பிரீமியம் ஸ்டோரி
 ##~##

கொஞ்சம் மிரண்டுதான் போயிருக்கிறது அமெரிக்காவின் அயன் பட் அசோசியேஷன். அந்த நாட்டின் சாலையின் தரமும், அங்கே இருக்கும் பைக்குகளின் தரமும் தரத்தில் குறைவு இல்லாதது. ஆனால், தமிழகத்தில் 135 சிசி பைக்கில்கூட அசால்ட்டாக அயன் பட் சாதனையைச் செய்வது, அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது . 

'வாவ்... கங்கிராட்ஸ்... இந்தியன் ரைடர்களைப் பார்க்கப் பெருமையாக இருக்கிறது. உங்கள் ஊர் சாலைகளில் அயன் பட் ரைடு என்பதை எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை... ஹேட்ஸ் ஆஃப்’ என அமெரிக்காவே நம்மவர்களைப் பார்த்துப் புல்லரித்து எழுதுகிறார்கள் ஐ.பி.ஏ-வின் ஆன்லைன் ஃபோரமில்.

அவர்கள் கமென்ட்டிக் கொண்டு இருக்கும் அதே நேரத்தில், நம் ஊரிலிருந்து இதோ இன்னொரு 'அயன் பட்’ சாதனை நடந்து விட்டது.

அடுத்த லெவலுக்கு ரெடி!

சபரீஷ். சென்னையில் சொந்தத் தொழில் முயற்சியில் இருப்பவர். கடந்த ஆகஸ்ட் மாதம் அயன் பட் 1600K சேடில் சோர் (Saddle sore) முடித்திருக்கிறார். அதாவது, 24 மணி நேரத்துக்குள் 1600 கி.மீ தூரத்தைக் கடந்திருக்க வேண்டும் என்பதுதான் இந்த பிரிவின் விதி.

தன் சாதனைச் சரித்திரத்தை உற்சாகத்தோடு சொல்ல ஆரம்பித்தார் சபரீஷ்.

'எனக்குச் சொந்த ஊர் திருச்சி. காலேஜ்ல படிக்கும்போது அடிக்கடி பைக்ல திருச்சி போய் வந்ததால, லாங் ரைடு ஒரு பெரிய விஷயமா தெரிஞ்சது இல்லை. அதனால, அயன் பட் ரைடு போகணும்னு ஆசை மட்டும்தான் இருந்தது. ஏற்கெனவே அயன் பட் சாதனை செய்த மனோஜ் அண்ணன் என் ரூம் மேட். அவர் மூலமா அயன் பட் செந்தில் அண்ணனும் பழக்கமானார். அவர் ஆரம்பிச்ச 'ரோடு ராக்கர்ஸ்’ (Road rockers) பைக் கிளப்ல நானும் மெம்பர். ஒவ்வொரு வாரமும் எல்லாரும் சும்மா ஜாலியா மீட் பண்ணுவோம். அப்போ, என்னோட அயன் பட் ஆசையை சொன்னேன். 'நீ ரெடின்னா நாளைக்கேகூட ரைடு கௌம்பலாம்’னு செந்தில் அண்ணன் உற்சாகப்படுத்தினார். நான் கொஞ்சம்கூட யோசிக்கலை. அடுத்த நாளே ரைடு கிளம்பிட்டேன் வாங்கி 25 நாட்களே ஆன பஜாஜ் அவென்ஜர் பைக்குக்கு, எந்த ஸ்பெஷல் சர்வீஸும் செய்யவில்லை. ஆகஸ்ட் 12-ம் தேதி சாயங்காலம் 5.30-க்கு செங்கல்பட்டில் இருந்து ரைடு ஆரம்பிச்சு, மறுநாள் சாயங்காலம் 4.20-க்கு ஆம்பூர்ல முடிச்சேன். மொத்தம் கவர் பண்ணது 1,703 கி.மீ.'

அடுத்த லெவலுக்கு ரெடி!

ரூட்/ரோடு மேப்

செங்கல்பட்டில் ஆரம்பித்த பயணத்தை ஜி.எஸ்.டி சாலையில் தொடர்ந்து திருச்சியை அடைந்திருக்கிறார். பிறகு, அங்கிருந்து திண்டுக்கல். அங்கிருந்து காஷ்மீர்  - கன்னியாகுமரி நான்கு வழிச் சாலை வழியாக வாடிப்பட்டி, திருமங்கலம், திருநெல்வேலி தாண்டி குமரியைத் தொட்டிருக்கிறார். அங்கிருந்து 'யு டர்ன்’ அடித்தவர், மீண்டும் சென்னை பெருங்களத்தூரில் பெங்களூரு ஹைவேயில் ஏறி, வாணியம்பாடி வரை சென்று விட்டு, அங்கிருந்து திரும்பி சென்னை வரும் வழியில் ஆம்பூரில் ரைடை முடித்திருக்கிறார். இது அத்தனையும் நடந்தது 23 மணி நேரத்துக்குள்.

நோ ப்ராப்ளம்!

ரைடு போகிறோம் என்று முடிவானதுமே, எல்லோரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டியது 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்பதைத்தான்.

''ரைடு போறப்போ, பிரச்னை வர்றது சகஜம். பைக்கை ஸ்டார்ட் பண்ணினதில் இருந்து, நைட் ரெண்டு மணிக்கு கன்னியாகுமரி ரீச் ஆகிற வரைக்கும் ஒரு தடங்கலும் இல்லை. யு டர்ன் அடிக்கிற இடத்தில்

அடுத்த லெவலுக்கு ரெடி!

பெட்ரோல் போட்டு எலெக்ட்ரானிக் பில் வாங்கணும்கிறது ஐ.பி.ஏவோட முக்கியமான ரூல். ஆனா, நான் நின்ன இடத்தில், 'பெட்ரோல் பங்க் காலையில அஞ்சரை மணிக்குத்தான் திறப்போம்’னு சொல்லிட்டாங்க. நான் இருந்த அவசரத்தில் அடுத்து என்ன பண்ணனும்னு யோசிக்கிற மூடில் இல்லை. டாக்குமென்ட்ஸ் பக்காவா இருந்தாதான் ஐ.பி.ஏ சர்டிஃபிகேட் கிடைக்கும். ஏதாவது ஒரு  ஏ.டி.எம்ல பணம் எடுத்துட்டு, ஏ.டி.எம் சென்டர் முன்னால் ஒரு போட்டோ எடுத்துக்கச் சொல்லி போன்ல மனோஜ் அண்ணன் ஐடியா சொன்னார். அதுதான் என்னை அந்த இடத்தில் காப்பாத்துச்சு.

திரும்பி வர்றப்போ, வாடிப்பட்டி பெட்ரோல் பங்க்ல பைக்கை நிறுத்தினேன். அது வரைக்கும் கையில் இருந்த எல்லா பில்லையும் ஒரு பிளாஸ்டிக் கவர்ல போட்டுப் பத்திரமா வெச்சிருந்தேன். பில் செக் பண்றப்போ, அந்த கவர் கை நழுவி சைலன்ஸர்ல விழுந்துடுச்சு. சூடு தாங்காம கவர் உருகி, பில் எல்லாம் கொஞ்சம் டேமேஜ் ஆயிடுச்சு. இருந்தாலும் அந்த  பில்லைத்தான் அமெரிக்காவுக்கு அனுப்பி வெச்சேன்.

பைக்கை சர்வீஸ் பண்ணலைனாலும், கிளம்புறப்போ இன்ஜின் ஆயில் மட்டும் மாத்திக்கிட்டேன். அந்த இன்ஜின் ஆயில் ஒரு பெரிய ட்விஸ்ட் கொடுத்துச்சு. நான் புதுசா போட்ட ஷெல் சிந்தடிக் ஆயில், என் இன்ஜினுக்கு செட் ஆகலை. உளுந்தூர்பேட்டை தாண்டி வர்றப்போ இன்ஜின்ல இருந்து ஆயில் லீக் ஆக ஆரம்பிச்சது. பைக்கை நேரா விழுப்புரம் டவுன்ல இருக்கும் பஜாஜ் சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு போனேன். அவங்க வழக்கம் போல, 'போயிட்டு அஞ்சு மணிக்கு வாங்க’ன்னு கூலா சொன்னாங்க. அப்புறமா அவங்ககிட்ட  இந்த ரைடு பத்தி விவரமா எடுத்துச் சொல்லி, அவங்க ஆசீர்வாதத்தோடும், புது இன்ஜின் ஆயிலோடும் புறப்பட்டேன். இதனால், ஒன்றரை மணி நேரம் காலி.

1600 K பிரிவுக்கான டார்கெட்டை முடிச்சு, 1700 கி.மீ கிராஸ் பண்ணி ஆம்பூர் தாண்டி வரும்போது பைக் பஞ்சர் ஆயிடுச்சு. பெர்ஃபாமென்ஸ், ரைடிங் கம்ஃபர்ட், மைலேஜ் எதிலும் குறை வைக்காத அவென்ஜர்ல ட்யூப்லெஸ் டயர் இல்லை. அது பைக்கோட எவ்வளவு பெரிய மைனஸ் பாயின்ட்னு அப்போதான் தெரிஞ்சது. இன்னும் ஒரு மணி நேரம் மிச்சம் இருக்கிறப்போ, அந்த சிங்கிள் பஞ்சர் என் ரைடுக்கு எண்டு கார்டு போட்டிருச்சு.

இந்த ரைடு முழுக்க எனக்கு சப்போர்ட் பண்ண செந்தில் அண்ணன், மனோஜ் அண்ணன், இந்த ரைடுக்கு ஸ்பான்சர் செஞ்ச என் அக்கா-மாமா எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், எங்க கிளப்ல என்னையும் சேர்த்து மொத்தம் அஞ்சு பேர் இது வரைக்கும் அயன் பட் 1600K சேடில் சோர் (Saddle sore)முடிச்சிருக்கோம்.

அயன் பட்ல அடுத்த லெவலுக்கு ரெடியாகிறோம். அடுத்த பேட்டிக்கு நீங்க ரெடியா இருங்க!'' என்றார் வெற்றிப் புன்னகையுடன்!

மோ.அருண்ரூப பிரசாந்த்  >> எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு