கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

இது வெறும் ட்ரெய்லர்தான்!

இது வெறும் ட்ரெய்லர்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
இது வெறும் ட்ரெய்லர்தான்!

ஃபர்ஸ்ட் ரைடு: ராயல் என்ஃபீல்டு ட்ரையல்ஸ் 500

பைக் நிறுவனங்கள் சஸ்பென்ஷனில் புரட்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில், ராயல் என்ஃபீல்டிடமிருந்து விற்பனைக்கு வந்ததுதான், புல்லட் ட்ரையல்ஸ். 1948-ம் ஆண்டு, கிர்டர் (Girder) சஸ்பென்ஷனில் இருந்து மேம்பட்டு டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் மற்றும் ஸ்விங் ஆர்ம் என நவீனமாக விற்பனைக்கு வந்தது ட்ரையல்ஸ். `புல்லட்’ என்பதுதான் நிறுவனம் வைத்த பெயர். ஆனால், `International six days trial’ மற்றும் `Scottish six days trial’ போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றதால் `புல்லட் ட்ரையல்ஸ்’ என்று செல்லமாக அழைக்கத் தொடங்கி விட்டார்கள். ராயல் என்ஃபீல்டின் நெடிய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்த இந்த ட்ரையல்ஸ் பைக்கை கெளரவிக்கும் விதமாக, புல்லட் ட்ரையல்ஸ் 350 மற்றும் 500 பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. தொழிற்சாலையிலேயே கஸ்டமைஸ் செய்யப்பட்ட இந்த பைக், ஆஃப்ரோட்டில் எப்படி இருக்கிறது?

இது வெறும் ட்ரெய்லர்தான்!
இது வெறும் ட்ரெய்லர்தான்!

ட்ரையல்ஸ் 350, சிவப்பு நிற ஃப்ரேமுடன் சில்வர் நிறத்தில் வருகிறது. ட்ரையல்ஸ் 500, குரோம் பாடியோடு பச்சை நிற ஃப்ரேமுடன் வருகிறது. இதில் க்ளாஸிக்கில் இருக்கும் அதே 19/18 இன்ச் வீல்கள்தான் வருகின்றன. ஆஃப்ரோடுக்கு ஏற்றபடி சியட் ப்ரோ கிரிப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இருபுறமும் டிஸ்க் பிரேக்ஸ். முன்பக்கம் ஃபெண்டர் சிறியதாக இருக்கிறது; ஒயர் போன்ற டியூபுளார் ஸ்டேவில் இது பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க ஃபோர்க்கில் ரப்பர் கெய்ட்டர்ஸ் (Gaiters) இருக்கின்றன. ஹெட்லைட் லென்ஸ் புரொடெக்டர், ஹேண்டில்பார் பேடிங், இன்ஜின் கார்டு, பாஷ் பிளேட், பைக்கின் பக்கவாட்டில் ரேஸ் நம்பர் என இந்த பைக்கின் ஆக்சஸரீஸ்கள் தனி. சிங்கிள் சீட் மட்டும்தான். பில்லியனுக்கு வேலையில்லை. உயரமாகத் தூக்கி வைக்கப்பட்ட பின்பக்க மட்கார்டுக்கு மேலே, லக்கேஜ் ரேக் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்க சைலன்ஸர் மேல்நோக்கிப் பார்த்தபடி வைத்துள்ளார்கள். நாம் ஓட்டியது ட்ரையல்ஸ் 500. க்ளாஸிக்கின் அதே பழக்கப்பட்ட இன்ஜின்தான். 27.2bhp பவர் மற்றும் 4.13kgm டார்க்... 500சிசி-க்கு இது குறைவுதான்.

ஸ்மூத்தான இன்ஜின் இல்லை; ஆனால் இன்ஜினில் ராவான மெக்கானிக்கல் கேரக்டர் கேட்பவர்களுக்கு இது பிடிக்கலாம். சஸ்பென்ஷன் டிராவல் அதிகரிக்கப் படவில்லை. இருந்தும் கரடுமுரடான கற்கள் நிறைந்த சாலையில், முதுகைப் பதம்பார்க்காமல் ஓரளவு சொகுசான ரைடிங்கைக் கொடுக்கிறது. ஆஃப்ரோடில் சியட் டயர்கள்,  ஹிமாலயன் அளவுக்கு நம்பிக்கையைத் தரவில்லை. டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் பாதுகாப்பைக் கூட்டுகிறது என்றாலும், பிரேக் லீவரில் இன்னும் அழுத்தம் தேவை. சிறிய இன்ஜின் போதும் என்பவர்களுக்கு 350சிசி இருக்கிறது. ஆனால், 500-ன் டார்க் ஆஃப்ரோட்டில் அதிகம் உதவும்.

இது வெறும் ட்ரெய்லர்தான்!

புல்லட் 350 ட்ரையல்ஸ், 1.62 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இது க்ளாஸிக் 350-யைவிட 9,000 அதிகம். ட்ரையல்ஸ் 500, 2.07 லட்சத்துக்குக் கிடைக்கும். இது க்ளாஸிக் 500ஐவிட 6,000 அதிகம். புல்லட் ட்ரையல்ஸ் ஆடம்பரமான ஒரு சோதனை. இந்தச் சோதனை, ராயல் என்ஃபீல்டு ரசிகர்களுக்கு வேண்டுமானால் பிடித்திருக்கலாம்; பைக்கர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைப்பது சிரமம். தொழிற்சாலையில் கஸ்டம் பில்டாக உருவாக்கப் பட்டுள்ள இந்த பைக், வழக்கமான டிசைன் வேலைப்பாடு மட்டுமே! ஓட்டுதல் ரீதியிலாவது ஏதாவது வித்தியாசம் காட்டியிருக்கலாம். ராயல் என்ஃபீல்டின் BS-VI மாடல் பைக்குகள் வரப் போகும் நிலையில், ராயல் என்ஃபீல்டின் டிசைன் திறமையைப் பறைசாற்ற    ட்ரையல்ஸ் ஒரு ட்ரெய்லர் என்றே எடுத்துக் கொள்வோம்.

தொகுப்பு: ரஞ்சித் ரூஸோ