Published:Updated:

பியாஜியை சாம்பியனாக்கிய அரை!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்

 ##~##

ம்பது பைசாவை பொதுவாக நாம், பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால், சில சமயங்களில் அந்த ஐம்பது பைசா சில்லறை இல்லாமல் அல்லாடி விடுவோம். அது போன்ற கதையாகிவிட்டது வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ். அரைப் புள்ளி வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி இருக்கிறார் ஏப்ரில்லாவின் மேக்ஸ் பியாஜி. சூப்பர் பைக் ரேஸ் சரித்திரத்தில் இதுவரை டாம் சைக்ஸைப் போல, அரைப் புள்ளி வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தைக் கோட்டை விட்டவர்கள் யாரும் இல்லை! 

கடந்த இதழில், 'மேக்ஸ் பியாஜி 318 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். மார்க்கோ மெலாண்ட்ரி 308.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், டாம் சைஸ் 291.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்’ என கட்டுரையை முடித்திருந்தோம். இரண்டு லேப்புகளே மீதம் இருந்த நிலையில், டாம் சைக்ஸிடம் இருந்து அரைப் புள்ளி வித்தியாசத்தில் மேக்ஸ் பியாஜி சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ரேஸிங் சேஸிங் ஸ்டோரி இதோ...

பியாஜியை சாம்பியனாக்கிய அரை!

போர்ச்சுகல்

போர்ச்சுகலில் செப்டம்பர் 23-ம் தேதி வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தின் 13-வது சுற்று நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கினார் கவாஸாகியின் டாம் சைக்ஸ். டுகாட்டியின் கார்லோஸ் செக்கா இரண்டாவது இடத்தில் இருந்தும், ஏப்ரில்லாவின் யூஜின் லாவெர்ட்டி மூன்றாவது இடத்தில் இருந்தும், மேக்ஸ் பியாஜி ஐந்தாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர். முந்தைய நாள் பலத்த மழை பெய்திருந்ததால், ரேஸ் டிராக் ஈரமாக இருந்தது.

பியாஜியை சாம்பியனாக்கிய அரை!

ரேஸ்-1

ரேஸ் துவங்கியதுமே விபத்துகள் வரிசை கட்ட ஆரம்பித்தன. முதல் லேப்பிலேயே மார்க்கோ மெலாண்ட்ரியின் பைக்கும், மேக்ஸ் பியாஜியின் பைக்கும் ஒன்றோடு ஒன்று மோத... மெலாண்ட்ரிக்குப் பலத்த அடி. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சாம்பியன்ஷிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த மெலாண்ட்ரிக்கு, இந்த விபத்தால் கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், இரண்டாவது ரேஸில் மெலாண்ட்ரி கலந்து கொள்ளவில்லை. விபத்தின் காரனமாக ரேஸ் டிராக்கில் ஆயில் சிந்தி பரவியிருந்ததால், ரேஸ் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியது. 16 லேப்புகளாகக் குறைக்கப்பட்ட இந்த ரேஸில் டாம் சைக்ஸ் வெற்றி பெற, கார்லோஸ் செக்கா இரண்டாவது இடமும், குன்ட்டோலி மூன்றாவது இடமும், மேக்ஸ் பியாஜி நான்காவது இடமும் பிடித்தனர்.

ரேஸ்-2

இரண்டாவது ரேஸ், டாம் சைக்ஸின் சாம்பியன்ஷிப் கனவைச் சிதைத்தது. ரேஸ் துவங்கிய சிறிது நேரத்தில் இன்ஜின் ஓவர்ஹீட் ஆனதில், தொடர்ந்து ரேஸ் ஓட்ட முடியாமல் ரேஸைவிட்டு வெளியேறினார் டாம் சைக்ஸ். இதனால், முதல் இடத்துக்கு கடுமையான போட்டி நிலவியது. ஹோண்டாவின் ஜோனத்தன் ரியாவும், ஏப்ரில்லாவின் யூஜின் லாவெர்ட்டியும் முதல் இடத்துக்குக் கடுமையாக மோத... இறுதியில் வெற்றி பெற்றார் யூஜின் லாவெர்ட்டி. மேக்ஸ் பியாஜி மூன்றாவது இடம் பிடித்தார்.

இதனால், 2012 சீஸன் முடிய இன்னும் ஒரே ஒரு ரேஸ் மீதம் இருக்கும் நிலையில், சாம்பியன்ஷிப் பட்டியலில் 347 புள்ளிகளுடன் மேக்ஸ் பியாஜி முதல் இடத்தில் இருக்க... டாம் சைக்ஸ் 316.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார்.

பியாஜியை சாம்பியனாக்கிய அரை!

பிரான்ஸ்

யார் சாம்பியன் பட்டம் வெல்வார்கள் என்கிற பரபரப்பான சூழ்நிலையில், வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தின் கடைசிச் சுற்று, அக்டோபர் 7-ம் தேதி மேக்னி கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. வழக்கம் போல தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றது கவாஸாகிதான். டாம் சைக்ஸ் முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்க, டுகாட்டியின் கார்லோஸ் செக்கா இரண்டாம் இடத்தில் இருந்தும், ஏப்ரில்லாவின் யூஜின் லாவெர்ட்டி மூன்றாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். மேக்ஸ் பியாஜி பத்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார். அதனால், டாம் சைக்ஸ் சாம்பியன் பட்டம் வெல்வார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர்.

ரேஸ்-1

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே, ரேஸ் துவங்கிய சிறிது நேரத்திலேயே பத்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய மேக்ஸ் பியாஜியின் பைக், கட்டுப்பாட்டை இழந்து ரேஸ் டிராக்கை விட்டு வெளியே பறந்தது. பியாஜி ரேஸில் இல்லை என்ற நிலையில், டாம் சைக்ஸ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்க... ஷாக்கிங் சர்ப்பரைஸாக விறுவிறுவென முதல் இடத்துக்கு முன்னேறி வெற்றி பெற்றவர் டுகாட்டியின் குன்டோலி. மார்க்கோ மெலாண்ட்ரி இரண்டாவது இடத்தையும், டாம் சைக்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

பியாஜியை சாம்பியனாக்கிய அரை!

அதனால், சாம்பியன்ஷிப் பட்டியலில் மேக்ஸ் பியாஜியைவிட 14.5 புள்ளிகள் மட்டுமே பெற்று பின் தங்கியிருந்தார் டாம் சைக்ஸ். கடைசி ரேஸில், 'டாம் சைக்ஸ் வெற்றி பெற்று, மேக்ஸ் பியாஜி ஆறாம் இடத்துக்கு மேல் வந்தால்தான், டாம் சைக்ஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வார்’ என்று புள்ளிகள் கணக்குப் போட்டுச் சொன்னது மைதானத்தில் இருந்த ராட்சத ஸ்க்ரீன். அதனால், கடைசி ரேஸைக் காண லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

வெற்றி பெற வேண்டும் என்கிற வெறி டாம் சைக்ஸின் கண்களில் தெரிந்தது. 23 லேப்புகள் கொண்ட இந்த ரேஸில், ஆரம்பம் முதல் தீயாகப் பறந்த டாம் சைக்ஸை யாராலும் தடுக்க முடியவில்லை. முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார் டாம் சைக்ஸ். ஆனால், அவரால் மேக்ஸ் பியாஜியை ஐந்தாவது இடம் பிடிக்க விடாமல் தடுக்க முடியவில்லை. இரண்டாவது ரேஸில் ஐந்தாவது இடம் பிடித்த மேக்ஸ் பியாஜி, 0.5 புள்ளி வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றார்!

*****

பியாஜியை சாம்பியனாக்கிய அரை!

41 வயதான மேக்ஸ் பியாஜி, இரண்டாவது முறையாக வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இத்தாலியைச் சேர்ந்தவரான மேக்ஸ் பியாஜி, 1998 முதல் 2005-ம் ஆண்டு வரை மோட்டோ ஜீபி ரேஸில் பங்கேற்று வந்தார். வாலன்டினோ ராஸியுடன் மோதி ஒருமுறைகூட சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திரும்பிய மேக்ஸ் பியாஜி, 2007-ம் ஆண்டில் இருந்து வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸில் பங்கேற்று வருகிறார். 2009-ம் ஆண்டில் இருந்து ஏப்ரில்லா அணிக்காகக் களம் இறங்கினார். 2010-ம் ஆண்டு முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பியாஜி, இந்த ஆண்டும் வெற்றி பெற்று இரண்டு முறை சூப்பர் பைக் ரேஸ் சாம்பியன் பட்டம் வென்ற எட்டாவது ரேஸராக மகுடம் சூடியிருக்கிறார்!

- சார்லஸ்