கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

நீங்களும் ரேஸர் ஆகலாம்! - தொடர் - 5

நீங்களும் ரேஸர் ஆகலாம்! - தொடர் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் ரேஸர் ஆகலாம்! - தொடர் - 5

ரேஸ்களில் இத்தனை தாண்டித்தான் மோட்டோ ஜிபி!

புதுமுக நடிகர்கள் எல்லோருக்குமே சூப்பர் ஸ்டார் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல், ரேஸில் புதுசாக நுழைபவர்களின் லட்சியம் ஒன்றே ஒன்றுதான். அது, மோட்டோ ஜிபி. ஆம்... நிஜமும் அதுதான். ரேஸ் உலகின் சொர்க்கமும் உச்சமும் மோட்டோ ஜிபிதான். மோட்டோ ஜிபியில் கலந்துகொள்வது என்றால் சும்மாயில்லை. அது எவரெஸ்ட்டில் ஏறி உச்சியைத் தொடுவது மாதிரி. இதற்கு கடின உழைப்பும், முறையான ஸ்பான்ஸர்ஷிப்பும் வேண்டும். அதற்கு இந்தியாவில் முதலில் என்னென்ன ரேஸ்கள் உண்டு? அவற்றின் விவரங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். மோட்டோ ஜிபி-க்கு முன்பு இத்தனை ரேஸ்களிலும் நீங்கள் டயர் பதித்திருக்க வேண்டும். அவற்றின் லிஸ்ட் என்னவென்று பார்க்கலாம்?

நீங்களும் ரேஸர் ஆகலாம்! - தொடர் - 5

குரூப் `D’ ஸ்டாக் 165 நோவிஸ் கேட்டகிரி

நீங்கள் ரேஸர் ஆவதற்கு அடிப்படை ரேஸ் இதுதான். அகாடமியில் கலந்து கொண்டு பயிற்சி எடுத்துவிட்டு, உங்களை வரவேற்கும் முதல் ரேஸ் இது. இதில் புது ரைடர்கள் மட்டும்தான் கலந்துகொள்ள முடியும். பைக்குகளைப் பொறுத்தவரை எந்த ரெகுலேஷன்களும் இல்லை. 150-ல் இருந்து 165 சிசி வரை R15, CBR, அப்பாச்சி, ஜிக்ஸர் என எந்த பைக்கில் வேண்டுமானாலும் மிரர், சாரி கார்டைக் கழற்றி வைத்துவிட்டுக் கலந்து கொள்ளலாம்.

குரூப் `C’ ப்ரோ ஸ்டாக்-165 சிசி ஓப்பன் கேட்டகிரி

குரூப் `D’-ல் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களில் ஜெயித்தவர்கள், இந்த குரூப் `C’ நேஷனல் சாம்பியன்ஷிப் ரேஸில் கலந்துகொள்ள வேண்டும். பைக்கைப் பொறுத்தவரை அதே 165 சிசி வரைதான். ஆனால், இதில் எக்ஸாஸ்ட், ஃபேரிங், ஸ்ப்ராக்கெட் போன்றவற்றை மாடிஃபை செய்து கொள்ளலாம்.

குரூப் `B’ சூப்பர் ஸ்போர்ட்ஸ் 165 சிசி

குரூப் `C’யில் மூன்று இடம் பிடித்தவர்கள் கலந்து கொள்ளக்கூடிய அடுத்த ரேஸ். இது ஃபேக்டரி டீம்களுக்கு இடையே நடக்கும் ரேஸ் என்பதால், நேஷனல் சாம்பியன்ஷிப்பில் உங்கள் திறமையைப் பார்த்து ஹோண்டா, டிவிஎஸ், சுஸூகி, யமஹா போன்ற நிறுவனங்களின் கண்களில் பட்டீர்கள் என்றால் உங்களுக்கு அதிர்ஷ்டம்தான். கம்பெனியே உங்கள் செலவைப் பார்த்துக் கொள்ளும். பணம் கட்டி தனியார் அகாடமிகள் மூலமாகவும் கலந்து கொள்ளலாம். கொஞ்சம் செலவு அதிகம்.

300 சிசி - 400 சிசி கேட்டகிரி

சூப்பர் ஸ்போர்ட்ஸ் 165 சிசி-க்கு அடுத்த ரேஸ் இது. திறமை இருக்கும்பட்சத்தில் இதிலும் கம்பெனி மூலமாகவே உள்ளே நுழை யலாம். பிரைவேட்டாகவும் ரேஸ்கள் நடக்கின்றன. கேடிஎம் டியூக் பைக் ரேஸ்கள் இதில் பிரபலம். இதிலும் சிசி மட்டும் 400-ஐத் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஸ்ப்ராக்கெட், வீல், ஃபோர்க், சஸ்பென்ஷன், எலெக்ட்ரிக்கல் விஷயங்கள் என எதை வேண்டுமானாலும் மாற்றிக்கொண்டு ரேஸ் ஓட்டலாம்.

இந்த நான்குமே நேஷனல் சாம்பியன்ஷிப் ரேஸ்கள். இதற்குப் பிறகு இந்தியாவில் கேட்டகிரிகள் எதுவும் உருவாக்கவில்லை. இந்த நான்கு கேட்டகிரிகள் தவிர, அற்புதமான வரப்பிரசாதம் ஒன்று இருக்கிறது. அது...

ஒன்மேக் நேஷனல் சாம்பியன்ஷிப்

மேற்கண்ட க்ளாஸ் ரேஸ்களில் சுயமாகக் கலந்துகொள்ள உங்களுக்கு பணம் இல்லை; பைக் இல்லை; ஸ்பான்ஸர் கிடைக்கவில்லை என்றால், இருக்கவே இருக்கிறது ஒன்மேக் நேஷனல் சாம்பியன்ஷிப் ரேஸ். இது எளிய ரைடர்களின் திறமையை வெளிக் கொணரும் அற்புதமான போட்டி. இதை `சப்போர்ட் ரேஸ்’ என்றும் சொல்லலாம். இந்த ஒன்மேக்கில் கலந்துகொள்ள உங்களுக்குத் தேவையான இரண்டே இரண்டு விஷயம், சில ஆயிரங்களும், ஏதாவது ட்ரெயினிங் அகாடமியின் சான்றிதழும் மட்டும்தான்.

இந்த ஒன்மேக் ரேஸ்களை ஹோண்டா, டிவிஎஸ், சுஸூகி, யமஹா என எல்லா நிறுவனங்களும் நடத்துகின்றன. யார் வேண்டுமானாலும் இதற்கு அப்ளை செய்யலாம். இதில் தகுதிபெற்றால், நீங்கள் ஒன்மேக் நேஷனல் சாம்பியன் ரேஸர்தான். சுஸூகி ஒன்மேக் என்றால், சுஸூகியின் பைக்குகள் மட்டும்தான் ஓட்ட வேண்டும். ஹோண்டா ஒன்மேக்கில் ஹோண்டா பைக்குகள் மட்டும்தான். இந்த ஒன்மேக்தான் இப்போது திறமையான பல ரைடர்களை உருவாக்கியிருக்கிறது.

ஆசிய டேலன்ட் கப்

இந்தியாவிலிருந்து அடுத்தகட்டத்துக்கு நகர்பவர்களுக்கான சாய்ஸ், இந்த ஆசிய டேலன்ட் கப். ஜப்பான், இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, கத்தார் போன்ற ஆசிய நாடுகளில் நடக்கும் டேலன்ட் கப்களில் கலந்துகொள்ளலாம். ஹோண்டா, சுஸூகி போன்ற நிறுவனங்கள் அவர்களே ரைடர்களை அழைத்துச் செல்கிறார்கள். ஆண்டுக்கு இரண்டு இந்திய ரைடர்கள், ஆசிய டேலன்ட் கப்பில் கலந்துகொள்கிறார்கள்.

400சிசி-யில் ஜெயித்தால்தான் இந்த ஆசிய டேலன்ட் கப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்பதல்ல. எந்த ரேஸிலும் உங்கள் திறமையை நிரூபித்துவிட்டு, இந்த செலெக்‌ஷன் ரேஸுக்கு அப்ளை செய்யலாம். கம்பெனிக்கு உங்கள் மீது நம்பிக்கையிருந்தால் நீங்கள் ஆசிய டேலன்ட் கப் ரைடர் ஆகலாம். இதிலும் சுஸூகி டேலன்ட் கப், சுஸூகி ட்ரீம் கப், ரோடு டு ரூக்கி கப் (ஸ்பெயின் நாட்டுக்கு உங்களை சுஸூகியே அழைத்துச் செல்லும்) என்று சில கேட்டகிரிகள் உண்டு. நம் ஊர் ஒன்மேக் மாதிரி ஆசியாவின் ஒன்மேக் இது. இந்தியாவைத் தாண்டி உங்கள் திறமையை விரிய வைக்கும் ரேஸ்கள் இவை.

நீங்களும் ரேஸர் ஆகலாம்! - தொடர் - 5

ஆசிய ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப்

ஆசிய டேலன்ட் கப் செலக்‌ஷன் ரேஸில் கலந்து ஜெயித்துவிட்டால், உங்களின் அடுத்த இலக்கு ஆசிய சாம்பியன்ஷிப்தான். இங்கே நேஷனல் சாம்பியன்ஷிப் அடித்துவிட்டு, அடுத்து ஆசிய சாம்பியன்ஷிப் கப்பும் அடிக்கலாம்.

ஆசிய சாம்பியன்ஷிப் அடிச்சாச்சு! அடுத்து மோட்டோ ஜிபிதான் என்று பெருமூச்சு விடாதீர்கள். நம் ஊருக்கு நோவிஸ், எக்ஸ்பர்ட், ஓப்பன் - அதன்பிறகு நேஷனல் சாம்பியன்ஷிப் என்பதுபோல், மோட்டோ ஜிபிக்கும் மூன்று கேட்டகிரிகள் உண்டு.

மோட்டோ 3, மோட்டோ 2... அடுத்துதான் மோட்டோ ஜிபி.

இவையெல்லாமே மோட்டோ ஜிபியில் நுழைய வழிகள். இப்ப சொல்லுங்க... மோட்டோ ஜிபின்னா சும்மாயில்லைதானே!

- வ்வ்ர்ர்ரூம்

(தொகுப்பு: தமிழ்)

மோட்டோ ஜிபி-யில் கலந்துகொள்ள...
1. ரேஸிங் அகாடமியில் சேர வேண்டும்.
2. ரேஸிங் லைசென்ஸ் பெற வேண்டும்.
3. நோவிஸ் கேட்டகிரியில் ரேஸ்
4. ஓப்பன் கேட்டகிரியில் கலந்துகொள்ள வேண்டும்.
5. ஒன்மேக் அல்லது நேஷனல் சாம்பியன்ஷிப் ஓட்ட வேண்டும்.
6. ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெற வேண்டும்.
7. மோட்டோ 3
8. மோட்டோ 2
9. மோட்டோ ஜிபி

- சுதாகர்