Published:Updated:

இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!

 ##~##

ரு பெண் ஹேண்டில்பார் நடுங்க சைக்கிளையோ, பைக்கையோ உருட்டிக் கொண்டிருப்பார். பின்னால் ஓர் ஆள் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டோ, பேன்ட்டைச் சுருட்டிவிட்டுக்கொண்டோ, அந்தப் பெண்ணுக்குப் பின்னால் வியர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டு இருப்பார். இந்தக் காட்சியில் எப்போதும் பெரும்பாலும் ஓட்டுபவர் பெண்ணாகவும், ஓடுபவர் ஆணாகவுமே இருப்பார்கள். ஆண் ஆண், பெண் பெண் அல்லது ஆண் ஓட்ட, பெண் பின்னால் ஓடி வருவதைக் காணவே முடியாது. என்றைக்கு ஓர் ஆண் வளைந்து நெளிந்து ஓட்டிக் கொண்டிருக்கையில், பின்னால் ஒரு பெண் ஓடிவருகிறாளோ, அன்றுதான் பெண்களுக்கு மோட்டார் சுதந்திரம் கிடைத்ததாகக் கூற முடியும்.

 ஒரு பெண்ணுக்கு வாகனத்தை ஓட்டச் சொல்லிக்கொடுப்பதற்கு ஆர்வமாக முன் வருபவர், மாமா முறையாக இருப்பார் அல்லது நண்பராக இருந்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக்கொண்டு இருப்பார். அந்தக் காலத்தில் சில அப்பாவி ஜீவன்கள், ''தம்பி, கொஞ்சம் பாப்பாவுக்கு சைக்கிள் ஓட்டச் சொல்லிக் கொடுக்கிறியா?’ என 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்றெல்லாம் கேட்காமல், லட்டை வாயில்வைத்து அழுத்திவிட்டுச் செல்வார்கள். அண்ணன் - தம்பி இருக்கும் வீட்டில், இந்த அவுட்சோர்ஸிங் முறை நடைமுறைக்கு வராது. பாம்பின் கால் பாம்பறியும் என்பதால், அண்ணனோ தம்பியோ சிடுசிடுவெனத் திட்டிக்கொண்டே எரிச்சலுடன் சகோதரிகளுக்குக் கற்றுக்கொடுத்துவிடுவார்கள். பாசக்காரத் தந்தைகள் சிலர் கேரியரைப் பிடித்தபடி ஓடிக்கொண்டு இருப்பார்கள். சில தாத்தாக்கள்கூட பேத்தியின் பின்னால் ஓடி நான் பார்த்திருக்கிறேன்.

இங்கு பஞ்சர் போடப்படும்!

சிலர் சைக்கிள் ஓட்டச் சொல்லிக்கொடுத்து, காதல் வளர்த்து, கல்யாணம் செய்துகொண்டு பிள்ளை குட்டிகளும் பெற்றெடுத்துவிடுவர். ஆனால், அம்மணிக்கு சைக்கிள் மட்டும் ஓட்டத் தெரியாமலேயே இருக்கும். இதைப்போன்ற புனிதமான காதலால் சைக்கிளுக்குப் பெருமையே! இந்தப் பின்னணியில் நாம் வந்ததால்தான் இன்று, கார் ஓட்டச் சொல்லிக்கொடுக்கும் நிறுவனங்கள், 'லேடீஸ் டீச் லேடீஸ்’ என பெரிதாக போர்டு வைத்து கஸ்டமர்களைக் கவர்கிறார்கள்.

என்னதான் இன்று பெண்கள் காரில் சீறிப் பாய்ந்தாலும், ஆட்டோமொபைலுக்கும் பெண்களுக்கும் ஜெனடிக்கலாகவே தூரம் கொஞ்சம் அதிகம்தான். ஒரு பொடியன் எப்போது சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டான் என்பது தெரியவே தெரியாது. ஓரிரு நாட்கள் கண்களில் பட்டிருப்பான். அதற்குப் பிறகு, சாதாரணமாக ஓட்டிக்கொண்டு இருப்பான். ஒரு பெண் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வது, அந்த ஊருக்கே தெரியும். பைக், கார் என அனைத்து வாகனங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

எல்எல்ஆர் என்பது 'லேனர்ஸ் லைசென்ஸ்.’ வாகனங்களை ஓட்டக் கற்றுக்கொள்வதற்கான லைசென்ஸ். கற்றுக்கொள்ளும்போதும் 'எல்’ போர்டு வாகனத்தில் இருக்க வேண்டும்; வாகனம் ஓட்டத் தெரிந்த ஒருவர் உடன் இருக்க வேண்டும். இந்த நடைமுறை பெரும்பாலும் வழக்கொழிந்துவிட்டது. பைக்கில் எப்போதாவது 'எல்’ போர்டு பார்த்திருக்கிறோமா? காரில்கூட மிகச் சிலதில் மட்டுமே எல் போர்டு பார்க்க முடியும். அவர்களும் வேறு எந்த காரும் தங்கள் கார் மீது மோதிவிடக் கூடாது என்ற

இங்கு பஞ்சர் போடப்படும்!

உயர்ந்த எண்ணத்திலும், 'எல்’ போர்டைப் பார்த்து மற்றவர்கள் பதறி விலக வேண்டும் என்ற நோக்கத்திலும்தான் அதை வைத்திருப்பார்கள். ஓட்டத் தெரிந்த யாரும் உடன் இருக்க மாட்டார்கள். டிராஃபிக் போலீஸும் 'எல்’  போர்டு வாகனத்தை நிறுத்தச் சொன்னால், தன் மீதே மோதி பரலோகம் அனுப்பிவிடுவார்களோ என்கிற பயத்தில், நிறுத்தத் துணிவது இல்லை. அனைவருக்கும் உயிர் பயம் என்பது பொதுவானதுதானே?!

எது எப்படியோ, திருமணத்துக்கு முன்பு பெரும்பாலும் பெண்கள் கார் ஓட்டக் கற்றுக் கொள்வது இல்லை. சைக்கிள், ஸ்கூட்டர் வரை பிறந்த வீட்டு கோட்டாவில் கற்றுக்கொண்டுவிட்டு, கார் ஓட்டுவதை புகுந்த வீட்டு கோட்டாவிலேயே கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்களோ இல்லையோ, கணவர்களுக்குத் திடீரென ஒருநாள் பாசவெறி வந்து, ''நீ கார் ஓட்டக் கத்துக்கணும் செல்லம்'' என ஆரம்பித்துவைக்கிறார்கள்.

பெரும்பாலும் எந்தக் கணவரும் நேரடியாகத் தன் மனைவிக்கு கார் ஓட்டச் சொல்லிக் கொடுப்பது இல்லை. டிரைவிங் ஸ்கூல் மூலமாகத்தான் கற்றுக்கொடுக்க விரும்புகிறார்கள். ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்றால், உணவுப் பொருள் வழங்கு துறை அலுவலகத்துக்குச் செல்வார்கள். டிரைவிங் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால், மக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குத்தானே போக வேண்டும்? ஆனால், இதற்கு மட்டும் தனியார் டிரைவிங் ஸ்கூல்களுக்குக்குத்தான் எல்லோரும் போவார்கள்.

லைசென்ஸ் எடுக்க நீங்கள் டிரைவிங் ஸ்கூலுக்குச் சென்றால், ஜஸ்ட் உங்கள் கையெழுத்தை மட்டுமே போட வேண்டும். எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பதை நியாயமாகப் பிரித்து எழுதிக் காட்டி விடுவார்கள்.

இந்த டிரைவிங் ஸ்கூல் கார்களை அதிகாலை 6 மணி முதல் சாலைகளில் பார்க்கலாம். 30 டிகிரி சாய் கோணத்தில் சென்றுகொண்டிருக்கும் அல்லது சர்க்கஸ் கார் போல குலுங்கிக் குதித்துச் சென்று கொண்டிருக்கும். இந்த கார்களில் ஆறு பேர் வரை அடைபட்டுக் கிடப்பார்கள். ஓட்டும் சீட்டில் மட்டுமின்றி பக்கத்தில் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் சீட்டுக்கு முன்பாகவும் கிளட்ச், பிரேக் எக்ஸ்ட்ராவாக இருக்கும். என்னதான் கற்றுக்கொள்பவர் கார் ஓட்டினாலும் கன்ட்ரோல் அவரிடம்தான் இருக்கும். இது தெரியாமல் பலர் கார் நன்றாக ஓட்டக் கற்றுக்கொண்டதாக பலரிடமும் பீற்றிக்கொள்வது உண்டு. இத்தகைய காரில் தூக்கக் கலக்கத்தோடு பத்தோடு பதினொன்றாக சம்பிரதாயத்துக்கு 10 நாள் ஸ்டீயரிங்கைப் பிடித்து, பதினோராவது நாள் 10 நிமிடங்கள் ரிவர்ஸ் எடுக்கக் கற்றுக்கொண்ட கையோடு, ஆர்டிஓவிடம் லைசென்ஸ் எடுக்கக் கொண்டுபோய் நிறுத்திவிடுவார்கள்.

நம் ஊரில் சுமாராக ஓட்டிக் காண்பித்தால்கூட சிலருக்கு லைசென்ஸ் கிடைத்துவிடுவதுதான் கொடுமை. ஹாரன் மட்டும் நன்றாக அடித்துக் காண்பித்தவர்களுக்கு எல்லாம் லைசென்ஸ் வழங்கி சாதனை படைத்திருக்கிறார்கள். எவ்வளவு முக்கியமான விஷயம் இது? இதில் ஏன் இவ்வளவு அலட்சியமாகச் செயல்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. நம் ஆட்களுக்கும் என்ன அவசரம் எனப் புரியவில்லை? நன்கு கற்றுக்கொண்டு பின் ஓட்டிக் காண்பித்து லைசென்ஸ் பெறலாமே?

ஓட்டத் தெரியாதவர்களால் மாட்டிக்கொண்ட அனுபவங்கள், பல... பல! லைசென்ஸ் வைத்திருப்பார்கள்; 'இடது காலால் கிளட்ச்சை மிதிக்கணும். வலது காலால் பிரேக்கையும் ஆக்ஸிலரேட்டரையும் மாத்தி மாத்தி மிதிக்கணும்’ என தியரி எல்லாம் சரியாகச் சொல்வார்கள். நாமும் கார் ஓட்டத் தெரியுமா, தெரியாதா என ஒன்றும் தெரியாமல், சில நண்பர்களிடம் நம் காரைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஏறி அமர்ந்ததுமே, 'என்னா இது, கிளட்ச் ரப்ஃபா இருக்கு’ என ஆரம்பித்து, பேசிக் கொண்டே காரை சீறிப் பாய விட்டு டொக்கென ஆஃப் செய்து விடுவார்கள். 'ஏன் வண்டி ஆஃப் ஆவுது, இன்ஜின்ல ஏதாவது பிராப்ளமா? ஆயில் சேஞ்ச் பண்ணியா? பேட்டரி வீக்கா? பெட்ரோல் டேங்க்ல தண்ணி பூந்துடுச்சா? கிளட்ச் பிளேட் அவுட்டா?’ என்று சரமாரியாகக் கேள்வி கேட்டுத் துளைத்து எடுப்பார்கள். 'ஏய்.. உனக்கு ஓட்டத் தெரியுமாடா?’ என நாம் ஒரு கேள்வி கேட்காததால் வந்த வினை. மீண்டும் ஸ்டார்ட் செய்து கிளட்ச் பழகி, ஸ்டீயரிங் பழகி, பிரேக் பழகி என நம் கண் முன்னேயே கார் ஓட்டக் கற்றுக்கொள்வார்கள். கற்றுக் கொண்டே நமக்கும் சொல்லிக் கொடுப்பதுதான் வேதனையின் உச்சம்.

''மாப்ள, கியர் லீவரை இந்த ரெண்டு கையாலதான் புடிக்கணும், ஹேண்ட் பிரேக்கை இவ்ளோ அளவுக்குத்தான் தூக்கணும்'' என எங்கேயோ படித்தவற்றை பல ஆண்டுகள் கார் ஓட்டிக்கொண்டு இருக்கும் நம் மீது வாந்தி எடுப்பார்கள். சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கும் வரையில் ஆஃப் ஆகாமல் கச்சிதமாக உருமிக்கொண்டு இருக்கும் காரை, கரெக்ட்டாகப் பச்சை விளக்கு போட்டதும் ஆஃப் செய்துவிடுவார்கள். காரைத் திரும்ப ஸ்டார்ட் செய்யாமல் ஜன்னலுக்கு வெளியே தலையைவிட்டு, பின்னால் கதறிக்கொண்டு இருக்கும் வாகனங்களைப் பொறுமை காக்கும்படி கைகளால் சைகை செய்துவிட்டு, கியரிலேயே வைத்து கிளட்ச்சை அழுத்தாமல் ஸ்டார்ட் செய்து காரைப் பாயவைத்து, மீண்டும் ஆஃப் செய்து என வேடிக்கை விளையாட்டு நடத்துவார்கள். காரை நம்மிடம் கொடுக்கச் சொன்னால், வீராப்பாகக் கொடுக்கவும் மாட்டார்கள்.

இவர்களின் கூத்து சிக்னலோடு நிற்காது. பெரிய மேம்பாலம் ஏறும்போது, முக்கால்வாசி ஏறியதும் தடுமாறி காரை நிற்கவைத்துவிடுவார்கள். கார் பின்னாலேயே போகும்போதும் பதறாமல், ''மாப்ள ரிவர்ஸ் பாரு'' என்பார்கள். ரயில்வே கேட்டை கிராஸ் செய்கிறேன் பேர்வழி என்று, நட்ட நடு தண்டவாளத்தில் கன ஜோராக காரை ஆஃப் செய்து போட்டுவிட்டு சுற்றும் முற்றும் பார்ப்பார்கள். ரெண்டு பக்கமும் ரயில் வந்து அந்த காரைத் தூக்க வேண்டும் என்பதுபோல வெறி வரும்.

- கியரை மாத்துவோம்