கார்ஸ்
Published:Updated:

இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!
News
இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!

 ##~##

பொண்ணுக்கோ பையனுக்கோ கல்யாணம் பண்ணலாம் எனப் பேச்சு ஆரம்பித்து, வெட்டியாகப் பேசிப் பேசி, பிராக்டிக்கலாக வரன் பார்க்கும் சம்பவம் நடக்க... ஒரு சில வீடுகளில் குறைந்தது நான்கு வருடங்கள் ஆகிவிடும். சம்பந்தப்பட்டவர்கள் அதுவரை தேவதையுடனும் ராஜகுமாரனுடனும் கனவு கண்டபடி இருப்பார்கள். இதேபோலத்தான் முதன்முதலாக கார் வாங்க வேண்டும் என்ற பேச்சு ஆரம்பிப்பதற்கும் உண்மையாக கார் வீட்டுக்கு வருவதற்கும் ஏகப்பட்ட கால இடைவெளி இருக்கும். அதற்குள் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள், வட்டமேஜை மாநாடுகள், பலரின் அறிவுரைகள், கடும் சண்டை என வீடு அதகளப்படும். மிடில் கிளாஸ் வீட்டில் ஒரு மாதம், செலவெல்லாம் போக 4,000 ரூபாய் மீதம் வரும்போது, குத்துமதிப்பாக கார் வாங்கலாம் என்ற பேச்சு அடிபட ஆரம்பிக்கும்.

 'இப்ப எல்லாம் கார் வாங்குறது ரொம்ப ஈஸி. ஆபீஸுக்குப் போற வழியெல்லாம் கார் வாங்கிக்கோ, கார் வாங்கிக்கோனு கையைப் பிடிச்சு இழுக்குறாங்க’ என கார் வாங்குவதற்கான அடித்தளம் போடுவார் குடும்பத் தலைவர். அதுவரை காருக்கு நான்கு வீல் மற்றும் ஒரு ஸ்டீயரிங் என்ற அளவில் மட்டுமே விபரம் தெரிந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், விஸ்வரூபம் எடுத்து கார் எக்ஸ்பர்ட்டுகளாக மாறுவார்கள். அம்பாஸடர் ஆரம்பித்து ரோல்ஸ்ராய்ஸ் வரை பிரித்துக் காயப் போடுவார்கள்.

இங்கு பஞ்சர் போடப்படும்!
இங்கு பஞ்சர் போடப்படும்!

கார் வாங்குவதற்குப் பணம் ஏற்பாடு செய்யும் நபர், பெரும்பாலும் வீட்டில் ஒருவராகத்தான் இருப்பார். அவரும் கையிருப்புப் பணம் எவ்வளவு என்பதையெல்லாம் யோசிக்காமல், அனைத்து கார்களையும் ஆன்லைனில் பார்க்க ஆரம்பிப்பார். கிட்டத்தட்ட இரண்டு வார இரவுகளை கார் தேடுவதிலும், கார்களின் சாதக பாதகங்களைத் தெரிந்துகொள்வதிலும் செலவிட்ட பின்பு, ஒரு காரைத் தேர்வு செய்திருப்பார். அதன் ஆன் ரோடு விலையைக் கடைசியாகப் பார்த்து அதிர்ச்சியாகி, ''கார் வாங்குறது கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, தொந்தரவுதான்'' என பஞ்ச் டயலாக் பேசி, கார் வாங்கும் கனவில் இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு 'அல்வா’ கொடுப்பார். இப்படி ப்ராஜெக்டை ஆரம்பிக்காமலேயே ஊத்தி மூடும் புண்ணியவான்கள் ஒரு பக்கம் என்றால், ப்ராஜெக்ட் உள்ளே நுழைந்து குடைச்சல் கொடுப்பவர்கள் அடுத்த ரகம்.

கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடனேயே, ''எதுவா இருந்தாலும் ஃபீல்டுல இறங்கிடணும் மாப்ள'' என்ற அரிய தத்துவத்தை உதிர்த்து, அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்துவிட்டு ரோட்டோரமாக நின்றுகொள்வார்கள். சாலைகளில் செல்லும் கார்களை நோட்டம் விடுகிறார்களாம். என்னென்ன பிராண்ட் கார்கள் உள்ளன என முதலில் மனப்பாடம் செய்வார்கள். அதன் பிறகு, கார் வைத்திருக்கும் நண்பர்களிடம், ''இந்த கார் ஏன் வாங்கின? 'ஒக்காட்டாவியா’ இதைவிட நல்லா இருக்குமே?’ எனப் பேச்சுக் கொடுத்துக் கலங்கடிப்பார்கள். காரினுள் அமர்ந்து, ஆன் செய்யாமலேயே ஸ்டீயரிங்கை சின்னக் குழந்தைகள் திருப்புவதுபோல திருப்பிப் பார்த்து, ''என்னாடா இது, இவ்ளோ டைட்டா இருக்கு?'' என்பார்கள். ''புதுசா கார் வாங்கலாம்னு இருக்கேன்'' என ஆரம்பித்து, பொத்தாம்பொதுவாக பல கேள்விகளைக் கேட்டு திகைக்கவைப்பார்கள்.

''இந்த கார்ல என்ன ஸ்பெஷல்?''

''என்னா மாடல் கார் இது?''

''கார்ல என்ன இன்ஜின் இருக்கு?''

''இந்த கார் எப்பிடி?''

''இந்த காரை நல்லா அடிக்கலாமா(!) தாங்குமா(?)''

இங்கு பஞ்சர் போடப்படும்!

இதைப்போல எகனைமொகனையான கேள்விகளால் தாக்குண்டு, 'நாம்தான் ஒன்றும் தெரியாமல் கார் வாங்கிவிட்டோம்போல’ என தாழ்வு மனப்பான்மையால் தவிப்பார் கார் ஓனர். நண்பர்களை அடித்துத் துவைக்கும் வேலையைச் செவ்வனே செய்த பின், கார் வாங்க நயா பைசா இல்லாமல் பந்தாவாக ஷோரூம் விசிட் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஷோரூமுக்குப் போய் சேல்ஸ் பெர்சன் விசிட்டிங் கார்டு, கார் பிரவுச்சர், லோன் டீட்டெயில் எனப் பக்காவாக கலெக்ட் செய்து, ஃபைல் செய்துவைத்துக்கொண்டே இருப்பார்கள். டெஸ்ட் டிரைவ் செல்ல குடும்ப சகிதமாக ஷேர் ஆட்டோவில் வந்து இறங்குவார்கள். ஷோரூம்காரர் ஜெர்க் ஆகி கார் சாவியைக் குடும்பத் தலைவரிடம் கொடுத்ததுதான் தாமதம், குழந்தைகள் முன் சீட்டுக்கும் பின் சீட்டுக்கும் தாவ ஆரம்பிக்கும். ஷோரூம் ஆள், கையைப் பிசைந்தபடி நிற்பார். ஒருவழியாக மனதைத் தேற்றிக்கொண்டு, ''ஓட்டிப் பாருங்க சார்'' என்று சொன்னால், ''ஹி ஹி... எனக்கு கார் ஓட்டத் தெரியாதுங்க'' என்பார் தலைவர்.

''அப்புறம் எப்படி சார் டெஸ்ட் டிரைவ் பண்ணுவீங்க?'' என்றால், ''நீங்க ஓட்டுங்க, நாங்க ஒக்காந்துட்டு வர்றோம். கார் எப்பிடி ஓடுதுன்னு பார்க்குறோம். மாமல்லபுரம் வரைக்கும் ஓட்டிக் காட்டினீங்கன்னா பிரேக்கு, ஸ்பீடு, மைலேஜ், ஏ.சி எல்லாத்தையும் பார்த்துக்குவேன். அப்புறம் சார், காரை மாமல்லபுரத்தில் ஜஸ்ட் இரண்டு மணி நேரம் நிறுத்தினா, சும்மா பசங்களுக்கு பீச் காட்டிட்டு, கோயில்ல ஒரு எட்டு தலை காட்டிட்டு வந்துடுவோம்'' எனக் கூறி, பிக்னிக் பிளானை நைஸாக டெஸ்ட் டிரைவுக்குள் திணிப்பார்.

ஷோரூம்காரர், மயக்கம் வராத குறையாகத் தயங்கி நிற்க, ''என்னாங்க, மத்த காரையெல்லாம் ரெண்டு நாள் நம்மகிட்டயே தந்துடுறாங்க, வீட்ல வெச்சி (!) ஓட்டிப் பாத்துக்கலாம். எனக்கு ஓட்டத் தெரியாதுங்கிறதால உங்களை ஜஸ்ட் மாமல்லபுரம் கூப்பிடறேன். சும்மா கொஞ்ச நேரம் சிட்டியில சுத்துறதால இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் எப்படிங்க கண்டுபிடிக்க முடியும்?'' என வாயாலேயே வயலின் வாசிப்பார். இப்படியெல்லாம் காமெடி செய்துவிட்டு, ''பாத்தியா, கார்னா எவ்ளோ பிரச்னை இருக்கு?'' என லாஜிக்காக மனைவியிடம் கேட்டுவிட்டு, ''அது அதுக்கு ஒரு நேரம் காலம் வரும். அப்போ, கார் தானா நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்கும்'' என தேர்ந்த மேஜிக் முனீஸ்வரன் போலப் பேசிவிட்டு அமைதியாகிவிடுவார்.

இன்னொரு ரகம், சீரியஸான ரிசர்ச் ரகம். இரவு பகல் பாராமல் காரைப் பற்றி தியரிட்டிக்கலாக ஆராய்ச்சி செய்த வண்ணம் இருப்பார்கள். ஆன்லைனில் கார் ரிவ்யூவை பரீட்சைக்குப் படிப்பதுபோல படிப்பது, ஆட்டோமொபைல் பத்திரிகைகள் படிப்பது, ஆட்டோ எக்ஸிபிஷன் நடந்தால், அங்கே ஆஜராகி விடுவது என பிஸியாக இருப்பார்கள். கார் டெக்னிக்கல் டீட்டெயில்ஸ், ஸ்பெசிஃபிகேஷன்ஸ் என அனைத்தும் விரல் நுனியில் இருக்கும். கார் தயாரிப்பாளர்களுக்கே தெரியாத விபரங்களைத்தெரிந்துவைத்திருப்பார்கள். அடுத்த இரண்டு வருடங்களுக்கு என்னென்ன கார்கள் ரிலீஸாகப் போகின்றன என்ற விபரங்கள் இவர்கள் ரத்த நாளங்களில் 240 கி.மீ வேகத்தில் பறந்துகொண்டு இருக்கும். இவர்கள் தங்கள் பிளாக்கில் ஆராய்ச்சிக் கட்டுரைகள்கூட எழுதுவார்கள். என்ன பிரச்னை எனில், இவர்களுக்கு கார் வாங்க வேண்டும் என்ற பிளான் இருக்கும். ஆனால், மார்க்கெட்டில் இருக்கும் கார்களை எல்லாம் விட்டுவிட்டு, 'தங்கள் ட்ரீம் கார் அடுத்த ஆண்டுதான் ரிலீஸாகப்போகிறது’ என்று சொல்லியே 10 வருடங்களாக இந்தப் பொழைப்பை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள்.

கார் வாங்காமலேயே பஞ்சர் ஆகிவிடும் கோஷ்டிகளை விட்டுவிட்டு, நிஜமாக கார் வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்த ஆளுக்கு நேரும் சோதனைகள் கொஞ்சநஞ்சம் அல்ல. நம் ஆள் ஒரு காரை முடிவெடுத்து அதற்கான பண ஏற்பாடுகளில் இறங்கியிருப்பார். அது எந்த கார் என வெளியில் சொல்லாமல் இருந்தால், பிரச்னை இல்லை. சொல்லி விட்டால் போச்சு. அட்வைஸ் அழகிரிகள் கொத்துக்கறி போட ஆரம்பிப்பார்கள்.

''மச்சி... அந்த கார் ஃபெயிலியர் மாடல்டா...''

''மாப்ள... அந்த கார் சேஃப்டி ஃப்யூச்சர்ஸ்ல டிங்கு வாங்கிடிச்சி...''

''இதே காரை மெருகூட்டி சீக்கிரமே ரீ-லான்ச் பண்ணப் போறாங்க...''

''இந்த கார்ல 5,000 கி.மீ ஓடுனதுக்கு அப்புறம் ஏ.சி பிராப்ளம் வருதாம்...''

''இதுல ஃப்யூல் இன்ஜெக்ஷன் பிராப்ளம் இருக்காமேடா!'' (அடப்பாவிகளா!)

''இந்த கார் கம்பனியே மூடப் போறாங்க(!)''

இங்கு பஞ்சர் போடப்படும்!

இன்னும் பலவாறாகச் சொல்லிக் குழப்பியடிப்பார்கள். அந்தக் குழப்பத்தை எல்லாம் தாண்டினால், வீட்டினர் பிரச்னை. அதுவரை நம்மிடம் பேசமலேயே இருந்த ஒண்ணுவிட்ட சகலையின் தம்பி லைனில் வருவார். அவரின் ஆசைகளை நம் மீது திணிப்பார். ''பார்த்து முடிவு பண்ணுங்க'' என பேய்ப் படம் ரேஞ்சுக்குப் பயம் காட்டுவார்.

தந்தை அவருக்குத் தெரிந்த சில யோசனைகளைச் சொல்வார். மாமனார் அவருக்குத் தெரியாத ஏரியாவிலேயே சிலம்பம் சுற்றுவார். மனைவிக்கு ஏன் எதற்கு எனத் தெரியாமல் சும்மா ஒரு அவுட்லுக்கைப் பார்த்து ஒரு கார் பிடிக்கும். அது லம்போகினியாக இருந்து நம் உயிரை எடுக்கும். ''இல்லம்மா... அது இம்போர்ட்டட் கார், பல கோடி விலை'' என விளக்கினாலும், அலட்சியமாகப் பார்த்தபடி, ''அப்படின்னா காரே வேணாம். இல்லைன்னா அதேபோல (!) இருக்கும் காரை வாங்குங்க'' எனக் கறார் காட்டுவார். அது மட்டுமில்லாமல், வேறு பல கண்டிஷன்கள் போடுவார் அன்பு மனைவி.

''தோ பாருங்க, வாங்குறதுதான் வாங்கறோம். யார் கிட்டேயும் இல்லாத காரா இருக்கணும் (அப்ப, நாம புதுசா கார் கம்பெனிதான்டி ஆரம்பிக்கணும்), ஸ்டைலா இருக்கணும், லக்கேஜ் வைக்க இடம் அதிகம் இருக்கணும், விலையும் கம்மியா இருக்கணும்’ எனக் கடைசியாக குண்டைத் தூக்கிப் போடுவார்.

மச்சான் ஆன்லைனில் நோண்டிக் கொண்டிருக்க, மாமனார் தன் பொண்ணுடன் மந்திராலோசனையில் ஈடுபட்டுக்கொன்டிருக்க, தந்தை யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்க, சகோதர சகோதரிகள் பரபரப்பாக டிஸ்கஸ் செய்துகொண்டிருக்க, கார் வாங்கப் போகிறவன் லோனுக்கு போனில் மல்லுக் கட்டிக்கொண்டிருக்க... ரணகளமாக இருக்கும் முதல் கார் வாங்கப் போகும் சிச்சுவேஷன்.

பார்க்கிங் இல்லாத வீட்டுக்கு ஒருவழியாக முதல் கார் ரிப்பன் கட்டி வந்து தெருவில் நின்றுவிடும். குழந்தைகள் காரில் ஏறி மியூசிக் சிஸ்டத்தில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்க, ''என்னை முன் சீட்டில் ஏத்தலை, கார் டெலிவரி எடுக்கும்போது என்னைக் கூட்டிப் போகலை, காரை முதலில் கோவிலுக்கு எடுத்துட்டுப் போகலை, இப்பப் பார்க்கும்போது இடம் கம்மியா இருக்கிற மாதிரி இருக்கு...'' என வீட்டில் பாலிடிக்ஸ் ஓடிக்கொண்டிருக்கும்.

முதல் கார்தான் வாங்கிவிட்டீர்கள் அல்லவா? வீட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்காமல், காரில் உட்கார்ந்திருக்கும் குழந்தைகளோடு இரவு பீச்சுக்கு காரைக் கிளப்புங்கள். குழந்தைகளின் சந்தோஷத்தையும், டிரைவிங் ப்ளஷரையும், சுதந்திரத்தையும் ஒரே நேரத்தில் அனுபவியுங்கள்.

வெல்கம் டூ தி கிளப். ஹேப்பி டிரைவிங்!

- (கியரை மாத்துவோம்)