ஒரு தடையில்லை என்றால், இந்த கவாஸாகிதான் பக்காவான சாய்ஸாக இருக்கும். பவர்ஃபுல் பெர்ஃபாமன்ஸ், மிகச் சிறப்பான ஓட்டுதல் அனுபவம், பைக்கின் கட்டுமானத்தரம் ஆகியவை பெரிய ப்ளஸ். எனவே, நீண்ட தூரப் பயணங்களை அதிகம் மேற்கொள்பவராக இருந்தால், ப்ரீமியமான கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்குக்குத்தான் எங்கள் ஓட்டு!

- தொகுப்பு:  ராகுல் சிவகுரு