Published:Updated:

செக்காவின் சூப்பர் சிக்ஸ்!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்

செக்காவின் சூப்பர் சிக்ஸ்!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்

Published:Updated:

>>சார்லஸ்  

 ##~##

சாம்பியன் மேக்ஸ் பியாஜியைக் கதி கலங்க வைத்திருக்கிறார் கார்லோஸ் செக்கா! கடந்த ஆண்டு வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தில் தன்னந்தனியாக கோலோச்சிய ஏப்ரில்லியா அணியின் மேக்ஸ் பியாஜிக்கு, இந்த ஆண்டு சிம்ம சொப்பனமாக இருப்பது கார்லோஸ் செக்காவும், அவரது டுகாட்டியும்.

செக்காவின் சூப்பர் சிக்ஸ்!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ்- அமெரிக்கா

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தின் 5-வது சுற்று, அமெரிக்காவில் உள்ள மில்லர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேஸ் மைதானத்தில் நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கினார் டுகாட்டி அணியின் கார்லோஸ் செக்கா. லிபர்ட்டி அணியின் ஸ்மிஸ் இரண்டாவது இடத்தில் இருந்தும், யமஹா அணியின் மார்க்கோ மெலாண்ட்ரி மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். மேக்ஸ் பியாஜி ஏழாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

செக்காவின் சூப்பர் சிக்ஸ்!

ரேஸ்-1

ஆரம்பத்திலேயே யாரும் எட்டிப் பிடிக்க முடியாத வேகத்தில் பறந்து விட்டார் கார்லோஸ் செக்கா. அதிகபட்சமாக மணிக்கு 302 கி.மீ வேகம் வரை பைக்கை விரட்டிய கார்லோஸ் செக்காவின் வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை. 21 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார் செக்கா. லிபர்ட்டி அணியின் ஸ்மிஸ், செக்காவைவிட இரண்டு விநாடிகள் பின் தங்கி இரண்டாவது இடம் பிடிக்க... லிபர்ட்டி அணியின் மற்றொரு வீரர் குண்டோலி மூன்றாவது இடம் பிடித்தார்.

ரேஸ்-2

இரண்டாவது ரேஸ் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆரம்பத்தில் விபத்தில் சிக்கிய நடப்பு சாம்பியன் மேக்ஸ் பியாஜி, விபத்தில் இருந்து மீண்டு வெறி கொண்டு துரத்த... ரேஸ் டிராக்கில் சூடு கிளம்பியது. கிட்டத்தட்ட கடைசி இடத்துக்குப் பின்தங்கிய மேக்ஸ் பியாஜி, முதல் இரண்டு இடங்களில் சென்றுகொண்டு இருந்த செக்காவையும், கேமியரையும் நோக்கி வேகமாக வந்தார். கிட்டத்தட்ட கேமியரை நெருங்கிவிட்டாலும், இறுதிவரை செக்காவையும், கேமியரையும் பியாஜியால் முந்த முடியவில்லை. ரேஸின் இறுதியில் கார்லோஸ் செக்கா இரண்டாவது இடத்தில் வந்த கேமியரைவிட 7 விநாடிகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். இந்த ஆண்டு அதிக விநாடிகள் வித்தியாசத்தில் வெற்று பெற்று சாதனை படைத்ததோடு, அமெரிக்க ரேஸில் டபுள் பட்டமும் பெற்றார் செக்கா.

செக்காவின் சூப்பர் சிக்ஸ்!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் - இத்தாலி

இத்தாலியில் உள்ள சான் மரினோவில் உள்ள மிஸானோ ரேஸ் மைதானத்தில் வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் 6-வது சுற்று ஜூன் 12-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று, ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்க தகுதி பெற்றார் கவாஸாகி அணியின் டாம் சைக்ஸ். கார்லோஸ் செக்கா இரண்டாவது இடத்தில் இருந்தும், ஸ்மிஸ் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்க தகுதி பெற்றனர். இத்தாலியில் நடைபெற்ற இந்த ரேஸை நேரில் காண 61,000 ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

செக்காவின் சூப்பர் சிக்ஸ்!

ரேஸ் 1

அமெரிக்காவைத் தொடர்ந்து இத்தாலியிலும் கார்லோஸ் செக்காவின் வெற்றி வேகம் அடங்கவில்லை. மொத்தம் 24 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை செக்காவின் ஆதிக்கம்தான். இதற்கிடையே 7-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய மேக்ஸ் பியாஜி மின்னல் வேகத்தில் பறந்து வந்து செக்காவுடன் மோத ஆரம்பித்தார். ஆனால், இறுதியில் மேக்ஸ் பியாஜியை விட 0.9 விநாடிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கார்லோஸ் செக்கா. மேக்ஸ் பியாஜி இரண்டாவது இடம் பிடித்தார். யமஹாவின் மார்க்கோ மெலாண்ட்ரி மூன்றாவது இடம் பிடித்தார்.

ரேஸ்-2

இரண்டாவது ரேஸிலும் கார்லோஸ் செக்காவின் அதிரடிதான். கார்லோஸ் செக்கா, மேக்ஸ் பியாஜி என முதல் இரண்டு இடங்களுக்கு போட்டா போட்டி நடந்து கொண்டிருக்க, 14-வது லேப்பின்போது மார்க்கோ மெலாண்ட்ரியின் பைக் கட்டுப்பாட்டை இழந்து ரேஸ் டிராக்கில் வழுக்கிக்கொண்டு போய் விழுந்தது. ரேஸ் டிராக்கின் நடுவிலேயே பைக் விழுந்ததால், பின்னால் வந்த வீரர் அந்த பைக்கின் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதனால், ரேஸ் சிவப்புக் கொடி காண்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. மொத்தம் 14 லேப்புகளே நடந்த இந்த ரேஸில் கார்லோஸ் செக்கா முதலிடம் பிடித்து வெற்றி பெற, மேக்ஸ் பியாஜி இரண்டாம் இடம் பிடித்தார். நோரியூக்கி ஹாகா மூன்றாவது இடம் பிடித்தார்.

இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், கார்லோஸ் செக்கா மூன்று முறை டபுள் வெற்றிகளைப் பெற்று சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 245 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் செக்காவுக்கு அடுத்த படியாக, மேக்ஸ் பியாஜி 173 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மார்க்கோ மெலாண்ட்ரி 150 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன், வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தின் அடுத்த சுற்று ஸ்பெயினில் ஜூன் 19-ம் தேதி நடந்து முடிந்திருக்கும்!