கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

இந்தியாவின் ஒரே ஒரு ஆஃப்ரோடு பயிற்சியாளர்!

ஆஃப்ரோடு பயிற்சியாளர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஃப்ரோடு பயிற்சியாளர்

பேட்டி: ஆஃப்ரோடு பயிற்சியாளர்

ர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அட்வென்ச்சர் ரைடிங் பயிற்சியாளர் என்றால், ஷானவாஸ் கரீம் தவிர இந்தியாவில் வேறு எவரும் இல்லை. International Instructor Academy (IIA)-யால் அங்கீகரிக்கப்பட்ட உலகின் இளம் பயிற்சியாளர். அதாவது, ஷானவாஸிடம் பயிற்சி பெற்று சான்றிதழ் வாங்கினால், உலகின் எந்த டர்ட் டிராக்கிலும் நீங்கள் பைக் ஓட்டலாம்; ரேஸ் போகலாம்; பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். தற்போது ராயல் என்ஃபீல்டு, பிஎம்டபிள்யூ, டுகாட்டி போன்ற நிறுவனங்களோடு இணைந்து, இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்று ஆஃப்ரோடு பயிற்சியுடன், பாதுகாப்பான பயணங்களைப் பற்றியும் இவர் சொல்லிக்கொடுக்கிறார். பிஎம்டபிள்யூ GS எக்ஸ்பீரியன்ஸ் ரைடுக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்த ஷானவாஸிடம் பேசினேன்.

இந்தியாவின் ஒரே ஒரு ஆஃப்ரோடு பயிற்சியாளர்!

``எத்தனை வருஷமாக ஆஃப்ரோடு பயிற்சி தருகிறீர்கள்?’’

``கடந்த நான்கு ஆண்டுகளாக அட்வென்ச்சர் ரைடிங் பயிற்சி கொடுக்கிறேன். இப்போது சர்க்யூட் ரேஸ் பயிற்சிகளையும் தொடங்கியிருக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பைக் ரேஸ் துறையில் வலம்வருகிறேன். பல நாடுகளில், பல சர்க்யூட் மற்றும் டர்ட் டிராக்கில் பைக் ஓட்டிய பயிற்சியும் அனுபவமும் இருப்பதால், இந்தியாவில் பயிற்சி தருவது பெரிய சவாலாகத் தெரியவில்லை. தற்போது இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று, அவர்களுக்கு அவர்களின் இடத்திலேயே பயிற்சி தந்து வருகிறேன்.’’

``நீங்கள் எதற்காக ஆஃப்ரோடு பயிற்சி எடுக்கத் தொடங்கினீர்கள்?’’

``சர்க்யூட் ரேஸில் ஈடுபட்டிருந்த சமயம், எனக்கு ஒரு Highside க்ராஷ் நடந்தது. எலும்புகள் நொறுங்கிவிட்டன. தேர்ச்சி பெறுவதற்குப் பல மாதம் ஆகிவிட்டது. இன்னொரு க்ராஷ் நடந்தால் என் ரேஸ் வாழ்க்கையே முடிந்துவிடும் என்ற நிலையில்தான், ரேஸர்களுக்கு ஆஃப்ரோடு பயிற்சி அவசியம் என்பது புரிந்தது. ரேஸ் டிராக்கில் எவ்வளவு வேகமாக ஓட்டினாலும், ஆஃப்ரோட்டில் கிடைக்கும் அந்த ஃபன், எனக்கு வேறு எங்கேயும் கிடைக்கவில்லை. இப்போது, பயிற்சியாளராக மாறிய பிறகும், பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்.’’

இந்தியாவின் ஒரே ஒரு ஆஃப்ரோடு பயிற்சியாளர்!

``ரேஸ் என்றாலே நினைவுக்கு வருவது சர்க்யூட்தான். அப்படியிருக்க, ஆஃப்ரோடு பயிற்சி என்பது எந்த அளவுக்கு அவசியம்?’’

``சர்க்யூட் ரேஸ் என்பது, வேகமான பைக்கில் உட்கார்ந்து ஆக்ஸிலரேட்டரைத் திருகுவது மட்டுமல்ல. ரேஸில் முக்கியமானது டைனமிக்ஸ். நாம் பைக்கில் இருக்கும்போது உடலை எப்படி இயக்குகிறோம் என்பதைப் பொறுத்தே, நம்முடைய ஒவ்வொரு கார்னரும் அமையும். ரைடிங் டைனமிக்ஸை, ஆஃப்ரோடு தவிர வேறு எங்குமே தெளிவாகக் கற்றுக்கொள்ள முடியாது. தற்போது இந்தியாவின் வேகமான பைக் ரேஸர்களாக இருக்கும் எல்லோருமே, ஆஃப்ரோடில் பயிற்சி எடுத்தவர்கள்தான். இதுமட்டுமல்ல இந்தியாவில் ஆஃப்ரோடுக்கென்றே பிரத்யேகமாக டர்ட் டிராக், மோட்டோ க்ராஸ், என்ட்யூரோ, ஃபிளாட் டிராக், டக்கார், க்ராஸ் கன்ட்ரி ராலி, ரைடு டி ஹிமாலயா போன்ற ரேஸ்கள் உள்ளன. CS சந்தோஷ், KP அரவிந்த், அப்துல் வாஹித், ஆஷிஷ் ரவ்ரானே போன்ற திறமையான பைக் ரேஸர்களும் இருக்கிறார்கள்.’’

இந்தியாவின் ஒரே ஒரு ஆஃப்ரோடு பயிற்சியாளர்!

``எல்லா திறமையான ரேஸர்களாலும், திறமையான பயிற்சியாளர்களாக இருக்க முடிவதில்லையே ஏன்?’’

``வேகமான மனிதர்களுக்குப் பொறுமை அதிகம் இருப்பதில்லை என்றுகூட வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு கற்றல்திறன் இருக்கும். பயிற்சி என்பது வேகத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டதல்ல. பொறுமையும், தன்னம்பிக்கையை அளிப்பதற்கான மனநிலையும் வேண்டும். மாணவர்களுக்கு இருக்கும் பயத்தைக் குறைத்து, நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.’’

இந்தியாவின் ஒரே ஒரு ஆஃப்ரோடு பயிற்சியாளர்!

``அட்வென்ச்சர் ரைடிங்குக்கு சில டிப்ஸ்?’’

``ஆஃப்ரோடில் பைக் ஓட்டுவதற்கு நல்ல ஒரு பைக், நம்பகத்தன்மையான ரைடிங் கியர் போதும். கீழே விழுவதை நினைத்து பயப்படாமல், எப்போது விழுவோம் எனக் காத்திருங்கள். உங்கள் பார்வை, பாடி பொசிஷன் மற்றும் பைக்கின் கன்ட்ரோல் மூன்றுமே ஒருநிலையாக இருக்கவேண்டும். இதெல்லாம் எப்படிச் செய்வது என்பதைவிட எதற்காக என்பதைத் தெரிந்திருக்கவேண்டும்.

ஆக்ஸிலரேட் செய்யும்போது உடலை முன்பக்கமும், பிரேக் பிடிக்கும்போது பின்பக்கமும் சாய்த்து முதலில் சீட்டில் உட்கார்ந்து பிறகு நின்று பைக்கை ஓட்டுங்கள். 6-7 மீட்டர் வட்டத்துக்குள் முடிந்த அளவு உடலைச் சாய்த்து, தொடர்ச்சியாக பைக் ஓட்டிப் பழகுங்கள். பைக்கில் நின்றுகொண்டு பாம்புபோல வளைந்து வளைந்து ஓட்டுவதால், த்ராட்டில் கன்ட்ரோல் கிடைக்கும். அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டால் எதுவுமே சாத்தியம்!

- ரஞ்சித் ரூஸோ, படங்கள்: துளசிதரன்