டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

150சிசி பைக்கில் லாரன்சோ!

150சிசி பைக்கில் லாரன்சோ!

சார்லஸ்  

 ##~##

டந்த முறை, வாலன்டினோ ராஸியை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு அழைத்து வந்து பரபரப்பைக் கிளப்பிய யமஹா, இந்த ஆண்டு ஜார்ஜ் லாரன்சோவை அழைத்து வந்து மிரட்டியது. டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவின் இறுதி நாளான ஜனவரி 11-ம் தேதி, யமஹா அரங்கத்துக்கு விசிட் அடித்தார் லாரன்சோ. யமஹாவின் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளைப் பார்த்துவிட்டு, நொய்டாவில் உள்ள புத் சர்வதேச டிராக்கில் தயாராக இருந்த யமஹாவின் 150 சிசி பைக்கான ஆர்-15 பைக்கில் ரேஸ் டிராக்கைச் சுற்றி வந்தார். இவருடன் யமஹாவின் இணையதள போட்டியில் வெற்றி பெற்ற நான்கு வாடிக்கையாளர்களும் ஆர்-15 பைக்கில் ரேஸ் டிராக்கைச் சுற்றி வந்தனர். 1000 சிசி ரேஸ் பைக்கில் அலறவிடும் லாரன்சோ, அன்று 150 சிசி பைக்கில் ரேஸ் டிராக்கைச் சுற்றி வந்தது ரசிகர்களை உற்சாகத்தில் விசிலடிக்க வைத்தது.

150சிசி பைக்கில் லாரன்சோ!

இதற்கிடையே 2012-ம் ஆண்டு ரேஸில் கலந்து கொள்ள இருக்கும் 21 ரேஸ் வீரர்களின் பட்டியலை

150சிசி பைக்கில் லாரன்சோ!

அறிவித்திருக்கிறது மோட்டோ ஜீபி நிர்வாகம். இதில், 12 ரேஸ் வீரர்கள் யமஹா, ஹோண்டா, டுகாட்டி என ஃபேக்டரி அணிகளின் சார்பிலும், 9 பேர் தனியார் ரேஸ் அணிகளின் சார்பிலும் கலந்து கொள்கிறார்கள். கடந்த ஆண்டு ஹோண்டா அணியின் சார்பில் மோட்டோ ஜீபி ரேஸில் கலந்து கொண்டு சாம்பியன்ஷிப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்த ஆன்ட்ரியோ டோவிஸியோஸோவை, அதிரடியாக அணியில் இருந்து நீக்கியிருக்கிறது ஹோண்டா. இதனால் கடந்த ஆண்டு கேஸி ஸ்டோனர், டேனி பெட்ரோஸா, டோவிஸியோஸோ என மூன்று வீரர்களைக் கொண்டு மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருந்த ஹோண்டா, இந்த ஆண்டு ஸ்டோனர், பெட்ரோஸா என இரண்டு வீரர்களுடன் மட்டும் களம் இறங்குகிறது. டோவிஸியோஸோ, யமஹா மான்ஸ்ட்டர் டெக்-3 அணியில் இணைந்திருக்கிறார்.

மோட்டோ ஜீபி ரேஸுடன் நடைபெறும் 125 சிசி ரேஸ் போட்டிகளுக்குப் பதில், இந்த ஆண்டு மோட்டோ-3 ரேஸ் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் 2-ஸ்ட்ரோக் 125 சிசி பைக்குகளுக்குப் பதில், 4-ஸ்ட்ரோக் 250 சிசி பைக்குகள் மூலம் ரேஸ் நடைபெற இருக்கிறது. மோட்டோ-3 ரேஸ் போட்டியில் இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அணி கலந்து கொள்கிறது. ரேஸுக்கென பிரத்யேகமாகத் தயாரித்திருக்கும் MGP - 30 (முப்பது என உச்சரிக்காமல் 'த்ரி ஓ’ என உச்சரிக்க வேண்டுமாம்!) பைக்கை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது மஹிந்திரா. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டேனி வெப்பும், ஜெர்மனியின் மார்சல் ஷ்ராட்டரும் மோட்டோ-3 போட்டியில் மஹிந்திரா பைக்கில் ரேஸ் ஓட்ட இருக்கிறார்கள். 20 வயதான டேனி வெப், கடந்த ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற 125 சிசி ரேஸ் போட்டியில், மஹிந்திரா அணியின் சார்பில் கலந்து கொண்டு மூன்றாவது இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இந்தியாவின் முதல் ரேஸ் வீரராக, மோட்டோ ஜீபியின் 125 சிசி ரேஸ் போட்டியில் கலந்து கொண்ட சென்னையைச் சேர்ந்த சரத்குமாரையும் தத்தெடுத்திருக்கிறது மஹிந்திரா நிறுவனம். மஹிந்திரா அணியின் சார்பில் சரத்குமார், இந்த ஆண்டு இத்தாலியில் நடைபெற இருக்கும் இத்தாலி பைக் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார். ''எடுத்த எடுப்பிலேயே மோட்டோ ஜீபி ரேஸில் ஓட்டி வெற்றி பெறாவிட்டால் சரத்குமார் தன்னுடைய திறமை மேல் சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவார். அதனால், இளம் வீரர்களுக்கு சவால் மிகுந்த ரேஸ் போட்டியான இத்தாலி பைக் ரேஸ் போட்டியில் சரத்குமாரை மோத விட்டிருக்கிறோம். இந்த ரேஸ் போட்டி சரத்குமார் தனது திறமைகளை வலுப்படுத்திக் கொள்ள மிகச் சிறந்த களமாக இருக்கும்'' என்றார் மஹிந்திரா ரேஸிங் அணியின் தலைவர் மஃபடால் சூனியா.

சர்வதேச ரேஸ் போட்டிகளில் இந்திய அணி, இந்திய ரேஸ் வீரர் என இந்திய பைக் ரேஸ் வட்டாரம் புது வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. மோட்டோ ஜீபியில் இந்தியக் கொடி பறக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை!