கார்ஸ்
Published:Updated:

கோவையில் பைக்கர்ஸ் காபி ஷாப்!

ரிலாக்ஸ்

ஒரு காபியை வாங்கி, நாள் முழுக்க அதை ரசித்து ரசித்து நீங்கள் குடித்துக்கொண்டு இருந்தாலும், காபி ஷாப்பில் உங்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

பிசினஸ் பேச, முக்கியமான ஆட்களைச் சந்திக்க, காத்திருக்க, காதலை வளர்க்க என்று பல விஷயங்களுக்கு இதுபோன்ற இடம்தான் மக்களுக்கு வசதி.

கோவையில் பல இடங்களில் இதுபோன்ற காபி ஷாப்கள் இருந்தாலும், அவிநாசி சாலையில் இருக்கும் ட்ரை ஸ்டார் அப்பார்ட்மென்டில் இயங்கும் 'கஃபே மோட்டோ’ காபி ஷாப் கொஞ்சம் வித்தியாசமானது. ''முழுக்க முழுக்க மேற்கத்தியப் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ள 'கஃபே மோட்டோ,’ பைக் பிரியர்களுக்கெனப் பிரத்யேகமாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே காபி ஷாப்'' என்கிறார் இதன் மேலாளர் ரஷீத்.

கோவையில் பைக்கர்ஸ் காபி ஷாப்!

'கோவையில் சூப்பர் பைக்ஸ் வைத்திருப்பவர்களுக்கான மீட்டிங் பாயின்ட் இதுதான். வார இறுதி நாட்களில் இது இன்னும் களைகட்டும். ஆரம்பத்தில் இந்த ட்ரைஸ்டார் அப்பார்ட்மென்டில் வசிக்கும் 10 சூப்பர் பைக் உரிமையாளர்களின் வேண்டுகோளின்படி, சின்ன அளவில் தொடங்கப்பட்டது. இப்போது பரபரப்பான காபி ஷாப்பாக மாறிவிட்டது'' என்றார் இதன் உரிமையாளர் நரேன் ராஜன்.

விடுமுறை நாட்களில் யமஹா ஆர்-1, எஃப்.ஸீ-1, ஏப்ரில்லா, டுகாட்டி, சிபிஆர் 1200, பிஎம்டபிள்யூ என சூப்பர் பைக்குகள் இங்கு அணிவகுக்கின்றன. வெளிநாட்டு பைக்குகளைப் பார்ப்பதற்கு மட்டுமின்றி, இங்கு வழங்கும் காபிக்காகவும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும், சூப்பர் பைக்குகளுக்கான தொழில்நுட்ப உதவியும் ஆலோசனையும் இங்கே கிடைப்பதால், சூப்பர் பைக்கர்களின் மீட்டிங் பாயின்டாகவும் இருக்கிறது கஃபே மோட்டோ.

காபி ஒன்றை ஆர்டர் செய்து, ரசித்து ருசித்துக் குடித்துவிட்டு பில் பார்த்தபோது... 150 ரூபாய்!

கோவையில் பைக்கர்ஸ் காபி ஷாப்!