டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2012
Published:Updated:

ரேஸிங் சேஸிங் ஆரம்பம்!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்

 ##~##

விறுவிறுப்பிலும், பரபரப்பிலும் மோட்டோ ஜீபியை ஓரங்கட்டும் வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ், வரும்  பிப்ரவரி 26 முதல் ஆரம்பம். மொத்தம் 14 ரேஸ் போட்டிகளைக் கொண்ட இந்த வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் முதல் போட்டி, ஆஸ்திரேலியாவின் ஃபிலிப் தீவில் துவங்கி, அக்டோபர் 7-ம் தேதி ஃபிரான்ஸின் மேக்னிகோர்ஸ் மைதானத்தில் நிறைவடைகிறது. இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் போட்டியில் முன்னணியில் இருக்கும் அணிகளின் பலம், பலவீனம்... 

ஏப்ரில்லா

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை டுகாட்டியிடம் இழந்தாலும், இந்த ஆண்டு முழு வேகத்தில் மீண்டும் களம் இறங்க இருக்கிறது ஏப்ரில்லா. போர்டிமோவில் நடைபெற்ற வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் டெஸ்ட் போட்டியில், மற்ற எல்லா பைக்குகளையும் ஓரங்கட்டி தனது வெறித்தனமான வேகத்தை நிரூபித்தது ஏப்ரில்லா. 2010-ம் ஆண்டின் சூப்பர் பைக் ரேஸ் சாம்பியன் மேக்ஸ் பியாஜிதான் ஏப்ரில்லா அணியின் நம்பிக்கை நாயகன்! 40 வயதான பியாஜி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். மோட்டோ ஜீபி, சூப்பர் பைக் ரேஸ் என உச்சபட்ச ரேஸ் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் அனுபவசாலி. இவருக்குக் கைகொடுக்க யூஜின் லாவெர்ட்டியை அணிக்குள் அழைத்து வந்திருக்கிறது ஏப்ரில்லா. கடந்த ஆண்டு வரை யமஹாவில் இருந்த லாவெர்ட்டி, கடந்த ஆண்டு 2 ரேஸ்களில் வெற்றியும், 3 ரேஸ்களில் இரண்டாம் இடத்தையும் பிடித்தவர். 25 வயதான லாவெர்ட்டி போர்டிமோ டெஸ்ட் போட்டியில் பியாஜியையே ஓரங்கட்டினார் என்பதால், இந்த ஆண்டு ஏப்ரில்லா அணிக்குள்ளேயே கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது!

ரேஸிங் சேஸிங் ஆரம்பம்!

டுகாட்டி

நடப்பு சாம்பியன் டுகாட்டி, இந்த ஆண்டு டெஸ்ட் ரேஸ் முடிவுகளின்படி கொஞ்சம் பின் தங்கித்தான் இருக்கிறது. இருப்பினும், நடப்பு சாம்பியனும், சூப்பர் பைக் ரேஸின் முடிசூடா மன்னனுமான கார்லோஸ் செக்கா, தனது அனுபவத்தால் டுகாட்டி அணிக்கு வெற்றி மகுடத்தைச் சூட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். 40 வயதான செக்கா, இதுவரை 108 சூப்பர் பைக் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று, 40 ரேஸ்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. செக்காவுடன் சூப்பர் பைக் ரேஸுக்குப் புதுமுகமும், கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டாக் ரேஸ் போட்டியில் பங்கேற்றவருமான டேவிட் கிக்லியானோ இணைந்திருக்கிறார்.

ரேஸிங் சேஸிங் ஆரம்பம்!
ரேஸிங் சேஸிங் ஆரம்பம்!

பிஎம்டபிள்யூ

இந்த ஆண்டு சூப்பர் பைக் ரேஸ் போட்டியில் யமஹா இல்லாதது, பிஎம்டபிள்யூ அணியை முன்னணி அணியாக முன் வரிசையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. லியான் ஹஸ்லாம்தான் பிஎம்டபிள்யூ அணியின் சூப்பர் ஸ்டார். 27 வயதான ஹஸ்லாம் கடந்த ஆண்டு ஒரு ரேஸில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும், மூன்று முறை 3-ம் இடத்தைப் பிடித்தார். பல ரேஸ்களில் முன்னணியில் இருந்தவர் விபத்துகளில் சிக்கி வெற்றி வாய்ப்புகளை நழுவவிட்டார். 'இந்த முறை பிஎம்டபிள்யூ பைக்குகளின் வேகம் கூடியிருப்பதால், ஹஸ்லாம் 2012 சாம்பியன் கோப்பையை வெல்லும் வாய்ப்புகள் அதிகம்’ என்கிறார்கள் சூப்பர் பைக் ரேஸ் ஆர்வலர்கள். இவருடன் இந்த ஆண்டு யமஹா அணியில் இருந்த மார்க்கோ மெலாண்ட்ரி இணைந்திருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற 26 ரேஸ்களில் 15 ரேஸ்களில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தவர் மெலாண்ட்ரி. இதனால் ஹஸ்லாம், மெலாண்ட்ரி கூட்டணி இந்த முறை ரேஸ் டிராக்கில் அனல் கக்கும் என எதிர்பார்க்கலாம்!

சாம்பியன் பட்டத்துக்கு மோதும் 22 ரேஸர்க‌ளில் 9 ரேஸர்கள் முன்னாள் சாம்பியன்கள். இதுத் தவிர  ஹிரோஷி அயோமா, ஜான் ஹாப்கின்ஸ் என மோட்டோ ஜீபி வீரர்களும் இந்த முறை சூப்பர் பைக் ரேஸுக்கு வந்திருப்பதால், பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது!