Published:Updated:

எந்த கியரிலும் எவ்வளவு வேகத்திலும் போகலாம்!

ட்ராக் ரைடு: டிவிஎஸ் அப்பாச்சி RR310- டிரைவ்

பிரீமியம் ஸ்டோரி

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அப்பாச்சி RR310 பைக்கை ரேஸ் ட்ராக்கில் ஓட்டிப் பார்த்தபோது, ஒரே ஒரு குறையைத் தவிர மற்ற எல்லாமே செமயாக இருந்தது. இந்த மாதமும் அதே அப்பாச்சியை, அதே ட்ராக்கில் ஓட்ட அழைத்திருந்தது டிவிஎஸ். பெர்ஃபாமென்ஸில் அதே ஜிவ்னெஸ்தான். ஆனால், இப்போது ஹேண்ட்லிங்கில் பழசைவிட வேற லெவலில் இருந்தது, புதிய 2019 அப்பாச்சி RR310.

எந்த கியரிலும் எவ்வளவு வேகத்திலும் போகலாம்!

ஏதாவது, டெக்னிக்கல் மாற்றங்களா என்றால், ‘ஆம்’ என்று ‘ஸ்லிப்பர் கிளட்ச்சைக்’ கைகாட்டுகிறது டிவிஎஸ். முந்தைய RR310, நல்ல பைக்தான். அதிர்வுகள், செயின் பிரச்னை என்று சில விஷயங்கள், அப்பாச்சி 310 பைக்கை 10,000 பைக்குகளுக்கு மேல் விற்பனை கிராஃப்பில் ஏற விடவில்லை. புதிய செயின் ரோலர், மேம்படுத்தப்பட்ட ECU என்று இப்போது அந்தக் குறைகளைச் சரி செய்து அப்டேட் செய்திருப்பதாகச் சொல்லி, கறுப்பு மற்றும் சிவப்பு நிற அப்பாச்சிகளின் சாவிகளை நமக்குக் கொடுத்தது டிவிஎஸ்.

எந்த கியரிலும் எவ்வளவு வேகத்திலும் போகலாம்!

ஜொலிக்கும் கிளாஸ் கறுப்பு நிறமும், இந்த அப்டேட்டுகளில் ஒன்று. இதற்குப் பெயர் பேன்டம் பிளாக். பழைய மேட் ஃபினிஷ் இனி கிடையாது. பைக்குக்கு நடுவே சிவப்பு நிற ஃப்ரேம் மற்றும் வெள்ளை நிற மோனோஷாக், செம கவர்ச்சி.

அதே 312.2 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 34bhp பவர், 2.73kgm டார்க்தான். டிசைனிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. அதே டூயல் புரொஜெக்டர் LED ஹெட்லைட்டுகள், எப்போதுமே கெத்து. இந்த அப்பாச்சியின் பலமே இதன் ஏரோ-டைனமிக் டிசைனும், ட்ராக்கில் சுறா மாதிரி நீந்திப் பறக்கும் நிலைத்தன்மையும்தான்.

எந்த கியரிலும் எவ்வளவு வேகத்திலும் போகலாம்!

ஓகே! முக்கியமான மாற்றமே இனிதான். பழைய அப்பாச்சியை ஓட்டும்போது அடிக்கடி ஏற்பட்ட சிக்கல் இதுதான். அதாவது, ரேஸ் ட்ராக்கில் பைக் ஓட்டும்போது, கியர் இண்டிகேட்டரை சும்மா சும்மா நோட்டம் விட்டுக்கொண்டே இருக்க முடியாது. வேகத்துக்குத் தகுந்தாற்போல் கியரைச் சரியாக மாற்றவில்லை என்றால் அவ்வளவுதான். ‘தடால் தடால்’ என இன்ஜின் பிரேக்கிங் ஏற்பட்டு நம்மைப் படுத்தி எடுக்கும்.

உதாரணத்துக்கு, 40 கி.மீ வேகத்தில் போய்க்கொண்டிருக்கும்போது, ஒரு ஸ்பீடு பிரேக்கர் வருகிறது. பைக்கை ஏற்றி இறக்கும் முன் திடீரென டவுன்ஷிஃப்ட் செய்து கியரைக் குறைக்கும்போது, சட்டென பைக் நம்மை முன்னே இழுக்கும்தானே! இதுதான் இன்ஜின் பிரேக்கிங். எனவே குறைந்த வேகங்களில், சிட்டிக்குள் கவனமாக இருக்க வேண்டும். ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச்சின் மகிமை இங்கேதான் புரியும்.

எந்த கியரிலும் எவ்வளவு வேகத்திலும் போகலாம்!

120 கி.மீ வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே கியரைக் குறைத்துப் பார்த்தேன். எந்த முக்கலும் திணறலும் இல்லை. அதேபோல் கியரைக் கூட்டாமலேயே, அதாவது 3-வது கியரிலேயே கிட்டத்தட்ட 110 கி.மீ வரை பறக்க முடிந்தது. இன்ஜின் பிரேக்கிங் நன்றாகவே குறைந்திருக்கிறது. கிளட்ச்சைப் பயன்படுத்துவதற்கான அழுத்தம் 20% குறைந்திருப்பதாக டிவிஎஸ் சொன்னது உண்மைதான். இதனால் டிராஃபிக்கிலும் இந்த அப்பாச்சி செம ஜாலியாக இருக்கும்.

ஹேண்டில்பார்களிலும் அதிர்வுகள் அவ்வளவாகத் தெரியவில்லை. மற்றபடி அதே மிஷ்லின் டயர்கள், ட்ரெல்லிஸ் ஃப்ரேம், USD செட்-அப், டிஸ்க் பிரேக்ஸ்  என்று எதுவும் மாறவில்லை.

பழசைவிட சுமார் 5,000 ரூபாய் அதிகமாகி இருக்கிறது புதிய அப்பாச்சி. இதன் ஆன்ரோடு விலை 2.60 லட்சம் ரூபாய் வரலாம். இது கிட்டத்தட்ட RC390-யை நெருங்குகிறதே! அதேநேரம், டொமினாரின் விலைக்கு ரொம்பத் தூரம் (2.11 லட்சம்). அது சரி; கேடிஎம், பஜாஜ் பைக்குகளில் ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் எப்போதோ வந்துவிட, டிவிஎஸ்-க்கு இப்போதாவது ஐடியா வந்ததே?

- தமிழ்;  படங்கள்: துளசிதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு