Published:Updated:

7 பைக்... எல்லாமே 2 ஸ்ட்ரோக்!

பைக் கலெக்டர்: கிளாசிக் கார்னர்

பிரீமியம் ஸ்டோரி

த்ராட்டிலை முறுக்கினால் சீறிப்பாயும் சூப்பர் பைக்குகள்மேல் இன்றைய இளசுகள் மோகம் கொண்டிருக்க, ஈரோட்டைச் சேர்ந்த வில்லியம் பிரவீன், ``வின்டேஜ் பைக்தான் என் வாழ்க்கை’’ என்கிறார்.

7 பைக்... எல்லாமே 2 ஸ்ட்ரோக்!

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளோமா முடித்த வில்லியம் பிரவீனுக்குச் சிறு வயதிலிருந்தே பைக் மீது தீராக்காதல். ``சின்ன வயசுல அப்பாகூட பைக்ல போறப்ப, அந்த 2 ஸ்ட்ரோக் இன்ஜின் சத்தம் என்னை ஏதோ செய்தது. அப்பவே என்னை அறியாமலேயே பைக் மீது ஒருவித காதல் ஏற்பட்டது. அதான் இப்போ என் வீட்ல 8 வின்டேஜ் பைக்குகளைச் சேர்த்திருக்கேன்.” என உற்சாக மூடில் பேச ஆரம்பித்தார் பிரவீன்.

``ஒவ்வொரு பைக்குக்கும் ஒவ்வொரு கதை இருக்கு பாஸ். யமஹா RX-Z பைக்கை என் அப்பாகிட்ட கேட்டு அடம்புடிச்சி 2010-ல வாங்கினேன். அடுத்ததா, திருச்சி பொன்மலையில் ஆங்கிலோ இந்தியன் ஒருத்தர் 200 சிசி மினி புல்லட் வெச்சிருந்தார். கிட்டத்தட்ட எட்டு மாசம் அவர் பின்னாடியே சுத்த, என் தொந்தரவு தாங்க முடியாம `இந்த பைக்கை நீயோ வெச்சுக்கோ’னு தந்துட்டார்.

7 பைக்... எல்லாமே 2 ஸ்ட்ரோக்!

ஒரு காயலாங்கடையை க்ராஸ் பண்ணப்போ, அங்கே கவஸாகி எண்ட்யூரோ KB100 பைக்கை அக்குவேறு ஆணிவேறா பிரிச்சுப் போட்டிருந்தாங்க. 13,000 ரூபாய் கொடுத்து வாங்கி, அசெம்பிள் பண்ணேன். அதே மாதிரி இன்னொரு நாள் இன்னொரு கடை. 10,000 ரூபாய்க்கு சுஸூகி ஷாவ்லின் கிடைச்சது. 2 ஸ்ட்ரோக் பைக்கிலேயே முதல் 5 கியர் பைக் இதுதான், தெரியுமா?

ஆன்லைன்ல ஒரு யெஸ்டி பைக்கைப் பார்த்து வாங்கப் போனேன். அந்தச் சமயம் என் டெபிட் கார்டு வேலை செய்யலை. அந்த ஓனர் என்னோட பைக் ஆசையைப் பார்த்துட்டு, `பரவாயில்லை, பணத்தை பிறகு அக்கவுன்ட்ல போட்டுவிடுங்க நண்பா’னு பைக்கைக் கொடுத்து அனுப்பிட்டார். ஒரு மோஃபா, லேம்பி ஸ்கூட்டர், சேட்டக்னு ஸ்கூட்டர்ஸ்கூட வெச்சிருக்கேன்’’ என்று சிலாகித்த வில்லியம் பிரவீனிடம், 2 ஸ்ட்ரோக் பைக்குகள் தவிர வேறு எந்த பைக்கும் கிடையாது.

``என்கிட்ட கார் இருந்தாலும், என் பொண்ணு மீனுவுக்கு என்கூட பைக்ல வர்றதுதான் ரொம்பப் பிடிக்கும். நான் சுத்தம் பண்ணலைன்னாகூட என் மனைவி இந்த பைக்குகளைச் சுத்தம் பண்ணிடுவா. ஈரோட்டுல ஒரு பெரிய வின்டேஜ் பைக் ஷோ நடத்தணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. கூடிய சீக்கிரமே அதை நடத்திடுவேன்.” என படபடவென மினி புல்லட்போல பேசி முடித்தார் பிரவீன்.

ஈரோட்டில் ஒரு வின்டேஜ் பைக் ஷோவை எதிர்பார்க்கலாம்!

-  நவீன் இளங்கோவன்; படங்கள்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு