Published:Updated:

ஹமாரா பஜாஜ்... இது தலைமுறைகள் தாண்டும் ஸ்கூட்டர்!

ஹமாரா பஜாஜ்... இது தலைமுறைகள் தாண்டும் ஸ்கூட்டர்!

வின்டேஜ் வாகனங்கள், வெறும் இன்ஜினும், டயருமாக கைமாறுவதில்லை; பல தசாப்தங்களின் வாழ்க்கையையும், அதைச் சுமந்த நினைவுகளையும் சேர்த்தே கடத்துகின்றன. சேட்டக் வின்டேஜ் அந்தஸ்தை அடைந்துவிட்டது.

ஹமாரா பஜாஜ்... இது தலைமுறைகள் தாண்டும் ஸ்கூட்டர்!

வின்டேஜ் வாகனங்கள், வெறும் இன்ஜினும், டயருமாக கைமாறுவதில்லை; பல தசாப்தங்களின் வாழ்க்கையையும், அதைச் சுமந்த நினைவுகளையும் சேர்த்தே கடத்துகின்றன. சேட்டக் வின்டேஜ் அந்தஸ்தை அடைந்துவிட்டது.

Published:Updated:
ஹமாரா பஜாஜ்... இது தலைமுறைகள் தாண்டும் ஸ்கூட்டர்!

ஜப்பானின் 2 ஸ்டிரோக் பைக்குகள் இந்தியாவை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த காலத்தில் சேட்டக் ஸ்கூட்டரை களமிறக்கி, தில்லாக எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது பஜாஜ். ஒரு காலத்தில் உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்ற பெயர் பெற்றது. 2000-களின் பிற்பகுதியில் தனது செல்வாக்கை இழந்து ஸ்கூட்டர் தொழிலை விட்டே பஜாஜ் விலகியிருந்தாலும், சேட்டக் விட்டுச்சென்ற தடம் இன்னும் தொட்டுத் தொடர்கிறது. சேட்டக் ஸ்கூட்டருக்கு வின்டேஜ் அந்தஸ்தைத் தர மறுத்தாலும், அடுத்த தலைமுறையின் வின்டேஜ் ஸ்கூட்டர் பட்டியலில் சேட்டக் நிச்சயம் இருக்கும் என்பதை யாராவது உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரியில் மார்னிங் ரைடை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது, ``என் ஸ்கூடர் எப்படி இருக்கு?" என்றபடி அறிமுகமானார் பவித்ரன். பொறியியல் கல்லூரி மாணவரான பவித்ரன் வைத்திருந்தது, பழைய பஜாஜ் சேட்டக். ஸ்கூட்டர் பழசு ஆனால், கண்டிஷன் செம புதுசு!

``பஜாஜ் சேட்டக்கா! எந்த வருஷத்துடைய மாடல் இது?" என்றபடி தொடங்கியது எங்கள் பேச்சு.

``என் ஸ்கூட்டர் 1986 மாடல். சின்ன வயசுல எனக்கு ரொம்பப் பிடிச்ச வண்டி இது. நான் வளர்ந்த பிறகு இந்த ஸ்கூட்டரைத்தான் வாங்கணும்னு அப்பவே முடிவுபண்ணேன். காலேஜ் சேர்ந்ததிலிருந்து நிறைய இடங்கள்ல இதைத் தேடி அலைஞ்சேன். நிறையபேருக்கு விற்க மனசில்லை. என் மாமாவோட மெடிக்கல் ஷாப்ல நான் மருந்து டெலிவரி செய்வேன். ஒரு நாள் டெலிவரிக்குப் போறப்போ, அங்க இந்த ஸ்கூட்டரைப் பார்த்தேன். `எனக்குக் கொடுக்குறீங்களா?'னு உடனே கேட்டுட்டேன்" என்று தன் கதையைத் தொடங்கினார்.

ஸ்கூட்டரின் சொந்தக்காரர் `முடியாது' என்று சொல்லிவிட்டாராம். ஆனாலும், இரண்டு வாரத்துக்கு ஒருமுறை அங்கு சென்று அவரிடம், `இந்த ஸ்கூட்டரை கொடுங்களேன், ப்ளீஸ்..!' என்று கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். தொடர்ந்து எட்டு மாதம் இப்படியே தொல்லை கொடுக்க, பவித்ரனின் ஆசை வேட்கை தாங்காமல் ஸ்கூட்டரை இவருக்கே கொடுத்துவிட்டார் அதன் உரிமையாளர். 

``ஒழுங்கா FC செய்து, பெயரை மாற்றிய பிறகுதான் கொடுப்பேன் என்று ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் சொன்னார். ஸ்கூட்டர் மட்டுமல்ல, அவர்கிட்ட இருந்து RC புக், சர்வீஸ் புக், யூஸர் மேனுவல்னு எல்லாத்தையும் வாங்கிட்டேன். கொஞ்சம்கூட சேதமில்லாம எல்லாத்தையும் புதுசா வெச்சிருக்கேன் பாருங்க'' என்று அனைத்து டாக்குமென்ட்களையும் காட்டினார். மியூசியம் தவிர, வேறு எங்கேயும் நல்ல கண்டிஷனில் சேட்டக்கின் டாக்குமென்ட்களைப் பார்க்கமுடியாது. 

``கொஞ்சமும் யோசிக்காம ஒரு மெக்கானிக்கைக் கண்டுபிடிச்சு ஸ்கூட்டரை ரெஸ்டோர் செஞ்சு ரன்னிங் கண்டிஷனுக்கு மாத்திட்டேன். பைக்கோட முதல் ஓனரைப் பார்க்கிறீங்களா?'' என்று ஆர்வமாக பைக்கின் முன்னாள் ஓனர் நித்தியானந்தத்திடம் அழைத்துச் சென்றார்.

``1986-ல் ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்பட்ட பிரத்யேக மாடல் இது. 33 வருஷமா நான் இந்த ஸ்கூட்டரைப் பாதுகாத்துட்டு இருக்கேன். அப்போ எல்லாம் நானும் என் மனைவியும் இந்த ஸ்கூட்டர்ல மட்டும்தான் படம் பார்க்கப் போவோம்'' என்று மீண்டும் தன் இளமைக்காலத்துக்குச் சென்று திரும்பினார் 83 வயதான நித்தியானந்தம். 

நித்தியானந்தத்திடம் பேசிவிட்டு வந்த பிறகு, இந்த ஸ்கூட்டரை இன்னும் 30 ஆண்டுகளுக்குப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கப்போகிறேன் என்றார் பவித்ரன். வாழ்த்துகள் சொல்லிவிட்டு கிளம்பினோம். 

1972-ம் ஆண்டு தொடங்கி 2006-ம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்த பஜாஜ் சேட்டக், தனக்னெ ஒரு தனி கூட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தது. சேட்டக்கின் செல்லப்பெயர் `ஹமாரா பஜாஜ்'. 80-களில் இளையராஜா பாடலுக்கு நிகராக முணுமுணுத்தவை இந்த ஹாமாரா பஜாஜ் கீதம். 90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் விளம்பரங்களில் ஒன்று. வின்டேஜ் வாகனங்கள், வெறும் இன்ஜினும், டயருமாக கைமாறுவதில்லை; பல தசாப்தங்களின் வாழ்க்கையையும், அதைச் சுமந்த நினைவுகளையும் சேர்த்தே கடத்துகின்றன. சேட்டக் வின்டேஜ் அந்தஸ்தை அடைந்துவிட்டது.