Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

விற்பனைக்கு வந்தது புதிய பிஎம்டபிள்யூ 5 சீரீஸ்!

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய 5 சீரிஸ் காரை கடந்த மாதம் விற்பனைக்குக் கொண்டுவந்தது பிஎம்டபிள்யூ. கிட்னி க்ரில், புதிய பனி விளக்குகள், புதிய டிசைனில் பின் பக்க விளக்குகள் என, காரின் வெளிப்பக்க வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காருக்கு உள்ளே மல்ட்டிமீடியா ஸ்க்ரீனைச் சுற்றி க்ரோம் லைனிங் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய 5 சீரிஸில் டீசல் இன்ஜின்கொண்ட மாடல்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விலை 50 லட்சம் ரூபாயில் இருந்து ஆரம்பம்.

தமிழகத்தில் 250 கோடி மூதலீடு செய்யும் கேஎல்டி!

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் சேஸி ஃப்ரேம்களைத் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக இருக்கும் கேஎல்டி ஆட்டோமோட்டிவ் மற்றும் ட்யூப்லர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், சென்னை ஓரகடத்தில் உள்ள டெய்ம்லர் இந்தியாவின் தொழிற்சாலை வளாகத்தில், 170 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ஆலை ஒன்றை நிறுவியுள்ளது. அடுத்து 80 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. இதில், ஆண்டுக்கு 75,000 சேஸி ஃப்ரேம்களை உற்பத்திசெய்யத் திட்டமிட்டிருக்கிறது கேஎல்டி.

கான்ட்டினென்ட்டல் ஜிடி நவம்பர் 25 ரிலீஸ்!

மோட்டார் நியூஸ்

ராயல் என்ஃபீல்டின் புதிய கஃபே ரேஸர் பைக்கான கான்ட்டினென்ட்டல் ஜிடி பைக், நவம்பர் 25-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

சென்னையில் 50 லட்சம் கார்களைத் தயாரித்தது ஹூண்டாய்!

மோட்டார் நியூஸ்

சென்னை தொழிற்சாலையில் 50 லட்சம் கார்களைத் தயாரித்து சாதனை படைத்திருக்கிறது ஹூண்டாய். சென்னை, இருங்காட்டுக்கோட்டையில் அமைந்திருக்கும் ஹூண்டாய் தொழிற்சாலையில், 1998-ம் ஆண்டு முதல் கார்களைத் தயாரித்து வரும் ஹூண்டாய், தனது 15-வது ஆண்டில் 50 லட்சம் கார்களைத் தயாரித்திருக்கிறது. 50 லட்சமாவது கார் வெளியீட்டை, பிராண்ட் அம்பாசிடரான ஷாரூக்கானை அழைத்து வந்து கொண்டாடியது ஹூண்டாய்!

பிறந்த நாள் கொண்டாடிய பாரத் பென்ஸ்!

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் 'பாரத்பென்ஸ்’ என்கிற பெயரில் டிரக்குகளை விற்பனைக்குக் கொண்டுவந்து ஓர் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது டெய்ம்லர் நிறுவனம். 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மாடல்களை அறிமுகப்படுத்திய பாரத்பென்ஸ், ''ஒரே ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து விட்டோம். 9 மாடல்கள், 52 டீலர்கள் என எங்களுடைய வளர்ச்சி கூடிக் கொண்டே வருகிறது. டிஸ்கவுன்ட் போன்ற விஷயங்கள் இல்லாமல், விலை விஷயத்தில் வெளிப்படையாக இருப்பதால்தான் பாரத்பென்ஸின் மதிப்பு உயர்ந்துள்ளது. உலகிலேயே சவாலான கன ரக வாகனச் சந்தையான இந்தியாவில், நான்காவது இடத்தைப் பிடித்துவிட்டோம். வாடிக்கையாளர்களிடம் நாங்கள் காட்டும் உண்மையும் மதிப்பும் எங்களை மென்மேலும் உயர்த்தும்'' என்கிறார் பாரத்பென்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மார்க் லிஸ்ட்டோசெல்லா.

ஹார்லி கெட்-டு-கெதர்!

மோட்டார் நியூஸ்

ஹார்லி டேவிட்சன் பைக்கை, சோலோவாகப் பார்த்தாலே திரும்பிப் பார்க்கவைக்கும். இந்தியா முழுவதும் இருக்கும் ஹார்லி டேவிட்சன் பைக்கர்களில் 300 பேர், கடந்த மாத இறுதியில் சென்னையில் சந்தித்தார்கள்.

''ஹார்லி டேவிட்சன் தயாரிக்க ஆரம்பித்து 110 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. இதைக் கொண்டாடும் விதமாகத்தான் இந்தியா முழுவதும் இருந்த ஹார்லி ஓனர்ஸ் ஒன்றுசேர்ந்து, கடந்த ஆண்டு கோவா சென்றோம். இந்த ஆண்டு சென்னை. மொத்தம் மூன்று நாள் பயணம். கொண்டாட்டம், மகிழ்ச்சி, குதூகலம் என எதற்கும் பஞ்சம் இல்லை'' என்று பெருமைப்பட்டார் சென்னை கொரமண்டல் ஹார்லி டேவிட்சன் மேனேஜிங் டைரக்டர் விக்ரம்.  

டாக்டர், இன்ஜினீயர், பிசினஸ் மேன் என வெவ்வேறு தொழிலில் இருந்தாலும், இந்த ஹார்லி சங்கமத்தில் கலந்து கொண்ட எல்லோருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை ஹார்லி டேவிட்சன் பைக்தான். மும்பையில் இருந்து வந்திருந்த ஜான்சன், ''இந்த டிரிப்ல இன்னொரு சிறப்பு அம்சம் எங்க குடும்பமும்கூட வந்திருந்தது தான். வேலை வேலைனு குடும்பத்துக்குக்கூட டைம் ஒதுக்க முடியாமப் போகுது. இந்த டிரிப்பை அதுக்கு நல்ல வாய்ப்பா பயன்படுத்திக் கொண்டோம்'' என்றார்.

ஆபத்து இல்லா பயணம் மகிழ்ச்சிதானே!

வேகம்... வேட்டை!

மோட்டார் நியூஸ்

சென்னை பி.எஸ்.அப்துர்ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் ஆட்டோமொபைல் துறை, கடந்த அக்டோபர் மாதம் கருத்தரங்கு ஒன்றை 'ஆட்டோஹன்ட்-2013’ என்ற பெயரில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 300 மாணவர்கள் கலந்துகொள்ள... ஆட்டோஹன்ட் களைகட்டியது. வாகனங்கள் தண்ணீரில் விழுந்துவிட்டால் தானாகவே மிதவைகளை விரித்து மிதக்கவைக்கும் கான்செப்ட் முதல்,  காரின் சஸ்பென்ஸன்கள் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது கிடைக்கும் ஆற்றலை மின்சாரமாகச் சேமித்து உபயோகப்படுத்தும் கான்செப்ட் வரை புதுப் புது ஐடியாக்களால் நடுவர்களைத் திணறவைத்தனர். ஆட்டோமொபைல் துறை பற்றிய வினா - விடை, ஆர்.சி கார் ரேஸ், இன்ஜினைப் பிரித்து மாட்டுவது என பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில், காரின் உதிரி பாகங்களைக் கொண்டு பட்டாம்பூச்சி. ரோபோ, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தும் பேப்பர் கார் ஆகியவற்றை உருவாக்கி கல்லூரியின் வாயிலில் வைத்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

-  ஹெச்.ராசிக் ராஜா

விஸ்டியான் நிறுவனத்தின் இ-பீ கான்செப்ட் கார்!

உலக அளவில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கார்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ், இன்டீரியர்ஸ் மற்றும் ஏ.சி பாகங்களை வடிவமைத்துத் தயாரிக்கும் விஸ்டியான் நிறுவனத்தின் தொழிற்சாலை, சென்னை அருகே மறைமலைநகரில் இருக்கிறது.

மோட்டார் நியூஸ்

நிஸான் லீஃப் காரை அடிப்படையாகக் கொண்ட இ-பீ (e-Bee) எனும் கான்செப்ட் காரை விஸ்டியான் தற்போது உருவாக்கியுள்ளது. 2020-ம் ஆண்டில் மக்களின் போக்குவரத்துத் தேவைகள் எப்படி இருக்கும் என்பதே இந்த கான்செப்ட் கார் தயாரிப்பின் நோக்கம். இந்த விஷயத்துக்குள் 'கார் ஷேரிங்’ கான்செப்ட்டையும் அறிமுகப்படுத்தி, புத்திசாலித்தனமான ஒரு தயாரிப்பாக வெளிவந்து இருக்கிறது இ-பீ.

இந்த காரை மூன்று பேர் பயன்படுத்துகிறார்கள் என்றால், மூன்று பேரின் விருப்பத்துக்கு ஏற்ப காருக்குள் பல விஷயங்களை கஸ்டமைஸ் செய்யலாம். நீங்கள் காருக்குள் இருக்கிறீர்கள் என்று உணர்ந்த அடுத்த விநாடியே இன்னொருவரால் பயன்படுத்தப்பட்ட காராக இருந்தாலும் உங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப பட்டனைத் தட்டி மாற்றிவிடலாம். காரில் உள்ள ஏ.சியில் நறுமணங்களின் சாய்ஸ் இருப்பது, Docks முறையில் உங்களுடைய கேட்ஜெட்டுகளை காருடன் ஒருங்கிணைக்க முடிவது, சமூகவலை தளங்களை இணைப்பது என பல ஆச்சரியங்கள் இந்த கான்செப்ட் காரில் இருக்கின்றன. மேலும், இதில் டேஷ்போர்டு, ரியர்-வியூ மிரர் போன்ற வழக்கமான விஷயங்கள் இல்லை. எல்லாமே எலெக்ட்ரானிக்ஸ்தான். இந்த காரில் இருந்த பல தொழில்நுட்பங்களை, வருங்காலத்தில் நம் நாட்டில் விற்கப்படும் கார்களில் பார்க்க முடியும்!

டர்போ டானிக்!

மோட்டார் நியூஸ்

புத்தகங்கள் மற்றும் ஆய்வுக் கூடங்களில் மட்டுமே வாகனங்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறை மாணவர்களை, திடீரென ஆட்டோமொபைல் நிறுவனத்துக்குள் அனுப்பினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு உணர்வை சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் கடந்த மாதம் நடந்த 'டர்போ-2013’ நிகழ்ச்சி அளித்தது என்கின்றனர், இதில் கலந்துகொண்ட மாணவர்கள். மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில், ஆட்டோமொபைல் சார்ந்த ட்ராக் ரேஸ், டெக்னிக்கல் ட்ரஷர் ஹன்ட், ஆட்டோமொபைல் போட்டோகிராபி, பேப்பர் பிரசன்டேஷன், கேட் மாடல், விநாடி - வினா போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஐநூறுக்கும்  மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாணவர்களில் ஒருவரான சித்திக்கிடம் பேசினோம். 'வாகனக் கண்காட்சி மட்டுமல்லாது, போட்டிகளும் நடத்தப்பட்டு அந்தத் துறை சார்ந்த வல்லுநர்களால் தகுதியானவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இது, இந்தத் துறையில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். 2006-ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சியை எங்கள் கல்லூரி நடத்தி வருகிறது'' என்றார்.

    -  க.பாலாஜி

செப்டம்பர் மாத டாப் 10 விற்பனை!

செப்டம்பர் மாதத்தில் கார்களின் விற்பனை 5 சதவிகிதம் குறைந்துள்ளது. ஹூண்டாய் எதிர்பார்த்தது போலவே கிராண்ட் ஐ10, டாப் 10 பட்டியலில்  இடம்பெற்றுவிட்டது. செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வந்த கிராண்ட் ஐ10 - 8,411 கார்கள் விற்பனையாகி, ஆறாவது இடத்தில் உள்ளது. இதைவிட சின்ன காரான ஹூண்டாய் இயான், செப்டம்பர் மாதம் 6,284 கார்கள் விற்பனையாகி 8-வது இடத்தில் உள்ளது.

மோட்டார் நியூஸ்

மாருதி வழக்கம்போல ஆல்ட்டோ, ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளது. ஆல்ட்டோ 23,260 கார்களும், ஸ்விஃப்ட் 16,389 கார்களும் விற்பனையாகி உள்ளன. டிசையர் விற்பனை எண்ணிக்கை 16,708.

ஹோண்டா அமேஸ் காரின் விற்பனை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும் 6,679 அமேஸ் கார்கள் விற்பனையாகி உள்ளன. காம்பேக்ட் எஸ்யூவியான ஃபோர்டு எக்கோஸ்போர்ட் கடந்த மாதம் 10-வது இடத்தில் இருந்தது. இந்த மாதம் 6,203 கார்களுடன் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ரெனோ டஸ்ட்டரின் விற்பனை வெறும் 3,973 கார்கள் மட்டுமே!

மஹிந்திரா ஸ்கார்பியோ 4,345 கார்களும், பொலேரோ 8,925 கார்களும் செப்டம்பர் மாதம் விற்பனையாகி உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism